Election bannerElection banner
Published:Updated:

`அட.. வெற்றியின் மந்திரம் இதுதானா?!' -வாசகி ஷேரிங்க்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image

நாம் எடுத்து வைக்கும் அடி மெல்லியதாக இருப்பதால் நமது மூளைக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ள போதுமான நேரம் கிடைக்கிறது. வெற்றிக்கான சிந்தனைகளை அதுவே உற்பத்தி செய்துகொள்கிறது.

மனிதர்களாகிய நாம் அனைவரும் வெற்றியைச் சுவைக்க ஆசைப்படுபவர்கள். பள்ளி, கல்லூரி, தொழில், குடும்பம் என்று அனைத்து இடங்களிலும் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் காரணி, மற்றவர்களிடமிருந்து நம்மை நாம் எப்படி வேறுபடுத்தி வெற்றியைத் தழுவிக்கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அமைகிறது. இந்த வெற்றியின் அளவுகோல் சிலருக்குத் தெருமுனை வரை இருக்கலாம், சிலருக்கு ஒலிம்பிக் மேடை வரை இருக்கலாம், சிலருக்கு வான் வரை நீட்டி முழங்கலாம். பிறந்ததிலிருந்தே ஓர் உந்துதல் மூலம் அனைவருமே வெற்றிச் செய்தியை நோக்கி வாழ்நாள் முழுவதும் பயணப்படத் தொடங்குகிறோம்.

Representational Image
Representational Image

எங்கேயாவது ஒரு காலகட்டத்தில் இந்த வெற்றிச்செய்தி இம்மி அளவாவது நடந்துவிடாதா என்ற ஏக்கத்தோடும் ஓடத் தொடங்குகிறோம். இதனின் விளைவுதான் உலகளவில் சுயமுன்னேற்றப் புத்தகங்களே அதிகளவு விற்பனை ஆகி வருகின்றன. வார இதழ்களிலும் காலண்டர் சீட்டுகளிலும் தினம் ஒரு வரி சுயமுன்னேற்றக் கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன. தொலைக்காட்சியிலோ செயலி வழியாகவோ ஐந்து நிமிட உற்சாகக் கதைகள் அதிகளவில் கேட்கப்படுகின்றன. சிலரது பொழுதுகள் எழுச்சியூட்டும் ஏதேனும் ஒரு சினிமா பாடல் உடனேயே தொடங்குகின்றன. சிலர் இந்த வெற்றியைக் கடின உழைப்பினால் பெறுகிறார்கள், சிலர் ஒரே ஒரு சாமர்த்தியமான கூர்மையான யோசனை மூலம் பெறுகிறார்கள், சிலர் இல்லாத பொல்லாத குறுக்கு வழியில் தேடிப் பறிக்கின்றனர். இங்கும் அங்கும் ஓடிப் பரபரப்போடுதான் வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்பதில்லை.

ஒரு மிக எளிதான ஜப்பானிய முறையான கைசென் முறை (kaizen philosophy) மூலம் சுலபமாக நிரந்தரமாக வெற்றியை அடைந்துவிடலாம். கைஸன் முறை என்பது எழுபது பக்கங்கள் வரை பேசிப் புரிய வேண்டிய ஒரு மலைப்பான விஷயம். ஆனால் அதை ஒரே ஒரு வரியில் எளிமையாகவும் புரிந்து கொள்ள முற்படலாம். இதைத் தமிழோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சிறுதுளி பெருவெள்ளம். வாழ்க்கையின் எந்த ஓர் இலக்கையும் அடையும் மாபெரும் சூட்சுமம் சிறுகச் சிறுக பயணப்படுவதே. ஜப்பானியரின் கைசன் கொள்கை என்பது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது வாழ்க்கையில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

Representational Image
Representational Image

கைஸன் முறை அதையே உணர்த்துகிறது. சிறிய அடியினைத் தொடர்ந்து எடுத்து வைப்போமாயின் நிச்சயம் ஒருநாள் வெற்றியின் கதவைத் தட்டி விட முடியும். ஒரேநாளில் பணக்காரர் ஆவது.. எப்படி ஒரே நாளில் ஒல்லியாவது எப்படி.. ஒரேநாளில் மேதையாவது எப்படி.. என்ற குறுக்கு வழிகளை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு கைஸன் முறையை உபயோகப்படுத்தத் தொடங்குங்கள்.

முதல் நாளிலே ஒன்பது மாடிப் படி ஏறிச் செல்ல திட்டமிடாமல் இரண்டு மாடி ஏறிப் பழகுவது பின் நான்கு மாடியாகக் கூட்டச்செய்து பயிற்சி பெறுவது, முதல் நாளிலே மூன்று செய்தித்தாள்கள் படித்துக் குழப்பிக்கொள்ளாமல் ஒரு செய்தியின் ஆழத்தை அலசிப் புரிந்து கொள்வது, முதல் நாளிலே நூறு வாடிக்கையாளர்களைக் கவர்வதைவிட ஒரு வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்துகொள்வது என்று நம் இலக்கின் அடியைச் சிறுகச் சிறுக எடுத்து வைக்க வேண்டும். நாம் எடுத்து வைக்கும் அடி மெல்லியதாக இருப்பதால் நமது மூளைக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ள போதுமான நேரம் கிடைக்கிறது. வெற்றிக்கான சிந்தனைகளை அதுவே உற்பத்தி செய்துகொள்கிறது.

Representational Image
Representational Image

திட்டங்களைத் துல்லியமாக தீட்ட வழிவகை செய்து கொடுக்கிறது. லட்சியங்களை நோக்கிய அடிகளை நிதானமாக எடுத்து வைப்பதால் நாம் பதற்றப்படாமல் தெளிந்த நீரோட்டம் போலச் செல்வதற்கு இந்தக் கைஸன் முறை உதவி புரிகிறது. உலகத்தலைவர்கள் பலர் இந்த முறையைப் பின்பற்றிதான் பல சிக்கலான பிரச்னைகளுக்குக் கூடத் தீர்வு காண்கிறார்களாம். வெற்றியின் மந்திரம் என்னவென்று எவர் பின்னும் ஓடாமல் குறுக்குப்பாதை தேடாமல் நிதானமாக சிறுகச் சிறுக சிறிய அடியை எடுத்து வைத்து பெரிய இடத்துக்கு முன்னேறிச்செல்லலாம். இந்த முறையைப் பின்பற்றி உங்களுக்குள் நடக்கும் மாற்றத்தைக் கவனித்துப் பாருங்களேன்..!

- நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு