Published:Updated:

மீண்டும் றெக்கை கட்டிப்பறக்கும் ரிக்‌ஷா வண்டிகள்! -விநோத பார்வை வீசும் குழந்தைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Unsplash )

நினைவு தெரிந்த நாளில் பெற்றோருடன் கோயிலுக்கோ, கடைத் தெருவுக்கோ, வேறு எங்கேனும் வெளியில் செல்ல வேண்டும் என்றால் ரிக்‌ஷா பயணம்தான்...

இன்று நாம் இருக்கும் இடத்திலேயே ஆப் அழைத்த குரலுக்கு ஓலா, ராபிடோ என்று கால் டாக்சிகள், ஆட்டோ, ஏன் பைக் டாக்சிகள் கூட வந்துவிடுகின்றன. அப்படியே இல்லை என்று பொடிநடையாக சற்று நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தால் ஷேர் ஆட்டோ கிடைத்துவிடும். இவையெல்லாம் நம் போக்குவரத்தின் பரிணாம வளர்ச்சி. ஆனால், இதற்கு முன் 1980-களில் நகரை வலம் வந்த ரிக்‌ஷாவை இந்த தலைமுறையினர் அறிந்து கொண்டிருக்க மாட்டார்கள். இன்றைய கால ஓட்டத்தில் ரிக்‌ஷா ஏனோ மறைந்துவிட்டது.

Representational Image
Representational Image
Unsplash

நினைவு தெரிந்த நாளில் பெற்றோருடன் கோயிலுக்கோ, கடைத் தெருவுக்கோ, வேறு எங்கேனும் வெளியில் செல்ல வேண்டும் என்றால் ரிக்‌ஷா பயணம்தான். இருவர் உட்காரும் வகையில் ஆட்டோவில் இருப்பதுபோல ஒரு பின் சீட்டு. இரண்டு பெரியவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டால், குழந்தைகள் உட்கார எதிரே பலகைச் சீட்டு.

எனக்கு நினைவு தெரிந்து அப்போதெல்லாம் சித்திரை திருவிழா பார்த்துவிட்டு வீடு திரும்ப ரிக்‌ஷாவைதான் நம்பியிருப்போம். அதிகபட்சமாக மூன்று பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் எல்லாம் நெருக்கிக் கொண்டு உட்கார்ந்துகொண்டு வந்த ஞாபகம். பெரும்பாலும் ரிக்‌ஷாக்காரர்கள் முப்பது வயதில் இருந்து ஐம்பது வயதுகளில் இருப்பவராய்தான் இருப்பார்கள். எப்படி இதை இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வண்டியை மிதித்துக்கொண்டு செல்வார்கள் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்.

ஆடி, பி.எம்.டபிள்யூ கார்களில் சென்றிருந்தாலும் ரிக்‌ஷா பயணமே அலாதிதான். அந்த மூன்று சக்கர வாகனத்தை அழகாக ஹாண்டில் பார் பிடித்து, பெடல் செய்துகொண்டே ஹாண்டில் பாரின் நடுவே இருந்து செல்லும் நைலான் கயிறு, அதன் முடிவே ஒரு தகரம். கயிறை இழுத்தால் கண கண வென்று ஒலிக்கும் மணி. அதுதான் ஹாரன். ஈரம் புகா தார்பாலினால் வேயப்பட்ட கூரை. பின்னால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால் , பின் கவரை தூக்கி மேலே போட்டுக்கொள்ளலாம். அந்த பின் கதவில் சில ரிக்‌ஷாக்காரர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் படத்தையோ, சாமி படத்தையோ காலண்டர் போல ஒட்டியிருப்பது அழகு.

Representational Image
Representational Image

ரிக்‌ஷாக்கள் உருமாறி சரக்கு ஏற்றிச்செல்லும் மூன்று சக்கர வாகனமாக உபயோகப்படுகிறது. ஆனால் இன்றும் மேற்கு வங்கத்தில் மனிதர்கள் கையால் இழுத்துக்கொண்டு செல்லும் ரிக்‌ஷா வகை வண்டிகள் இருக்கின்றன. எப்பொழுதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால் பக்கம் செல்லும்போது கூரையை கழட்டிய ரிக்‌ஷாக்கள் வெளிநாட்டினரை ஏற்றிக்கொண்டு வரிசையாக வலம் வரும் அபூர்வ காட்சியைப் பார்க்கலாம்.

குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய் முதல் மூன்று கிலோ மீட்டருக்கு முப்பது ரூபாய் வரை கொடுத்த ஞாபகம். மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகம் செல்லாமல், நிதானமாக செல்லும் ரிஸ்க் இல்லாத ரிக்‌ஷா. சமீபகால ஊரடங்கில் ஆட்டோக்கள் ஓடாமல் வெறிச்சோடிய மதுரை சாலைகளில், ஒன்றிரண்டு ரிக்‌ஷாக்கள் ஓடியதைக் காணமுடிந்தது. தவிர்க்க முடியாத பயணத்துக்கு மக்கள் ரிக்‌ஷாவைப் பயன்படுத்துகின்றனர். அப்பாவின் கைபிடித்துச் செல்லும் சில குழந்தைகள் முதன் முறையாக ரிக்‌ஷாவை விநோதமாக பார்த்துச் சென்றனர். ரிக்‌ஷா மிதிப்பவர்களின் முகத்தில் அயர்ச்சியைக் காட்டிலும் ஒரு பெருமிதம் தெரிந்தது.

-எம். விக்னேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு