Published:Updated:

பிளேக் முதல் கொரோனா வரை! - மனித குலத்தை ஆட்டிப்படைத்த பெருந்தொற்றுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Trevor Cole / Unsplash )

எலிகள் மற்றும் பேன்கள் போன்ற ஒட்டுண்ணிகள் மூலமாக மனிதனுக்குப் பரவிய இந்தத் தொற்றுக்கு மூல காரணம், எர்சினியா பெஸ்டிஸ் எனும் பாக்டீரியா.

புயல், பூகம்பம், நிலநடுக்கம் போன்ற இயற்கையின் சீற்றங்களுக்கு ஈடாகக் கொள்ளை நோய்களும் உயிர்க்கொல்லி வியாதிகளும் ஆதிகாலத்திலிருந்தே மனிதனை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆதி மனிதர்களின் எண்ணிக்கையும் இடப்பெயர்வுகளும் அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும், அவை பரவும் அளவும் அதிகரித்தன. வியாபாரத்துக்காக மனிதன் கால்பதித்த புதிய இடங்களில், அவன் மூலமாகப் புதிய நோய்களும் புகுந்தன. பண்டமாற்று முறை உலகளாவிய வர்த்தகமாகப் பரவத்தொடங்கிய காலகட்டத்தில்தான் மலேரியா, காலரா, அம்மை, காசநோய் போன்ற தொற்று வியாதிகளும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தன.

பண்டைய ரோம சாம்ராஜ்யத்தைத் தாக்கிய ஆண்டோனைன் பிளேக் கொள்ளை நோய் தொடங்கி இன்றைய கொரோனா வரை மனித குலத்தை அச்சுறுத்திய கொள்ளை நோய்களைப் பற்றியும் அவை ஏற்படுத்திய அழிவுகளையும் பார்ப்போம்.

Representational Image
Representational Image

ஆண்டோனைன் பிளேக் :

கி.பி 165-ம் ஆண்டிலிருந்து 180-ம் ஆண்டு வரை ரோம சாம்ராஜ்யத்தில் பரவிய இந்தப் பெருந்தொற்று, ஏதோ ஒருவகை அம்மை நோயாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்தக் கொள்ளை நோயினால், ஐந்து மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இந்தக் கொள்ளை நோயும் ஒரு காரணம்!

ஜப்பானிய பெரியம்மை தொற்று :

கி.பி. 735-ம் ஆண்டிலிருந்து 737-ம் ஆண்டு வரை ஜப்பானைத் தாக்கிய இந்த அம்மைத் தொற்றுக்கு ஒரு மில்லியன் மக்கள் வரை இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜஸ்டினியன் பிளேக் :

நோய் பரவலுக்குக் காரணமான கிருமி முதல் அது பரவிய விதம்வரை பல நம்பகமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட இந்தப் பெருந்தொற்றுதான் பேண்டமிக் எனப்படும், உலகளாவிய முதல் பெருந்தொற்று. எலிகள் மற்றும் பேன்கள் போன்ற ஒட்டுண்ணிகள் மூலமாக மனிதனுக்குப் பரவிய இந்தத் தொற்றுக்கு மூல காரணம் எர்சினியா பெஸ்டிஸ் எனும் பாக்டீரியா.

Representational Image
Representational Image

கி.பி 541-ம் ஆண்டிலிருந்து 767-ம் ஆண்டு வரை தாக்கத்தை ஏற்படுத்திய இந்தக் கொள்ளை நோய் பரவலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 கோடிக்கும் மேல்! எத்தியோப்பியாவில் தொடங்கி, எகிப்து, பாலஸ்தீனம், சிரியா எனப் பரவியது இந்நோய்.

பிளேக் டெத் : கி.பி 347-ம் ஆண்டில் தொடங்கி 1352 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தக் கொள்ளை நோய்க்குப் பலியான ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை மட்டுமே 25 மில்லியனைத் தாண்டும். ஜஸ்டீனியன் பிளேக் நோய்க்குக் காரணமான அதே பாக்டீரியாவின் மூலமே இந்நோயும் பரவியது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் அவ்வப்போது ஐரோப்பிய கண்டத்தைத் தாக்கிய இந்தத் தொற்று, ஐரோப்பிய கலாசாரத்தில் மிக நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியது.

அம்மை நோய் பரவல் :

மனித வரலாற்றின் மிகப் பழைமையான தொற்றாக அம்மை நோயைக் குறிப்பிடலாம். மூன்றாம் நூற்றாண்டு காலத்து எகிப்திய மம்மிகளில் அம்மைத் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 1520-ம் ஆண்டில் இந்த நோய் மிகப் பெரிய அளவில் பரவியபோது, 50 மில்லியன் மக்களுக்கு மேல் உயிரிழந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளையும் அவ்வப்போது பெரிய அளவில் தாக்கிய அம்மை நோயினால் 100 வருடங்களில் 500 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அம்மையிலிருந்து பிழைத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பார்வை இழந்தனர்

Representational Image
Representational Image

1980-ம் ஆண்டில் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு.

கிரேட் பிளேக் ஆஃப் லண்டன் மற்றும் இத்தாலியன் பிளேக் :

இவை இரண்டுமே பிளேக் டெத் பெருந்தொற்றின் தொடர்ச்சிதான். 1665-ம் ஆண்டு, இங்கிலாந்தில் மீண்டும் தீவிரமாக தலைதூக்கிய எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியா, லண்டன் மாநகரத்தில் ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டது. இது, அன்றைய லண்டனின் மக்கள் தொகையில் 20 சதவிகிதமாகும்.

இன்றைய கொரோனா பெருந்தொற்றைத் தவிர்த்து, இங்கிலாந்து சந்தித்த கடைசிப் பெருந்தொற்று இதுதான். கிரேட் பிளேக் ஆஃப் லண்டன் தொற்றின்போதுதான், உலகிலேயே முதல்முறையாக தேசிய அளவில் பெருந்தொற்று பேரிடர் மேலாண்மை அமல்படுத்தப்பட்டது.

அதே எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியா 1629-ல் தொடங்கி 1631-ம் ஆண்டு வரை இத்தாலியில் பரவிய நிகழ்வு இத்தாலியன் பிளேக் என்று அழைக்கப்படுகிறது. இத்தாலியின் கால்பங்கு மக்கள் தொகையை, அதாவது ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்களின் உயிரைக் குடித்ததுடன், எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவின் உயிர்ப்பசி தீர்ந்ததாலோ என்னவோ அத்துடன் ஐரோப்பாவில் அது தன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இத்தாலியன் பிளேக் ஏற்படுத்திய பாதிப்பினால், பொருளாதார வரிசைப்படி ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது இத்தாலி.

Representational Image
Representational Image

ஆறு முறை பரவிய காலரா பெருந்தொற்று :

விப்ரியோ காலரா எனும் பாக்டீரியாவின் மூலம் பரவும் காலரா, கங்கையின் டெல்டா பகுதிகளில் தொடங்கியது. இந்தியாவில் தொடங்கிய இந்தப் பெருந்தொற்று, ஒவ்வொரு முறையும் ஆசியா மட்டுமல்லாமல் ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என அனைத்துக் கண்டங்களிலும் பரவியது. 1817 தொடங்கி 1923-ம் ஆண்டுவரை, 100 ஆண்டுகளில் ஆறு முறை பெருந்தொற்றாகப் பரவிய காலராவுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல்.

பேண்டமிக் எனப்படும் பெருந்தொற்றாகக் காலரா பரவும் வாய்ப்பு குறைக்கப்பட்டுவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நிரந்தரமாக இருக்கும் நோய் வகையான என்டெமிக் நோய்ப் பட்டியலில் இருக்கும் காலரா பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

மூன்றாம் பிளேக் பரவல் :

கிரேட் பிளேக் ஆஃப் லண்டன் மற்றும் இத்தாலியன் பிளேக் பரவலுக்குப் பிறகு ஐரோப்பாவில் தன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்ட எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியா, 1855-ம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தது.

சீனாவையும் இந்தியாவையும் பெரிதும் பாதித்த இந்த பிளேக் பெருந்தொற்றுக்கு 12 மில்லியன் மக்கள் உயிரிழந்தார்கள். இந்தப் பன்னிரண்டு மில்லியனில் 10 மில்லியன் பேர் இந்தியர்கள்.

Representational Image
Representational Image
Pixabay

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆசியாவின் இரு பெரும் நாடுகளையும் 1860-ம் ஆண்டுவரை பாதித்திருக்கிறது இந்தப் பெருந்தொற்று.

ப்ளூ பெருந்தொற்றுகள் : 1918-ம் ஆண்டிலிருந்து 1970-ம் ஆண்டு வரை இன்ஃபுளூயன்சா என்றழைக்கப்படும் வைரஸ் கிருமியினால் உண்டாகும் ஃப்ளூ ஜுரத் தொற்று நான்கு முறை பெருமளவில் பரவியது.

ரஷ்யன் ஃப்ளூ, ஸ்பானிஷ் ஃப்ளூ, ஏசியன் ஃப்ளூ, ஹாங்காங் ஃப்ளூ என்ற நான்கு பெயர்களில் அழைக்கப்படும் இவற்றில், ஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று ஏற்படுத்திய அழிவும் தாக்கமும் மிக அதிகம்.

1918-ம் ஆண்டு தொடங்கி 1919-ம் ஆண்டு வரை பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலால் உலகம் முழுவதும் 20 முதல் 50 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் நிகழ்ந்த முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம்.

ஹெச்.ஐ.வி - எய்ட்ஸ் பரவல் :

சிம்பன்ஸி வகை குரங்குகளிடமிருந்து மனிதனுக்குத் தொற்றிய இந்த நோய், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் தொடங்கியது என்றாலும் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்தது 1980-களில்தான்.

உலகளாவிய பரவலால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட எய்ட்ஸ் நோய்க்கு 1980-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை முப்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இதுவரையிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்நோயினால், ஆப்பிரிக்கா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Representational Image
Representational Image

நிகழ்காலத் தொற்றுகள் : 2009-ம் ஆண்டில் தோன்றிய ஸ்வைன் ஃப்ளூ தொடங்கி சார்ஸ், எபோலா, மெர்ஸ் என மில்லினியம் ஆண்டுகளின் தொற்றுகள் பெருந்தொற்று அபாயத்தை ஏற்படுத்தினாலும், இவை அனைத்தும் பெரிதும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. இவற்றினால் உண்டான மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்குள் அடங்கிவிடும்.

ண்டைய சமூகத்து மனிதன், இயற்கைப் பேரிடர்களையும், பெருந்தொற்றுப் பரவல்களையும் இறைவனின் கோபமாக அல்லது தண்டனையாக எண்ணிப் பயந்தான். மதகுருமார்கள் புதிய நோய்களைப் பாவம் செய்த மக்கள் மீதான தண்டனையாகவோ அல்லது மன்னன் மீதான சாபமாகவோ பரப்புரை செய்தார்கள். இறந்தவர்கள் பாவம் செய்தவர்கள், மீண்டவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில் நோயின் தன்மையையும், பரவலுக்கான காரணத்தையும் விஞ்ஞானப் பூர்வமாக அணுகாததால் பாதிப்பும் உயிரிழப்பும் பெருகிப் பரவியது.

வரலாற்றின் பெருந்தொற்றுப் பரவல்களைக் கால வரிசைப்படி ஆராய்ந்தால், மனிதகுலம் மருத்துவத் துறையிலும் பெருந்தொற்று பேரிடர் மேலாண்மையிலும் முன்னேற முன்னேற இறப்புச் சதவிகிதம் தொடர்ந்து குறைவதைக் காணலாம்.

நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு சுய வீடடங்கில் இருக்கும் குவாரன்டைன் வழக்கம், 14-ம் நூற்றாண்டின் பிளேக் நோய் தொற்றின்போது அமலுக்குவந்தது. வெனிஸ் நகரத்துக்குள் வரும் வணிகக் கப்பல்களிலுள்ளவர்கள் நங்கூரமிடப்பட்ட 40 நாள்கள் கப்பல்களுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். குவாரன்டீன் ஜியோரினி எனும் இத்தாலிய வார்த்தைக்கு 40 நாள்கள் என்று பொருள்.

மீண்டும் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்துக்குச் செல்வோம்...

Representational Image
Representational Image
Dan Burton / Unsplash

தி மனிதர்களின் எண்ணிக்கையும் இடப்பெயர்வுகளும் அதிகரிக்க அதிகரிக்க, நோய்களின் எண்ணிக்கையும், அவை பரவும் அளவும் அதிகரித்ததைப் போலவே இன்றைய நவீன உலகின் நகரமயமாக்கலும், காடுகளின் அழிவும் இயற்கையின் சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், பயணிகள் விமான சேவை, கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. மிக விரைவாக உலகம் சந்தித்த இந்த மாற்றங்கள் நோய்ப் பரவலிலும் புதிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

உலகளாவிய வர்த்தகம் பரவத்தொடங்கிய காலகட்டத்தில் மலேரியா, காலரா, அம்மை, காசநோய் போன்ற தொற்று வியாதிகளும் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்ததைப் போல விமான சேவையினால் உலகம் மொத்தமும் ஒரே பெருநகராகச் சுருங்கிய சூழலில், பெருநோய் பரவல்களுக்கான வாய்ப்புகள் மீண்டும் தலைதூக்குகின்றன.

இதன் தொடக்க எச்சரிக்கையாகத்தான் கொரோனா பரவலை அணுக வேண்டும்.

சீனாவிலிருந்து ஆறே மாதங்களில் உலகின் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்ட கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரையிலும் பலியானோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டிவிட்டது. பேண்டமிக் எனப்படும் பெருந்தொற்றுகளை அவை உருவாகும் எல்லைக்குள் கட்டுப்படுத்திவிடும் வல்லமை கைகூடிவிட்டதாக நம்பிய நவீன மனிதனின் எண்ணத்தைப் பொய்யாக்கிக்கொண்டிருக்கிறது கொரோனா.

Representational Image
Representational Image
Edwin Hooper / Unsplash

நவீன மில்லினிய மனிதனின் மருத்துவக் கட்டமைப்பை மட்டுமல்லாது அவனது அரசியல், பொருளாதார, சமூகக் கோட்பாடுகளையும் அசைத்துப்பார்த்தபடி இன்னும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் முழுப் பதிப்பையும் உடனடியாக மதிப்பிடுவது இயலாத காரியம். ஒன்றுபட்ட உலகளாவிய விஞ்ஞான முயற்சிகளையும் மீறி கொரோனா பற்றி நாம் அறியாத பக்கங்கள் இன்னும் மிச்சமிருக்கின்றன.

கொரோனா முடிவுக்கு வரும்போது... கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் எனும் ஒரு புதிய எல்லைக்கோடு மனித குலத்தின் வரலாற்றுத் தடத்தில் தோன்றியிருக்கும்.

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு