Published:Updated:

ஒரே ஒரு கேள்வி.. மொத்தமா நான் காலி..! - வாக்கிங் டாக்கிங் – 4 #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

ஒரு மைல் தூரம் நடந்திருப்போம். சாலையோரத்தில் தள்ளு வண்டியில் பலாப்பழம் வியாபாரம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. ஊரடங்கையே தள்ளிக்கொண்டு போகிறவை தள்ளு வண்டிகள் தானே!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

(வாக்கிங்.... இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பலம்!! புதுமைக்கும் பழமைக்கும் இடையேயான பாலம் புத்தாண்டு சபதங்களில் ஒன்றான வாக்கிங் பற்றிய ஜாலியான தொடர்... புதுமையும் உண்டு.. நாஸ்டால்ஜியாவும் உண்டு)

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

இரண்டாம் பாகம் : திருமதியின் எசப்பாட்டு! - வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

மூன்றாம் பாகம் : ``ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் - 3

இன்று திருமதியுடன் மாலை வாக்கிங்!

புறப்பட இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன…

அதாகப்பட்டது நான் வீட்டில் உள்ள அனைத்து வகையான ஜன்னல்கள் முழுமையாகச் சாத்தப்பட்டுள்ளதா? எனப் பார்த்து விட்டு கிளம்ப வேண்டும். இது எனக்கு எளிதான வேலைதான்.

மழைக்காலத்தில் மரஜன்னல் கதவுகளில் ஈரப்பதம் புகுந்து சற்று உப்பி சரியாகப் பொருந்தாது. அப்போது கஷ்டப்பட்டு இழுத்து தான் சாத்த வேண்டும். இந்த வருடம் அந்த தொல்லை இல்லாமல் இருக்க போன மாதம் தான் பெயிண்டிங் நடந்தது.

திருமதி வெளியே உள்ள பொருட்களை ஒரு நோட்டம் விடுவார்.

பின்னர் இருவரும் நடக்க ஆரம்பிப்போம். அதற்கு முன்னால் திருமதி ஒரு ஜோடி ஷு எடுத்து கதவை ஒட்டியவாறு வைப்பார்.

Representational image
Representational image
pixabay

வீட்டை விட்டு வெளியே போகும் போது தவறாமல் இதைச் செய்வார். காரணம், அப்போது தான் வீட்டில் ஆட்கள் இருப்பதான அடையாளமாம்.

இந்த ஷு வைக்கும் ஐடியா சூப்பர்…

அது ஷு அல்ல… பூட்ஸ்

ஷு வேற, பூட்ஸ் வேறையா?

கரடுமுரடான எடுத்துல வேலை செய்யும் போது போடறது பூட்ஸ்! உங்களை மாதிரி நோகாம பளிச்ன்னு பாலிஷ் போடறது ஷு…

செருப்பிலும் அப்படிதான்… இரண்டு வார் வைச்சு தச்சு இருந்தா சப்பல்ஸ்! பிளாஸ்டிக் மோல்ட் வைச்சு மொழு மொழுன்னு இருந்தா சான்டல்ஸ்…

ஓ…

ஒரு மைல் தூரம் நடந்திருப்போம். சாலையோரத்தில் தள்ளு வண்டியில் பலாப்பழம் வியாபாரம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. ஊரடங்கையே தள்ளிக்கொண்டு போகிறவை தள்ளு வண்டிகள் தானே!

பலாப்பழத்தில எத்தனை சுளை இருக்குமுன்னு சொல்லமுடியுமா?

கம்முன்னு வாங்க… இதெல்லாம் ஒரு கேள்வியா?

தெரியாதுன்னு சொல்லு…

நான் ஏன் தெரியாதுன்னு சொல்லணும்… அதெல்லாம் எங்க பாட்டி சொல்லிக்கொடுத்துட்டு தான் போயிருக்கு…

அப்ப சொல்லு…

மேலே இருக்கிற முள்ளை வைச்சு சொல்லிடலாம்…

அது தான் சொல்லுன்னு சொல்றேன்…

”சிறுமுள்ளுக் காம்பருகெண்ணி வருவதை

ஆறிற் பெருக்கியே

ஐந்தினுக் கீந்திடவே

வேறென்ன வேண்டாஞ் சுளை”

இது கணக்கதிகாரத்தில சொல்லியிருக்காங்க… அதாவது பலாப்பழம் காம்பு பக்கத்தில இருக்கிற சிறு முட்களை எண்ணி, அதை ஆறால் பெருக்கி, அஞ்சால வகுத்து வர்றது தான் சுளை! போதுமா…

நான் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்…

எதிரில் நண்பர் பாரத் வாக்கிங் வந்து கொண்டிருந்தார். தனது வீசும் கரங்களைக் கூப்பி வணக்கம் என்றார்!

நான் வணக்கம் எனத் தலையசைத்துக் கொண்டே நகர்ந்தேன்.

ஏங்க அவர் கை கூப்பி வணக்கம் சொல்றாரு, நீங்க சும்மா தலையாட்டிட்டு நடக்கிறீங்க…

நம்ம பாரத் தானே… அதையெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டாரு

அப்படியில்லை… அதுல நிறைய விஷயம் இருக்கு…

திருமதி எதோ விளக்கம் சொல்ல ஆரம்பித்து விட்டார் என மட்டும் புரிந்தது.

நெஞ்சிற்கு நேரா கை கூப்பி வணக்கம் சொன்னா, அவருக்கு சமமா நமக்கு மரியாதை தர்றாருன்னு அர்த்தம்..

ம்…

கை கூப்பி தலையை முன்னாடி சாய்ச்சு வணக்கம் சொன்னா, நம்மைக் கடவுள் மாதிரி நினைக்கிறாங்கன்னு அர்த்தம்…

ம்ம்…

கை கூப்பி வயித்து மேல வைச்சு தலையை சாய்ச்சு வணக்கம் சொல்றது நம்மளை விட மரியாதைக்குரியவங்கன்னு அர்த்தம்…

ம்…

தலைக்கு மேல கைகளைத் தூக்கி வணங்குவது அரசியல் வாதிகள் ஸ்டைல்… உங்களை உயர்வா மதிக்கிறேன்னு அர்த்தம். இது ரஜினி ஸ்டைல்.

ம்…


அப்படியே கை தூக்கி நெற்றிக்கு நேரா வைச்சு, கைகளைக் கீழே விரிச்சு கொண்டு வந்தா உதவி கேட்கிறாங்கன்னு அர்த்தம்…


அப்புறம்…

Representational Image
Representational Image

முகத்துக்கு நேரா வைக்காம லேசா பக்க வாட்டில் வைச்சு வணக்கம் வைச்சா, வேண்டா வெறுப்பா வணக்கம் வைக்கிறாங்கன்னு அர்த்தம்.

அம்மா சாமி… ஆளை விடு என நான் கையைத் தட்டி ஓசையெழுப்பி தலைக்கு மேலே ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டு நடக்க ஆரம்பித்தேன்.

நாம் பேசாமல் இருந்தாலும் எதிரில் வருபவர் நம்மைக் கடக்க எடுத்துக்கொள்ளும் அந்த ஓரிரு வினாடிகளில் ஒரு வருடச் சிந்தனைக்கானக் கேள்விகளைத் தொடுத்து விட்டு நகருகிறார்கள்!

அப்படியொரு கேள்வி எல்லோருக்கும் அமைந்திருக்கும். சந்தித்து இருப்போம். இன்று கூட வாக்கிங் மகான், அதாவது பல வருடங்களாக நடப்பவர், என்னைப்பார்த்து இப்படியொரு கேள்வியைப் கேட்பாரென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

"விசுக் விசுக்" என இரு கைகளையும் தோள்பட்டை வரை வீசிக்கொண்டு நடந்து கொண்டு வந்தார். சிலர் ஒற்றைக்கையை வீசிக்கொண்டும் இன்னொரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டும் நடப்பார்கள்! இன்னும் சிலர் இருகைகளையும் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு சினிமா பாடல் காட்சிகளில் நடப்பது போல ஒய்யாரமாக நடப்பார்கள்!

இப்போது சந்தித்த நபரை ஒரு அல்சேஷன் நாய் ஒன்று பரபரப்பாக இழுத்துக்கொண்டு வந்தது. பெரும்பாலான சமயங்களில் நாயின் சொந்தக்காரர் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடி வருவார்.

அப்படியொரு நண்பர் எதிரில் வந்து கொண்டிருந்தார்.

நாயை பிரேக் போட்டு நிறுத்தினார்.

நில் நாயே!

நின்றால் என்னைச் சொன்னதுபோல ஆகிவிடுமே என நின்றும் நிற்காமலும் ஒரு நொடி பூனைபோல நின்றேன். அவரும் நின்றார்.

அரை நொடியில் அவர் சிரிக்க, நான் சிரிக்கப் பரஸ்பர நல விசாரிப்புகள் புன்னகையில் முடிக்கப்பட்டன.

நான் பத்து அடி தூரத்திலேயே நின்றேன்.

கெட்ட நேரம் வந்தா…

ஒட்டகத்துக்கு மேல போனாலும்

நாய் எட்டிக் கடிக்கும்…

Representational Image
Representational Image
Pixabay

பயப்படாதீங்க… நாய்க்கு தடுப்பூசி போட்டிருக்கு… இப்படி தான் நாய் நம்மை முகர்ந்துப் பார்த்துட்டு இருக்கும் போது நமக்கு உயிர் போயிட்டு இருக்கும், ஆனா, நாய் ஒண்ணு பண்ணாது வாங்க என அழைப்பார்கள். அவர்களின் வீட்டிலிருந்து வெளியே வரும் வரை நமக்கு நாய் மீது கண் இருந்து கொண்டே இருக்கும்.

நாய்க்கு தடுப்பூசி போடாட்டி பரவாயில்லை... நீங்க போட்டிருக்கீங்களா?

திருமதியும் சேர்ந்தே சிரித்தார். பதிலுக்கு அவர் இப்போது திருவாய் மலர்ந்தார்.

சார், இப்பவெல்லாம் போன் வருதா?

அவ்வளவு தான், என் சிந்தையில் அந்த கேள்வியின் அடிநாதம் புரியவதற்குள் அவரை அல்சேஷன் பத்தடிக்கு இழுத்துப்போயிருந்தது.

அந்தக் கேள்வி என்னை இழுக்க ஆரம்பித்தது!

பேச்சை மாற்ற “ அவர் ஒரு அறுவை கேஸ்!” என்றேன்.

ஏன் பேசியே துண்டாக்கி விடுவாரா? இது திருமதி!

இல்லை… சும்மா சொன்னேன்.

நீங்க சொன்ன அறுவை வேறு! நான் புரிஞ்சுகிட்ட அறுவை வேறு.

”திரும்ப அந்த போன் மேட்டர், சப்ஜெக்ட்டுக்கு வருதோ?” சின்ன பயம் மனதிற்குள் ஓடியது.

சங்க காலத்தில நீளமா நெய்யப்படும் ஆடையை தனித்தனியா அறுப்பாங்க, அதுக்கு பேரு தான் ”அறுவை”, அதில துண்டிக்கப்பட்ட சின்ன துணி தான் நம்ம சொல்ற ”துண்டு”!

எங்க தாத்தா கூட தோளில் துண்டு போட்டுட்டு தான் சுத்துவார்.

அவர் எப்படியோ சுத்திட்டு போகட்டும், நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க…

அதுவரை அமைதியாகப் போய்க்கொண்டிருந்த சர்வ மங்கள திருமதியுடனான வாக்கிங் இப்படியாக மாறத்தொடங்கியது

டடட டன்டன்.. டடட டன்டன்.. கொத்து பரோட்டா இஸ் எமோஷன்..! - ஒரு குட்டி பிளாஷ்பேக்  #MyVikatan

உங்க பிரண்டு என்னக் கேட்டாரு?

என்னவோ போனாம்!

உங்களுக்கு தெரியாத போன் அவருக்கு எப்படி தெரியும்?

அதுதான் நானும் யோசிக்கிறேன்!

என்ன யோசிக்கிறது? யாருக்கிட்ட, எங்கிருந்து போன் வந்தது?

தெரியல...

அவருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு, உங்களுக்கு தெரியலையா?

தெரியல...

உங்களுக்கு தெரியலன்னு சொல்ல மட்டும் நல்லா தெரியுமுன்னு எனக்கு தெரியும்!

நண்பரை திரும்பிப்பார்த்தேன். அவர் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அல்ஷேசன் முன்னை விட வேகமாக இழுத்துக் கொண்திருந்தது.

அதற்குள்ளாக, உடன் பெரும் அமைதியாக மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்த திருமதியின் வேகம் கூடியது.

எனக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தார்.

முதலில் வேகம் கூடியது.

பிறகு திருமதி கைகளை வீசி நடக்கத்தொடங்கினார்.

இடது காலை எடுத்து வைக்கும் போது அனேகமாக இன்றோடு வாக்கிங் முற்றுப்பெறலாம்!

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி "நான் முட்டாள்" என ஒத்துக்கொண்ட எல்லா சண்டைகளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிவடைந்திருக்கின்றன!!

சைலண்டாக மொபைலைத் தொட்டுப்பார்த்தேன்! சைலண்டில் வைத்த ஞாபகம்!

(டாக்கிங் தொடரும்..)

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு