Published:Updated:

திண்ணை வீட்டுப் பிச்சாயி பாட்டி - ஒரு தலைமுறையின் அடையாளம்! - சிறுகதை #MyVikatan

பாட்டி
பாட்டி ( Representational Image | Pixabay )

வைக்கோலில் வேய்ந்த இந்தத் திண்ணை வீடுதான் இக்கிராமத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இன்னும் இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பிச்சாயி பாட்டி வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள்.

சுகமாய் காற்று அடித்துக்கொண்டிருந்தது.

நன்றாக மூச்சை இழுத்துவிட்டு ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

மாட்டுச்சாணம் மெழுகிய திண்ணை குளுமையாக இருந்தது.

இப்போது வரும் டைல்ஸ், மார்பிள்ஸ், கிரானைட்ஸ் எல்லாம் இந்த மாட்டுச்சாண திண்ணைக்கு நிகர் வருமா?

50 ஆண்டைக் கடந்த திண்ணை.

இந்தத் திண்ணைதான் பிச்சாயிக்கு உயிர்.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இந்த திண்ணையையும் வீட்டையும் மாட்டுச்சாணத்தால் மெழுகுவாள்.

அப்போதெல்லாம், மாட்டுச்சாணத்துக்கு அதிகாலையில் சீக்கிரமே சென்று தொழுவத்தில் எடுக்க வேண்டும். இல்லையேல் கிடைக்காது. அதிலும் பண்டிகை நாள்களில் முதல் நாள் சாயங்காலத்திலே எடுத்து வைத்துக்கொள்வாள்.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ். எல்லா வீடுகளும்தான் சிமென்ட், மார்பிள்ஸ், டைல்ஸ் என்று ஆகிவிட்டதே! அதனால் சாணம் எடுப்போர் இல்லை. ஆகையால் பிச்சாயிக்குத் தொல்லை இல்லை.

பிச்சாயி திண்ணையில் உக்கார்ந்துகொண்டு சுகமாய் வெற்றிலை, பாக்கு போடுவாள். ஒரு நேரம் வெற்றிலைப் பாக்கு தீர்ந்துவிட்டால், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அழைத்துச் செட்டியார் கடையில் போய் வெற்றிலை, பாக்கு வாங்கிவரச் சொல்வாள். அப்படியே அவர்களிடம் மீதி காசுக்கு மிட்டாய் வாங்கிக்கொள்ளச் சொல்வாள். அதனாலேயே சிறுவர்களுக்குள் கடைக்குப் போவதில் போட்டா போட்டி நிலவும். அந்தச் சிக்கலையும் பிச்சாயி அழகாய்த் தீர்த்து வைப்பாள்.

சுகமாய் வெற்றிலை, பாக்கு போட்டு மென்று கொண்டிருக்கும்போது தெருவில் யாராவது நடந்து போவது கண்ணுக்குத் தெரிந்துவிட்டால் போதும்... உடனே அவர்களை கூப்பிட்டுத் திண்ணையில் உக்கார வைத்து நலம் விசாரித்து எதையாவது பேசிக்கொண்டிருப்பாள்.

அதிலும் மழைக்காலத்தில் திண்ணையில் உக்கார்ந்துகொண்டு `சோ'வென்று பெய்யும் மழையைப் பார்த்தவாறு வெற்றிலை, பாக்குப் போட்டு மென்றுகொண்டு இருக்கும் சுகத்தில் சாப்பாட்டையே மறந்துபோவாள்.

பாட்டி
பாட்டி
Representational Image

அதுவே ஆடிமாதத்தில் உக்கார்ந்திருக்கும்போது அடிக்கும் காற்றில் தெருவில் உள்ள மண்ணெல்லாம் வாரிக்கொண்டு திண்ணைக்கு வரும்போது திட்டிக்கொண்டே பாயைச் சுருட்டிக்கொண்டு உள்ளே செல்வாள்.

மார்கழி மாதத்தில் தினமும் திண்ணையை ஒட்டியுள்ள சுவரில் வலதுபுறமும் இடதுபுறமும் உள்ள விளக்கு மாடத்தில் விளக்கை அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் ஏற்றி வைப்பாள். மற்ற நாள்களில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால பொழுதில் ஏற்றி வைப்பாள்.

இப்படிப்பட்ட பிச்சாயிக்கு எங்கு வெளியில் போய் வந்தாலும் இந்தத் திண்ணையில் வந்து கொஞ்சநேரம் அசந்தால்தான் நிம்மதி.

இந்தத் திண்ணையில்தான் தினமும் அவள் வயதை ஒத்த தோழிகளுடன் தாயக்கட்டை உருட்டிக்கொண்டு ஊர்க்கதை, உலகக்கதை எல்லாம் பேசிக்கொண்டிருப்பாள்.

இன்னும் அவர்கள் வரவில்லை. இனிமேல் வரும் தருணம்தான்.

வைக்கோலில் வேய்ந்த இந்தத் திண்ணை வீடுதான் இந்த கிராமத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இன்னும் இருக்கிறது.

கிராமத்தில் உள்ள மற்ற வீடுகள் எல்லாம் முடிந்தளவுக்கு ஆஸ்பெட்டாஸ் சீட்டு வீடுகளாகவும், ஓட்டு வீடுகளாகவும், மெத்தை வீடுகளாகவும் திண்ணைகள் இல்லாமல் வெறும் கட்டடங்களாக எப்போதோ மாறிவிட்டன.

அருகில் உள்ள இளம்பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தத் திண்ணையில் வந்துதான் சாப்பாடு ஊட்டிவிடுவார்கள். அந்தக் குழந்தைகளும் இந்தத் திண்ணையில் வந்து விளையாடி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

திண்ணை வீடு என்பதே இப்போது இல்லை, எப்போதோ அரிதாகிவிட்டது.

படுப்பதற்கு கட்டிலாகவும், அமர்வதற்கு நாற்காலியாகவும் விளங்கியவைதான் இந்தத் திண்ணைகள்.

திண்ணை வீட்டின் அழகை மறந்துபோனது, காலஓட்டத்தின் பிடியில் உள்ள நம் சமூகம்.

அப்படித் திண்ணையில்லாமல் கட்டிய கட்டடங்களின் பலன்தான் என்ன?

காட்சி அரங்கத்தில் வைக்காத குறையாகத்தான் இருக்கிறது திண்ணை வீடு. ஒருநாள் அதுவும் இடம் பெற்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

கிராமத்திலேயே இப்படி மாறிவிட்ட நிலையில் நகரத்தைப் பற்றி பேசுவது வீண்.

கிராமத்தின் அழகே திண்ணை வீடுகள்தான். அதுதான் அடையாளம்.

ஆனால் அந்த அழகு, அடையாளத்தை இன்று கிராமங்கள் இழந்துவருகின்றன.

பிச்சாயியின் பேரக்குழந்தைகள் போய், இப்போது நகரத்தில் இருந்து வரும் கொள்ளுப் பேரக்குழந்தைகள் வரை இந்தத் திண்ணையில் உட்கார்ந்துதான் பிச்சாயியிடம் சாப்பிட்டும் கதையும் கேட்டு மகிழ்வர்.

Representational Image
Representational Image

ஏன், பிச்சாயியின் பிள்ளைகளே பால்யகாலத்தில் இந்தத் திண்ணையில் உக்கார்ந்துதான் சாப்பிட்டும் படித்தும், விளையாடியும், கதைகளைக் கேட்டும் வளர்ந்து மகிழ்ந்தனர்.

காற்றுக்கு மட்டும் குறைவே இருக்காது. சிலுசிலுவென்று சுகமாய் அடித்துக்கொண்டேயிருக்கும். தூக்கம் கண்களைச் சுண்டி இழுக்கும்.

இப்போதும் அப்படித்தான் சிலுசிலுவென்று அடிக்கும் சுகமான காற்றில் பிச்சாயி ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

ஒருமுறை பிச்சாயியை, சென்னையில் பேரன் வாங்கியிருந்த வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு, வேண்டாம் என்றவளை வம்படியாய் அழைத்துப் போயிருந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு. வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். ஒரு வெற்றிலை போடமுடியவில்லை. ஒரு வெளி மனுஷனைப் பார்க்க முடியவில்லை, சரியான காத்து இல்லை. விரக்தியடைந்தாள். ஆனால், திண்ணையை எதிர்பார்க்கவில்லை.

தன் கிராமத்திலேயே அழிந்து விட்டபோது இவ்வளவு பெரிய நகரத்தில் எதிர்பார்ப்பது நியாமில்லைதானே?

மொத்தத்தில் அவளின் இயல்பு எல்லாம் அந்தக் கட்டடங்களுக்குள்ளேயே முடங்கியது. கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் விலங்கைப்போல் உணர்ந்தாள்.

அவள் வீட்டுத் திண்ணை, மனிதர்கள், காத்து எல்லாம் அவள் கண்முன்னே தோன்றி மறைய, ஒருநொடிகூட இனி இங்கு இருக்க முடியாது என்று முடிவெடுத்து கிராமத்தில் கொண்டுபோய் விடச்சொல்லி புலம்பி, குழந்தையைப்போல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

`பிச்சாயி... பிச்சாயி...' - தோழி ஒருத்தி வந்து எழுப்பினாள்.

பிச்சாயி எழவில்லை.

ஆம்... பிச்சாயியின் உயிர் அந்தத் திண்ணையிலேயே பிரிந்து போயிருந்தது.

காரியம் முடிந்தது. பிச்சாயின் மகன், மகள்கள் அந்தத் திண்ணை வீட்டை இடிப்பதற்கு நாள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு