Published:Updated:

உங்கள் பிள்ளைகளை வாழ அனுமதியுங்கள்..! - அனுபவப் பாடம் #Parenting #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

வானவில்லைவிட தேசியக்கொடி அருமையாக வரைய வந்தது என் மகனுக்கு. தேசியக் கொடி வரையச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பினோம். ஆனால்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

நம் இந்தியப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்காக அதிகம் தங்கள் பணம், உழைப்பு போன்றவற்றை மட்டுமல்ல, தங்கள் சிந்தனையையும் செலவிடுகிறார்கள்.

அதிகம் என்பதைவிட, தேவையில்லாமல் என்பது மிகப் பொருத்தமாய் இருக்கும். 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ஒரு அப்பா வருவார். தங்கள் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை அவரே செயல்படுத்துவது மட்டுமல்லாமல், சிந்தித்தும்விடுவார். தான் சிந்திப்பதுதான் தன் பிள்ளைகளுக்கு சிறப்பானது என்பது அவர் எண்ணம்.

இதனால் தான் விருப்பப்படும் வாழ்வை வாழ முடியாத கதாநாயகன், கடைசியில் தன் அப்பாவுக்கு அதைப் புரியவைத்து தான் விரும்பிய பெண்ணை மணப்பதாய் முடியும் அத்திரைப்படம் .

Representational Image
Representational Image
Pixabay

நம் இந்தியப் பெற்றோர்களும் சந்தோஷ் சுப்பிரமணியம் அப்பாவைப் போலத்தான் . தங்கள் பிள்ளைகள் என்ன வகை உடை உடுத்த வேண்டும், எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், எதைக் கற்க வேண்டும், எங்கு கற்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும், அத்திருமணம் எவ்வாறு நடைபெற வேண்டும் , என்ன வேலைக்குப் போக வேண்டும், எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று மொத்தத்தையும் அவர்களே சிந்தித்துவிடுகிறார்கள். பிள்ளைகள், அவர்கள் காட்டிய பாதையில் சென்றால் போதும். அவர்கள் சிறப்பான பிள்ளைகளாக அடையாளப்படுத்தப்படுவர்.

மேற்கத்திய நாடுகளில், ஒரு அறிவியல் அறிஞரின் மகன் ரயில் டிக்கெட் பரிசோதகர் ஆக முடிக்கிறது. நம் நாட்டில்? தேர்ந்தெடுத்தல், தனக்கான வாழ்வை வாழ முயல்வது என்பது எல்லாம் சுயம் அறிதலாகும். யாரும் தவறு செய்யாமல் சரியானதை, தனக்கானதைக் கண்டடைய முடியாது. ஆனால், தவறு செய்வதற்கான வாய்ப்பே வழங்கப்பாடாததுதான் நம் வளர்ப்பு முறையின் சிறப்பு அம்சம். என் ஐந்து வயது மகனுக்கு ஓவியப் போட்டி. வானவில், தேசியக்கொடி இரண்டில் ஒன்றை வரைய சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

வானவில்லைவிட தேசியக்கொடி அருமையாக வரைய வந்தது என் மகனுக்கு. தேசியக்கொடி வரையச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பினோம். ஆனால், பள்ளியில் என் மகன் வானவில்லை வரைய விருப்பம்கொண்டு, வானவில்லை வரைந்து மூன்றாம் பரிசு பெற்றான். அவன் வகுப்பு ஆசிரியர், தேசியக்கொடி வரைந்திருந்தால் முதல் பரிசு நிச்சயம் பெற்றிருப்பான் என்று வருத்தப்பட்டார்.

இன்னொருவர் சொல்லக் கேட்டு முதல் பரிசை அவன் பெறுவதை விட, அவன் விருப்பப்பட்டு வரைந்த ஓவியத்திற்கு மூன்றாம் பரிசு தான் என்றாலும், அதுதான் அவனது சுயம். அவனுக்கான பரிசு அவன் விருப்பப்பட்டு செய்ததன் மூலம் கிடைப்பதாய் இருக்க வேண்டும். பங்கேற்றலே முக்கியம்.

பரிசுகளை பின்னர் வாங்கிக்கொள்ளலாம். எதையும் சுயமாக சிந்திக்க, செயல்பட விடாமல் ஒரு நாள் திடீரென்று மொத்த வாழ்வும், குடும்பப் பொறுப்பும் கை மாற்றப்படும். திணறிப் போவார்கள் பிள்ளைகள். தவறே செய்யாதவர் சிறப்பானவர் என்பது தவறான சித்திரிப்பு. தம் பிள்ளைகள் வெற்றியாளராக வர வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருடையதும். ஆனால், தோல்வியே வேண்டாமென்றால் அது வெற்றியா?

Representational Image
Representational Image
Pixabay

பயிற்சியின்போது அதிக காயங்கள் பட்டால்தான் போரில் காயங்கள் குறையும். உங்கள் பிள்ளைகளை வாழ அனுமதியுங்கள். பிடித்தமான உடையைத் தேர்வுசெய்ய அனுமதியுங்கள். பிடித்தமான நண்பர்களுடன் பழக அனுமதியுங்கள்.

தங்களுக்குப் பிடித்த படிப்பை, பாடத்தை, பள்ளியை , கல்லூரியை அல்லது துறையை ,தோழனை, தோழியை, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். முதலில் தவறு செய்தாலும், பின்னர் தங்களுக்கானதை அவர்கள் சரியாகத் தேர்வு செய்ய கற்றுக்கொள்வார்கள். இப்படியான சிறு செயல்கள் மூலம் கிடைக்கும் அனுபவம், அவர்களின் பிற்கால வாழ்வில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க கற்றுக்கொடுக்கும். மாறாக, அவர்களுக்கான சிந்தனைத் தொட்டியாக நீங்கள் மாறினால், அவர்களுக்கான வாழ்வு உங்களுடையதுதானே ஒழிய அவர்களுடையது அல்ல.

-ராம்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு