Published:Updated:

கடல் தாயின் பசி! - சிறுகதை #MyVikatan

கோதைக்குக் கண்கலங்கியது, வெற்றியும் இப்படித்தான் ரசித்து சாப்பிடுவார் என்று நினைத்தாள்...

Representational Image
Representational Image

``தர்ஷினி சீக்கிரம் எழுந்து படி, பரீட்சை இருக்கு; இன்னும் தூங்கிட்டு ...’’ என்று கோதையின் குரல் அதிகாரமாக ஒலித்தது. தர்ஷினி, தன் அம்மாவின் குரலில் கண் விழித்தாள், `இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம்' என்று சொன்ன மனதின் ஓசைக்கு செவிசாய்க்காமல், பல் துலக்கிவிட்டு வந்து படிக்க அமர்ந்தாள் தர்ஷினி.

Representational Image
Representational Image

கோதை அவளுக்கு டீ போட்டுக் கொடுத்துவிட்டு சமைக்க ஆரம்பித்தாள். அந்தச் சத்தத்தில் எழுந்த ரஹீமாவும், யாழினியும் கோதைக்கு உதவினார்கள். தர்ஷினி பத்தாம் வகுப்பும், யாழினியும், ரஹிமாவும் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, அவர்களை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, கடைக்குச் சென்றாள் கோதை. ``வெற்றி’’ என்ற பெயரில் எம்ராய்டரிங் ஷாப் வைத்திருந்தாள். முதலில் சின்னக் கடையாக ஆரம்பித்து, இப்போது அவளிடம் பத்துப் பேர் வேலை பார்க்கிறார்கள். அவளுடைய அன்பில் நிறைய மனிதர்களை சம்பாதித்து வைத்திருந்தாள். அவளுடைய மூன்று பெண்களும் அதே மாதிரிதான். ஸ்கூல் முடிந்ததும் கடைக்கு வந்து விடுவார்கள். அவர்களுக்கும் நன்றாக எம்பிராய்டரி போடத் தெரியும்.

கடையைத் திறந்த கோதை சாமி படத்தின் மீது இருந்த பழைய பூவை எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு, எல்லாம் துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அதற்குள் பெரியம்மா வந்திருந்தார். `எம்மா இதெல்லாம் நான் பார்க்கமாட்டேனா? நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க' என்றார்.

``பரவாயில்லமா நான் பார்த்துகிறேன்'' என்றாள் கோதை..

``போமா வேலை எல்லாம் நீயே செஞ்சிடுற, சம்பளம் மட்டும் நான் வாங்குறதா’’ என்றார் பொய்க் கோபத்தோடு.

கோதை சிரித்துக்கொண்டே, `விடுங்கம்மா, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?' என்றாள்.

வேலைக்கு ஒவ்வொரு ஆளாக வர ஆரம்பிக்கவும், நிற்க நேரமில்லாமல் வேலை இருந்தது. மதிய வேளையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவார்கள். அன்று அனைவரும் கோதையின் சமையலை ருசி பார்த்துக் கொண்டிருந்தார்கள். `அருமையான கை ருசிம்மா, உனக்கு' என்று ரசித்து சாப்பிட்டார்கள்.

கோதைக்குக் கண்கலங்கியது, வெற்றியும் இப்படித்தான் ரசித்து சாப்பிடுவார் என்று நினைத்தாள். `ஏன் தாய் கண்கலங்குற' என்றார் பெரியம்மா.

``ஒண்ணும் இல்லைம்மா’’ என்றாள் கோதை.

Representational Image
Representational Image

``உன் மனது எனக்குத் தெரியாதா, எங்க எல்லோர் குடும்பத்தின் கஷ்டத்தையும், கேட்டு தெரிந்துகொண்டு தீர்த்து வைக்கிற.. உன் கஷ்டத்த இறக்கி வைக்கும் சுமைகல்லா என்னை நெனச்சுக்கோ, உன்னைப் பார்த்தா எனக்கு மகளாக நினைக்கத்தான் தோணுது ‘’ என்று சொல்லவும்.... அவரைக் கட்டிக்கொண்டு அழுதாள் கோதை. பின் மனதை தேற்றிக்கொண்டு, அவளுடைய வாழ்க்கையின் அழகான நாட்களை, அசை போட்டாள்..

``என்னங்க அரிசி தீர போவது இன்னொரு கால் படிதான் இருக்குது... நமக்கு இல்லாட்டியும் பரவாயில்லை, குழந்தைகள் பசியால் வாடி போய்ட கூடாதுங்க... உங்க முதலாளி கிட்ட சொல்லி ஏதாவது அட்வான்ஸ் வாங்கிட்டு வரீங்களா’’ என்றாள் கோதை.

``கேட்டுப் பார்க்கிறேன் கோதை, இந்தா 100 ரூபாய் இருக்கு, ஏதாவது வாங்கி குழந்தைகளும் நீயும் சாப்பிடுங்க.’’ என்றான் வெற்றி.

"உங்களுக்கு, "

``இல்லைமா எனக்கு பசி இல்லை நீங்க சாப்பிடுங்க’’ என்றான் வெற்றி..

``இருங்க’’ என்று சொன்ன கோதை, இருக்கும் கால்படி அரிசியை போட்டு கஞ்சி வைத்து எடுத்துக்கொண்டு ஊறுகாயையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.

வெற்றி முதலில் ஒரு டம்ளரில் ஊற்றி ஆற வைத்து அவளுக்கு கொடுத்தான்.

`` நீங்க சாப்பிடுங்க நான் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, பிறகு சாப்பிடுகிறேன் ’’ என்றாள் கோதை.

``இல்லை நீ இப்ப என் கண் முன்னால குடி’’ என்றான் பிடிவாதமாக வெற்றி.

வாங்கிக் குடித்தாள் கோதை, அவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிவிட்டு, ``என்னாலதான நீ இவ்வளவு கஷ்டப்படுற’’ என்றான்.

``இல்லைங்க நான் சந்தோஷமாகத்தான் இருக்கேன்’’ என்றாள் கோதை.

இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். இருவர் காதலுக்கும் பெற்றவர்கள் தடையாக இருக்க, இருவரும் ஐந்து வருடம் போராடி, பெற்றவர்கள் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டனர்.

Representational Image
Representational Image

இவ்வளவு நாள்களாக வெற்றிக்கு சரியான வேலை இல்லாததால் கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருந்தான். இப்பொழுது நண்பர்களின் உதவியோடு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. பெற்றவர்களும் கல்யாணம் முடிந்ததோடு கடமை முடிந்தது என்று சென்றுவிட்டார்கள்.

இவர்களிருவரும் கஷ்டத்திலும் வளமான வாழ்வை எதிர்நோக்கி காத்திருந்தார்கள். இவர்களுக்கு தர்ஷினி (4) யாழினி (2) என்று இரு குழந்தைகள். இத்தகைய கஷ்டத்திலும் முகம் சுழிக்காத காதல் மனைவி. எத்தனை கஷ்டம் இருந்தாலும், சந்தோசத்தையும் காதலையும் மட்டுமே, மனைவிக்குக் கொடுக்கும் அன்பான காதல் கணவன்.

இவர்கள் காதலை நான் சோதித்துப் பார்ப்பேன் என்று வறுமை அவர்கள் வாழ்க்கையோடு போராட்டமாக்கியது. இவ்வளவு நாள்களாக ஜெயித்த வறுமையை, இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்கடித்துக்கொண்டிருந்தார்கள் வெற்றியும் கோதையும்.

``சரி கோதை நான் ஆபீஸ் கிளம்புறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றான் வெற்றி. கோதை, குழந்தைகளை எழுப்பி குளிப்பாட்டி விட்டு, கஞ்சியைக் கொடுத்தாள். குடித்துவிட்டு விளையாடச் சென்று விட்டார்கள். கோதை துணிகளைத் துவைத்து விட்டு, கடைக்குச் சென்று அரிசியும் கொஞ்சம் காயும் வாங்கி வந்து, மதியத்திற்கு சமையல் செய்தாள்.

இவர் காலையிலேயே சரியாக கஞ்சியை கூட குடிக்காமல் போய்விட்டார். இப்ப எப்படி அவருக்கு சாப்பாடு கொடுப்பது என்று யோசித்துக்கொண்டே, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டாள். பின் ஒரு ரூபாய் காயினை எடுத்துக்கொண்டு போய், வெற்றிக்கு போன் பண்ணினாள்.

``என்னால வர முடியாதுமா, நீ சாப்டியா’’ என்றான் வெற்றி.

``இல்லைங்க, நீங்க வாங்க வந்ததும் சாப்பிட்டு விட்டுப் போய்டலாம்ன்னு இருந்தேன்’’ என்று அவனை வற்புறுத்தி அழைத்தாள்.

``பார்க்கிறேன்’’ என்று சொல்லி போனை வைத்து விட்டு, திரும்பியவன் அவன் முதலாளி வேலாயுதம் அங்கே நின்றிருந்தார்.

``என்னப்பா சாப்பாடு எடுத்துட்டு வரலையா’’ என்றார்.

Representational Image
Representational Image

வெற்றி ``இல்லைங்க சார்’’ என்றான்.

``நீ தினமும் சாப்பாடு கொண்டு வருவதானே, நானே பார்த்திருக்கிறேன்’’ என்றார் வேலாயுதம். வெற்றிக்கு தர்மசங்கடத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை... ( அரிசி இல்லை என்றா சொல்ல முடியும்)

அவனின் முகத்தையும் தர்மசங்கடமான நிலைமையையும் பார்த்து. ``நீ என் ரூமுக்கு வா’’ என்று சொல்லிவிட்டு சென்றார். வெற்றி அவர் பின்னே சென்றான்.

``ஏம்பா பணம் ஏதாவது வேணும்னா கேட்டிருக்கலாம்ல’’ என்றார்.

``நான் வேலைக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி கேட்குறதுங்க’’ என்றான் தயக்கமாக.

`` தம்பி நீ என்னிடம் வேலை செய்யுற. என்கிட்ட தான் கேட்கணும். பணத்திற்காகத்தான் வேலை செய்யுற, ஆனா பணத்தை மட்டுமே பெரிதாகக் கருதி, முதலாளியும் இருக்க முடியாது, தொழிலாளியும் இருக்க முடியாது. உன்கிட்ட வேலை வாங்கும் நான், உன் குடும்பத்தின் கஷ்டத்தையும் புரிஞ்சிக்கணும்ல. இந்தா இதில் 5,000 ரூபாய் இருக்கு... இப்ப லீவு எடுத்துக்கோ, நாளைக்கு வா, போய் வீட்டிற்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து, குழந்தை குட்டிகளோடு சந்தோசமாக இரு. இந்தப் பணம் எனக்கு திருப்பி தர வேண்டாம்’’ என்றார்.

``இல்லைங்க சார் என் சம்பளத்தில், கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சுக்கோங்க. இல்லைன்னா வேண்டாம்’’ என்றான் வெற்றி. அந்த வறுமையிலும் தன்மானத்தோடு இருக்கும், அவனின் மேல் அவருக்கு மரியாதை வந்தது.

``சரி’’ என்றவர், இவனின் வாழ்க்கை தரத்தை கொஞ்சமாவது, உயர்த்திவிட வேண்டும், என்று நினைத்தார் வேலாயுதம். வெற்றி மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்தான். கோதை வெற்றிக்காக சாப்பிடாமல், காத்துக் கொண்டிருந்தாள். வெற்றி வந்ததும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.

Representational Image
Representational Image

ஆபீஸில் நடந்ததை கோதையிடம் சொன்னான். அவளும் சந்தோஷப்பட்டாள் வீட்டிற்கு தேவையானதை, எழுதிக் கொடுக்கச் சொல்லி போய் வாங்கி வந்தான் வெற்றி. வாங்கி வந்ததையெல்லாம் கோதையோடு சேர்ந்து எல்லாம் எடுத்து வைத்தான்.

``பக்கத்து வீட்டிலிருக்கும் பூரணி எம்ப்ராய்டிங் கத்துக்கப் போற நானும் போகட்டுமா’’ என்றாள் கோதை.

``குழந்தைகளை வெச்சிக்கிட்டு எப்படி கத்துக்குவமா?’’ என்றான் வெற்றி.

``பூரணிக்கு முடிந்ததும், குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, நான் கத்துக்கிறேன்’’ என்றாள். அவளின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட வெற்றியும் சரி என்றான். அடுத்த நாள் காலையில் எழுந்து, பரபரப்பாக எல்லா வேலையும் முடித்தாள், வெற்றிக்கு ஆபீஸ் கிளம்புவதற்கு, தேவையானதைச் செய்துவிட்டு மற்ற வேலைகளையும் முடித்தாள்.

பூரணி 10 மணிக்கு போகலாம் என்று சொன்னதால் சீக்கிரமாக வேலையை முடித்தாள். குழந்தைகளைக் குளிக்க வைத்து ரெடி பண்ணிவிட்டாள். தேவையானதை எல்லாம் எடுத்து வைப்பதற்குள் பூரணி வந்துவிட்டாள், இருவரும் எம்ராய்டிங் க்ளாஸுக்குக் கிளம்பினார்கள்.

நாள்கள் இப்படியே வேகமாகச் செல்ல, கோதை எம்பிராய்டரி நல்ல முறையில், கற்றுத் தேறி இருந்தாள். அதற்குள் அவளுக்கு சின்னதாக ஒரு கடை வைத்து, எல்லோருக்கும் எம்ப்ராய்டரி போட்டுக் கொடுக்க வேண்டும், என்ற ஆசையும் முளைத்துவிட்டிருந்தது. வெற்றியின் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவனின் நேர்மை, முதலாளியின் நம்பிக்கையைப் பெற்றவன் ஆக்கியது.

Representational Image
Representational Image

கோதை அன்று இரவு உணவு வேளையில் தன்னுடைய ஆசையைச் சொன்னாள். வெற்றி ``நீயேன் கோதை கஷ்டபடணும், குழந்தைகளை வெச்சிக்கிட்டு எப்படி பண்ணுவ’’ என்றான்.

``பெரியவள அடுத்த வருஷம் ஸ்கூலில் சேர்த்திடுவோம். அதுக்கெல்லாம் செலவாகும், நானும் கத்துக்கிட்டது வீணாகக் கூடாது, கடை வைத்தால் அது நம்மகடை, குழந்தையை வைத்துக்கொண்டு நான் பார்த்துக்குவேன்’’ என்றாள் கோதை. அவளின் ஆசைக்கு குறுக்கே நிற்க மனம் வராமல் சரி என்று ஒப்புக் கொண்டான் வெற்றி.

பக்கத்தில் இருக்கும் கடைகளில் சொல்லி வைத்து, அடுத்த வீதியிலேயே ஒரு கடையைப் பிடித்துவிட்டாள் கோதை. அட்வான்ஸ் பத்தாயிரம், வாடகை இரண்டாயிரம், என்றார்கள். கணவரை அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தாள்.

இரவு வெற்றியிடம் சொல்லவும், ``பரவாயில்ல அதற்குள் கடை பார்த்துட்ட, நல்ல முன்னேற்றம்தான். நாளைக்கு நேரத்திலேயே வறேன், போய் பார்க்கலாம்’’ என்றான்.

அன்றிரவு பக்கத்தில் படுத்திருந்த மனைவியிடம் வெற்றி, ``கோதை நீ உங்க வீட்ல இருந்ததை விட இங்க சந்தோஷமா இருக்கியா’’ என்று கேட்டான்.

Representational Image
Representational Image

``எத்தனை முறைதான் இதே கேள்வியைக் கேட்பீங்க, சந்தோசமாதான் இருக்கேன்’’ என்றாள். அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான், அப்படியே கோதையும் உறங்கினாள். அன்று ஆபீஸ் விட்டு நேரத்திலேயே வீட்டிற்கு வந்த வெற்றியை, அழைத்துக்கொண்டு போய் கடையைக் காட்டினாள் கோதை.

அவனுக்கும் பிடித்திருந்தது, அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் என்னங்க அட்வான்ஸ் கொடுத்தாச்சு, இன்னும் மிஷின் மற்ற செலவெல்லாம் இருக்கு ரெடி பண்ண முடியுமா.

``இங்க வா’’ என்று அழைத்து, அவளை மடியில் அமர்த்திக் கொண்டான். அப்பா நானு என்று ஓடி வந்த, குழந்தைகளையும் தூக்கி வைத்துக் கொண்டான்.

கோதை இறங்க பார்க்கவும், ``எதுக்கு எந்திரிக்கற’’ என்றான்,

கோதை அவன் முகத்தையே பார்க்கவும்.

``நீ எந்தக் கவலையும் படாதே. இங்க பார் கோதை, நீ ஆசைப்பட்டு என்கிட்ட கேட்டிருக்க, எப்படியாவது அதை நிறைவேற்றிக் கொடுப்பேன்.... நீ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காதே, கடையை எப்படி நல்ல முறையில் கொண்டுவரதுன்னு யோசி’’ என்றான்.

``சரிங்க நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை, என்று சிரித்துக்கொண்டே,.... நான் போய் சமைக்கிறேன்’’ என்றாள்.

``இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்துட்டு போமா’’, என்றான். தர்ஷினி கீழே இறங்கவும், யாழினியும் கீழே இறங்கி விளையாடப் போனார்கள்.

Representational Image
Representational Image

வெற்றி, கோதையை அணைக்க முயற்சிக்க, கோதை கூச்சத்தில் தவித்துப் போனாள், ``விடுங்க குழந்தைகள் வந்துருவாங்க’’ என்றாள்.

``வந்தா என்ன’’ என்றான்.

``உங்களுக்கு ஒண்ணுமில்ல, எனக்கும் அப்படியே இருக்குமா என்ன’’ என்று அவனிடமிருந்து வம்படியாகப் பிரிந்து சென்றாள் கோதை.

வெற்றியும் சிரித்துக் கொண்டே, அவளின் பின்னே சமையல் கட்டுக்குச் சென்று அவளுக்கு உதவினான்.

சமையலில் உதவி செய்கிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு இன்னும் கொட்டம் அடித்தான். வாழ்க்கையில் இன்பங்களை திகட்டத் திகட்ட அனுபவித்தார்கள் கோதையும் வெற்றியும். கடைக்குத் தேவையானது எல்லாம், வெற்றி கூடவே இருந்து, கோதைக்குச் செய்து கொடுத்தான். கடைத்திறப்பு விழாவிற்கு பூரணியை மட்டும், அழைத்திருந்தாள் கோதை.

Representational Image
Representational Image

வெளியில் வந்து கடையின் அழகை நின்று பார்த்தவளுக்கு வெற்றி எம்பிராய்டரி, போர்டை பார்த்ததும் புன்னகைத்துக் கொண்டாள். இந்தப் பெயர் வைப்பதற்கு, அவனிடம் போராடியதை நினைத்துப்பார்த்தாள்.

``ஏம்மா எம்ப்ராய்டரி கடைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், என் பெயர் வைக்கணும்னு ஏன் பிடிவாதம் பிடிக்கிற’’ என்றான்.

``அதெல்லாம் தெரியாது உங்க பெயரத்தான் வைப்பேன்’’ என்றாள் கோதை. பொம்பளை புள்ளைங்க உன் கடைக்கு வர மாட்டாங்க என்றான் சிரித்துக்கொண்டே.

`` உன் பெயர் வை, `கோதை’ எவ்வளோ அழகா இருக்கு’’ என்று ரசித்து சொல்லி பார்த்தான் வெற்றி.

``போதுமே எப்ப கேப் கிடைக்கும்னு பார்ப்பீங்களா’’ என்றாள் வெட்கத்துடன்.

சிரித்துக்கொண்டே ``சரி பொண்ணுங்க பேர் வைக்கலாம் ’’ என்றான்.

``வேண்டாம்’’ என்று பிடிவாதம் பிடித்து ஜெயித்தாள் கோதை. அன்றைய நினைவில் இருந்து மீண்டு சிரித்துக்கொண்டே கடைக்குச் சென்றாள்.

அடுத்த நாள் பிரம்மமுகூர்த்தத்தில் கடைக்கு பூஜை போட்டு, தொடங்கி வைத்தான் வெற்றி. அன்று ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, கடையில் பொழுதைக் கழித்தார்கள். இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தார்கள். கோதை வேகவேகமாக உப்புமா கிளறி, குழந்தைகளுக்கு ஊட்டினாள். வெற்றி எனக்கு என்று வரவும், அவனுக்கும் ஊட்டி விட்டாள்...

அன்று இரவின் தனிமை அவர்களுக்கு ருசித்தது... காலையில் கோதை சமையல் செய்து கொண்டிருந்தாள். வெற்றி குழந்தைகளை குளிப்பாட்டி விட்டான். கோதை அவளுக்கு தேவையானதை, குழந்தைகளுக்கு தேவையானது, எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, வெற்றிக்கு லஞ்ச் கட்டி வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் .

Representational Image
Representational Image

கோதை வருவதற்குள் குழந்தைகள் வெற்றி மூன்று பேரும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள்... கோதை வந்ததும் சாப்பிட்டுவிட்டு, கடையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வெற்றி ஆபீஸ் கிளம்பினான்.... கோதை எடுத்து வந்திருந்த விளையாட்டுப் பொருட்களை, அவர்கள் கையில் கொடுத்து விளையாட வைத்துவிட்டு... யாழினி டிரஸ்ற்கு எம்பிராய்டரி போட்டாள்.

நாட்கள் செல்லச்செல்ல ஒவ்வொருவராகக் கடைக்கு வர ஆரம்பித்தார்கள். கோதையின் கனிவான பேச்சிற்கும், பொறுமையான குணத்திற்கும் கடை வேகமாக வளர ஆரம்பித்தது. குடும்பமும் சந்தோசத்திற்குக் குறைவில்லாமல் சென்றது.

அந்த நாள் அவர்கள் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம். அன்று ஆபீஸ் வேலை நேரத்திலேயே முடிந்ததால். வீட்டிற்கு வந்தவன், கடைக்குச் சென்று கோதையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றான்.

அங்கு நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மக்களும் குடும்பம் குடும்பமாக கடற்கரையின் அழகில் லயித்திருந்தார்கள். யாழினியும் தர்ஷினியும் விளையாடும்போது. அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த, ஒரு இஸ்லாமிய சிறுமி அவள் அப்பாவிடம் சொல்லிவிட்டு இவர்களோடு வந்து விளையாடினாள்.... எல்லாம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்த அந்த வேளையில், கொஞ்சம் பெரிய பெரிய ராட்சத அலைகளாக வர ஆரம்பிக்கவும். மக்கள் அதன் ஆபத்தை உணராமல். இன்னும் சந்தோஷத்தோடும், ஆர்வமாகவும் கால்களை நனைத்து விளையாடினார்கள்... ஆனால் வானத்திற்கும் பூமிக்குமாக வந்த, பெரிய ஆழிப்பேரலையில்.... எல்லாரையும் பாரபட்சமில்லாமல் அழைத்துக் கொண்டது.

Representational Image
Representational Image

கோதை குழந்தைகளின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, அடித்துச் செல்லப்பட்டாள். வெற்றி பிரண்டு, தண்ணீருக்கு ஏற்ற மாதிரி, வளைந்து கொடுத்து, எழுந்து பார்க்கும்போது. கோதை குழந்தைகளுடன் அடித்துச் செல்வதைப் பார்த்து.... நீந்திச் சென்று அவர்களை இழுத்து வந்தான்....

அவர்களைக் காப்பாற்றி ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர வைத்து விட்டு மூச்சு வாங்கினான். குழந்தைகளும் கோதையும் பயத்தில் நடுங்கினார்கள். தர்ஷினி அப்பா எங்களோட விளையாண்ட பொண்ணு போறா என்று சொல்லவும்.. திரும்பிப் பார்த்தான் வெற்றி....

அந்தச் சிறுமியின் குடும்பம் தத்தளிப்பதைப் பார்த்து காப்பாற்ற வெற்றி ஓடினான். அவர்கள் குழந்தையைப் காப்பாற்றி மேலே இழுத்து வரவும்,கோதை ஓடிவந்து வாங்கிக் கொண்டாள். வெற்றி அவர்களைக் காப்பாற்ற மறுபடியும் உள்ளே செல்லவும், இன்னொரு பெரிய அலை வந்து மிச்ச சொச்சத்தையும் துடைத்துச் சென்றது..... கடற்கரை எங்கும் அழுகுரலும் பார்க்க மயானம் மாதிரியானது.... கோதை குழந்தைகளை வைத்துக்கொண்டு, கத்திக் கதறியதில் பூமாதேவிக்கும் இரக்கம் இல்லாமல் போனதுதான் மிச்சம்....

கடல் தாயின் பசி! - சிறுகதை #MyVikatan

எல்லாம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. பெற்றவர்கள் வந்து கடமைக்கு அழைக்கவும், கோதை வரவில்லை என்று சொல்லிவிட்டாள். அவர் இருக்கும்போது வராதவங்க இப்ப எதுக்கு வருகிறீர்கள் என்று விரட்டி விட்டாள்.

வெற்றியின் முதலாளி வந்து ஆறுதல் சொல்லிவிட்டு, இரண்டு குழந்தைகள் பெயரில் ஒவ்வொரு லட்சம் டெபாசிட் பண்ணிக் கொடுத்தார்.

``எப்பொழுது என்ன உதவியாக இருந்தாலும் என்னிடம் கேள்மா.. நான் உனக்கு அப்பா மாதிரி’’ என்று சொல்லி விட்டுச் சென்றார்.

கோதை அதிலிருந்து மீண்டு வருவதற்குள், போதும் போதும் என்றானது.... மூன்று குழந்தைகளுக்காக வாழ வேண்டுமல்லவா.... ஆம் கடைசியாக வெற்றி கொடுத்துச் சென்றது, அந்த இஸ்லாமிய சிறுமி ரஹீமாவை... கோதை தன்னோடு வைத்துக் கொண்டாள்...

அவர்கள் அப்பா அம்மாவும் கடலுக்கு இரையாகி போனதை, கண்முன்னால் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, பழையபடி குடும்பம் வர ஒரு மாதம் ஆகியது.... அன்று குழந்தைகளோடு கடைக்குச் சென்றாள் கோதை.

நிறையபேர் ஆறுதல் சொன்னார்கள்... "பகலில் போனபொழுது" இரவில் நகர்வதாக இல்லை... வெற்றியின் ஞாபகத்தில் தீயாய் உருகிப் போனாள் கோதை. எல்லாக் காயத்திற்கும் மருந்திடும் காலம், கோதையின் மனக்குமுறலுக்கும் மருந்திடாமல் போகுமா.

பழைய நினைவிலிருந்து மீண்டாள் கோதை... கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

``என் கணவர் கடைசியாக என் கையில் பிடித்துக் கொடுத்தது இவளைத்தான் மா.... எப்படி விடுவேன் அவளை’’ என்ற கோதை, அனைவரும் அவளைக் கட்டிக்கொண்டார்கள்.... குழந்தைகள் வரவும் பேச்சு திசை மாறி அங்கு சிரிப்பும் குதூகலமும் ஒலித்தது.

-கவிஅன்பு