Published:Updated:

`வாடகை வீடு..!’ - லாக்டெளன் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

மாலை நான்கு மணி ஆனது மாலா ஞாபகப்படுத்தினாள், வீடு பார்க்க கிளம்பினான் மாஸ்க் கையுறைகளை அணிந்துகொண்டு ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை எட்டு மணிக்குதான் எழுந்தான் பாலன்.

``மாலா, கடைக்கு எதுவும் வாங்கபோகணுமா சொல்லு" என்று குரல் கொடுத்துக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.

ஆமாங்க,``பால் வாங்கிட்டு, வரும்போது காய்கறி வாங்கிட்டு வந்திடுங்க" என்றாள் மாலா.

செம்பு பானையில் உள்ள தண்ணீரை எடுத்து ,"மடக்! மடக்!" 2 கிளாஸ் குடித்துக்கொண்டு, என்ன காய்கறி வேண்டும் என்று கேட்டவாறு துணிபையைக் கையில் எடுத்தான்.

"நேத்து வாங்குன வெண்டைக்காய் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதனால, வெண்டைக்காய் வாங்கிக்கோங்க. பருப்பு குழம்பு வெச்சு வெண்டைக்காய் பொரியல் பண்ணிடலாம்" சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றாள் மாலா.

Representational Image
Representational Image

கடைக்கு சென்றுவந்த பாலன் பாலையும் காய்கறியும் மனைவியிடம் கொடுத்துவிட்டு குளிக்கச்சென்றான். மாலா பாலில் மஞ்சள் மிளகு போட்டு காய்த்து கணவனுக்கும் குழந்தைகளுக்கும் கொண்டுவந்து கொடுத்தாள்.

பாலன் தலையைத் துடைத்துக்கொண்டு துண்டை காயப்போட்டுவிட்டு பாலை வாங்கியபடி டிவியை ஆன் செய்தான். டிவி சேனலை ஒன்றொன்றாக மாற்றிக்கொண்டு வரும்போது 'காதல் கோட்டை' படம் ஓடுவதைக் கண்டான்.

"ஆஹா!, நம்ம தல படம் போட்டுருக்காங்க" என அப்படியே உட்கார்ந்து விட்டான். சமையலை முடித்துக்கொண்ட மாலா "இன்னைக்கு லீவுதானே, வீடு பாத்துட்டு வாங்க வீடு காலி பண்ணிவிடுவோம். வீட்டு ஓனர் எதாவது சொல்வார்னு பசங்க வெளியிலபோய் விளையாடறதுக்கு பயப்படுறாங்க." என்றாள் மாலா.

சரி வெயில் கொஞ்சம் குறையட்டும் போய் பார்த்துட்டு வரேன் என்றவாறு படத்தைப் பார்த்துக்கொண்டே. காலை உணவு உண்டனர். மாலா மீண்டும் சமையலறைக்குள் போனாள் .

'காதல் கோட்டை' படம் முடிந்தது. டிவியை ஆப் செய்துவிட்டு வார பத்திரிக்கை ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தான் .

Representational Image
Representational Image

மாலா சமையலறைக்குள் இருந்து, ``என்னங்க மணி 1 ஆயிடுச்சு மோட்டர் போட்டு விட்டுவாங்க. இப்போ நம்ம டைம்" பாலன் புக்கை கையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சுவிட்சசை நோக்கிச்சென்றான். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வெளியே வந்து, "என்ன பாலன், எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா!’’எனக் கேட்டார்.

3 அடி இடைவெளிவிட்டுப் பேசிக்கொண்டனர் இருவரும் .பத்து நிமிடம் உரையாடிவிட்டு பாலன், மோட்டர் ஆஃப் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். அதற்குள் மாலா, மதிய உணவைத் தயார் செய்துவிட்டாள். குடும்பத்தோடு உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். மாலை 4 மணி ஆனது. மாலா மீண்டும் ஞாபகப்படுத்தினாள். மாஸ்க் கையுறைகளை அணிந்துகொண்டு வீடு பார்க்கக் கிளம்பினான்.

ஹெல்மெட்டை எடுத்துத் தலையில் மாட்டிக்கொண்டான். புலம்பிக்கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான். ``மாதமாதம் கரெக்டா வாடகை கொடுத்துடுவோம். ஆனா, அங்க தொடாத! இங்க தொடாத! என்று வீட்டு ஓனர் பசங்களை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கார். இந்த பட்டணத்துல பிள்ளைங்க தெருவில்கூட விளையாட முடியல. பேசாம காலி பண்ணிட்டு ஊருக்கே போயிடலாம்னு தோணுது. ஊர்ல வேலையிருந்தா, நாம ஏன் இங்க வரப் போறோம். சொந்த வீட்டை விட்டுவிட்ட, எப்படியாவது ஒரு நல்ல வீடு பார்த்து குடி போகணும்"

மனதுக்குள் நினைத்துக்கொண்டே தெருத்தெருவாக சுற்றினான் பாலன்.

"2 பெட் ரூம் வீடு வாடகைக்கு" என்ற போர்டை பார்த்தான். பைக்கை நிறுத்தி போர்டில் உள்ள நம்பரை டயல் செய்து விசாரித்தான்.

"வீடு வாடகைக்குனு போட்டு இருக்கீங்க எவ்வளவு சார் வாடகை" எனக் கேட்டான்.

எதிர்முனையில் வீட்டு உரிமையாளர்,

"நீங்க பேமிலியா! பேச்சிலரா!" எனக் கேட்க அதற்கு பாலன், "பேமிலிதான்!" என்று கூறினான்.

Representational Image
Representational Image

ரெண்டு பெட்ரூம். வடக்கு பார்த்த வாசல், முதல் மாடிக்கு லிப்ட் இருக்கு. கார் பார்க்கிங் இருக்கு. 20,000 ரூபாய் வாடகை மெயின்டனன்ஸ் மாசம் 1000 ரூபாய் ஒரு யூனிட் கரன்ட் 7 ரூபாய் தண்ணீருக்கு 300 ரூபாய் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ``சார் நாங்க நாலு பேர்தான், 15,000 வாடகைக்கு வீடு எதிர்பார்க்கிறேன். கொஞ்சம் குறைக்க முடியுமா" ,

எதிர்முனையில் "முடியாது" என்று போனைக் கட் செய்துவிட்டார்.

``நம்ம வாங்குற சம்பளத்துக்கு 20,000 வாடகை கொடுக்கமுடியுமா? ஸ்கூல் பீஸ், வாடகை, சாப்பாடு செலவு என மேற்கொண்டு கடன் வாங்கித்தான், வாழவேண்டி இருக்கு. வாங்குற சம்பளத்தைவிட அதிகமாகத்தான் செலவாகுது. பட்டணத்தில் வாழுறோம்கிற பெருமைதான் மிச்சம். ஒன்னும் பண்ண முடியல. இந்த 3 மாத அக்கவுண்ட்ல சம்பளமே வரலை. எப்படித்தான் வாழப்போறோம்னு தெரியல" என்று புலம்பிக்கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான் பாலன்.

மீண்டும் வீடு பார்க்க தெருத்தெருவாக சுற்றினான். நான்கு தெரு சுத்தியபின் ஒரு வீட்டின் கேட்டில் வாடகை பலகையை பார்த்து அங்கேயே பைக்கை நிறுத்தி கால் செய்து விசாரித்தான். "

" கீழ்தளம், தெற்கு பார்த்த வாசல், 19,000 ரூபாய் வாடகை, மாதம் 1000 ரூபாய் மெயின்டன்ஸ் , கரண்ட் யூனிட் எட்டு ரூபாய் , தண்ணீருக்கு 300 ரூபாய், வாடகை ஏதும் குறைக்க மாட்டோம் ஓகே நா சொல்லுங்க 6 மாத வாடகை அட்வான்ஸ் தரணும் வீடு காலி பண்ணும்போது பெயிண்ட் அடிச்சு கொடுக்கணும்..' என சொல்லிக்கொண்டே சென்றார்.

"சரி சார். நான் வீட்டில் கலந்து பேசிட்டு சொல்லுறேன்" என்று போனை துண்டித்தான் பாலன்.

சூரியன் மறைய ஆரம்பித்தது. நம்மளுக்கு இந்த மெட்ராஸ் ஊர்ல சொந்தவீடு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். இப்படி நாயா பேயா அலைய வேண்டியது இருக்காது. கஞ்சியோ, கூழோ நிம்மதியா குடிச்சிகிட்டு இருக்கலாம்."

Representational Image
Representational Image

மனதில் கவலையோடு பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டுக்குவந்தான். தலைக்கவசத்தை கழட்டி வைத்துவிட்டு, மாஸ்கை கழட்டி துவைக்கப் போட்டான். கை, கால்களை நன்றாக சோப்புப்போட்டு கழுவிவிட்டு நாற்காலியில் அமர்ந்தான்.

"என்னங்க, வீடு பார்க்க போனீங்களே! வீடு கிடைச்சிருச்சா, வீட்டுக்காரர் போன் செய்தார் வீடு எப்போது காலி செய்றீங்கனு கேட்டார். நான் 3 மாசம் அவகாசம் கேட்டிருக்கேன்" என்று சொல்லிக்கொண்டே மாலா காபியை கணவனுக்கு கொடுத்தாள்.

காபியை வாங்கி குடித்துக்கொண்டே பார்த்தேன். "வாடகை அதிகமாக சொல்லுறாங்க என்று பேசிக்கொண்டே குழந்தைகளோடு சேர்ந்து கார்ட்டூன் டிவியை பார்த்தான்.

நாட்களும் ஓடிவிட்டன. பாலன் வேலைக்கு கிளம்பினான். இன்னைக்கு ஆபீசுக்கு சீக்கிரமா போகணும். சீக்கிரமா டிபன் ரெடி பண்ணு" என்று சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக கிளம்பினான்.

மாலா குறுக்கிட்டு, " நாம வீட்டை காலி பண்ண குடுத்த தவனை இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு சாயங்காலம் சீக்கிரமா வந்துடுங்க. இந்த ஒரு வாரத்துக்குள்ள எப்படியாவது வீடு பார்த்திடணும்" சொல்லிக்கொண்டே மாலா டிபனை கொடுத்தாள்.

பாலன் தலையை சொரிந்துகொண்டே பெரிய தலைவலியா இருக்கு. வீடு பார்க்கிறதுக்காக வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினான். மதிய உணவிற்கு பின் ஒரு வேலையும் ஓடவில்லை. ஆபிஸில், மனைவி சொன்னதையே நினைத்துக்கொண்டு, இன்னைக்கு எந்த ஏரியாவில வீடு பார்க்க போகலாம் என்று எண்ணியபடியே கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டான். சாயங்காலம் மணி 5 ஆகிவிட்டது.

ஆபீஸிலிருந்து கிளம்பிவிட்டான். மறுபடியும் தெருத்தெருவாக சுற்றினான். அதே வீடு, அதே நம்பரில் வீட்டு வாடகை பலகை கண்டான்.

Representational Image
Representational Image

``மூன்று மாத காலமாக யாரும் வரவில்லையா?’’

என முணுமுணுத்துக்கொண்டு, ``அப்பவே எனக்கு வாடகைக்கு விட்டிருந்தா மாதம் 15,000 ரூபாய் வீதம் மூன்று மாத வாடகையா 45,000 ரூபாய் கிடைச்சிருக்கும். 19,000 ரூபாய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வீட்டை 15,000 ரூபாய் வாடகைக்கு விட்டால் நஷ்டம் என நினைத்து, 3 மாசம் 45,000 ரூபாய் நஷ்டமாக்கிக்கிட்டார்’’ என்று முணுமுணுத்துக் கொண்டு வேறு வீடு தேட ஆரம்பித்தான்.

ஆனால் எந்த வீட்டிலும் போர்டு தென்படவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் சரி வீட்டுக்கு போய்கூட ஒரு மாத காலம் தவனை கேட்கவேண்டியதுதான் என மனதில் நினைத்துக்கொண்டு கிளம்பி வீட்டுக்கு வந்தான்.

மாலா டிவியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தாள் . பாலன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு டிவிக்கு முன் வந்தமர்ந்தான். "மாலா" என்று சத்தம்கொடுத்தான். மாலா திரும்பிப் பார்த்தாள்.

``மாலா வீடு ஒன்னும் கிடைக்கல. அதனால வீட்டு ஓனருக்கு போன்செய்து இன்னும் ஒரு மாசம் டைம் கேளு" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிவியில், ' நாளை முதல் வரும் மூன்று மாதத்திற்கு 144 தடை, அத்தியாவசிய பொருள் வாங்குவதைத் தவிர வேறு எதற்காகவும், யாரும், எங்கும் வெளியில் செல்லக்கூடாது' என்று ப்ரேக்கிங் நியூஸ் அதீத ஒலியெழுப்பி திரையில் வந்த வண்ணமாக இருந்தது. பாலாவும் மாலாவும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டனர்.

-தட்டார்மடம் சு.பட்டுராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு