Published:Updated:

`முதல்ல உங்க மேனேஜரைப் பேசவிடுங்க..!' - மேலாண்மையியல் குட்டிக் கதைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( airfocus on Unsplash )

இன்றைய நிர்வாகங்களின் அரிச்சுவடி என்று கூறக்கூடிய வகையிலான சில மேலாண்மையியல் நீதிக்கதைகள் இதோ...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சரியான நபர்களிடம், உரிய காலத்தில் வேலையைக் கொடுத்து வாங்கும் கலையே நிர்வாகம் ஆகும். ஒரு நல்ல நிர்வாகி நடக்கும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதைவிட, அவற்றைச் சரியானபடி மாற்றும் பொறுப்பைத்தான் ஏற்றுக்கொள்கிறார்.

`திறமையான நிர்வாகிகள் எப்போதுமே தாகம் எடுப்பதற்கு முன்பே கிணற்றைத் தோண்டி விடுவார்கள்' என்பார் அமெரிக்காவின் புகழ்பெற்ற மேலாண்மையியல் எழுத்தாளரான ஹார்வி மெக்கே (Harvey Mackay).

Representational Image
Representational Image
Pixabay

`ஒரு மனிதனின் வாழ்க்கை, இரண்டு வழிகளில் மாறுகிறது. ஒன்று நாம் சந்திக்கும் நபர்கள், மற்றொன்று நாம் படித்த புத்தகங்கள்’ என்று கூறும் ஹார்வி மெக்கே, பழைய நீதிக்கதைகளின் வழியே மேலாண்மையியலின் புதிய நீதியினை நமக்குக் கற்றுத்தருகிறார்.

இன்றைய நிர்வாகங்களின் அரிச்சுவடி என்று கூறக்கூடிய வகையிலான இரண்டு மேலாண்மையியல் நீதிக்கதைகள் இதோ...

கதை 1:

ஒரு ஊழியர், ஒரு டீம் லீடர் மற்றும் அவர்களின் மேலாளர் ஆகியோர் மதிய உணவுக்காக அலுவலகத்தில் இருந்து ஹோட்டலுக்கு நடந்து சென்றனர்.

அப்போது ஒரு பழங்கால எண்ணெய் விளக்கை வழியில் காண்கின்றனர்.

ஆச்சரியத்துடன் விளக்கை எடுத்து அதை விளையாட்டாகத் தேய்த்துப் பார்க்கின்றனர். திடீரென அதிலிருந்து ஒரு ஜீனி (பூதம்) வெளியே வருகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு ஆசையை மட்டுமே நிறைவேற்றித் தருவதாகப் பூதம் கூறுகிறது.

முதலில் ஊழியர் ஆர்வத்துடன் பூதத்திடம் தன் ஆசையைக் கூறுகிறார்.``நான் பஹாமாஸ் தீவுக்குச் செல்ல விரும்புகிறேன். அங்கு கவலைகள் எதுவும் அற்ற மனிதனாக மகிழ்ச்சியாகவும், வேகமாகவும் படகு ஓட்டவேண்டும் என்பதே எனது விருப்பம்!" என்கிறார். உடனே பூதம் பூஃப் என்கிறது. அவர் விரும்பிய பஹாமாஸ் தீவுக்குப் போய்விடுகிறார்.

Representational Image
Representational Image
Austin Distel on Unsplash

இரண்டாவதாக டீம் லீடர், தன் விருப்பத்தைக் கூறுகிறார்.`நான் ஹவாய் தீவுக்குச் செல்ல விரும்புகிறேன். கடற்கரையில் மசாஜ், மது உள்ளிட்ட சகல வசதிகளுடன் ஓய்வு எடுக்க வேண்டும்’ என்கிறார். மறுபடியும் பூதம் பூஃப் என்கிறது. இவரும், தான் விரும்பிய ஹவாய் தீவுக்குச் சென்றுவிடுகிறார்.

இறுதியாக மேலாளரிடம் பூதம் உங்கள் விருப்பம் என்ன எனக் கேட்கிறது. மேலாளர் சற்று கவலையுடன்,``மதிய உணவுக்குப் பிறகு, அந்த இருவரும் அலுவலகத்தில் இருக்க வேண்டும்!" என்று கேட்கிறார். பூதம் பூஃப் என்கிறது!

நீதி : எப்போதும் உங்கள் அதிகாரியை முதலில் பேச விடுங்கள்!

கதை 2:

ஒரு வயதான மனிதனும் சிறுவனும் கழுதையுடன் பயணம் சென்று கொண்டிருந்தார்கள். சிறுவன் கழுதை மீது அமர்ந்து இருக்கிறான். முதியவர் நடந்து செல்கிறார். அவர்கள் இவ்வாறு செல்லும்போது, சிலர் அவர்களைக் கடந்து சென்றனர். அவர்கள், `வயதானவர் நடந்து செல்லும்போது சிறுவன் சவாரி செய்வது தவறு’ என்று கூறியபடியே செல்கின்றனர்.

எனவே சிறுவனும் முதியவரும் தம் நிலைகளை மாற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர ஆரம்பிக்கின்றனர். இப்போது சிறுவன் நடந்து செல்ல, முதியவர் கழுதை மேல் சவாரி செய்கிறார். சிறிது தூரம் சென்றதும் வழியில் எதிர்ப்பட்டவர்கள் ``இந்த முதியவர் ஏன் சிறுவனை நடக்க வைக்கிறார்? இது தவறான செயல்" என்று கூறியபடியே செல்கின்றனர்.

Representational Image
Representational Image
Pixabay

இதைக் கேட்ட இருவருமே நடந்து செல்லத் தொடங்குகின்றனர். அப்போது, `சவாரி செய்ய நல்ல கழுதை இருக்கும்போது இந்த இரு முட்டாள்களும் ஏன் நடந்து செல்கின்றனர்’ என்று கூறியவாறு சிலர் அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட அவர்கள் இருவரும் கழுதையின் மேல் சவாரி செய்யத் தொடங்கினர்.

அதைப் பார்த்த சிலர், `ஒரு பலமற்ற கழுதையின் மீது இவ்வளவு சுமையை வைப்பது எவ்வளவு மோசமானது’ என்று கூறியவாறு அவர்களைக் கடந்து சென்றனர்.

இதைக் கேட்ட அவர்கள் இருவரும் இறுதியாகக் கழுதையை சுமந்து செல்ல முடிவு செய்தனர்! அவ்வாறு கழுதையைச் சுமந்தபடி அவர்கள் ஒரு பாலத்தைக் கடக்கும்போது, கழுதையின் கனம் காரணமாக அதன் மீதான பிடியை இருவரும் இழந்து விடுகின்றனர்.

கழுதை ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்து போகிறது!

நீதி: ஒரு சிறந்த நிர்வாகி அனைவரையும் மகிழ்விக்க முடியாது. எனவே, அனைவரையும் மகிழ்விக்க ஒருபோதும் முயற்சி செய்ய வேண்டாம்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு