Published:Updated:

என்னைக் கலங்கவைத்த அயர்ன்காரரின் நேர்மை! -நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Eric Vö on Unsplash )

நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்கும் எளியவர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்ற பெயருடனேயே தொடர்ந்து வாழவேண்டியுள்ளது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நேர்மை இருக்கிறது. அதனை வெளிப்படுத்துவதற்குத்தான் நாம் அவ்வப்போது தவறிவிடுகிறோம்.

மனசாட்சியின் குரலை தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே போகும்போது, காலப்போக்கில் அதன் குரல் பலகீனமடைந்து தேய்ந்துபோய்விடுகிறது.

ஒருசில சமயங்களில், பிறருக்கு காட்டுவதற்காகவும், வேறு வழியின்றியும் பலர் வெளிப்படுத்தும் நேர்மை, போலியான ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. பிறருக்குக் காட்டுவதற்காக அல்லாமல் தன் மனசாட்சிக்கு பயந்து, தனக்குத்தானே கடைபிடிக்கக்கூடிய ஒன்றே உண்மையான நேர்மை ஆகும்.

"நேர்மை, ஒரு விலை உயர்ந்த பரிசு, அதனை மலிவானவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது" என்பார் அமெரிக்க கோடீஸ்வரரான வாரன் பஃபெட்.

Representational Image
Representational Image
Pixabay

குணங்களையும் திறனாய்வு செய்யும் அளவுகோலாகப் பொருளாதாரமே அமைந்துள்ளதால், சமுதாயத்தில் வலியவர்களின் நேர்மை போற்றப்படும் அளவுக்கு, எளியவர்களின் நேர்மை சிலாகிக்கப்படுகிறதா என்பது ஆய்விற்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

வலியவர்களின் நேர்மை, ஒரு பிம்பமாகவே தொடர்ந்து கட்டமைக்கப்படுவது சமுதாயத்திற்கு ஏதேனும் ஒருவகையில் நன்மை அளிக்கக்கூடிய ஒன்றுதான்.

அதேநேரம், எளியவர்களது நேர்மையை ஒருசில செய்திகளுடன் நாம் கடந்து போய்விடுகிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

Vikatan

நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்கும் எளியவர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்ற பெயருடனேயே தொடர்ந்து வாழவேண்டியுள்ளது. ஆனால், தன்மானம் போன்றே நேர்மையும் பல எளிய மனிதர்களிடம் இயல்பாகத் தொடர்ந்து வெளிப்படுகிறது.

பிறருக்குக் காட்டுவதற்காக அன்றி, இயல்பாகவும் வெள்ளந்தியாகவும் வெளிப்படும் இந்த நேர்மை, பல நேரங்களில் நமக்கு பெரும் ஆச்சர்யத்தை அளிக்கும்.

அவ்வாறு நான் ஆச்சர்யமடைந்த இரு சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

Representational Image
Representational Image
Vikatan Team

நான், வாரம் ஒருமுறை துணிகளைத் தேய்க்க (அயர்ன்)க் கொடுக்கும்போது, அயர்ன் செய்பவரிடம் அவ்வப்போது உரையாடுவது வழக்கம். அவருடைய குடும்பச் சூழ்நிலை, நாட்டு நடப்பு உள்ளிட்டவை குறித்து அவர் என்னிடம் விரிவாகப் பகிர்ந்து கொள்வார். ஒரு சில கேள்விக் கொக்கிகளைப் போட்டாலே, அவர் அருவியாகக் கொட்டித் தள்ளிவிடுவார். யாரையும் குறை சொல்லாமல், மிக இயல்பாகத் தன் கருத்துகளை வெளிப்படுத்துவார்.

ஒரு சில நாட்களில், நான் அடுத்தநாள் உடுத்தவேண்டிய துணிகளை அவசரமாய் அயர்ன் செய்யக் கொடுத்து, அங்கேயே காத்திருந்து வாங்கும்போதெல்லாம் அவரது பேச்சின் வீச்சு என்னை அதிகமாய் தாக்கும்.

ஒருநாள், துணிகளை வாங்கிக்கொண்டு அவசரமாகக் கிளம்பும் போது, அவர் தயங்கித் தயங்கி ரகசியமாக என்னிடம் ஏதோ கேட்க வந்தார். இப்படி தயங்கிப் பேசுவது இவரது குணம் கிடையாது என்பதால், நான் அவரை நெருங்கி காதுகொடுத்தேன். அவர் மென்று விழுங்கியவாறு என்னிடம் சிறிது பணம் கடனாகக் கேட்டார்.

Representational Image
Representational Image
Pixabay

சிறு அளவிலான தொகையைக் கடன் கொடுப்பதில் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், பல எளிய மனிதர்களால் கடனை திரும்பக் கொடுக்க இயலாமல்போகும். நமக்கு சிறிய தொகையாக இருப்பது பலருக்கும் பெரிய தொகையாக இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் இடையேயான போராட்டமாகவே சிலரின் வாழ்வு கழிவதால், அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது.

கொடுக்கும் மனம் இருப்பினும், பல சமயங்களில் அவர்களால் கொடுக்க முடியாமல் போக வாய்ப்புண்டு. நாம் கடனை திரும்பக் கேட்காவிட்டாலும், வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் நம் முகத்தில் எப்படி முழிப்பது என்று பலர் சங்கடப்படுவர் என்பதால் அவர்களின் உறவு தொடராமல் போகவும் வாய்ப்புண்டு.

இப்படி சிலரைத் தவறவிட்டும் இருக்கிறேன். எளிய மனிதர்களுக்கு கடன் கொடுத்து, அவர்களைக் கடனாளி ஆக்கிவிட்டோமே எனும் குற்ற உணர்வும் எனக்கு அவ்வப்போது ஏற்பட்டதுண்டு!

எனவே, சிறு அளவிலான தொகையைக் கடனாக அல்லாமல் அன்பளிப்பாக அளித்துவிடுவதே சிறந்தது. எனவே நான் அவரிடம், "அண்ணா இதைக் கடனாக வேண்டாம். இத்தனை நாள் நீங்கள் செய்த வேலைக்கு போனஸாக வைத்துக்கொள்ளுங்கள். திரும்பத் தரவேண்டாம்" என்றபடி அவர் கேட்ட தொகையை எடுத்து நீட்டினேன். சில நொடிகள் யோசித்தவர்,

சற்று தயக்கத்துடன் வாங்கிக்கொண்டார்.

அடுத்தடுத்த வாரங்களில் நான் தொடர்ந்து அவரிடம் துணிகளை அயர்ன் செய்து வாங்கிக்கொண்டிருந்தேன். ஒருநாள் அந்தக் கடையில் இருந்து வெளியே வரும்போது, எதேச்சையாக ஒரு நண்பரைச் சந்திக்க நேரிட்டது. பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, நாட்டு நடப்பு குறித்து பேச்சு திரும்பியது.

``விலைவாசி அதிகமாகிவிட்டதால், அயர்ன் செய்பவர்கூட தொகையை உயர்த்திவிட்டார்" என்றார் நண்பர். எனக்கு ஆச்சர்யம்.

"அப்படியா... எத்தனை நாள் ஆச்சு"? என்றேன்.

"ஒரு துணிக்கு 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக மாத்தி மூணு மாசமாச்சு" என்றபடி சென்றார் நண்பர்.

Representational Image
Representational Image
Emiliano Vittoriosi on Unsplash

நான் அந்த இடத்திலேயே ஆச்சர்யத்துடன் நின்றுவிட்டேன். ஏனென்றால், என்னிடம் இன்றுவரை அவர் ஒரு துணிக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டிருக்கிறார். என்னிடம் வாங்கிய தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதாலேயே மூன்று மாதங்களாக அயர்ன் செய்ததற்கான தொகையைக் குறைத்து வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். எனக்குத் தெரியாமலேயே அவர் தனது கடனை அடைத்தும்விட்டார் என்ற உண்மை எனக்குப் புரிந்தது.

துக்கம் மட்டுமல்ல, சில நேரங்களில் நேர்மைகூட நம்மைக் கண்கலங்கச் செய்துவிடும் என்ற உண்மையை அன்று புரிந்துகொள்ள முடிந்தது!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு