Published:Updated:

திக் திக் திக் ..! - சவுதி நைட் ஷிஃப்ட் அனுபவம் #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

எஞ்சிய வேலைகளை முடித்து ஆலையைத் திறப்பதற்கான செயல்பாடுகள் முழுவீச்சில் ஆரம்பித்தன. ஆனால் முன்புபோல் பகலில் மட்டும் வேலை இல்லாமல் இரவுநேரப்பணியும் ஆரம்பமாகின. முதல்நாளே எனக்கு இரவுநேரப்பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சவுதி அரேபியாவின் ஜூபைல் நகரிலிருந்து ஒரு இருபத்தெட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுஹத்ரியா என்ற இடத்தின் அருகில் சுற்றிலும் பாலைவனத்தால் சூழப்பட்ட எந்திர ஆய்வாலை அது. நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அங்கு பணி எதுவும் ஆரம்பிக்கப்படாமல் சுமார் ஆறுமாதங்கள் ஆலையை முழுமை செய்யும் கட்டுமானப்பணிகளும் அதன் மேற்பார்வைகளும் சென்றுகொண்டிருந்தன. அனைவரும் பகலில் வேலைக்குச் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் வழக்கம். இரவில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டும் வாசலில் ஒரு சிறிய அறையில் இருப்பார்.

ஆறுமாதம் இப்படியே சென்ற நிலையில் ஆலையின் மேலாளர் தற்காலிகமாக ஆலையை மூட உத்தரவிட்டார். பிறகு மற்றொரு ஆலைக்கு இடம்பெயர்ந்து அங்கு பணிபுரிபவர்களுக்கு உதவி செய்து சில மாதங்கள் நகர்ந்தன. மீண்டும் பழைய ஆலைக்கே திரும்ப உத்தரவு வந்தது. எஞ்சிய வேலைகளை முடித்து ஆலையைத் திறப்பதற்கான செயல்பாடுகள் முழுவீச்சில் ஆரம்பித்தன. ஆனால் முன்புபோல் பகலில் மட்டும் வேலை இல்லாமல் இரவுநேரப்பணியும் ஆரம்பமாகின. முதல்நாளே எனக்கு இரவுநேரப்பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

Representational Image
Representational Image
Pixabay

காலையில் வந்தவர்கள் பணியை முடித்து வீட்டிற்கு புறப்பட்டனர். அன்று இரவு ஆலை பாதுகாவலர் உட்பட நாங்கள் நால்வர் பணியில் இருந்தோம். ஒருவர் சவுதி இருவர் பிலிப்பைன்ஸ் மற்றும் நான். மிகவும் சாதாரணமாக பணி சென்று கொண்டிருந்தது. அந்த ஆலையில் சுமார் ஆறு கட்டிடங்கள் மற்றும் ஆலையின் வேலிகளை ஒட்டிய நான்கு பாதுகாவலர் அறைகளும் வேறு வேறு திசையில் ஆலையின் நுழைவுக் கதவுகளின் அருகே உண்டு.

வழக்கமாக நால்வரும் ஆலையின் முகப்பின் அருகே உள்ள கட்டத்தில் தான் அமர்ந்திருப்போம். பாதுகாவலர் ஆலையில் அங்கும் இங்கும் நோட்டமிடுவார். நான் நடுநடுவே அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு சென்று மின்னுற்பத்தி எந்திரத்தை கண்காணித்துவிட்டு பின் அதே முகப்பு கட்டிடத்திற்குள் வருவேன். இப்படி அமைதியாக சென்றது முதல் இரண்டு மணிநேரம். அந்த முகப்பு கட்டிடத்தின் கதவுகள் தானியங்கு கதவுகள். யாரும் வந்தாலே அது தன்னிச்சையாக திறக்கும். யாரும் செல்லாத நேரத்திலும் அது திறப்பதும் மூடுவதும் நால்வருக்கும் ஒரு சிறிய பதட்டத்தை தந்தது. இப்படியே சென்றுகொண்டிருக்கையில் திடீரென அந்த பாதுகாவலர் சற்றே மூச்சு வாங்க முகப்பு கட்டிடத்தினுள் வந்தார்.

Representational Image
Representational Image
Pixabay

உங்கள் நண்பர் யாரும் வெளியே உள்ளனரா? என்று கேட்டார். உள்ளே இருந்த மூவரும் இல்லை நாங்கள் மூவர் தான் இன்று பணிக்கு வந்தோம் என்று கூறினோம். அவர் பெருமூச்சுடன் வெளியே வெள்ளையாக ஆடை அணிந்து ஒருவர் சென்றார், நான் தொலைவில் இருந்து உங்கள் பணி அடையாள அட்டை எங்கே என்று சத்தமாக கூச்சலிட்டு கேட்க கேட்க அவர் சென்று கொண்டே இருந்தார், பிறகு அவரை காணவில்லை, ஒருவேளை உங்களில் யாரோ என்று எண்ணியே உள்ளே வந்தேன் என்றார். நாங்கள் மூவரில் இருவருக்கு பச்சை நிற சீருடை ஒருவருக்கு நீல நிற சீருடை அந்த பாதுகாவலருக்கோ காக்கி நிறம். உடனே அங்கிருந்த என் நண்பர் நானும் கண்ணாடியின் வழியே வெள்ளை நிற உடையணிந்து ஒருவர் செல்வதைக் கண்டேன். நான் அவர் பாதுகாவலர் என்று நினைத்து விட்டுவிட்டேன் என்று கூற நால்வருக்கும் அச்சம் மேலோங்கியது. நடந்து கொண்டிருக்கும் யாவும் மூடப்பட்ட ஆலையினுள் நடந்து கொண்டிருந்தன.

மேலும் அந்த ஆலை ஆறுமாதங்கள் கழித்து மீண்டும் துவங்கப்பட்ட ஆலை என்பது அச்சத்தை தலைக்கு ஏற்றியது. நடு நடுவே அந்த தானியங்கு கதவு தானாக திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தது. இந்த சூழலின் நடுவில் நான் மணிக்கொருமுறை அதே தானியங்கு கதவின் வழியே மற்றொரு கட்டிடத்திற்கு சென்று மின்னுற்பத்தி எந்திரத்தை கண்காணித்து வரவேண்டும். இரண்டு கட்டிடங்களின் நடுவே கடக்கும் அந்த சிறு தொலைவின் ஒவ்வொரு நொடிகளும் திக் திக் நொடிகள் தான். பகல் ஏழு மணிவரை அப்படி தான் பணியை நகர்த்த வேண்டியிருந்தது. இப்படியே உயிரைப் பிடித்துக்கொண்டு நாள் ஒன்று நகர்ந்தது. இரண்டாம் நாள் காலைப்பொழுதில் பகலில் வந்தவர்களிடம் நடந்ததை சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றோம்.

Representational image
Representational image
Pixabay

இரண்டாம் நாள் அதே மூன்று பேரும் சிறு பயத்துடன் வேலைக்கு சென்றோம். அந்த தானியங்கு கதவில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி சற்று தைரியத்துடன் நாள் இரண்டு ஆரம்பமானது. ஆனால் தைரியம் சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. எனக்கு யாரும் இல்லாத அறையின் கணினியில் தட்டச்சு செய்யும் சத்தம் சிறிதே காதை நெருடியது.. இருந்தும் நான் என் நண்பர்களிடம் சொன்னால் ஒருவேளை அவர்கள் பயப்படலாம் அல்லது கேலி கிண்டல் செய்வதாக நினைக்கலாம் என்று எண்ணி பொறுமை காத்தேன். மீண்டும் மீண்டும் சத்தம் கேட்க அதை நான் என் நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் இன்றைய நாளை நாம் மூவரும் தாண்டமாட்டோம் போல என்ற அளவிற்கு பயந்து நடுங்கினர்.

அந்த அறையில் சுமார் 16 கணினி வைக்கப்பட்ட தடுப்புள்ள சிறு அறைகள் இருந்தன. அந்த அறைகள் நான்கு நான்காக கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பிரிக்கப்பட்டிருக்கும். அதில் யாரும் இல்லாத ஒரு மூலையில் இருந்தே சத்தம் வந்தது. இது தான் இன்று நமக்கு சனி மூலை போல என்று நினைத்துக்கொண்டு மூவரும் அந்த அறையை நோக்கி படையெடுத்தோம்.

அந்த அறையை அடைய அறையின் தடுப்பிர்க்கும் கட்டிட வெளிச் சுவருக்கும் இடையே ஒரு ஆள் செல்லும் இடைவெளியில் தான் நடந்து செல்லவேண்டும். முன் எட்டுவைத்து அந்த அறையை எட்டிப்பார்க்க அளவில்லா பயத்துடன் மூவரும் ஒன்றன் பின் ஒருவராக ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். மனதில் தைரியத்தை வரவழைத்து என் நண்பன் முன்னே சென்றான் தொடர்ந்து நானும் பின்னே சென்றேன் உள்ளே யாரும் இல்லை. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம் மூவரும்.

Representational Image
Representational Image
Pixabay

மீண்டும் அதே சத்தம் வர கீழே தேடினால் அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து வந்தது. உள்ளே பாலித்தீன் உரையில் ஒரு சுண்டெலி சிக்கிக் கொண்டிருந்தது. மூவரும் வயிறு வலிக்க சிரித்து அன்றைய நாள் மிகவும் வேடிக்கையாக முடிந்தது. இப்பொழுது ஒன்றரை வருடம் அங்குதான் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன், இருந்தாலும் இரவில் அங்கே இயந்திரத்தைக் கண்காணிக்க செல்லும்போதெல்லாம் திக் திக் வினாடிகளுடன் கண்கள் சுற்றிலும் முற்றிலும் நகரும் பொருள் எதுவும் இருக்கிறதா என்று நோட்டமிட்டுக் கொண்டேதான் இருக்கும். எந்த பயமும் இல்லையென்றாலும் கூட ஒரு பாதுகாப்பை என் மனம் தேடத்தான் செய்கிறது. நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு என் இரவுப்பணி தொடக்கம் ஹா! ஹா! வாருங்கள் பயணிப்போம்.

-ரெ சசிக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு