Published:Updated:

``என் அன்பு தமிழ் ஆசிரியை..!’’ - வாசகியின் நெகிழ்ச்சி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

எப்படி உடை உடுத்த வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் சற்று தாமதமாகவே புரிந்து படித்தவள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைந்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கல்விப் பின்புலம் இல்லாத குடும்பம். விவசாயி பெற்ற நான்கு மகள்களில் மூத்த மகள், உரிய வயதிற்கு முன்பே 20 மாதங்கள் வயதில் கூடுதலாகச் சொல்லி பள்ளியில் சேர்க்கப்பட்டவள். ஏதோ சுமாராய் படித்துப் பள்ளிப் படிப்பை 11-ம் வகுப்பு படிப்பை 14 வயதினிலேயே முடித்துவிட்டாள்.

திருமண வயதுமில்லை. அக்காலத்தில் அவ்வாறான குடும்பங்களின் ஒரே தேர்வு பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி. என்ன அதிர்ஷ்டமோ அல்லது துரதிருஷ்டமோ தெரியாது அவ்வருடம் முதல் ஆசிரியப்பயிற்சி பெற்றவர்கள் அதிகமானதால் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டனவாம்.

Representational Image
Representational Image

உள்ளூரிலேயே பெண்கள் கல்லூரி இருந்தது. அதனால் வகுப்பில் சேர்க்கப்பட்டார். என்ன படிப்பு என்றெல்லாம் தெரியாது வாங்கியிருந்த மதிப்பெண்களை வைத்து மூன்றாம் குழுவில் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு எனும் பாடங்களைப் படிக்கும் குழுவில் சேர்க்கப்பட்டார். பாடங்கள் புதிது.

ஆங்கில வழி புதிது. இருப்பினும் படித்தாள் படிப்பை முடித்தவுடன் அக்கல்லூரியில் பொருளாதாரம் இளநிலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. சுதந்திரம் புதிது. பள்ளிக்கும் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. எப்படி உடை உடுத்த வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் சற்று தாமதமாகவே புரிந்து படித்தவள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைந்தது. ஒரு தமிழாசிரியை ஆக தன் பணியைத் தொடங்கினார்.. கோமதி சந்திரன், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்னையிலிருந்து மாறுதலாகி வந்தவர். மாணவர்களிடம் மிக அன்பாகப் பழகினார்.

வகுப்பில் தமிழ்ப்பாடம் நடத்துகையில் சித்தாந்தம் என்றால் என்ன வேதாந்தம் என்றால் என்ன? என்று பாடத்தை ஒட்டிய ஒரு கேள்வி கேட்டார். அனைவரும் அமைதியாயிருக்கையில் குறுகுறுவென எழுந்து அப்போது சற்று புகழ்பெற்ற பாடலாய் இருந்த

``தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது தெரியாமல் போனாலே வேதாந்தம்..’’

எனும் `அவள் ஒரு தொடர்கதை’ சினிமாவில் ஜேசுதாஸ் பாடிய பாடலை ஒப்புவித்தார் அம்மாணவி.

அம்மாணவி நான்தான். தமிழாசிரியைக்கு ஒரே சிரிப்பு. இருவருக்கும் ஏற்பட்ட முதல் அறிமுகம். அதற்குப் பிறகு இருவருக்கும் இடையில் ஓர் அன்பு உணர்வு ஏற்பட்டது.

அதன்பிறகு தொடர் ஆணைகள்தான். என்னில் ஏதேனும் ஒளி இருந்ததாக நம்பி, அவருக்குப் பொறி தட்டியதோ என்னவோ தெரியாது. அதன் பிறகு எங்கு என்ன போட்டி நடப்பினும் தகவல் மட்டுமே தெரிவிக்கப்படும். அது கட்டுரை போட்டியோ, பேச்சுப் போட்டியோ.

Representational Image
Representational Image

இது தலைப்பு, இது நடக்குமிடம் இந்த இடம், உன் பெயர் கொடுக்கப்பட்டது என்பார்.

`மிஸ் எனக்கு வீட்டில் யாரும் இது தொடர்பாக எழுதித் தருவதற்கு இல்லை நான் எப்படி தயாராவேன்’ என்றால் எனக்கு கல்லூரி நூலகத்தில் நூல்களைப் படிப்பதை அறிமுகப்படுத்தினார்.

`படி, எழுதிட்டு வா’ என்றார். ஒன்றிரண்டு முறை எழுதினதைத் திருத்தி இப்படி எழுது என வழி நடத்தினார். அதன் பிறகு `உனக்குத் தெரியும் நீயே எழுது நீயே பேசு’ எனத் தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாதுகாப்புக்கு அந்த இடங்களுக்குச் செல்ல எங்கள் கல்லூரி முதல்வர் மும்தாஜ் அம்மா அவர்கள், உரிய ஆசிரியர்கள், அலுவலர்களை என்னுடன் அனுப்புவார். சென்ற இடங்களில் பரிசு பெற்று தன் பெயருடன் கல்லூரி பெயரையும் பெருமைப்படுத்திய மாணவி என்பதால் இருவருக்கும் நெருக்கமாகினேன்.

சென்னை வானொலியில் இளைய பாரதம் போன்று கல்லூரி மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட காலம் சிறிய கல்லூரியாக அப்பெண்கள் கல்லூரி காஞ்சிபுரத்தில் இருப்பினும் வாய்ப்பு கிடைத்தது.

``வேண்டாம் வரதட்சணை’’ என கவிதை எழுதி வாசித்தேன். நடனம், கதா காலட்சேபம் எனக் கல்லூரியில் என்ன போட்டி என்ன நிகழ்ச்சி நடந்தாலும் இப்பெண்ணுக்கு வாய்ப்பும் கிடைத்தது, பரிசுகளும் கிடைத்தன.

`ஏம்மா ஏறி ஏறி இறங்கி பரிசு வாங்குகிறாய். இங்கேயே நின்று மிச்சமுள்ள பரிசுகளையும் மொத்தமாக வாங்கிக் கொண்டு போ’ என விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் சொல்லும் அளவுக்கு அங்கீகாரம் கிடைத்தது.

Representational Image
Representational Image

யோசிக்கும்போது அந்தத் தாய், தமிழாசிரியை அம்மாணவியின் மீது வைத்திருந்த நம்பிக்கை, அவளிடமிருந்த திறமையைக் கண்டுபிடித்து சிற்பமாக செதுக்கிய பெருமை, வழி நடத்திய அருமை எதைச் சொல்வது எதை விடுவது.

நல்ல புத்தகங்களை பாடத்திட்டத்துக்கு வெளியே படிக்க அறிமுகப்படுத்தியது அவரே. அவர் பரிந்துரைத்து எழுத்தாளர் திரு.நா.பா. எழுதிய ``குறிஞ்சி மலர்’’ புத்தகத்தைப் படித்தவர்கள் கட்டாயம் அக்கதையின் தலைவி பூரணியைத் தன் சுடிட ஆடினநட ஆகக் கொள்வர். நானும் அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கினேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல் என் தமிழார்வம் வளர்ந்ததற்குக் காரணம் அவரே.

அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். அவர் ராமாயணத்தை நடத்தும்போது கும்பகர்ணனை ``உறங்குகின்ற கும்பகர்ணா’’ என்று எழுப்பிய பாடலும், சூர்ப்பனகையின் ``பஞ்சியடி’’ எனத் துவங்கும் அவளுடைய நடை பற்றிய பாடலும் இன்னும் மாணவர்கள் அனைவரும் அவர் எப்படி நடத்தினார் என்பதை மறக்காமல் நினைவு கூறுவார்கள்.

எப்படி பாடம் நடத்துவது என்பதை அவரிடம் கற்க வேண்டும். அவர் தமிழாசிரியராக வந்தது எனக்குக் கிடைத்த வரம். குழந்தைகள் இல்லாத அவர் ஒரு பெண்ணைத் தத்து எடுத்து திருமணம் செய்து பேரன் பேத்திகளுடன் சுகமாக எங்கோ இருக்கிறார். நான் அடிக்கடி அவரைப் பார்க்கவில்லை. ஆனால், அவர் நினைவில் நானிருப்பேன். என் நினைவில் அவர் என்றும் இருப்பார்.

ஆசிரியையுடன் என்.எஸ். பிரேமா
ஆசிரியையுடன் என்.எஸ். பிரேமா

அப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருந்தால் கல் கூட சிலையாகும் உறுதியாக.

என் பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு மேல் படிப்புக்கு அனுப்ப, என் முன்னேற்றமும் என்னுடைய பழக்க வழக்கமும் காரணமாக இருந்ததற்கு முக்கிய காரணம் அத்தமிழாசிரியரும் அதன் பிறகு அப்பெருமைகளால் என்னை வளர்க்க நினைத்த அக்கல்லூரி முதல்வருமே.

அம்மா என்றும் உங்கள் நினைவுடன் நீயின்றி நானில்லை அம்மா என இப்போதும் நினைக்கிறேன்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், நான் சிவகாசி நகராட்சி ஆணையராக பணிபுரிந்தபோது என் கையால் வள்ளல் பச்சையப்பன் சிலையுடன் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை நான் திறக்க வேண்டும் என்று கல்வி கற்பதில், பாடத்தில் நான் ஒழுங்காகப் படிக்க வழி நடத்திய பேராசிரியர் இந்திரா அவர்களின் விருப்பத்திற்கிணங்க, விழாவிற்கு நான் வந்தபோது, தான் பணி ஓய்வு பெற்றிருந்த போதும் அவ்விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பித்தார்.``ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ’’!

-என்.எஸ். பிரேமா, ஓய்வு பெற்றஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு