Published:Updated:

`கல்யாணி அம்மாவும் குட்டிச்சாத்தான் ஏவலும்!' - வாசகியின் `திக் திக்' பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தன் வாழ்க்கையில் கேள்விப்பட்ட குட்டி சாத்தான் கதையை சிறுகதையாக பகிர்ந்திருக்கிறார் வாசகி.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நீண்ட நாள்களாக என் மனதில் சாபம் பற்றிய சிந்தையே நிலைக் கொண்டிருந்தது. சாபங்கள் பற்றிய நம் நம்பிக்கை என்ன? சொல்லப்போனால் சாபங்களை கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகளும் நம்புவார்கள். ஒருவருக்குத் தீங்கு செய்தால் நம்மை அது பாதிக்கும் என்று பயப்படுவார்கள்.

பழியுணர்வால் குற்றம் செய்பவர்கள் குற்றங்களையே தன் சிந்தையில் கொண்டிருப்பவர்கள். இவர்கள்தான் சாபம் நினைத்துப் பயப்படாதவர்கள். நம் இதிகாசமான மகாபாரதத்தில் ஆரம்பக்கதையான கங்காதேவி தன் குழந்தைகளைக் கொல்வதில் ஆரம்பிக்கும் சாபக்கதைகள், அதன் ஃபிளாஷ்பேக்குகள் கிருஷ்ணரின் மரணம் வரைத் தொடர்கிறது. மகாபாரதத்தில்தான் எத்தனை உபகதைகள்... அதன் கிளைக்கதைகள்.. எல்லாம் சாபங்கள் பற்றி.. நம் இந்துமதத்தின் முக்கிய கான்செப்ட் ஆகவே இது இருக்கிறது. இந்தச் சாப பயமே.. நம்மை நல்லவர்களாய் வாழ வைக்கிறது என்றும் சொல்லலாம்.

Representational Image
Representational Image

இந்தச் சாப நினைவுகள் இன்று சிந்தையில் ஆரம்பிக்க காரணமே கல்யாணி அம்மா சொன்ன உண்மையான சாபம் பற்றிய அவர்களின் குடும்ப வரலாறு. அவர்கள் பாலக்காட்டில் தங்கள் கிராமத்தில் சில வேண்டுதல்களை நிறைவேற்றப்போகும்போது என்னையும் அழைத்துக்கொண்டு போனார்கள். இரண்டு பக்கமும் பச்சை பசேலென்ற வயல்களும் மரங்களும் சுத்தமான காற்றும் அதை அனுபவித்துக்கொண்டு செல்லும் ஆட்டோ பயணம் என புத்துணர்ச்சியுடன் இருந்த எனக்கு, கல்யாணி அம்மா அவர்களின் குடும்ப வரலாறு சொல்லத் தொடங்கியதும் இதயம் படபடக்கத் தொடங்கியது.

கல்யாணி அம்மாவின் தாய்வழிபாட்டியின் தாத்தா ஒரு ஜமீன்தாராக இருந்தார். அவர் தன் இளமைப் பருவத்தில், ஒருநாள் குதிரையில் வரும்போது வரப்பில் நடந்து செல்லும் அழகிய மங்கையைக் கண்டார். அவளோ வீட்டுவேலை செய்து திரும்பும் மிக ஏழ்மையானவள். அவளை மணம்‌செய்ய விழைந்து கல்யாணம் செய்துகொண்டார். மிகவும் அன்பாக வாழ்ந்தார்கள். இந்த அன்பைக் கண்டு ‌ஜமீன்தாரின் கூடப் பிறந்த அக்கா, தங்கைகளும் அம்மாவும் பயப்பட்டார்கள்.

Representational Image
Representational Image

அந்தஸ்தில்லாத இந்தக் கல்யாணம் ஏற்கெனவே வெறுப்பை விதைத்திருந்தது. இதனிடையே ஜமீன்தார், தன் மனைவிக்கு வீடு ஒன்றைப் பரிசளித்தார். இது மேலும் உறவினர்களின் கோபத்தை அதிகரித்தது. சொத்தெல்லாம்‌ அவளுக்குப்‌ போய்விடுமோ என்று‌ பயந்த ஜமீன் குடும்பம், அந்த‌க்காலத்தில் பிரசித்தியாயிருந்த ஒடியன் பிசாசை ஏவி ஜமீன்தாரைக் கொன்றார்கள்.

(இந்தப் பிசாசை ஏவும் கூட்டத்தினர் சக்திவாய்ந்தவர்கள் என்றும், மிகவும் வல்லமை பொருந்திய இந்த‌ ஏவல் சக்தியை வழிபாடுகளால் பெற்றவர்கள் என்றும் விசாரித்து அறிந்தேன். வளர்ப்புப் பிராணியாகவோ அல்லது மாடாகவோ பிசாசை ஏவுவார்கள். ஒடியனைப் பார்த்தால் பின் உயிர்த்திருப்பது நடவாத காரியம். இதை மேலும் அறிய மோகன்லாலின் 'ஒடியன்' திரைப்படத்தை பார்க்கத் தீர்மானித்திருக்கிறேன்)

ஓர் இரவு தன் பசுமாட்டின் குரல்கேட்டு கண்விழித்த ஜமீன்தார், மாடு கட்டவிழ்த்து ஓடுவதைப் பார்த்து அதைப்பிடிக்க பின்னே ஓடினார். நெடும்தூரம். அவருக்கு மூச்சிரைத்தது. திடீரென ஓட்டத்தை நிறுத்தி அவரைத் திரும்பிப் பார்த்தது மாடு. அது‌ ஒடியன் என்பதை உணர்ந்து பயத்தில் இதயம் வெடித்து அங்கேயே இறந்துவிட்டார். அந்தக் காலத்தில் தன் ‌எதிரிகளைக் கொல்ல பாலக்காட்டில் இந்தமுறை பரவலாக இருந்தது என்றார் கல்யாணி அம்மா. அதன்பின்‌ என்ன ஆயிற்று என்றேன் வருத்தமும் ஆவலும் மேலிட. அதன்பின் அவர் மனைவி துரத்தியடிக்கப்பட்டார். அதோடு விடவில்லை.

Representational Image
Representational Image

அந்தப் பெண்ணின் குடும்பப் பெண்கள் கல்யாண வாழ்வில் சுகப்பட மாட்டார்கள் என்றும் சாபம் விட்டிருக்கிறார்கள். அதோடு அந்த அழகான மனைவியின் அழகு பாழ்பட குட்டிச்சாத்தானை ஏவினார்கள். மாதம் ஒருமுறை வரும் குட்டிச்சாத்தான் அவரின் உச்சந்தலை முடியை மொத்தமாக மொட்டையடித்துவிடும் என்றார் கல்யாணி அம்மா. இப்படிக்கூட நடந்திருக்குமா என்று ஆச்சரியத்தோடு நான் பார்த்தேன்.

``என் அம்மாதான் பாட்டியின் தனி வாழ்வில் துணையிருந்தவர். அம்மா, பாட்டி, பெரியம்மா என அனைவருமே இந்த விஷயங்களையெல்லாம் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். அம்மா தன் பாட்டிக்குத் துணையிருந்தபோது குட்டிச்சாத்தான் வரும் தினங்களில் அவர் மிகவும் சோர்வாய் இருப்பாராம். உடல் பிசையும் வலியிருக்குமாம். உடனே என் அம்மாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களாம். அடுத்தநாள் தன் பாட்டியிடம் வரும்போது முடியெல்லாம் வெட்டப்பட்டிருக்குமாம்’’ என்று கல்யாணி அம்மா சொல்லிக் கொண்டிருக்கையில், நான் இடைமறித்துக் கேட்டேன்.. `இதற்கெல்லாம் ஏதும் பரிகாரமில்லையா.. அல்லது இது ஏதாவது மானசீகப் பிரச்னையாகக்கூட இருந்திருக்கலாம் அல்லவா. அந்தவகையில் அவர்கள் மருத்துவரை அணுகினார்களா?' என்று கேட்டேன்.

Representational Image
Representational Image

``எல்லாவற்றிற்கும் பணம் தேவை. என் குடும்ப வறுமையைப்பற்றி உங்களிடம் சொன்னதில்லையா?" என்றார் கல்யாணி அம்மா.

`ஆம், என்னிடம் சொல்லித்தானிருக்கிறார்கள் மிக ஏழ்மையான அவர்கள் குடும்பக் கதை பற்றி. பெண்களெல்லாம் அழகானவர்களாய் இருந்ததால் வந்து‌கேட்கும் மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் செயினும் ஒரு‌ கம்மலும் போட்டு வீட்டிலேயே உறவுகளை மட்டும் கூப்பிட்டு கல்யாணம் செய்து கொடுத்ததை சொல்லியிருக்கிறார்கள்'.

``அந்தச் சாபத்தால் உங்கள் குடும்பப் பெண்கள் யாருக்கும் நல்ல‌ வாழ்க்கை அமையவில்லையா?’’ என்று கேட்டேன். அதற்கு கல்யாணி அம்மா, ``நான் என் அம்மாவுடன் பிறந்த பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன் அல்லவா. நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள், அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா இல்லையா என்று’’ என்றார்.

அவர் சொன்னதும் உண்மையாகவே இருந்தது. அவர் குடும்பத்துப் பெண்களெல்லாம் லட்சணமாக இருந்தார்கள். பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களாய் இருந்தார்கள். இனிய குணம் படைத்தவர்களாயிருந்தார்கள். குடும்பத்தை நல்வழியில் கொண்டு செல்பவர்களாய்... ஆனால், எல்லாம் கல்யாணம் வரைதான். கல்யாண வாழ்வில் யாரும் சோபிக்கவில்லை. இதைப் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் கல்யாணி.

Representational Image
Representational Image

``நம் பாரத தேசத்தில் 80% பெண்கள் வாழ்வும் இபபடித்தானிருக்கிறது. அல்லது இருந்தது."

``அப்படியென்றால் பாரத தேசமே சாபம் கொண்டுள்ளதா?" என்று கல்யாணி அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அவர் நகைத்தார்.

உண்மையில் இதன் நியாயம் எனக்குப் புரியத்தான் இல்லை. இப்படியெல்லாம் தண்டிக்க ஜமீன்தார் மனைவி என்ன தவறு செய்தார்? ஜமீன் பெண் கேட்டு வந்தால் பயந்து கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்வதுதானே அன்றைய முறையாயிருந்தது. தன் கணவனோடு அன்போடு வாழ்ந்தது தவறா... என்ன அநியாயம்.

பெண்கள் வாழ்வு என்பது துன்பமானதாகவே இருக்கிறது. இத்தனைக்கும் இவர்கள் குடும்பத்துப் பெண்கள் பலர் தெய்வ பக்தியில் சிறந்தும், சிலர் தெய்வமே இல்லையென்ற பகுத்தறிவுவாதிகளாகவும், ஓரிருவர் காதல் மணம் புரிந்தும், மற்றவர்கள் வீட்டில் பார்த்து திருமணம் முடித்தவர்களாக இருந்தனர். யாரும் மணவாழ்வில் மிளிரவில்லையென்று அடிக்கடி புலம்புவார் கல்யாணி அம்மா.

Representational Image
Representational Image

இப்படி பேசிக்கொண்டே போக வேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்தோம். கல்யாணி அம்மா குலதெய்வ‌ வழிபாட்டைச் செய்வதற்கு முன் கோயிலுக்கு கொஞ்சம் அருகிலிருக்கும் தாய் மாமன் வீட்டுக்குச் சென்றார்கள். மாமாவுக்கு‌ 90 வயதாகியிருந்தது. கண்சரியாகத் தெரியவில்லை, காது சரியாகக் கேட்கவில்லை. தன் நினைவில் அழியாமல் பதிந்திருக்கும் தன் பால்யகால நினைவுகளையே பேசிக் கொண்டிருந்தார்.

தன் பாட்டியைத் துன்பப்படுத்திய குட்டிச்சாத்தான் கதைகளை அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி எங்களிடம், ``அவர் இப்படித்தான் கொஞ்ச மாதங்களாக புலம்பிக் கொண்டிருக்கிறார். இத்தனை வயதானபிறகு இரவில் அறைக்கதவை நன்கு தாழிட்டுத் தூங்குகிறார். கதவை திறந்து வையுங்கள் என்றால் கேட்பதில்லை. குட்டிச்சாத்தான் வருமென்கிறார்’’ என்று வருத்தத்துடன் சொன்னார்.

`ஒரு குடும்பத்தையே குட்டிசாத்தான் பீதி ஆட்டிப் படைக்கிறதே?' என்று நான் வாயடைத்துப் போனேன்.

-ராதா சௌந்திரராஜன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு