Election bannerElection banner
Published:Updated:

மதங்களைக் கடந்த மனிதம்... தாயை இழந்த குழந்தைக்கு பாலூட்ட முன்வந்த பெண் போராளி!

Safoora Zargar
Safoora Zargar ( Twitter Image )

ஸபூராவின் மனிதம் ததும்பும் இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்து ட்விட்டரில் இவரைப் பின்தொடர்பவர்கள் தங்களது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். `அற்புதமான மனிதர் நீங்கள்’ என்று அவரை உச்சி முகர்ந்திருக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று இந்தியாவையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் `இத்தனைக்கும் மத்தியில் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது’ என்பதைப்போல மத வேற்றுமைகளைக் கடந்து மனிதம் போற்றும் பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்று சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் பேசப்பட்டு வருகிறது.

``பிறந்து ஒரு நாளே ஆன டெல்லியைச் சேர்ந்த பச்சிளங் குழந்தை ஒன்றின் தாய் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகிவிட்டார். எனவே, அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு தாய்ப்பாலை தானமாக அளிக்க பாலூட்டும் ஒரு தாய் தேவைப்படுகிறார். தயவு செய்து உதவுங்கள்” என்று மூத்த மல்ட்டி மீடியா பத்திரிகையாளரான மனிஷா மொன்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

தாய்ப்பால் -Representational Image
தாய்ப்பால் -Representational Image

இந்தச் செய்தியைப் பார்த்த ஸபூரா சர்க்கர் என்னும் இளந்தாய், அந்தப் பச்சிளங்குழந்தைக்கு பாலூட்ட தான் தயாராக இருப்பதாக பதில் ட்வீட் செய்தார். ஸபூராவின் மனிதம் ததும்பும் இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்து ட்விட்டரில் இவரைப் பின்தொடர்பவர்கள் தங்களது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். `அற்புதமான மனிதர் நீங்கள்’ என்று அவரை உச்சி முகர்ந்திருக்கின்றனர்.

இந்த ட்வீட்டை பதிவிட்டிருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த ஸபூரா சர்க்கர், ஒரு மாணவப் போராளி. டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படிக்கும் மாணவியான இவர், `ஜமியா ஒருங்கிணைப்புக் கமிட்டி'யின் மீடியா ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, சென்ற ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தவர். இதன் காரணமாக, வயிற்றில் கருவைச் சுமந்தபடி பல மாதங்கள் டெல்லியில் உள்ள திஹார் ஜெயிலில் சிறை வாசத்துக்கும் ஆளானார்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

சிறையில் இருந்தபோது சமூக ஊடகங்களால் இவர் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். மிகக் குறிப்பாக இவரது திருமணம் குறித்தும் இவர் கருவுற்றிருந்தது குறித்தும் அப்போது தரம் தாழ்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவை அத்தனையையும் தெளிவுடனும் துணிச்சலுடன் ஸபூரா எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சமூக ஊடகங்களின் வழியாகத் தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு, தனது ஒரேயொரு ட்வீட் மூலம் ஸபூரா தற்போது மனிதம் போதித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு