Published:Updated:

உள்நிறைவுக்காக தடபுடல் விருந்து தவறு இல்லை.. ஆனால்..! - பணமும் மனமும் #MyVikatan

Representational Image
Representational Image

ஏன் நாம் அனைவரும் இந்தக் காகிதத் தேடலில் திருப்தியில்லாமல் இருக்கிறோம் என்பதை இரண்டு, மூன்று கோணங்களில் பார்க்கலாம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாம் அனைவரும் அடிப்படையாகத் தேடுவது பணம் ஒன்று மட்டுமே என்பது நிதர்சனம். ஏனெனில் பணம் பொதுச் செலவாணியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதனால், நம் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய பொருளாகி விடுகிறது. பணத்தால் வாங்க முடியாதவை நம் ஒரு கை விரல்கள் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும். மற்றவை யாவற்றுக்கும் பணமே வழி.

பணச்சேர்க்கை விளையாட்டில் பெரும்பாலானோர் தேவைக்காகவே கோதாவில் இறங்குகிறார்கள். ஆனால், மிகச் சுலபமாக தேவை என்பது போய் ஆசை ஆதிக்கம் கொள்கிறது. ஆசைக்கு அளவு கிடையாது என்பதால் பணத்தேடல் சுழலிலிருந்து மீள்வது கஷ்டம். அது விரைவில் பேராசை அளவில் போக ஆரம்பித்து பல கெட்ட காரியங்களுக்கு வழி வகுக்கிறது. இருக்கிற பணம் போதும் என்று சொல்லக் கூடிய நம் நண்பர்களின் அனைத்துப் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லிவிட முடியும். ஏன் நாம் அனைவரும் இந்தக் காகிதத் தேடலில் திருப்தி இல்லாமல் இருக்கிறோம் என்பதை இரண்டு, மூன்று கோணங்களில் பார்க்கலாம்.

Representational Image
Representational Image

பரிணாமத்தின் அடிப்படை தக்கனபிழைத்தல் (Survival of the fittest). நாகரீகத்துக்கு முன்பு, பலம் வாய்ந்த, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் பிழைத்தார்கள். பணம் கண்டுபிடித்தவுடன் பணம் பலத்துக்கு இணையாகி விட்டது. இப்போது பணம் கொண்டவர் பிழைக்கிறார்கள். பணம் பெருக்குதல் நம் பிழைப்புக்கு முதன்மை என்பது முற்றும் சரியே. அனால், ஒரு அளவுக்கு மேல் பணம் பிழைப்புக்கு அவசியமில்லை. உணவு, இருப்பிடம்,கல்வி, ஆரோக்கியம் போன்ற அத்தியாவசிய தேவைகள் போக பெரிய வீடு, வாகனம் என்ற ஆடம்பரங்கள் எவரின் பிழைப்புக்கோ, ஆத்மார்த்தமான மகிழ்ச்சிக்கோ பெரிதும் உதவுவதில்லை. இருந்தும் நாம் அதன்பின் ஓடுவது, தக்கனபிழைத்தலின் வெளிப்பாடு.

நாம், நமக்கு அடுத்து இருப்பவரைவிட பலசாலியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கெடுபிடி வந்தால் அவர்தான் பிழைப்பார். நம் கதி, அதோ கதி ! இந்தப் பரிணாம உந்துதல் கெடுபிடி இல்லாத காலத்திலும் நம்மை ஆதிக்கம் செய்கிறது.

Representational Image
Representational Image

இந்த உள்ளுணர்வுதான் நம் வீட்டு அளவை பக்கத்து வீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. நாம் உல்லாச கார் வாங்கியபோது இருந்த உற்சாகம், அடுத்த வீட்டில் அதே மாதிரி ஒரு கார் வந்ததும் சட்டெனத் தொலைகிறது.

நேற்று ஒட்டியபோது பெருமையாக இருந்த அதே கார் இன்று சப்பென்று போய்விடுகிறது. இதே போட்டி உணர்வுதான் நம் கல்யாணங்களுக்குக் கடன் வாங்கியாவது தடபுடல் விருந்து அளிக்க வைக்கிறது. அது மற்றவருக்கு நாம் காண்பிக்கும் பலம்.

கெடுபிடி வந்தால் "நான் பிழைப்பேன், நீ அவ்வளவுதான்!" என்று நாம் அடிக்கும் தம்பட்டம். நமக்குத்தான் தெரியும் நாம் வாங்கிய கடன். நாம் அனைவருமே பிழைக்கக் கூடிய வகையில் நாகரிக சமூகம் வளர்ந்து விட்டது. இருப்பினும் நம் பரிணாமப் போட்டி இயல்பு நம்மைவிட்டு நீங்கவில்லை. இது பெரும்பாலும் நம் அறியாமையின் விளைவு.

பணம் படைத்தவருக்கு அதைப் பெருக்குவது மிகவும் சுலபம். இல்லாதவருக்கு மிகவும் கடினம். அதனால் பெருத்தவர் மேலும் பெருத்து, சிறுத்தவர் மேலும் சிறுத்துப் போகிறார்கள்.

ஒருவரின் செல்வத்துக்கும் அவர் மனநிலை மகிழ்ச்சிக்கும் இருக்கும் தொடர்பை பலர் ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்களின் தீர்ப்பு, ஒரு அளவுவரை செல்வம் மனமகிழ்ச்சியை அதிகரிக்கிறது. ஒருவரின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் வரை பணம் ஒரு வரம்.

ஒரு அளவுக்குமேல் (ஒரு Princeton University ஆராய்ச்சியில், அமெரிக்காவில் அந்த அளவு வருடத்துக்கு சுமார் 75,000 டாலர்கள் சம்பளம்) மகிழ்ச்சியின்மேல் பணத்தின் வீச்சம் மறைகிறது. இருப்பினும், நாம் செல்வத்தைப் பிழைப்பிற்கான பலத்துக்கு ஈடாகப் பார்க்கும் வரையில் நமக்குப் போதும் என்ற மனம் வர வாய்ப்பில்லை. இதை உணர்ந்தவர்கள் பொது நலக் கோட்பாடு (socialism) முறைவைத்தனர்.

Representational Image
Representational Image

பல நாடுகள் இதை அமல்படுத்த முயற்சி செய்த போதும், எங்கும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இதன் முதல் காரணம், மனித உள்ளுணர்வுக்கு ஒவ்வாமல் இருப்பதே. அதனாலதான், தனிமனித சுதந்திரம் வாய்த்த முதலாளித்துவம் (capitalism) வெல்கிறது. இந்த அமைப்பிலும் நிறைய ஓட்டைகள்.

பணம் படைத்தவருக்கு அதைப் பெருக்குவது மிகவும் சுலபம். இல்லாதவருக்கு மிகவும் கடினம். அதனால் பெருத்தவர் மேலும் பெருத்து, சிறுத்தவர் மேலும் சிறுத்துப் போகிறார்கள். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பெரிதாகின்றன. இது வெகுநாள் நீடித்தால் ஒரு புரட்சியில் முடிவடையலாம்.

இந்த வகையில் முதலாளித்துவத்துக்கும், பொது நலத்துக்கும் இடையே ஒரு சமநிலை கொண்டிருப்பது ஸ்கேண்டிநேவிய தேசங்கள் (ஸ்வீடன், டென்மார்க் வகையறா). அவர்கள் பொருளாதார ஒழுங்குமுறைகளை சரிவர கைப்பிடித்து எல்லா மக்களுக்கும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறுமாறு செய்கின்றனர்.

Representational Image
Representational Image

அதே சமயம், புதுத்தொழில் தொடக்கம் போன்ற முன்னேற்ற விஷயங்களுக்குத் தடை போடுவதில்லை. அதனால், அங்கு வாழும் மக்கள் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சிகரமானவர்கள் என்று பெயர் பெறுகிறார்கள். அமெரிக்காவில் பெரிய கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், நஷ்டம் ஏற்படும்போதும், கேட்டால் காது கூசும் அளவு சம்பளமும், சன்மானமும் பெறுகிறார்கள். அப்படி இல்லாமல் ஸ்கேண்டிநேவிய தேசங்களில் கொஞ்சம் ஒழுங்குமுறைகள் விதிக்கப்படுகின்றன. ஏற்றத் தாழ்வுகள் சற்றே குறைந்து காணப்படுகின்றன. எல்லா நாடுகளும் அவ்வாறு இருக்க முயலலாம்.

கிரேக்க மாமேதை அரிஸ்டாட்டில் டெலோஸ் (telos) என்கிற சொல்வழியே மனித முயற்சியின் உன்னத முடிவு அல்லது நோக்கத்தை அறிய முயற்சி செய்தார். வணிகரின் டெலோஸ் வியாபாரம் பெருக்குதல், போர் செய்வதன் நோக்கம் வெற்றி. இவ்வாறு மனிதனின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னர் ஒரு உச்ச நோக்கம் ஒன்று ஒளிந்திருக்கிறது. பணம் தேடலும் அப்படி ஒரு மனித முயற்சிதான். அதன் பின்னரும் ஒரு அர்த்தமுள்ள, உன்னத நோக்கம் ஒன்று இருந்தாக வேண்டும். அது இல்லாமல் போகும்போது பணமே உச்ச நோக்கமாகி விடுகிறது. டெலோஸ் மறந்து, மறைந்து போய் விடுகிறது. அந்த நிலையில்தான் அரிஸ்டாட்டில் எச்சரித்தபடி சறுக்கும் நெறிமுறை ஆரம்பமாகிறது. ( அவருடைய On Sophistical Refutations இல் குறிப்பிட்டுள்ள slippery slope)

Representational Image
Representational Image

நாம் சின்னச் சின்ன தவறுகளுக்கு சப்புக் கட்டுகள் கண்டுபிடித்து ஆறுதல் காண்கிறோம். பின்னர் பெரிய தவறுகளுக்குக் கூட ஆறுதல் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. இப்படித்தான் ஏழைகளுக்குக் குறைந்த வட்டிக்கு வீடு அடமானக் கடன் என்று ஆரம்பித்து, அதில் சிறிது பெரிதாகக் குழப்பங்கள், குற்றங்கள் சேர்ந்து 2008இல் அமெரிக்கச் சந்தையே துவண்டு வீழ்ந்தது. இதில் குற்றவாளிகள் அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டே தந்திரம் செய்தனர். இருப்பினும் அவர் செய்தது மாபெரும் குற்றம். இதற்கு அடிப்படை அவர்கள் அனைவருக்கும் பணம்தான் டெலோஸ், உச்ச நோக்கம்! அதற்காக பேராசையிலும், அறியாமையிலும் சமுதாயத்தையே அடகு வைத்து விட்டனர் பணச் சந்தைக்காரர்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் இந்த டெலோஸ் என்கிற உச்ச நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கு டயோட்டா நிறுவனம் முன்வைத்த '5 whys' என்னும் எண்ணக் கட்டமைப்பு உதவும் என்று எனக்குத் தோன்றுகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் கே பி சுந்தராம்பாள் என்ன, என்ன என்று திரும்பித் திரும்பி கேட்டுப் பாடியதுபோல், ஏன், ஏன் என்று ஐந்து முறை கேட்க வேண்டும்.

"ஏன் நீ வேலை செய்கிராய்?"

"பணம் ஈட்ட"

"ஏன் பணம் தேவை?"

"என்னுடைய தேவைகளை நிறைவு செய்ய"

"ஏன் தேவைகள் நிறைவாக வேண்டும்?"

"தேவைகளை பற்றிக் கவலையில்லாமல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்"

"ஏன்"

"நான் கவலையில்லாமல் இருந்தால்தான், அடுத்தவர்களுக்கும் அதே நன்னிலை ஏற்படுத்த முயற்சி செய்யலாம்"

"ஏன் முயற்சி செய்ய வேண்டும்?"

"எல்லா ஜீவராசிகளின் பிறவிப் பயன் நன்றாக வாழ்ந்து மடிவதே"

இப்படி அடுத்தடுத்து ஐந்து ஏன் முடிந்தவுடன்தோராயமாக உங்களது உச்ச நோக்கம் வெளிப்பட்டுவிடும். உங்கள் டெலோஸ் உங்களுக்கும், உங்கள் அடுத்தவருக்கும், பொதுவாக மனிதத்துக்கும் உதவும் வகையில் அமைகிறது என்றால், நீங்கள் நல்லவர். இல்லை என்றால், சீக்கிரமாக உங்களது தார்மீகக் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை ஆராய்ந்து பழுது பார்க்கவும்.

Representational Image
Representational Image

பணம் தேடும் விஷயத்தில் நம் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் பணம் நம் அனைவர் மனதையும் ஆக்கிரமிப்பு செய்வதென்னவோ முழுதும் நிஜம். ஒரு ஐஸ் கிரீம் கடையில் பார்த்த விளம்பரம் ஞாபகத்துக்கு வருகிறது

"They say money can't buy happiness. That is true.

But money can buy chocolate and that's kind of the same thing".

'பணத்தால் மன மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பது உண்மை. ஆனால் சாக்கலேட் வாங்கமுடியும். இரண்டும் ஏறக்குறைய சமம்தான்.'

இரண்டும் அளவுக்கதிகமானால் ஆரோக்கியம் இல்லை என்பதும் சரியே.

-சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி,

சான் ஹோஸே ,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு