Published:Updated:

“10 ஊருக்கு ஒத்த வண்டி இருப்பதே அதிசயமாகிருச்சு..!’’ - வண்டி பட்டறையின் மறுபக்கம் #MyVikatan

வண்டி பட்டறை
வண்டி பட்டறை

ஒரு பட்டறை மட்டும் இன்னும் மூச்சை பிடித்து ஓடிக் கொண்டிருந்தது கண்டு ஆச்சரியமடைந்தேன். அன்று என்னை வேடிக்கை பார்க்கவிடாமல் விரட்டி விட்ட பாண்டியன் இன்றும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“டட்டட்டி…டட்டடி.. டட்டட்டி…டட்டடி..” மாலை நேரத்தில் வண்டி பட்டறையில் இருந்து கேட்கும் இந்த சத்தம், வகுப்பறை வரை எதிரொலிக்கும். நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கையில், இந்த சத்தத்தை கேட்கும்போது, எப்படா, பள்ளிக்கூடத்தின் பெல் அடிப்பார்கள் என்று காத்திருப்பேன். அந்த எதிர்பார்ப்பு அடுத்த சில நிமிடங்களில் நடந்துவிடும்.

வண்டி பட்டறை
வண்டி பட்டறை

வேகமாக ஓட்டமும், நடையுமாக நடந்து செல்வேன். வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் அந்த பட்டரையில், மாட்டு வண்டிக்கு சக்கரம் செய்யும் தொழிலாளர்கள் அடிக்கும் அந்த சத்தம் தான் அது. “டட்டடி.. டட்டட்டி…” என ஒருவித தாள ஞயத்தோடு சுத்தியலால் அடிக்கும் அந்த சத்தம் நம்மை வசீகரிக்கும்.

அவர்கள் பழுக்க காய்ச்சிய இரும்பு வளையத்தை, (மாட்டு வண்டி சக்கரத்தில் மேல் பாகத்தில் பொருத்தும் இரும்பு) லாவகமாக தட்டி வட்டம் சேர்ப்பார்கள். சில சமயங்களில் அப்படி வட்டமாக பொருத்திய இரும்பை, விறகு கட்டை, வறட்டி, ஆகியவற்றை போட்டு தீ வைத்து சூடேற்றி, பின்னர் மரச்சட்டத்தில் பொருத்துவார்கள்.

அப்போது தண்ணீர் ஊற்றுவதற்கு என்றே, என் வயதை ஒத்த ஒரு சிறுவனை பட்டறையில் வேலைக்கு வைத்திருப்பார்கள். அவன் தண்ணீரை சக்கரத்தில் ஊற்ற, ஊற்ற, சுறு சுறுன்னு தண்ணீர் வெந்நீராகி கொப்பளிக்கும். தச்சுவேலை செய்யும் தொழிலாளி லாவகமாக சுத்தியலால் தட்டி வண்டிச் சக்கரத்திற்கு “பைனல் டச்” கொடுப்பார்.

வண்டி பட்டறை
வண்டி பட்டறை

இந்த செய்கையை பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். ஆனால், பட்டறை தொழிலாளிகள் வேடிக்கை பார்க்கவே விடமாட்டார்கள்.

“டேய் இங்க ஏண்டா நின்னுகிட்டு வேலையை கெடுத்துகிட்டு இருக்கீங்க. பள்ளிக்கூடம் விட்டா வீட்டிற்கு போங்கடான்னு,” என்னை போன்று வேடிக்கை பார்க்கும் சிறுவர்களை விரட்டி விடுவார்கள்.

அண்மையில் சொந்த ஊரான நாகலாபுரம் சென்றிருந்தபோது, நான் பால்ய காலத்தில் பார்த்த பல வண்டிப் பட்டறைகள் காணாமல் போயிருந்தன. எனினும், ஒரு பட்டறை மட்டும் இன்னும் மூச்சை பிடித்து ஓடிக் கொண்டிருந்தது கண்டு ஆச்சரியமடைந்தேன். அன்று என்னை வேடிக்கை பார்க்கவிடாமல் விரட்டி விட்ட பாண்டியன் இன்றும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் அல்ல.. நிறையவே அவரிடம் முதுமை தென்பட்டது.

வண்டி பட்டறை
வண்டி பட்டறை

மெல்ல பேச்சுக் கொடுத்தேன். எனது தாத்தாவின் பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். அவரது பெயரனா நீ… என ரொம்பவே ஆச்சரியப்பட்டு சிலாகித்து என்னிடம் பேசினார் பாண்டியன்.

“அப்பவெல்லாம் ஊருக்கு 10 மாட்டுவண்டிகள் இருக்கும். டெய்லி வேலை இருக்கும். இப்ப 10 ஊருக்கு ஒத்த வண்டி இருப்பதே அதிசயமா போச்சு. உழவுக்கு டிராக்டர் வந்திடுச்சு. அதனால மாட்டு வண்டிகளுக்கு மவுசு இல்லாம போச்சு. ஒரு சில பேரு மாட்டு வண்டியை மணல் அள்ளுவதற்கு வசதியாக டயர் வண்டியாக மாற்றினர். இப்போது மணல் அள்ளுவதற்கும் போலீஸார் அனுமதிப்பதில்லை என்பதால், அவர்களும் தொழிலை கைவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டனர். இதனால் பல பட்டறைகளுக்கு “ஷட்டர்” போட்டு மூடியாச்சு” என்றார்.

அப்போது இடைமறித்து பேசிய மங்கலம் என்ற தொழிலாளி, “முன்னமாதிரி தொழில் இல்லை என்பதால், எல்லோரும் வேறு வேலைக்கு போய்ட்டாங்க. இப்ப தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரத்தில் எங்க பட்டறை, அப்புறம் சூரன்குடியில் ஒரு பட்டரை, எப்போதும்வென்றான், தெய்வச்செயல்புரம் ஆகிய இடங்களில் தலா ஒரு பட்டறை என அப்படியே ‘தம்’ பிடிச்சு ஓடிகிட்டு இருக்கு. இந்த ரேக்ளா வண்டி கூட எப்போதும் வென்றான்-ல ஆர்டர் கொடுத்தது. இப்போதைக்கு செய்து கொடுக்க ஆள் இல்லைன்னு அவங்க சொல்லிட்டதால், அந்த ‘பார்ட்டி’ இங்கே வந்து செஞ்சு வாங்கிட்டு போகிறார்கள்.

வண்டி பட்டறை
வண்டி பட்டறை

ஏற்கனவே உழவுக்கு டிராக்டர் வந்ததால், வண்டி மாடுகளின் எண்ணிக்கை அருகிப் போய்விட்டது. இதற்கு இடையே மாட்டு வண்டி பந்தயத்திற்கு இடையில சில காலம் நீதிமன்றம் தடை விதிச்சதால், சுத்தமாக மாட்டு வண்டி செய்யுற தொழிலே இல்லாம போச்சு. தடை நீங்கி, ஆங்கங்கே மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுவதால், இப்போது மீண்டும் இந்த ரேக்ளா வண்டியோடு சேர்ந்து எங்களோட வாழ்க்கை வண்டியும் ஓடுது.

ஒரு ரேக்ளா வண்டியை ரூ,26,000-க்கு செய்து கொடுக்கிறோம். மொத்தமே 55 கிலோ வெயிட் தான் இருக்கும். வண்டியோடு ரைடரும் சேரும்போது 130 கிலோவுக்கு உள்ளே தான் இருக்கும். எடை குறைவாக இருப்பதால் பந்தயத்தில் மாடு இழுத்துச் செல்வதற்கு ரொம்ப ஈசியாக இருக்கும். இதுதவிர மண்வெட்டி, களைவெட்டி, கதிர் அரிவாள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை தயார் செய்து கொடுக்கிறோம். எங்க காலத்தோடு இந்த பட்டறை தொழில் முடுஞ்சு போயிடுமோன்னு நினைச்சேன். ஆனால், இந்த ரேக்ளா பந்தயத்தால், இன்னும் பல தலைமுறைக்கு நிலைச்சு நிற்கும்” என்று கூறும்போது அவரை அறியாமலே கண்கள் பனித்தது.

வண்டி பட்டறை
வண்டி பட்டறை

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதில் இருக்கும் ஆர்வத்தை போலவே, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சிலர் ரேக்ளா ரேஸ்க்கான காளைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பந்தயத்தில் வெற்றி பெறும் பரிசுத் தொகை, அதற்கு செலவு செய்ததில் 10 சதவீதம் கூட இருக்காது. எனினும், “இதோ பந்தயத்தில் முதலாவதாக வந்து கொண்டிருப்பது இன்னாரின் காளை, 2-வதாக இன்னாரின் காளை…3-வதாக இன்னாரின் காளை…” என மைக்கில் அறிவிக்கும்போது, அதனை கேட்கும் மாட்டு வண்டி உரிமையாளருக்கு அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அவர்களை போன்றவர்களால் தான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது இந்த பட்டறை..!

-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு