Published:Updated:

`அரபு நாடுகளிலிருந்து வந்த கடிதமும் போன்கால்களும்!' - கொஞ்சம் வரலாறு, நிறைய சுவாரஸ்யம் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

அரபு நாடுகளிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு வந்து சேர ஒரு மாதம் ஆகும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டங்களில் ஒன்று ராமநாதபுரம். விவசாயம் லாபமற்ற தொழிலாக இருப்பதால், இப்பகுதி மக்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது 1980-களில் தொடங்கியது. அப்போதிருந்த ஒரே தொலைத்தொடர்பு உபகரணம், `கடிதங்கள்'.

Representational Image
Representational Image

அரபு நாடுகளிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு வந்து சேர ஒரு மாதம் ஆகும். மிகுந்த சிரமம் எடுத்து கடிதம் எழுதப்பட்டிருப்பதை, கடிதத்தைப் பிரித்த உடனே தெரிந்துவிடும். ஏனென்றால் கடிதம் எழுதுபவர் ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துவிட்டு வளைகுடா நாடுகளுக்குச் சென்றிருப்பார். கடிதத்தை வாங்குவோருக்கு படிக்கத் தெரியாது. அந்த வீடுகளின் அருகே உள்ள பள்ளி மாணவர்களைப் படிக்கச் சொல்லி, உறவினர்கள் கூட்டமாக அமர்ந்து கேட்பார்கள்.

சிறுவனாக எங்கள் கிராமத்துக்குச் சென்ற காலங்களில், நானும் இதுபோன்ற கடிதங்களை வாசித்திருக்கிறேன். சிலருக்கு, வாசிக்கத் தெரியாத மனைவிக்கு எப்படி கடிதம் எழுத வேண்டுமென்ற புரிதல் இருக்காது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

நீண்ட தொலைவில் உறவினர்களைப் பிரிந்து வாழ்வதால், உணர்ச்சிகளைக் கொட்டி எழுதியிருப்பார்கள். அன்பே ஆருயிரே என்று தொடங்கி, காதல் ரசம் சொட்டும் கடிதமாக அமைந்துவிடும். அந்தக் கடித வாசிப்பை கேட்டுக்கொண்டிருக்கும் பெண்ணுக்குத்தான் சங்கடம். எண்பதுகளின் பிற்பகுதியில், அரபு நாடுகளிலிருந்து வருபவர்களிடம் ஒரு டேப் ரிக்கார்டர் கொடுத்து விடுவார்கள். அதனுடன் கணவன், மனைவிக்கு ஒரு கேசட்டையும் கொடுத்து விடுவார். அந்த கேசட்டில், கணவன் மனைவிக்குப் பேசியிருப்பார்.

Representational Image
Representational Image

வழக்கம் போல ரொமான்ஸ் இருக்கும். இதையும் மக்கள் கூட்டமாக அமர்ந்து ரசித்தார்கள். இந்தச் சமயத்தில், ராஜீவ் காந்தி பிரதமரானார். இந்திய தொலைத்தொடர்பில் முன்னேற்றம் கொண்டு வர முடிவெடுத்து, அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சாம் பிட்ரோடா எனும் இந்தியரை அழைத்து வந்தார். சாம் பிட்ரோடா, 1975-ல் Electronic Dairy கண்டுபிடித்து காப்புரிமை வாங்கியிருந்தார்.

ஒரு வகையில், இந்த Electronic Dairy, பல Smart Electronic Gadget- களின் முன்னோடி. இவருடைய இந்த கண்டுபிடிப்பை Toshiba, Casio, Sharp, Hewlett Packard, Texas Instruments, Radio Shack போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தின. அதனால் இந்த நிறுவனங்கள் மீது பிட்ரோடா வழக்கு தொடர்ந்து, மிகப்பெரிய தொகையை நஷ்ட ஈடாக வாங்கினார். இவரை இந்தியாவுக்கு அழைத்துவந்த ராஜீவ் காந்தி, தொலைத்தொடர்பு புரட்சியை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு Centre for Development of Telematics (C-DOT). இந்த அமைப்பின் தலைவர் சாம் பிட்ரோடா. இவர் தலைமையிலான குழுவினர், இந்தியாவில் இருந்த ட்ரங்கால் முறையை STD/ISD ஆக மாற்றினர். இதற்கு இவர்கள் எடுத்துக்கொண்ட காலம் சில ஆண்டுகளே.

Representational Image
Representational Image

இந்தியா கொண்டாட மறந்த மனிதர், சாம் பிட்ரோடா. இது மிகப்பெரிய சாதனை. இதன் பின்னர், நடுத்தர வர்க்க வீடுகளுக்கெல்லாம் ஃபோன் வந்தது. எங்கள் வீட்டிற்கும் வந்தது. வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள், எங்கள் வீட்டிற்குத் தொடர்பு கொண்டு, அடுத்தநாள் அவர்களின் உறவினர்களை அழைத்து வரச் சொல்வார்கள். அந்த ஊருக்குப் போகும் பஸ்ஸில் போய், தகவல் சொல்லி அனுப்புவது என் வேலை. "பழனி மாமா நாளைக்கு ஃபோன் பண்ணுவாராம். ராணி அத்தையை வரச் சொல்லுங்க." இந்தத் தகவல் கிடைத்த ராணி, கணவனை நேரே சந்திக்கப்போவது போல தலையைப் பின்னி, பவுடர் அடித்து வந்து சேருவார். ஃபோனில் உரத்த குரலில் பேசுவார்.

`அத்தை, மொட்டை மாடியில் நின்று இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசினால், மாமாவுக்கே கேட்டுவிடும், ஃபோனே தேவையில்லை' என்று சொல்வேன். "போங்கப்பு, அத்தை கிராமத்து மனுஷி, அம்புட்டுத்தான் வெவரம்" என்று சொல்லிவிட்டுப் போவார். இந்த உதவி செய்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளுக்குள் பயமாகவே இருக்கும். வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் யாராவது இறந்தால், அந்தத் தகவலையும் சொல்ல வேண்டுமே என்ற பயம்தான் அது. நல்லவேளையாக அந்தத் துயரம் நடக்கவில்லை.

Representational Image
Representational Image

இந்த Landline போனில் BSNL தான் அரசன். ரிலையன்ஸ் Landline ஃபோன் நிறுவனம் தொடங்கி BSNL நிறுவனத்திடம் தோற்று தொழிலைவிட்டு வெளியேறியது. இந்தச் சமயத்தில் செல்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம் ஆனது. வழக்கம்போல BSNL தான் அரசன். அதில் தனியாரின் பங்கு அவசியம் என நினைத்த வாஜ்பாய், தனியாரை அனுமதித்தார். அது, செல்ஃபோன்கள் வேகமாக இந்தியாவில் பரவ வழிவகுத்தது. அன்றைக்கு அந்தத் துறையின் இணை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசருக்கும் (இன்றைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்) பங்குண்டு.

ஆனால், குக்கிராமங்களுக்கும் செல்ஃபோன் சேவை சென்றடைய காரணமாக இருந்தது, மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலம். அதில் முக்கியப் பங்கு ஆ.ராசாவுக்கு உண்டு.

மன்மோகன் சிங் காலத்தில் ஏற்பட்ட புரட்சியால், குக்கிராமங்களுக்கும் சிறந்த தொலைத்தொடர்பு கிடைத்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, வயல்வெளியில் இருக்கும் ஒருவர் ஃபோனில், `சாப்பாடு ரெடியா?' எனக் கேட்பதுபோல கார்ட்டூன் வெளியிட்டது விகடன். அது நடந்தே விட்டது. இந்தக் கொரோனா காலத்தில், மக்களுக்கு பொருள்கள் வாங்குவது முதல் பொழுதுபோக்குவது வரை உதவியாக இருப்பது இந்தியாவின் தொலைத்தொடர்புதான். அதற்கு முக்கியக் காரணமானவர்கள் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்.

Representational Image
Representational Image
Credits : Shutterstock

பின் குறிப்பு 1: ட்ரங்கால் பதிவு செய்து விட்டு இணைப்பிற்காகக் காத்திருக்க வேண்டும். பல நாள்கள் இணைப்பு கிடைக்காது.

பின் குறிப்பு 2: STD/ISD ஒரு தொழிலாக இந்தியாவில் வளர்ந்தது. இன்றைக்கும் அதன் மிச்சமாக இருக்கிற STD பூத்துகளைப் பார்க்கலாம்.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு