Published:Updated:

`அம்மாவின் சமையல் குறிப்பு!’ - ரசம் காதலரின் 100% ஃபன் அனுபவம் #MyVikatan

ரசம்
ரசம் ( Vikatan Team )

என் முதல் நாள் சாப்பாடு அனுபவ ஏமாற்றத்திற்குப் பரிகாரமாக அதன்பின் நான் கேட்காமலேயே ரசம் குடிக்கும் வாய்ப்பு எனக்கு தினமும் வரமாக அமைந்தது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திருமணமாகி சில நாள்களில் எனக்கு ரசம் பிடிக்கும் என்று தெரிந்ததும், நான்கே நாள்களில் ரசம் வைக்கப் பழகிவிட்டாள் என் மனைவி. அதுவும் என் அம்மாவிடம் சமையல் குறிப்பு வாங்கி அவருடைய கைப்பக்குவத்திலேயே.

ரசம் வைக்கப் பழகி ஒரு சில நாள்களிலேயே என் ருசிக்கேற்ப அந்த சமையல் குறிப்பை சிற்சில மாற்றங்களும் செய்துவிட்டாள். என் முதல் நாள் சாப்பாடு அனுபவ ஏமாற்றத்திற்குப் பரிகாரமாக அதன்பின் நான் கேட்காமலேயே ரசம் குடிக்கும் வாய்ப்பு எனக்கு தினமும் வரமாக அமைந்தது.

`ஷார்ஜா ஓர் அற்புதமான ஊர்தான்.. ஆனா?' - ரசம் விரும்பியின் வேதனைப் பகிர்வு #MyVikatan
Representational Image
Representational Image
Unsplash

நாள்களும், வாரங்களும், மாதங்களும் இவ்வாறாக ரசத்தில் திளைத்து மிதந்துகொண்டிருந்த என் வாழ்வில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் உணவில் ரசத்தின் சுவை வழக்கத்தைவிட அதி அற்புதமாக இருக்கவே, ரதியைப் புகழ்வதைப்போல் ரசத்தைப் புகழ்ந்துவிட்டேன்.

``அப்போ இந்த ரசம் சாப்பிடறதுக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணீங்களாக்கும்?" என்று என் மனைவி கேட்க,

``அப்படின்னா ரசம் வைக்கத் தெரியுமான்னு கேட்டுல்ல கல்யாணம் பண்ணியிருக்கணும்" என்று ரசத்தில் ஊறிய என் நாக்கு உளற, அன்றோடு அடுத்த 22 நாள்களுக்கு (ஆமாம்... எண்ணினேன் காலண்டரில்) எனக்கு ரசத்தின் வாசனை கூடக் கிடைக்கவில்லை (ஆனால் யார் புண்ணியமோ...சோறு கிடைத்தது).

ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தி, கெஞ்சி, கூத்தாடி, காலில் விழாத குறையாக (விழுந்தாலும் வெளியில் சொல்ல முடியுமா?) மன்றாடி... கடைசியில் ரசம் வைத்த, வைக்கப்போகும் கைகளுக்குத் தங்கக் காப்பு பூட்டிய பின்தான் மறுபடி ரசத்தைத் தட்டில் பார்க்க முடிந்தது.

அதற்கும் ஆப்பு வந்தது சில மாதங்களில் வளைகாப்பு என்ற பெயரில். ஏதோ நாள் கணக்கு சொல்லி இன்ன தேதியில் ஊரில் கொண்டு வந்து மனைவியை விடச்சொல்லி என் பெற்றோரிடமிருந்து உத்தரவும், அவள் பெற்றோரிடமிருந்து வேண்டுகோளும் வந்தது. வேதனை மனைவியைப் பிரிவதில்தான், ரசத்தின் பிரிவால் அல்ல என்று என்னை நானே தேற்றிக்கொண்டு ஊருக்குக் கிளம்பினோம்.

Representational Image
Representational Image
Unsplash

சம்பிரதாயங்கள் முடிந்து மறுபடி நான் ஷார்ஜா திரும்பும் முன் என் அம்மாவிடம் அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் அவசரமாய் ரசத்திற்கு சமையல் குறிப்பு எழுதி வாங்கிக்கொண்டுதான் திரும்பினேன், மனைவியின் துணை இல்லாமல் நாள்களை ஓட்ட முடிந்தாலும் ரசத்தின் துணை இல்லாமல் சாப்பாட்டை ஓட்ட முடியாது என்று உணர்ந்து.

வரும் வெள்ளிக்கிழமை மதிய உணவிற்கு என் ரசம் வைக்கும் முயற்சியை ஆரம்பிக்கலாம் என்று எண்ணி வியாழன் இரவு வீடு திரும்பும்போது சூப்பர் மார்க்கெட் சென்று தக்காளியும் கொத்தமல்லித்தழையும் வாங்கி வந்தேன். பூண்டும், சீரகமும், மிளகும், புளியும் வீட்டில் இருந்தன. ரைஸ் குக்கரில் அரிசியைக் கழுவிப் போட்டு அதை ஆன் செய்துவிட்டு (இதைச் செய்வதற்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை என்னும் தைரியத்தில்) ரசத்தின் பக்கம் என் முழு கவனத்தையும் திருப்பினேன்.

பீரோ லாக்கரில் பத்திரப்படுத்தி வைத்திருந்த (ஆமாம்... லாக்கரில்தான்) என் அம்மாவின் சமையல் குறிப்பை எடுத்து வந்து வாசித்தேன்.

ரசம்

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

மிளகு - அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

பூண்டு - இரண்டு

தக்காளி - ஒன்று

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

Representational Image
Representational Image
Unsplash

செய்முறை:

புளியை சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறவைத்த புளியை நன்றாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியைப் புளி நீருடன் சேர்த்துப் பிசையவும். மிளகு, சீரகம், பூண்டு இவற்றை சிறிது கருவேப்பிலையுடன் ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். இதை புளி நீருடன் கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டுத் தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும். தேவைக்கு உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

`சே! இவ்வளவுதானா ரசம்! இதென்ன பெரிய வித்தையா?' என்று நினைத்துக்கொண்டு என் அம்மாவின் சமையல் குறிப்பை அடி பிசகாமல் கடைப்பிடித்து ரசம் வைத்து இறக்கினேன். பூண்டு வாசனை மூக்கைத் துளைத்தது.

`ஆஹா! ஜமாய்ச்சுட்டடா கண்ணா! இவ்வளவு ஈஸின்னு தெரிஞ்சிருந்தா முதல்லயே படிச்சிருக்கலாமே ரசம் வைக்க' என்று நினைத்துக்கொண்டு ஆவலாய் சுடு சாதத்தைத் தட்டில் வைத்து ரசத்தை கரண்டி கரண்டியாக ஊற்றி, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காமல் அள்ளி வாயில் வைத்தேன்.

வைத்த வேகத்தில் அப்படியே துப்பினேன் அத்தனையையும் தட்டில். நாக்கில் ஏறிய புளிப்பு பற்கள் கூச, கன்னக் கதுப்புகள் நோக, உச்சந்தலைவரை புளியேற, கண்களில் நீர் வடிய,

`எதைத் தின்னா பித்தம் தெளியும்', என்பவனாய் கையில் கிடைத்ததை எல்லாம் வாயில் போட்டுத் துப்பினேன். வெறும் சாதத்தை நான்கு வாய் உள்ளே தள்ளிய பின்தான் சுயநிலைக்குச் சற்றே திரும்பினேன். அப்போதுதான் தெரிந்தது ரசம் வைப்பது பெரிய வித்தைதான் என்று.

Representational Image
Representational Image
Unsplash

வயிற்றைப் பசி கிள்ளினாலும் வாயைத் தாண்டி வயிற்றுக்கு எதுவும் சென்று சேராது இரவு வரை என்று உணர்ந்து சாதத்தை அப்படியே மூடி வைத்துவிட்டு, என் அம்மாவின் சமையல் குறிப்பை மறுபடி எடுத்துப் பார்த்தேன்... எங்கே கோட்டைவிட்டேன் என்று அறியும் பொருட்டு.

`புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு'... சூப்பர்மார்க்கெட்டின் காய்கறிப் பகுதியில் பார்த்திருக்கும் எலுமிச்சை ஞாபகம் வந்தது. சிறிய எலுமிச்சை என் மூடிய முஷ்டி அளவு இருக்கும். அந்த அளவுதான் புளியை ஊறப்போட்டு கரைத்து எடுத்தேன்.

`மிளகு, சீரகம் - அரை ஸ்பூன்'... அதுவும் சரி தான்.

`பூண்டு - இரண்டு'... வேலை மெனக்கெட்டு இரண்டு முழு பூண்டுகளையும் கைகள் பிசுபிசுக்க மொத்தமாய் தோலுரித்தல்லவா போட்டேன் - சரியாக.

`தக்காளி - ஒன்று'... புளிக்கு சொல்லியதைப்போல் தக்காளிக்கு அளவு சொல்லவில்லையாதலால் இருப்பதிலேயே பெரிய பழுத்த தக்காளியைப் பிசைந்து விட்டேன் புளிக் கரைசலில்.

`எண்ணெய் - ஒரு ஸ்பூன், கடுகு, வெந்தயம் - கால் ஸ்பூன்'... எந்தத் தவறும் இல்லை இந்த அளவுகளில்.

`பெருங்காயம் - ஒரு சிட்டிகை'... சிட்டிகை என்பது என்ன அளவென்று தெரியாததால் எதற்கும் இருக்கட்டும் என்று அதையும் கால் ஸ்பூன் போட்டேன்.

`கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு'... சிறிதளவுதான் சரியாக உபயோகித்தேன்.

Representational Image
Representational Image
Unsplash

`உப்பு - தேவைக்கு'... இங்கே கொஞ்சம் தடுமாற்றம் வந்தது. 'தேவைக்கு' என்பது யாருடைய அல்லது எதனுடைய தேவைக்கு என்ற கேள்வி தோன்றிவிட்டது சட்டென்று. என்னுடைய தேவைக்கா அல்லது ரசத்தினுடைய தேவைக்கா என்று புரியாததால் சற்று எச்சரிக்கையுடனேயே எடுத்த அரை ஸ்பூனைக் குறைத்து கால் ஸ்பூனாக்கி போட்டேன்.

எல்லாம் சரியாய்த்தானே செய்தேன் என்ற குழப்பத்துடனேயே என் முதல் ரசத்தை ஏக்கத்துடன் பார்த்தேன். `முதல் வாய் காக்காவுக்கு' என்று இலையில் இருப்பதை தானம் செய்வதுபோல் என் முதல் ரசம் ஷார்ஜாவின் சாக்கடைக்கு என்று தாரை வார்த்தேன். சமையலறை சிங்க்கில் பாத்திரத்தைக் கவிழ்க்கும்போது வந்தது ஒரு வைராக்கியம் - என்ன ஆனாலும், எத்தனை முறை தாரை வார்க்க நேர்ந்தாலும் என் கையால் நானே செய்த ரசத்தை டம்ளரில் ஊற்றிக் குடிக்காமல் விடுவதில்லை என்று.

அதன்பின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதுதான் என் வாடிக்கையாயிற்று. மறுமுறை சூப்பர் மார்க்கெட் போகும்போதுதான் என் புத்தியில்பட்டது `இண்டியன் லைம்' என்று பெயர்ப்பலகை கொண்ட பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த, கோலி குண்டை விட சற்று பெரியதாய் இருந்த அந்த சின்னஞ்சிறு எலுமிச்சைகளைத்தான் புளியின் அளவாக என் அம்மா சமையல் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார் என்று.

Representational Image
Representational Image
Unsplash

தலையில் அடித்துக்கொண்டு மறுமுறை `சிறிய இண்டியன் லைம்' அளவிற்குப் புளி ஊறவைத்து ரசம் வைத்தேன். புளிப்பு தலைக்கு ஏறவில்லை என்றாலும் மறுபடியும் தாரை வார்க்கத்தான் நேர்ந்தது - பூண்டின் நெடி தலைக்கேறியதால்.

சட்டென்று ஞானோதயம் பிறந்து அதற்கென்றே சூப்பர்மார்க்கெட் சென்றேன். தேடினேன். அங்கு இருந்தது நான் போட்ட பூண்டின் அளவில் பாதியாக `இண்டியன் கார்லிக்'. பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு எடை போடும் மலையாளியிடம், `ரசத்துக்கு இது தன்னே கார்லிக்?" என்று மும்மொழி கலந்த கேள்விக்கு அவர், ``அதே, சாரே", என்று ஒரு மொழியில் பதிலளித்தார்.

``இதில் இது ரெண்டு மதியோ?" என்று இரண்டு முழுப் பூண்டுகளை எடுத்துக்காட்ட,

``ஐயோ சாரே! இது தன்னே மதி!" என்று உதிர்ந்திருந்த இரண்டு இதழ்களை மட்டும் காட்டினான் (அவற்றுக்கு `பல்' என்று பெயர் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்).

இப்போது ரசம் ஒரு வகையாய் வசப்பட்டிருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு கசப்பு அதன் அடிநாதமாய் நாக்கில் நெருடிக்கொண்டே இருந்தது. அது எதனால் என்று கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்தேன்... ஒரு நாள் தாளிக்கும்போது அருகில் ஸ்பூன் இல்லை என்று அவசரமாய் இரண்டு விரல்களால் பெருங்காயத்தைக் கிள்ளிப் போட்டு `சிட்டிகை' என்பது அதுதான் என்று உணரும் வரை.

அன்று நிறைவேறியது ரசத்தை டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் என் வைராக்கியம். அதன் பின் `தினமும் திருவிழாதான்' என்பதைப் போல் தினமும் ரசம்தான். தினமும் ஒரு பெக் போட்டால்தான் தூக்கம் வரும் என்பதுபோல், தினமும் ஒரு டம்ளர் குடித்தால்தான் நிம்மதி வரும் என்ற நிலைக்கு என்னை நானே சந்தோஷமாக ஆட்படுத்திக்கொண்டேன்.

Representational Image
Representational Image
Unsplash

அடுப்பில் சட்டி வைத்த பின் தாளிக்க எண்ணெய் இல்லை என்று பதறி, கடைக்குப் போகும் நேரம் இல்லாமல் ஃபிரிட்ஜில் இருந்த நெய்யை ஒரு ஸ்பூன் ஊற்ற, அன்று ரசம் தேவாமிர்தமாய் ஆனது. அன்றிலிருந்து என் ரசக் குறிப்பில் எண்ணெயை இடம்பெயர்த்தது நெய்.

பள்ளிப் பருவத்தில் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் இலையில் ஊற்றி, எடுத்துக் குடிக்க முடியாமல் வழித்து நக்கிய அன்னாசிப்பழ ரசத்தின் ருசி, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் ஒரு நாள் நினைவுகளின் அடித்தளங்களில் இருந்து மேலேறி வந்தது. அடுத்த ரசம் பைனாப்பிள் ரசமானது. அதுவரை ரச சொர்க்கத்தில் இருந்தவனுக்கு அன்று இந்திர பதவி கிடைத்தது.

உருகி, உருகி ரசம் வைப்பவனுக்கு அதற்கான சைடு டிஷ் செய்யப் பொறுமை இல்லாததால், எந்த ரசத்துக்கு எது பெஸ்ட் சைடு டிஷ் என்று தினம் ஓர் ஆராய்ச்சியில் இறங்கினேன்.

ஓர் உணவகத்தின் புதினா துவையலும், ஓர் உணவகத்தின் கேரள அவியலும், ஓர் உணவகத்தின் செட்டிநாடு கோழி வறுவலும், ஓர் உணவகத்தின் மட்டன் சுக்காவும், ஓர் வட இந்திய உணவகத்தின் உருளை ரோஸ்ட்டும், ஓர் உணவகத்தின் கீரை மசியலும், ஒரு நாளைக்கு வீட்டின் சுட்ட அப்பளமும் என்று வாரத்தின் ஏழு நாள்களுக்கு ஏழு வகைகளைத் தேர்வு செய்து வைத்திருந்தேன்.

Representational Image
Representational Image
Unsplash

வீட்டிற்கு வரும் வழியில் இவற்றை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்ததும் ரைஸ் குக்கரில் சாதம் வைத்து, அது தயாராவதற்குள் ரசம் வைத்து மூடி வைத்துவிட்டு, குளித்து உடை மாற்றி, ஆற அமர சுடச்சுட சாதம் வைத்து, ரசம் ஊற்றி, அன்றைய சைடு டிஷ்ஷுடன் நிம்மதியாய்ச் சாப்பிடுவது என்பது என் அன்றாட அனாயச வழக்கமாகிவிட்டது இந்த ஏழு மாதங்களில்.

பிறந்ததிலிருந்து விதம் விதமாய்ச் சமைத்து அதை அன்போடு ஊட்டி வளர்த்த அம்மாவின் கைமணத்தில் உண்டு வளர்ந்த நாக்கிற்கு, இன்று அவர்கள் ரசம் கார நீராய்த் தெரிவது என் கூடிய கொழுப்பின் அளவைக் காட்டும் அறிகுறி இல்லாமல் வேறு என்ன?
கா. தாஸ்

ஷார்ஜா வந்திறங்கிய என் மனைவியையும், மகளையும், அம்மாவையும், மாமியாரையும் ஏர்போர்ட் சென்று அழைத்து வந்து, வீட்டில் இடம் ஒதுக்கி தொட்டில் வாங்கிப் போட்டு, மகளின் முகம் பார்த்து மகிழ்ந்ததில் ரசத்தின் நினைவே வரவில்லை ஒரு வாரமாக.

இன்று எல்லாம் ஓரளவு செட்டிலாகி ஒரு வழியாய் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது வாழ்க்கை. ஆபீஸிலிருந்து வீடு வந்து குளித்து உடை மாற்றி, மகளைக் கொஞ்சி, இப்போது தட்டின் முன் அமர்ந்ததும் சடாரென்று நினைவில் அறைந்தது என் ரசத்தின் ருசி.

Representational Image
Representational Image
Unsplash

தட்டில் சாதம் வைத்து ரசம் ஊற்றப் போன என் அம்மாவிடம் சாதத்தில் அவர் ரசத்தை ஊற்றும் முன் கை நீட்டினேன். `இது என்ன புதுப் பழக்கம்?' என்பதுபோல் என்னைப் பார்த்த அம்மா, எதுவும் பேசாமல் என் கையில் அரைக் கரண்டி ரசத்தை ஊற்றினார்.

வாயில் வைத்து உறிஞ்சும்போது பின் மண்டையில் உதைத்தது என் நினைவில் தேங்கிய என் ரசத்தின் ருசிக்கும், என் அடித்தொண்டையில் இறங்கும் மிளகு நீரின் சுவைக்கும் இருக்கும் லிஃப்ட் வைத்தாலும் எட்டாத உயரம்.

உணவுகளில் நோய் தீர்க்கும் நிவாரணியாகக் கருதப்படும் ரசம் எனக்குக் கொழுப்பின் அளவைக் கூட்டியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். பிறந்ததிலிருந்து விதம் விதமாய்ச் சமைத்து அதை அன்போடு ஊட்டி வளர்த்த அம்மாவின் கைமணத்தில் உண்டு வளர்ந்த நாக்கிற்கு, இன்று அவர்கள் ரசம் கார நீராய்த் தெரிவது என் கூடிய கொழுப்பின் அளவைக் காட்டும் அறிகுறி இல்லாமல் வேறு என்ன? ஆழ்மனதில் குறுகுறுத்தது என் கைப்பக்குவதில் என் ருசிக்கேற்ப நான் செய்து என் நாக்கை பழக்கிய என் ரசம், மற்ற ரசங்களை, ஏன் அம்மாவின் ரசத்தைக்கூட வெறும் கார நீராய் உணரவைக்கும் குற்ற உணர்வு.

அடுத்த கரண்டி சாதத்தில் ஊற்றப்போன அம்மாவிடம், ``போதும்,மோர் போடுங்க", என்றவனை, ``என்னடா, அதிசயமா இருக்கு... ஒரு கரண்டியோட ரசத்தை வேண்டாம்னு சொல்ற... ஏன், எல்லாம் சரியாத்தான இருக்கு?" என்று சந்தேகத்துடன் வாயில் ஊற்றிப் பார்த்தார் அம்மா. ``அருமையா இருக்கேடா" என்று மறுபடி ஊற்றப்போக, ``வேண்டாம்... மோரே ஊத்துங்க" என்றேன்... வேறு ஏதேனும் சொன்னால் வைரக் காப்பு வாங்கி வைத்து வணங்கினாலும் விமோசனம் விடியாது என்று தெரிந்து.

Representational Image
Representational Image
Vikatan Team

நினைவில் நிற்கும், என் கைப்பட நானே செய்து குடித்த, என் ரசத்தின் ருசியுடன் நிஜத்தில் இணையும் நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன். அம்மாவும் மாமியாரும் ஊருக்குக் கிளம்பும் முன் அவர்களுக்கு ஒரு நாள் ரசம் வைத்துக் கொடுக்க வேண்டும்.

என்ன... ஒரே ஒரு பயம்தான். `ரசம் சூப்பரா செய்றீங்க... அப்பிடியே மத்ததும் கத்துக்கோங்க' என்று என் மனைவி சொல்லிவிடுவார்களோ என்று. சொன்னால் என்ன... அதையும் செய்யவேண்டியதுதான். குடும்பத்துல இதெல்லாம் சாதாரணமப்பா..!

-----------------

-கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு