Published:Updated:

முத்தான மூன்று `ஓப்பன் எண்டட் நீதிக்கதைகள்’ #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஒரு கதையில் முடிவு என்பது க்ளோஸ்டு எண்ட் அல்லது ஓப்பன் எண்ட் என இருவகைகளில் ஏதேனும் ஒன்றாக அமையும்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கதையில் விவாதிக்கப்பட்ட அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் கதையின் இறுதியில் தெளிவான இறுதி முடிவு கிடைப்பது க்ளோஸ்டு எண்ட்.

ஆனால் கதையில் பல சூழ்நிலைகளுக்குப் பதில் அளித்துவிட்டு, சிற்சில முடிவுகளை வாசிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவது ஓப்பன் எண்ட்!

எழுதுபவரை மட்டுமல்லாது, வாசிப்பவரையும் புத்திசாலியாகக் கருதியே ஓப்பன் எண்ட் கதைகள் அமையும்!

நமது பெரும்பாலான நீதிக்கதைகள் தெளிவான முடிவுகளுடன் க்ளோஸ்டு எண்ட் கதைகளாகவே அமைந்துள்ளன.

நீதிக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் கதைகளின் முடிவுகள் பொருத்தமான ஒன்றாகவே இருந்திருக்கலாம்.

Representational Image
Representational Image

ஆனால் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றில் மாற்றம் வந்தால் புதுமையாக இருக்குமல்லவா? மேலும் அவற்றின் முடிவுகளை வாசிப்பவர்களே சிந்திக்க முடிந்தால், மாற்ற முடிந்தால் நன்றாகத்தானே இருக்கும்!

மேலும் ஒரு கதைக்கு ஒரு முடிவு மட்டுமே என்பதைவிட,

பல்வேறு முடிவுகள் (Multiple Epilogue) இருப்பது கதைகளை மேலும் சுவையூட்டவே செய்யும்.

ஐன்ஸ்டினின் ஸ்ட்ரிங் தியரியை (String theory ) மையமாகக் கொண்டு வெளிவந்த 12 B படம் கூட Multiple Epilogue கதைதான்.

நீதிக்கதைகளை குழந்தைகளுக்குக் கூறி, அவற்றை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு, குழந்தைகளையே மாற்றம் செய்ய வைக்கும் ஓப்பன் எண்ட் உத்தி, குழந்தைகள் மனதில் நீதிக்கருத்துகளை ஆழமாகப் பதியவைக்க ஒரு சிறந்த உத்தியாக அமையும்.

அந்தவகையில் இந்த நீதிக்கதைகளின் கதையமைப்பு மற்றும் முடிவுகள் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் வகையில் Multiple Epilogue முறையில் உருவாக்கப்பட்டவை.

இவை இறுதியான கதை அமைப்புகளாகவோ அல்லது முடிவுகளாகவோ (க்ளோஸ்ட் எண்ட்) நிச்சயமாக இருக்க முடியாது. இவற்றை யார் வேண்டுமானாலும் மாற்றக்கூடிய வகையில் (ஓபன் எண்ட்) அமைந்தவையே!

"ஆனால் 'நேர்மறை சிந்தனை' எனும் ஒரு கயிறு இக்கதைகளை ஒன்றாகப் பிணைத்துள்ளது என்பது மட்டும் உறுதி."

வாருங்கள் கதைகளுக்குள் போகலாம்!

Representational Image
Representational Image

"பாட்டி வடை சுட்ட கதை"

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்தார். தினமும் ஒரு காகம் வந்து அந்தப் பாட்டி சுட்ட வடைகளில் ஒன்றை தூக்கிச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தது. இதனால் அந்தப் பாட்டிக்கு இழப்பு ஏற்பட்டது.

ஒரு நாள் பாட்டி வடைகளைச் சுட்டு வைத்துவிட்டு மறைந்து நின்றார். காகம் வந்து வடையைத் தூக்கும்போது அதனிடம் முறையிட ஆரம்பித்தாள்.

"காகமே, உனக்கே இது நியாயமாக இருக்கிறதா? நானே வயதான காலத்தில் வயிற்றுப் பாட்டுக்காக இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். நீ தினமும் ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டால் எனக்கு நஷ்டம் ஏற்படுமா? இல்லையா?" என்று காகத்திடம் கேட்டார் பாட்டி.

அதற்கு காகம் சோகத்துடன் "உண்மைதான் பாட்டி. நான் செய்யறது தப்புன்னு எனக்கே புரியுது. ஆனா எனக்கு இரண்டு குஞ்சுகள் இருக்கு. அதுகளுக்குத் தீனி கொடுக்க எனக்கு வேற வழி தெரியலை!"என்று கலக்கத்துடன் கூறியது.

இதைக் கேட்ட பாட்டிக்குப் பாவமாகப் போய்விட்டது. "தூக்கிப்போகும் ஒரு வடையை குஞ்சுகளுக்குக் கொடுத்துட்டா நீ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ?" என்று பாட்டி காகத்திடம் கேட்டார்.

"பல நாள் பட்டினிதான். ஒரு சில நாள் மட்டுமே எனக்கு ஏதாவது கிடைக்கும்"என்று காகம் சோகத்துடன் கூறியது.

உடனே பாட்டி ஒரு துணிப்பையை எடுத்து அதில் ஐந்து வடைகளைப் போட்டு "இந்தா நீயும் சாப்பிடு உன் குஞ்சுகளுக்கும் கொடு"என்று கொடுத்தார். மிகுந்த மகிழ்வுடன் பையை வாங்கிக் கொண்டு காகம் தன்னுடைய இருப்பிடத்திற்குப் பறந்தது.

குஞ்சுகளுக்கு ஆளுக்கு ஒரு வடையைக் கொடுத்துவிட்டு, இன்றாவது நன்றாகச் சாப்பிடலாம் என்று மரக்கிளையில் அமர்ந்த போது, கீழே ஒரு நரி வந்து நின்று வடையையே ஆவலாகப் பார்த்தது.

நரி பசியாக இருப்பதைக் காகம் உணர்ந்தது. நரியைப் பார்த்து பரிதாபப்பட்ட காகம், தனக்கு ஒரு வடையை மட்டும் வைத்துக்கொண்டு, நரிக்கு இரண்டு வடைகளைக் கொடுத்தது. நரி மகிழ்வுடன் வடைகளைப் பெற்றுக்கொண்டு ஆவலாய் உண்டது.

Representational Image
Representational Image

பிறகு காகம் நரியிடம், பாட்டி தனக்கு வடைகளைக் கொடுத்த நிகழ்வை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே நரி காகத்தின் மரத்தடியில் வந்து நின்றது.

அதன் வாயில் ஒரு முத்துமாலை இருந்தது. காகம் நரியைப் பார்த்து, "இது என்ன? எனக் கேட்க, "காட்டிற்கு வேட்டையாட வந்த இளவரசனை நம்முடைய சிங்கராஜா துரத்தியபோது அவனது முத்துமாலை கீழே விழுந்து விட்டது. இதைப் பாட்டிக்கு நமது பரிசாகக் கொடுத்துவிடு"என்றவாறு முத்துமாலையைக் காகத்திடம் கொடுத்தது நரி.

அதை வாங்கிய காகம் உடனே பாட்டியிடம் பறந்து சென்றது."பாட்டி இந்த முத்துமாலை காட்டில் கிடைச்சது நீ வச்சுக்கோ" என விவரத்தைக் கூறி பாட்டியிடம் கொடுத்தது.

பாட்டி அந்த முத்துமாலையை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். அதை விற்றபோது பாட்டிக்கு நிறைய பணம் கிடைத்தது.

அதன்மூலம் பாட்டி மகிழ்வுடன் தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.

தொடர்ந்து காகத்திற்கு வடைகளுடன் உணவும் கொடுத்து உதவ ஆரம்பித்தார்.

காகமும் நரிக்கு தொடர்ந்து உதவியது. இவ்வாறு பாட்டியும், காகமும் நரியும் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ்ந்தனர்.

நீதி:

பிறருக்கு உதவுவதால் நமக்கு நன்மையே நடக்கும்!

"தேவதையும் விறகுவெட்டியும்"

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் ஒரு நாள் குளத்து ஓரமாக மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது.

அவன் குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவன் அழுகையைக்கண்டு மனம் இரங்கிய அந்த குளத்தில் குடியிருக்கும் தேவதை அவன் முன்பே தோன்றி, "ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்டது.

அவன் உடனே தன்னுடைய கோடரி குளத்தினுள் விழுந்து விட்டதைக் கூறினான். கோடரி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவது மிகுந்த சிரமம் என்று கூறி அழுதான்.

உடனே தேவதை குளத்தில் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து அவனிடம் காட்டி "இது உன் கோடரியா?" என்று கேட்டது.

Representational Image
Representational Image

அவர் நேர்மையாக "இது என்னுடையது இல்லை" என்றான். அடுத்ததாக ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து காட்டியது. "இதுவும் என்னுடையது இல்லை" என்றான் விறகுவெட்டி.

இறுதியாக தேவதை அவனுடைய இரும்புக் கோடரியை எடுத்து வந்து காட்ட "இதுதான் என் கோடரி" என்றான் விறகுவெட்டி.

அவனுடைய நேர்மையைப் பாராட்டிய தேவதை மூன்று கோடரிகளையும் அவனுடைய நேர்மைக்குப் பரிசாக அவனுக்கே கொடுத்து விட்டு மறைந்தது.

இந்தத் தகவல் இந்த விறகுவெட்டியின் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரிந்தது. அவனும் அதே குளத்தங்கரை ஓரமாக உள்ள மரத்தை வெட்டச் சென்றான்.

வேண்டுமென்றே தன்னுடைய கோடரியைக் குளத்தினுள் போட்டு விட்டான். குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான்.

அவன் முன்பும் தேவதை தோன்றியது."ஏன் அழுகிறாய்?"என்று கேட்டது.

அதற்கு அவன் "என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு இதுபோன்று கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது. அவன் நேர்மையாக இருந்ததற்காக அவனுக்கு தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று கோடரிகளை நீ பரிசாகக் கொடுத்திருக்கிறாய்."

"எனவே எனக்கும் அவ்வாறு கிடைக்கும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன், எனது கோடரியைக் குளத்தினுள் போட்டேன்"என்று அவன் தேவதையிடம் உண்மையைக் கூறினான்.

அவனுடைய நேர்மையைக் கண்டு வியந்த தேவதை, அவனுக்கும் மூன்று கோடரிகளைப் பரிசளித்தது. அவன் மகிழ்வுடன் தன் வீடு திரும்பினான்!

நீதி:

நேர்மையால் நன்மையே நடக்கும்.

Representational Image
Representational Image

"கொக்கும் நரியும்"

ஒரு காட்டில் நரி ஒன்று அனைவரையும் ஏமாற்றி தந்திரமாகப் பிழைத்துக்கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு கொக்கை ஏமாற்ற விரும்பிய நரி, "உனக்கு நான் விருந்தளிக்க விரும்புகிறேன்.

என்னுடைய வீட்டுக்கு வா"என அழைத்தது.

கொக்கு மிகுந்த பசியுடனும் ஆவலுடனும் நரியின் வீட்டிற்குச் சென்றது. நரி பல்வேறு தட்டையான தட்டுகளில் நீராகாரங்களை ஊற்றி வைத்து "ம் சாப்பிடு"என்றது.

கொக்கின் அலகு கூர்மையாக இருந்ததால் தட்டுகளில் இருந்தவற்றை கொக்கினால் குடிக்க முடியவில்லை. நரி அதைப் பார்த்து ஏளனமாக நகைத்தவாறே தனியாக விருந்துண்டது.

கொக்கு மிகுந்த ஏமாற்றத்துடன் தன்னுடைய இருப்பிடம் சென்றது.

சிலநாள்கள் சென்றன. ஒரு நாள் கொக்கு நரியிடம் சென்று "நீ என்னுடைய வீட்டிற்கு விருந்திற்கு வரவேண்டும்"என்று அழைத்தது.

நரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. நாம் இதை ஏமாற்றியது போல, இதுவும் நம்மை ஏமாற்ற அழைக்கிறது என நினைத்து விருந்திற்குச் செல்ல மறுத்தது.

"இல்லை இல்லை நீ அவசியம் வரணும். நம் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இதன் மூலமாகத்தான் வெளிப்படும்" என்று வருந்தி அழைத்தது கொக்கு.

நரியும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டது. அடுத்த நாள் கொக்கின் வீட்டுக்கு நரி சென்றது. கொக்கு சுவையான தின்பண்டங்களை செய்து, நரிக்குத் தட்டையான தட்டுகளிலும், தனக்கென நீளமான குடுவைகளிலும் வைத்து இருந்தது. அவற்றை அன்புடன் நரிக்கு வழங்கியது.

அதைப் பார்த்த நரிக்கு வெட்கமும், அவமானமும் ஏற்பட்டன.

Representational Image
Representational Image

"நண்பா நீ என் வீட்டிற்கு வந்திருந்த போது நீ உண்ண முடியாதவாறு நான் உனக்கு உணவுப்பொருள்களை அளித்தேன்.

ஆனால் நீயோ நான் உண்ணுவதற்குத் தகுந்தவாறு தட்டுகளில் உணவினை அளித்துள்ளாயே ஏன்?" என நரி கூச்சத்துடன் கேட்டது.

அதற்கு கொக்கு "நீ ஒரு தவறு செய்தாய் என்பதற்காக நானும் அதே தவறை செய்ய விரும்பவில்லை. நான் உண்மையாகவே உனக்கு விருந்தளிக்க விரும்பினேன்.

இதுதான் எனது குணம்" என்றது கொக்கு.

இதைக் கேட்ட நரி மனந்திருந்தியது.

மிகுந்த மகிழ்வுடன் இரண்டும் விருந்துண்டன. அதன் பிறகு அந்த நரியும் கொக்கும் நீண்ட நாள்கள் உயிர் நண்பர்களாகவே வாழ்ந்தன.

நீதி:

நமக்கு கெடுதல் செய்பவர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு