Election bannerElection banner
Published:Updated:

`பட்டதாரியின் தையல் ஆசை!' - தன்னம்பிக்கை சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Kenny Luo / Unsplash )

ஒன்பதாம் வகுப்பு வர எந்தவிதக் கனவும் இல்ல...பத்தாம் வகுப்பில் பாஸ் மார்க் வாங்கினபோது முதல் முறையா கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

குளித்து முடித்து அலங்கரித்துக்கொண்டு இருந்தாள் காவ்யா. அழகு சாதனப் பொருள்களால் வழக்கத்தைவிட தன்னையே செதுக்கிக் கொண்டிருந்தாள். லைட் பிங்க் கலர் சுடிதாரில் மெருகூட்டப்பட்டு ஒரு மெழுகுச் சிலை போலவே காட்சியளித்தாள். மின்விளக்குகளை அணைத்தவள் ஒருமுறைக்கு இருமுறை வீட்டைச் சுற்றி நோட்டமிட்டாள். எல்லாவற்றையும் சரியாகச் செய்து விட்டோமா என உறுதிப்படுத்தியவள், வீட்டைப் பூட்டிவிட்டு லாவெண்டர் கலர் ஸ்கூட்டியில் பயணித்தாள்.

Representational Image
Representational Image
Jennifer Burk / Unsplash

தனியார் தொலைக்காட்சி அலுவலக பார்க்கிங் இடத்தை எட்டியவள், தன் ஸ்கூட்டி நிறுத்த தகுந்த இடத்தைப் பார்த்து நிறுத்தினாள். அலுவலகம் நோக்கி முன்னே செல்ல முற்பட்டவள், வெளியில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் நேர்காணலுக்கான இடத்தைக் கேட்டாள். பதில் சொன்னவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு உள்ளே சென்றவளுக்கு, வெளியே பயம் இல்லை என்றாலும் உள்ளுக்குள் சிறு பதற்றம் இருக்கத்தான் செய்தது. அழைப்பு மணி அழைக்க தொடுபேசியைத் தொட்டாள்.

மறுமுனையில் திவ்யா....

``ஹே எப்படி இருக்க..'' எனக் கேட்க எதிர்முனையில்

``நா நல்லா இருக்கேன்டி....''

`` சாதிச்சுட்ட.... வாழ்த்துக்கள்டி....தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி குடுக்கப் போற. கலக்கிட்டு வா..''

என அடுக்கடுக்காய்க் கூறி மகிழ்ச்சியில் திளைத்து வாழ்த்தியவளிடம்,

``போடி... முதல் முறையா பேட்டி குடுக்கப் போறத, நினச்சா எனக்கே கொஞ்சம் படபடப்பாதான் இருக்கு...''

எனச் சொன்னாள் காவ்யா.

``சும்மா பக்கத்து வீட்டுக்காரன்ட பேசுற மாதிரி பேசிட்டு வாடி''

என்று முதல்வன் படத்தில் முதல்வரை பேட்டி காணப் போகும் அர்ஜுனுக்கு அவரின் அலுவலக அதிகாரி ஆறுதல் சொல்வது போல் சொல்லி முடித்து தொடர்பைத் துண்டித்தாள் திவ்யா.

வரவேற்பு அறையை நோக்கி கேமராமேன் வந்தார்.

``மேம் ரெடியா???’’ எனக் கேட்டவரிடம், ம்.... எனத் தலையாட்டினாள்.

``நேர்காணல் குழு ரெடி ஆயிடுச்சு....நீங்க கடைசியா டச்-அப் பண்ணிக்கோங்க’’ என்று சொன்னார்.

நிகழ்ச்சி ஆரம்பமானது. ``இன்று நேர்காணல் நிகழ்ச்சியில் நம் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் unique கார்மென்ட்ஸ் நிறுவனர், தலைவர் காவ்யாவை வருக வருக என வரவேற்கிறேன் எனக் கூறியதும் காவ்யா புன்சிரிப்புடன் வணக்கம் சொன்னாள்.

Representational Image
Representational Image

``வணக்கம் மேம்...

வணக்கம் சார்...

இன்னைக்கு சாதனைக் களம் நிகழ்ச்சிக்கு வந்துருக்கீங்க எப்படி feel பண்றீங்க ???

``ரொம்ப சந்தோசமா இருக்கு. நானும் சாதனையாளர் என்று இந்தக் களம் என்னை அடையாளம் கண்டு இருக்கு என நினைக்கும்போது ரொம்பப் பெருமையா பெருமிதமா இருக்கு....’’

``முதுகலைப் பட்டதாரியான நீங்க இப்போ ஆன்லைன் பிசினஸ், கார்மன்ட்ஸ்னு சுயதொழிலில் கொடிக்கட்டிப் பறக்குறீங்க. நீங்க தொழில்முனைவோர் ஆனது விதியின் வசமா இல்ல மதியினாலயா.. ‘’

``ஆர்வத்தினால்..... அதாவது என் தொடக்கக்கல்வி எல்லாரையும் போல ஒரு சின்ன பள்ளிக்கூடம்தான். அப்பறம் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கொஞ்சம் பெரிய பள்ளியில் படிச்சேன். கிட்டத்தட்ட ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம். நானும் ஒரு ஆட்டுமந்தை மாதிரி எவ்விதக் கனவும் இல்லாம பள்ளிக்கூடம் போவேன். எண்பது பேர் கொண்ட அந்த வகுப்புல முதல் இருபது பேர் நல்லா படிப்பாங்க, அடுத்த அறுபது பேர் சுமாரா படிப்பாங்க, கடைசி இருபது பேர் வகுப்புல பின்தங்குனவுங்க. அந்தக் கடைசி இருபது பேர்ல ஒருத்திதான் நான்.

ஒன்பதாம் வகுப்பு வர எந்தவிதக் கனவும் இல்ல...பத்தாம் வகுப்பில் பாஸ் மார்க் வாங்கினபோது முதல் முறையா கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. அதன்பின் பதினொன்றாவது பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சேன். கோடை விடுமுறை… என் அம்மாச்சி நீ தையல் பழகுன்னு சொன்னாங்க. இதுவும் சாப்பிடறது தூங்குறது மாதிரி அத்தியாவசிய தேவைனு சொன்னாங்க.

ஏன்னா.... "ஒரு தையல் பிரிஞ்சா அவசரத்துக்கு யார் உதவியும் நாட வேண்டாம் பாரு"ன்னு சொன்னாங்க. சரி, சும்மா போவோம்னு போனேன். பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கிட்டதான் முதலில் கத்துக்கிட்டேன். ஒரு சுடிதார் தச்சதும் ஆர்வம் வந்துச்சு. அப்புறம் கல்லூரி தொடங்கி கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சேன். ஆனால் தையல் மீது தீராத காதல்அப்படியே இருந்துச்சு.

வீடும் மாறிட்டோம். இந்தச் சூழ்நிலையில் நேர்த்தியா, ஆழமா கத்துக்க திரும்ப வேற இடத்துக்குத் தையல் பயிற்சி போனேன். அங்கு கர்ச்சீப், தலையணை உறை, பெருமுடாஸ், சார்ட்ஸ்னு ஏதோ ஏதோ சொல்லிக் குடுத்தாங்க. இதெல்லாம் கஷ்டம் போலயே, இது சரிப்பட்டு வராதுனு கொஞ்சம் பின்வாங்கிட்டேன்.

Representational Image
Representational Image

கல்லூரி முடிச்சதும் தையல் கடை வைக்கணும் ஆசைப்பட்ட எனக்கு அந்தப் பயிற்சி வகுப்பின் மீதானா பயன் எதிர்காலத்தின் மீதான பயத்தையும் அதிகரிச்சது. கல்லூரி படிப்பிலும் கவனம் செலுத்தல, தையலும் சரியா கத்துக்கல. வீட்ல மேற்கொண்டு என்ன படிக்கப் போறனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.... நா என்ன படிக்கணும், என்னோட தனித்திறன் என்னன்னு எனக்கே தெரியல. ஏன்னா.... அப்புறம் என் அண்ணன் எனக்கு கணக்கு வரலன்னு சமூகம் சார்ந்த ஒரு படிப்பு படிக்க வச்சாரு. முதுகலை படிப்பு எனக்கு ஒரு மெச்சூரிட்டியா கொடுத்துச்சு. படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாதுன்னு தனித்திறன் மேல நம்பிக்கை வந்துச்சு. அப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் தைக்க ஆரம்பிச்சேன்.

நூத்துக்கும் மேல சுடிதார் நாசம் பண்ணிருக்கேன். உட்கார்ந்தாலே, மெஷின்ல ஏதாவது பிரச்னை வரும். சில நேரங்கள்ல அந்தக் கடவுளுக்கே நாம தைக்கிறது பிடிக்கலையோன்னு சில்லியா நெனச்சி அழுதிருக்கேன். முதுகலை படிப்பு முடிச்சதும், முடிச்ச கையோட கல்யாணம் அப்புறம் குழந்தை.

எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு career இருக்குற மாதிரி எனக்கும் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இருபத்தியாறு வயசுல முதல் முறையா எனக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சேன். தையல் தவிர வேறு எதுவும் மனசுக்குப் படல. ஒரு சாதாரண சுடிதார் தைக்கணும்னா கழுத்து டிசைன், காலர் கழுத்து, சைடு ஓபன் முக்கியமா தெரியணும். இது எதுவுமே தெரியாது. இது என்னோட பலவீனம். இந்தப் பலவீனத்த எப்படி பலமா மாத்துறதுன்னு யோசிச்சேன். ஸ்மார்ட் போன் வந்த நேரம் அது. எதார்த்தமா youtubeல தையல் videos பாத்தேன். அனார்கலி அம்ப்ரல்லா suits தைக்கத் தெரிஞ்சுகிட்டேன். சில ஆன்லைன் வகுப்புகளும் படிச்சேன். நண்பர்கள் உற்றார் உறவினர்கள் துணி குடுப்பாங்க. அப்படியே வீடியோஸும் அனுப்புவாங்க....தைச்சு தருவேன்...

அப்பவும் பிரச்னை முடியல.... நா குடுத்த டிசைன் வரலன்னு சண்டை பிடிப்பாங்க. நீங்க குடுத்த துணி வேற, வீடியோவில் வர துணி வேறன்னு சொன்னாலும் வாடிக்கையாளர் புரிஞ்சிக்கமாட்டாங்க. உழைச்சது எல்லாம் வீணா போகுதேன்னு கடுப்பா இருக்கும். வீட்ல உள்ளவங்க கொஞ்சம் மட்டம் தட்ட ஆரம்பிச்சாங்க. கிழிஞ்ச துணியா தைச்சு தந்தாக்கூட ஒரு தையலுக்குப் பத்து ரூபான்னு அழகா சம்பாதிக்கலாம்னு கலாய்ப்பாங்க.

அவங்க என்னய்ய மட்டம் தட்டின ஒவ்வொரு வார்த்தையும் என்னை முன்னோக்கிக் கொண்டு போற ஒரு ஏணிப்படியா அமைச்சுக்கிட்டேன். எனக்கு உயர்ந்த அடையாளம் வேணும்னு நினச்சேன். கஸ்டமர் திருப்திப்படுத்தணும். அதேசமயம் எந்தப் பிரச்னையும் நா தைச்சு தர துணில சொல்லக் கூடாது. வரவும் கூடாது. அப்படி பாத்தா ரெடிமேட் சரியாக இருக்கும்னு முடிவு பண்ணேன்.

Representational Image
Representational Image

ஏற்கெனவே அனார்கலி அம்ப்ரல்லா தைச்சு தந்ததுனால ரெடிமேட் அளவு ஓரளவுக்குத் தெரிஞ்சு இருந்துச்சு. அதனால இணையதளத்தில் ரெடிமேட் அளவு தேடி எடுத்தேன். L, xl, xxl மூணு அளவுகள தைச்சு அதுவும் இணையதளம் மூலமா வித்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சுச்சு. மதியை விதி முடுக்கிற மாதிரி, மதியை மேகத்திரள் மூடுற மாதிரி நாம் திறமையையும் அறியாமை சில நேரங்களில் மூடியிருக்கும்.

அன்புக்கு மட்டும் இல்ல.... ஆர்வத்துக்கும் திறமைக்கும் உண்டோ அடைக்கும் தாழ். இப்போ என்னைப் போல தையலில் ஆர்வம் இருக்க பெண்களை வெச்சு கார்மன்ட்ஸ் நடத்துறேன்’’ எனக் கூறி பெருமிதத்துடன் முடித்தார், காவ்யா.

-மக உத்சவி ஹரிஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு