Published:Updated:

உப்புல சயனைடு இருக்கா? - மீம்ஸ் வழியே சயின்ஸ் பேசும் இளைஞர்!

''நாம எல்லோரும் மூளையோட 10 சதவிகிதத்தை மட்டும்தான் பயன்படுத்துறோம் '' - அப்படியா... யார் சொன்னா, எங்க ஆராய்ச்சி நடந்தது? அதெல்லாம் தெரியாது, நிறைய பேரு சொல்லிக் கேள்விப்பட்ருக்கோம். 'லூசி' படத்துல பேராசிரியர் நார்மன் வேற சொன்னதுனால கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கும்.

மீம்ஸ்
மீம்ஸ்

ஏன்னா வெள்ளையா இருக்கிறவன், வெளிநாட்டுக்காரன் பொய் சொல்ல மாட்டான். அதுலயும் வெளிநாட்டுப் பேராசிரியர் சொன்னா அது வரலாற்றுக் குறிப்பு மாதிரி, கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கும்ன்றது நம்ம ஆளுங்களோட நம்பிக்கை. ஆனா, இதுல உண்மை இருக்காண்ணு எப்பவாவது யோசிச்சுருக்காமான்னு பார்த்தா வெறும் மங்கலா அலை அலையாத்தான் தெரியுது. 'நிலாவுல இருந்து பாத்தா சீனப்பெருஞ்சுவர் சுண்ணாம்புகூட சூப்பரா தெரியும்'னு ஐ.எஸ்.டி தொட்டு, 'சமையலுக்குப் பயன்படுத்துற உப்புல சயனைடு இருக்கு'னு சாப்பாடு வரையில் யாராவது எதையாவது கிளப்பிவிட அதை நம்பி, நாமளும் நாலு பேருக்கு பரப்பிகிட்டே இருக்கோம்.

சயனைடு
சயனைடு

ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து சயின்ஸ்னாலே அலர்ஜியான நாம, யாராவது தெரிஞ்சவங்க, இதைப் பத்தி சொல்ல வந்தாலும், 'ஐயோ சாமி'ன்னு 10 அடி தூரத்துல வரும்போதே திரும்பிப் பார்க்காம ஓடியிருப்போம். ஆனா, இது போன்ற பரவலான நம்பிக்கைகளை, சிக்கலான அறிவியல் விஷயங்களை மீம்ஸின் மூலம் மக்களுக்கு எளிமையாக புரிய வெச்சிட்டு இருக்கார் எழுத்தாளர் ஹாலாஸ்யன்.

போரடிக்காம, நகைச்சுவையின் வாயிலாக அறிவியலை புரிய வைப்பதால் இவருடைய மீம்ஸ்களுக்கு இணையத்தில் ஏகப்பட்ட வரவேற்பு. 'உங்கள மாதிரி ஒரு சயின்ஸ் வாத்தியார் கிடைச்சிருந்தா நான் சயின்டிஸ்ட்டா ஆயிருப்பேன்' என்கிற மாதிரியான கமென்ட்டுகள் அவர் பக்கத்துல நிறைஞ்சிருக்கு.

ஹாலாஸ்யன்
ஹாலாஸ்யன்

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

'' அறிவியலை மீம்ஸின் மூலமாகச் சொல்லலாம் என்கிற எண்ணம் எப்படி வந்தது?''

'' எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்பப் பிடிக்கும். அதனால பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி படிச்சேன். இப்போ சென்னை கிண்டில ஒரு தனியார் கம்பெனில இன்ஸ்ட்ரக்‌ஷனல் டிசைனரா இருக்கேன். எனக்கு ஃப்ரீ டைம் அதிகமா இருக்கும். அப்போவெல்லாம் காமெடி சேனல் பார்க்குறதும் காமெடிகளைப் பத்திப் பேசுறதும்தான் என்னோட வேலை. நார்மலா பேசும்போதே அஞ்சு டயலாக்குல ஒண்ணு, காமெடி டயலாக் வர்ற மாதிரி உள்ள ஊறிடுச்சு. அப்பதான், இந்த மாதிரி டயலாக்குகள வச்சு ஏன் அறிவியல சொல்லக் கூடாதுனு எண்ணம் வந்துச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த முயற்சி.

மீம்ஸ்
மீம்ஸ்

''உங்களின் அறிவியல் மீம்ஸ்களுக்கு மக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி?''

''நான் இதுவரை 'நுண்ணுயிரிகள்', 'சில்வண்டுகள் முதல் கிகா பைட் வரை', 'ஆச்சர்யமூட்டும் அறிவியல்'னு பல புத்தகங்கள் எழுதியிருக்கேன். அதுக்கெல்லாம் கிடைக்காத ரெஸ்பான்ஸ் என்னோட அறிவியல் மீம்ஸுக்குக் கிடைச்சிருக்கு. இப்படி ஒரு டீச்சர் கிடைச்சிருந்தா நாங்க நல்லாப் படிச்சிருப்போம்னு 'சூர்யவம்சம்' படத்துல கலெக்டர் தேவயானி சொல்றதுமாதிரி பலபேரு சொல்லுவாங்க. அந்த மாதிரியான கருத்தளைக் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.''

''நகைச்சுவையின் வாயிலாக அறிவியலைச் சொல்வதற்கு எதிர்ப்பு ஏதேனும் வந்திருக்கிறதா?''

''சிலரிடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கு. சயின்ஸ் மிகவும் புனிதமானது, சயின்ஸுக்குனு ஒரு மரியாதை இருக்கு. அதை இப்படியெல்லாம் காமெடியா சொல்லக் கூடாதுன்ணு சொல்லுவாங்க. எல்லாத் துறையிலையும் தூய்மைவாதிகள் இருப்பாங்க. புது முயற்சிகளுக்குத் தடை போடத்தான் செய்வாங்க. நான் அதைப் பத்தி பெருசா கவலைப்படுறது இல்ல. அதையெல்லாம் யோசிச்சுட்டு இருந்தா நாம சொல்ல வந்ததை சொல்ல முடியாமப் போயிடும்.''

வடிவேலு
வடிவேலு

''உங்கள் மீம்ஸ்களில் பெரும்பாலும் வடிவேலுதான் இருக்கிறார், அதற்கான சிறப்புக் காரணம் ஏதும் இருக்கிறதா?''

'' வடிவேலுவோட ஒரு சின்ன டயலாக்கால் பெரிய விஷயத்தை எளிமையா விளக்கிட முடியுது. பலவிதமான கதாபாத்திரங்கள் அவர் பண்ணிருக்கார். எல்லா விஷயத்துக்கும் அவர்கிட்ட ஒரு டயலாக்கும், பாடி லாங்குவேஜும் இருக்கு. அதனால எனக்கு நான் சொல்ல வந்த விஷயத்த ஈஸியா சொல்லிட முடியுது. இப்ப எல்லாம் நான் வடிவேலுவோட காமெடி டெம்ப்ளேட்டுக்குத்தான் சயின்ஸ் கான்செப்ட் தேடிட்டு இருக்கேன். அந்தளவுக்கு எனக்கு வடிவேலு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். ''

நீங்கள் உருவாக்கின மீம்ஸிலேயே உங்களுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்த மீம்ஸ் எது?

''பெட்ரோல் இன்ஜின்களுக்கும் டீசல் இன்ஜின்களுக்கும் உள்ள விஷயத்தை பம்மல் கே.சம்பந்தம் படத்துல வர்ற ஒரு சீன் மூலமா எளிமையா விளக்க முடிஞ்சது. அதுதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது.''

எஞ்சின் வேறுபாடு
எஞ்சின் வேறுபாடு

மக்களிடம் நிலவும் பொதுவான நம்பிக்கைகள் சார்ந்து மீம்ஸ் உருவாக்குவது பற்றி?

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சம்பவம் . நாம சமையலுக்குப் பயன்படுத்துற உப்புல சயனைடு இருக்குற மாதிரியான தலைப்புல ஒரு பத்திரிகையில நியூஸ் வந்துச்சு. அத பார்த்துட்டு பலபேரு அந்த நியூஸை பரப்பிட்டு இருந்தாங்க.சயனைடுன்னு வேதிப்பெயர் இருந்துட்டா அது விஷமா இருக்கணும்னு அவசி‌யம் இல்ல. சயனைடு அயனி மட்டும்தான் நஞ்சு. அதே சயனைடு வேற மூலக்கூறு பிணைப்புகள்ல இருந்தா விஷம் இல்ல. உதாரணமா வைட்டமின் பி12ல சயனைடு இருக்கு. ஆனா அது நச்சு இல்ல. இந்தச் செய்தில அவங்க குறிப்பிடுற வேதிப்பொருள் பேரு பொட்டாசியம் ஃபெர்ரோ சயனைடு (Potassium ferrocyanide). உப்பு கெட்டி ஆகாம இருக்குறதுக்காக அதைச் சேர்க்குறாங்க. அது விஷம்‌ இல்ல. பள்ளி வேதியியல் ஆய்வகங்கள்லயே அதைச் சாதாரணமா பயன்படுத்துவாங்க. ஒரு அறிவியல் எழுத்தாளனா மக்களோட அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. ரொம்ப பயந்தா ஹார்ட்பீட் அதிகமாகும்னு டாக்டருங்க சொன்னா புரியுறதைவிட 'சுறா' பட சங்கீத கச்சேரில வடிவேலு பண்ற காமெடி டெம்ப்ளேட் போட்டா ஈஸியா ரீச் ஆகும்ல! அதான் பண்ணிட்டிருக்கேன்' எனப் பேட்டியையும் மீம் டெம்ப்ளேட்டைப் போலவே முடிக்கிறார்.

அறிவியல் மீம்ஸ்
அறிவியல் மீம்ஸ்