Published:Updated:

இரு பெருந்தொற்றுகளுக்கு சாட்சியாய் விளங்கும் 107 வயது மூதாட்டி! - சுவாரஸ்யப் பகிர்வு #MyVikatan

Ana del Valle
Ana del Valle ( Crédit : Twitter @jsanchezhachero )

கொரோனாவிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல், விரைவாக குணமாகி மருத்துவமனை வளாகத்தில் யாருடைய துணையும் இன்றி நடக்கத் தொடங்கிவிட்டார் அன்னா ..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லகின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்கி, மக்களை பீதிக்குள்ளாகியிருக்கும் இன்றைய கொரோனா பெருந்தொற்றுக்கு ஈடான வரலாற்று உதாரணமாக ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று பரவலைக் குறிப்பிடலாம்.

ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று பற்றிய பல்வேறு தகவல்களையும் அந்தப் பெருந்தொற்றில் காலனியாதிக்கக் காலத்தின் பெரும் சக்தியாய் விளங்கிய இங்கிலாந்தின் மருத்துவ அனுபவங்களையும் தனது "பிரிட்டனும் 1918-1919ம் ஆண்டுகளின் இன்புளூயன்சா பெருந்தொற்றும்" என்ற நூலில் விளக்குகிறார் இங்கிலாந்து ஆராய்ச்சியாளரான நையல் ஜான்சன்.

Representational Image
Representational Image
AP

ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்றுக்கான காரணங்கள் மற்றும் அந்தக் காலகட்டத்தின் புள்ளி விவரங்கள் பற்றிய பல சந்தேகங்களை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன என்றாலும் அந்தப் பெருந்தொற்றின் மூலம் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதுமில்லை.

1918ம் ஆண்டு தொடங்கி 1919ம் ஆண்டு வரை பரவிய இந்தக் கொள்ளை நோயினால் உலகம் முழுவதும் இருபது முதல் ஐம்பது மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. இது 1918ம் ஆண்டின் உலக மக்கள் தொகையில் 2.5 முதல் 5 சதவிகிதம்!

ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை நீடித்த முதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது!

சமீபத்திய சில வரலாற்று ஆராய்ச்சிகள் இந்த நோயினால் ஏற்பட்ட உயிரிழப்பை நூறு மில்லியன் வரை கணிக்கின்றன!

ஸ்பானிஷ் ப்ளூ என்ற பெயரினால் அந்தப் பெருந்தொற்று ஸ்பெயின் நாட்டில் தொடங்கி பரவியது என்பதான கருத்து தவறானது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிய இந்தப் பெருந்தொற்று ஸ்பானிஷ் ப்ளூ என அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது.

Representational Image
Representational Image
Jorge Saenz / AP

1914லில் தொடங்கி 1918ம் ஆண்டின் இறுதிவரை நீடித்த முதலாம் உலகப்போர் காலகட்டத்தின் போது அந்தப் போரில் ஈடுபட்டிருந்த நாடுகள் அனைத்தும் அவசரநிலை சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததால் தகவல் பகிர்வு உலகம் முழுவதும் தடைப்பட்டிருந்தது. முதலாம் உலகப்போரில் ஈடுபடாத ஒரு சில நாடுகளில் ஸ்பெயின் நாடும் அடக்கம். 1918ம் ஆண்டில் தொடங்கிய பெருந்தொற்று பற்றிய தகவல்களை போரில் ஈடுபடாத ஸ்பெயின் மட்டுமே தொடர்ந்து வெளியிட்டது. இதனால்தான் அந்தப் பெருந்தொற்று ஸ்பானிஷ் ப்ளூ என அழைக்கப்படுகிறது.

1918ம் ஆண்டில் பெருந்தொற்று ஸ்பெயின் நாட்டில் பரவியபோது அன்னா தெல் வாலெ ஏழு வயதுச் சிறுமி ! குடும்பத்துக்கான பால் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை அவர்கள் வசித்த கிராமத்துக்கு அருகிலிருந்த பண்ணையிலிருந்து அவர்தான் வாங்கிவர வேண்டும். ஒரு நாள் நேரத்துக்கு வீடு திரும்பாத தன் மகளைத் தேடிப் போகும் அன்னாவின் தாய், அவர் வழியில் மயங்கிக் கிடப்பதைக் காண்கிறார். வீடு திரும்பிய சிறுமிக்குக் கடுமையான ஜுரம்.

ஸ்பானிஷ் ப்ளூ தொற்றினால் பாதிக்கப்படுகிறார் அன்னா!

பெரும்பாலும் முதியவர்களை தீவிரமாகப் பாதிக்கும் இன்றைய கொரோனாவைப் போலல்லாமல் ஸ்பானிஷ் ப்ளூ தொற்றினால் வயது வித்தியாசங்களின்றி அனைவரும் பாதிக்கப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு முற்றிலும் குணமடைகிறார் அன்னா.

Representational Image
Representational Image

கொரோனா பெருந்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டவை ஐரோப்பிய நாடுகளின் முதியோர் இல்லங்கள்தான்! பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து தொடங்கி பணியாளர்களைக் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதுவரை எத்தனையோ நோய்த்தடுப்பு முயற்சிகளையும் தாண்டி முதியோர் இல்லங்களில் பரவிய கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் பாதி அளவு முதியோர் இல்லங்களில் நிகழ்ந்தவை.

ன்று அன்னா தெல் வாலெ நூற்றி ஏழு வயது மூதாட்டி! ஸ்பெயினின் காடிஸ் நகர முதியோர் இல்லங்களின் ஒன்றில் வசித்து வருகிறார் அன்னா!

கொரோனா பெருந்தொற்று ஸ்பெயின் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய மே மாத தொடக்கத்தில், அன்னா தெல் வாலெ வசிக்கும் முதியோர் இல்லத்தின் பணியாளர்களில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் அனைவரையும் பரிசோதிக்கும் வரை உறவினர்கள் யாரும் வர வேண்டாம் என அன்னாவின் மருமகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Ana del Valle
Ana del Valle
Crédit : Twitter @jsanchezhachero

சில நாள்களில் அன்னாவுக்கும் தொற்று உறுதி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த நாள்களில் பாதிப்பு அதிகமாகி முதியோர் இல்லத்துக்கு அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அன்னா. அவரது முதுமை நிலையை நினைத்துக் குடும்பத்தினர் பயந்தது போலவே அன்னாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி, அவசர சிகிச்சை பிரிவிலும் சேர்க்கப்படுகிறார்.

தீவிர சிகிச்சையின் போது அவரது உடலில் முன்னேற்றம் தெரிகிறது! ஒரு மாத கால சிகிச்சைக்குப் பிறகு, அன்னா கொரோனா தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்துவிட்டதாக அறிவிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்!

கொரோனாவிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல், ஒரு மாத கால தீவிர சிகிச்சை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தும் விரைவாக குணமாகி மருத்துவமனை வளாகத்தில் யாருடைய துணையுமின்றி நடக்கத் தொடங்கிவிட்டார் அன்னா!

ரண்டு பெருந்தொற்றுகளை வென்று வருங்காலச் சந்ததியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கும் அன்னா தெல் வாலெ மூதாட்டியை "இன்னுமொரு நூறாண்டிரும்" எனத் தாராளமாய் வாழ்த்தலாம் !

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு