பொட்டலம் மடிக்கப்பட்ட பேப்பரால அரசு வேலை கெடச்சது! - நியூஸ் பேப்பர் தலைமுறையின் மெமரீஸ் #MyVikatan

இட்லி பொட்டலம் மடிக்கப்பட்ட பேப்பரில் வந்த அரசு வேலை வாய்ப்பு செய்தியைப் படித்துவிட்டு லதா தங்கவேல் என்கிற என்னுடைய ஒன்று விட்ட அக்கா ஒருவர் பெண்காவலராகப் பணிக்குச் சென்று இன்றும் காவல் துறையில் பணியில் இருக்கிறார்.
3துக்பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
என்னுடைய கல்லூரி காலத்தில் எங்களுக்கு தமிழ் மொழி பாட வகுப்பு எடுத்த பேராசிரியர் ரகோத்தமன் அவர்கள் இப்படி சொல்லுவார்.
"நியூஸ் பேப்பரை பாடமாக வைத்தால் நீங்கள் அதையும் படிக்க மாட்டீர்கள்..." என்று. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. பரீட்சை கேள்வி பதில் போன்ற எந்த வித நிர்பந்தமும் இன்றி இருப்பதினாலேயே நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இல்லாவிடில் அவர் கூறியதைப் போல பயத்தினால் அதையும் படிக்காமல் விட்டிருப்போம்.
இன்றைய தலைமுறையிடம் சிறிது சிறிதாக வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதற்கு இன்றைய சூழலும் ஒரு காரணம். ஆனால் படிப்பதினால் என்ன பலன் என்பதை நம் செயல்கள் மூலம் பிறர் உணரத்தான் முடியுமே தவிர அதை நம்மால் அவர்களுக்கு கடத்திவிடமுடியாது. ஒரு மனிதனை மனிதனாக பண்படுத்த புத்தகங்களால் முடியும் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.

80-களையொட்டி பிறந்த தலைமுறை வரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும். காரணம் இன்று போல் அன்று அவ்வளவாக ஊடகங்கள் (Media) இல்லை. அனைத்து வகையான பொழுது போக்கு அம்சங்களும் இன்று உள்ளங்கைக்குள் வந்து விட்டது. புத்தகம் வாசிக்க கூட உள்ளங்கை அகல இலக்க முறை கருவிகள் (Digital Gadgets) வந்துவிட்டன. அது பற்றிய அறிமுகங்களில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கும்.
புத்தகம் படிக்கும் அனுபவத்தைப் பெறும் வகையில் நீங்கள் பக்கத்தைத் திருப்பலாம். ஒரு விரலால் வலப்புறமிருந்து இடமாகவோ, இடதுபுறமிருந்து வலமாகவோ திரையில் இழுத்தால் (Swipe) முந்தின பக்கத்திற்கோ, அடுத்த பக்கத்திற்கோ புத்தகத் தாளை புரட்டுவது போன்ற இயங்குபட மென்பொருள் (animation software) வசதி உள்ளதாக விவரித்திருப்பார்கள்.
ஆனால், இது பற்றி என் போன்ற 80-களில் பிறந்த யாரை கேட்டாலும் புத்தகத்தை கையில் தொட்டு படிப்பது போல் வராது என்றே கூறுவார்கள். இந்த கருவிகளெல்லாம் அது போன்ற அனுபவத்தை தருவதற்கான மாற்றே ஒழிய அந்த புத்தகத்தை கையில் தொட்டு தடவி படிக்கும் அந்த சுகானுபவத்தை கொடுக்காது என்பதை இங்கே என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

மண்ணுக்கு உண்டான வாசனை போலவே புத்தகத்துக்கும் ஒரு வாசனை உண்டு. புதியதாக ஒரு நாவலை வாங்கி முதன்முதலாக அந்த காகிதத்தாளின் மணமும் அச்சு பதியப்பட்ட மையின் (ink) மணமும் கலந்து அதை சுவாசித்துக்கொண்டே ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி வாசிக்கும் சுகானுபவம் kindle போன்ற கருவிகளின் மூலம் இலக்க முறையில் (Digital Reading) படிக்கும்போது கிடைப்பதில்லை. புதிய புத்தகத்துக்கு ஒரு வாசனை உண்டென்றால் பழைய புத்தகத்துக்கும் ஒரு வாசம் உண்டு. அது புத்தக காதலர்களுக்கு மட்டுமே புரிந்த உணர முடிந்த விஷயம்.
என்னுடைய கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது நாங்கள் படித்த புத்தகங்கள் பெரும்பாலும் செய்தித்தாள்களில் இலவச இணைப்பாக வரும் 16 அல்லது 20 பக்க புத்தகங்கள்தான். அனைத்து நாளிதழ்களும் அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் வாரத்துக்கு இரண்டு புத்தகங்கள் இலவச இணைப்பாகக் கொடுப்பார்கள். அதில் ஒரு புத்தகம் நிச்சயமாக சிறுவர்களுக்கான புத்தகமாக இருக்கும். அநேகமாக நான் மூன்று அல்லது நான்காம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து எனக்கு இந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் தொடங்கியது என்று நினைக்கிறேன்.

அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான ஆண்கள் (எனக்கு தெரிந்து பெண்கள் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரத்தில்தான் படிப்பார்கள், அவர்களுக்கு காலையில் படிப்பதற்கான நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை) பலருக்கும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் இருந்தது என்றால் மிகையில்லை.
காலை எழுந்தவுடன் கையில் ஒரு கோப்பை காப்பியுடன் நாளிதழ்களின் முகத்தில் விழிப்பவர்களே அதிகம். அது தமிழ் நாளிதழோ, ஆங்கில நாளிதழோ எதுவாயினும் காலை முதல் வேலை அந்த நாளிதழை தொட்டு புரட்டி அனைத்து செய்திகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் பிற வேலைகளைத் தொடங்குவார்கள். ஒரு நாள் பேப்பர் பையன் லேட்டாக வந்துவிட்டால் ஏதோ உலகமே அன்றோடு அழிவது போல குறைப்பட்டுக் கொள்வார்கள்.
ஆனால், எங்கள் ஊருக்கு அன்றைய பேப்பர் மதியம் 1 மணி அல்லது 2 மணி வாக்கில்தான் வரும். ஏனென்றால், காலை 6 அல்லது 6.30 மணிக்கு வாய்த்தலை என்ற ஊரில் (ஏனென்றால் அங்குதான் ராமு என்ற என் அப்பாவின் நண்பர் நாளிதழ் மற்றும் வார இதழ்களின் முகவராக இருந்தார். அந்த ஒரு ஊரிலிருந்துதான் கிட்டத்தட்ட 20 அல்லது 30 ஊர்களுக்கு தினசரி பத்திரிகைகளும் வார பத்திரிகைகளும் பட்டுவாடா (Delivery) செய்யப்படும்.) இருந்து தன்பணியைத் தொடங்கும் பேப்பர் போடும் பையன் எல்லா ஊர்களுக்கும் பேப்பர் போட்டு முடித்து விட்டு கடைசியாக எங்கள் ஊருக்கு மதிய உணவு நேரத்தில்தான் வருவான்.
எங்கள் ஊரில் அன்றைய காலகட்டத்தில் ஐந்து முதல் பத்து பேர்தான் பேப்பர் வாங்குவார்கள். அதில் ஐந்து பேப்பர் கடைகளுக்கு வாங்கப்படும். அந்த பேப்பர் அடுத்தநாள் கடையில் பொட்டலம் மடிக்க உபயோகப்படுத்தப்படும்.

அது போன்ற இட்லி பொட்டலம் மடிக்கப்பட்ட பேப்பரில் வந்த அரசு வேலை வாய்ப்பு செய்தியைப் படித்துவிட்டு லதா தங்கவேல் என்கிற என்னுடைய ஒன்றுவிட்ட அக்கா ஒருவர் பெண் காவலராக பணிக்குச் சென்று இன்றும் காவல்துறையில் பணியில் இருக்கிறார். அதனாலேயே பிற்காலத்தில் கோன் போன்று சுருட்டப்பட்ட காகிதத்தில் விற்ற கடலை பருப்பு பொட்டலத்தை வாங்கி கடலையைத் தின்ற பிறகு அதில் ஏதேனும் முக்கிய விஷயம் இருக்கிறதா என்று விரித்து பார்க்கும் பழக்கம் எனக்கு இயல்பாகவே ஏற்பட்டது.
பிறநாள்களில் எப்படியோ தெரியாது. ஆனால், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேப்பர் போடும் பையனுக்காக ஒரு விருந்தாளிக்கு காத்திருப்பது போல காத்திருப்போம். ஏனென்றால், அன்று வரும் இலவச இணைப்பு புத்தகங்கள்தான். சிறுவருக்கான புத்தகத்தில் பெரும்பாலும் நீதி நெறிக்கதைகள் மற்றும் குறுந்தொடர் சித்திரக்கதைகள் போன்றவற்றை விரும்பி படிப்போம்.

என்னுடைய அப்பா அவருடைய இளமைக் காலத்தில் ஒரு வார இதழில் (எந்த வார இதழ் என்று நினைவில்லை. விகடனாகக்கூட இருக்கக்கூடும்.) வந்த படக்கதை தொடரான "டிடெக்ட்டிவ் ரகுநாத்" என்ற தொடரின் அனைத்துப் பகுதிகளையும் கத்தரித்து ஒரு புத்தகமாகத் தொகுத்து (Bind) செய்து வைத்திருந்தார். ஒருநாள் அவருடைய ட்ரங்கு பெட்டியைத் திறந்தபோது இந்தப் புத்தகம் கிடைத்தது.
அதே போன்று கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் தொடரை கத்தரித்து தொகுத்து ஒரு புத்தகமாக பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தவர்கள் அதிகம்.
அப்படியே வாரமலர் போன்ற புத்தகங்களில் வரும் தொடர்கதைகளைப் படிக்கும் பழக்கமும் படிப்பதின் மேல் உள்ள ஆர்வம் வளரவும் இது போன்ற புத்தகங்கள் தூண்டு கோலாக இருந்தன. எங்கள் ஊரில் யாரேனும் அரிதாக ஒன்றிரண்டு வார இதழ்கள் ஆனந்த விகடன், ராணி போன்ற புத்தகங்களை வாங்குவார்கள். அவர்களிடமிருந்து ஓசியில் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படிப்போம்.
பின்பு கோகுலம் என்று ஒரு சிறுவர் மாத இதழ் வந்துகொண்டிருந்தது அதையும் தவறாமல் வாங்கிப் படிப்போம். முதன்முதலாக வண்ணத்தில் படக்கதைகள் படித்தது அந்தப் புத்தகத்தில்தான். பின்பு முத்து காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் போன்ற 50 பைசா முதல் 1 ரூபாய் வரை விற்கும் சித்திரக் கதை புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தோம்.

பின்பு 12 அல்லது 13 வயதில் பாக்கெட் நாவல்கள் அறிமுகம் ஆனது. முக்கியமாக கதைகள் படிக்கும் ஆர்வம் வளர கிரைம் கதை மன்னன் என்று அழைக்கப்படும் ராஜேஷ் குமார் மற்றும் ராஜேந்திர குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் நாவல்களைப் படித்த பின்புதான், அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு 500 நாவல்கள் வரை படித்திருப்போம்.
எனக்கு புதினங்கள் படிக்கும் ஆர்வம் தொடங்கியது, சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் அகிலன் அவர்களின் பால் மரக்காட்டினிலே என்ற நாவலை படித்த பிறகுதான். அது என்னுடைய அண்ணாவுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் வரும் (non-detail) வகை பாடத்திட்டமாகும். அந்தப் புத்தகத்தை பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்தபோது நானும் அதைப் படித்தேன். அதன் பிறகு எனக்கு அது போன்ற பெரிய சமூக நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமேற்பட்டது.

சரித்திர நாவல்கள் படிக்கும் ஆர்வம், மறைந்த சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்களையே சேரும். அவருடைய அனைத்துப் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். பிற்பாடு அமரர் கல்கியின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்பு என் நண்பன் ஜெய்காந்த் பொன்னியின் செல்வன் புத்தகத்தை எனக்காகவே சென்னை ஹிக்கின்ஸ் பாதம்ஸ் (Higgin Bothams) சென்றபோது வாங்கினான். அப்போதுதான் முதன்முறையாக பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தேன்.
ஏனென்றால், அவன் பொன்னியின் செல்வன் நாவலை அதற்கு முன்பே படித்திருக்கிறான். அவனுடைய பெரியம்மா நான் முன்னர் கூறியதுபோல கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் தொடரை கத்தரித்து தொகுத்து ஒரு புத்தகமாக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்தார் (அவனுடைய பெண் குழந்தைக்கு அவனுடைய பெரியம்மா `வானதி' என்று பெயர் சூட்டுமளவுக்கு அந்த நாவலை அவர்கள் நேசித்தார்கள் என்பது இங்கே கொசுறு தகவல்).

சில புத்தகங்களை வாசிக்கையில் படித்து முடிக்க வேண்டிய பக்கங்கள் குறையக் குறைய மனம் வருத்தப்படும். அதற்குள் முடிந்துவிட்டதே என்பது போன்ற எண்ணம் ஏற்படும். எனக்கு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது அவ்வாறான எண்ணம் தோன்றியதுண்டு. அதே போல அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை ஒரு ஐந்து ஆறு முறை படித்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாகப் படிப்பது போன்ற அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன். இரவு நேரம் போவதே தெரியாமல் அதிகாலை வரை படித்திருக்கிறேன்.
சரித்திர நாவலாசிரியர்களில் சாண்டில்யன், அமரர் கல்கி தவிர குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியர்கள் பாலகுமாரன், கோவி மணிசேகரன், விக்கிரமன் ஆகியோர்.
எழுத்தாளர் சுஜாதா அவர்களை வெகுநாள்கள் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். ஜனரஞ்சகமான சமூக நாவல்களாகட்டும், அறிவு சார்ந்த அறிவியல் நாவல்களாகட்டும் திகில் நிறைந்த துப்பறியும் நாவல்களாகட்டும் அல்லது அவருடைய இளமைக்கால நினைவுகளை (ஸ்ரீரங்கத்து தேவதைகள் போன்ற) எழுதுவதாகட்டும் வாசகரை புத்தகத்துடன் கட்டிப்போடும் திறன் அவருக்கு உண்டு. அவருடைய காந்தளூர் சாலை நாவல் எந்த வகை நாவல்களையும் அவரால் சுவாரசியமாக எழுத முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புத்தகம் படிப்பதில் வாசகருக்கு ஒரு வசதி உண்டு. அவரவருடைய கற்பனைத் திறனுக்கு ஏற்ப கதா பாத்திரங்களையோ சூழ்நிலைகளையோ கற்பனை செய்துகொள்ள முடியும். பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கையில் நாகை கடற்கரை புத்த விகாரத்திலும் வேதாரண்யம் கடற்கரையிலும் பூங்குழலியுடன் படகில் கடலிலும் பயணித்தது போன்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது. அது போன்ற எழுத்து நடையை நான் வேறு எழுத்தாளர்களிடம் கண்டதில்லை.
ஆனால், எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களுடைய எழுத்தை படிக்கும்போது அதை உங்களால் உணர முடியும்.
"கும்பகோணம் போட் மெயிலிருந்து இறங்கி அந்த மெத்தென்ற புழுதிமண்ணில் கால்கள் புதைய புதைய நடந்தான்..."
என்று படிக்கும் போது நம்முடைய கால்களில் அந்த மெத்தென்ற உணர்வு ஏற்படும். மோக முள் புத்தகத்தில் ரங்கண்ணா கதாபாத்திரம் தினமும் காலையில் கூவும் குயிலின் ஓசை என்ன ஸ்வரம் ஒரே ஸ்வரத்தில் கூவுகிறதா அல்லது தினமும் வெவேறு ஸ்வரத்தில் கூவுகிறதா என்று கண்டு பிடிக்க முயல்வதாக எழுதியிருப்பார்.

இந்த நாவலில் பல இடத்தில எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க அடைக்க படித்திருக்கிறேன். அது போல வாசகர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி கதையில் வரும் பாத்திரங்களுக்காக கண்ணீர் விட வைக்கவோ அல்லது ஒரு கதையில் வரும் அனைத்து பாத்திரங்களையும் வாசகர்கள் அந்த கதா பாத்திரங்கள் பற்றி வாசிக்கையில் அந்தந்த பாத்திரங்களாகவே தங்களை கற்பனை செய்துகொள்ளும் விதமாக எழுத ஜானகிராமன் போன்றோரால் மட்டுமே முடியும்..
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும் அதை எவ்வாறு சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் தன்னுடைய பல கதைகளில் வரும் கதா பாத்திரங்கள் மூலம் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதியிருப்பார். பிற்பாடு வருவதை முன்கூட்டியே சில எழுத்தாளர்களால்தான் எழுத முடியும். சென்னையில் முதன் முதலாக சுனாமி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாவலில் திரு. பாலகுமாரன் அவர்கள் சுனாமி பற்றி எழுதியிருந்தார்.
இது போன்ற பல சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தீர்களானால் ஒரு இக்கட்டான சூழலில் கூட உங்களால் யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வரமுடியும் என்பது அனுபவ பூர்வமாக நான் உணர்ந்த உண்மை.
தொழிநுட்பம் அதீத வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் பழக்கம் அரிதாகி போனதில் வியப்பேதுமில்லை. ஆனால், ஒருமுறை புத்தகம் வாசித்து பழகி அதன் ருசி கண்டுவிட்டால் உங்களால் அதை ஒருபோதும் விடமுடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
- ஆனந்தகுமார் முத்துசாமி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.