Published:Updated:

அப்பாவின் அனுபவம் சாதாரணமானதல்ல! - குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image

நானோ நேரெதிர். சின்ன விஷயத்திற்கும் ‘தாட்டு பூட்டு’ என்று வானத்திற்கும், பூமிக்குமாய் குதிக்கும் அவசரக் குடுக்கை!எதையும் தீர்க்கமாக யோசிக்கும் பழக்கமே இல்லாதவனாகிப் போனேன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்பா அதிர்ந்து பேச மாட்டார்.எதற்காகவும் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டார்.

எதையும் இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும் உயர்ந்த குணம் கொண்டவர். அவர் எதைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதையே அவ்வளவு ஈசியாகக் கண்டு பிடிக்க முடியாது.

நானோ நேரெதிர். சின்ன விஷயத்திற்கும் ‘தாட்டு பூட்டு’ என்று வானத்திற்கும், பூமிக்குமாய் குதிக்கும் அவசரக் குடுக்கை!எதையும் தீர்க்கமாக யோசிக்கும் பழக்கமே இல்லாதவனாகிப் போனேன்.

Representational Image
Representational Image

‘ அமைதிக் கடலான உங்கப்பாவுக்கு, கண்டதற்கும் ஆத்திரப்படும் நீ எப்படிடா மகனாப் பொறந்தே!’ என்று அம்மா சாதாரணமாகவும், பல சமயங்களில் கோபத்துடனும் கேட்பதுண்டு.

நான் நல்ல மூடில் இருக்கும்போது சொல்வேன்… ’ அந்த அமைதியான கடல்லதானேம்மா ஆழிப் பேரலை.. அதாவது ‘சுனாமி’ வருது. அது மாதிரிதாம்மா!’ என்று சிரிப்பேன்.

எப்படியோ…’ஐ.டி.பூம்’ இந்தியாவை ஆட்கொள்ள, ஒரு வழியாக நானும் அதில் சிக்கி, ஒரு பெரும் நிறுவனத்தில் ‘சாப்ட்வேர் எஞ்சினீயர்’ ஆகிவிட்டேன். அப்படியே என்னோடு பணி புரியும் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும் ஆகி விட்டேன்.

கொரோனா வந்ததில் எங்கள் பாடுதான் இப்ப ரொம்ப சங்கடமாகி விட்டது.

வீட்டையே ஆபீசாக்க ஐடியா கொடுத்த ஆள்மட்டும் என் கையில் கிடைத்தால்… அப்படியே கடித்துத் துப்பி விடுவேன்.

இரண்டு பேருக்கும் மீட்டிங் என்று வந்து விட்டால், இரண்டு பெட் ரூம்களிலும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பேச வேண்டியதாகி விடுகிறது. பிள்ளைகளை ஹாலில் உட்கார வைக்க வேண்டியதாகி விடுகிறது.

அப்பா, அம்மா பெட் ரூமை எங்களுக்கு அடிக்கடி காணிக்கை ஆக்குவது மட்டுமல்ல... அவர்களின் பிரைவசியையும் விட்டுக் கொடுக்கிறார்கள். நியூஸ்கள் அனைத்தையும் சானல் மாற்றி மாற்றிப் பார்க்கும் அப்பா, இப்போதெல்லாம் வீட்டிற்கு வருகின்ற செய்தித் தாளுடன் திருப்தியடைந்து விடுகிறார்.

Representational Image
Representational Image

அம்மா பல சீரியல்களையும் இப்பொழுது சீரியஸ்னஸ் இல்லாமல் பார்க்கக் கற்றுக் கொண்டு விட்டார். ’நடுவில் சில பக்கத்தைக் காணோம்!’ என்ற கதையாகச் ‘சில நாட்கள் பார்க்க முடியவில்லையென்றாலும் பரவாயில்லை’ என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு விட்டார்.

அப்பா நடைப் பயிற்சி நேரத்தை அதிகமாக்கிக் கொண்டு, வீட்டில் இருக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டு விட்டார்.

குழந்தைகள் வித்யூத், விஹானா பாடுதான் ரொம்பவும் கஷ்டமாகி விட்டது. தாத்தா, பாட்டியுடனே அதிக நேரத்தைச் செலவிட வேண்டியதாகி விடுகிறது. வெளியேயும் செல்ல முடியவில்லை; வீட்டிற்குள்ளும் சப்தமாக விளையாட முடியவில்லை.

இந்தச் சமயம் பார்த்தா இந்தச் சிடுமூஞ்சி மானேஜர் வர வேண்டும்? சின்ன விஷயத்துக்கெல்லாம் கூட ‘காச் மூச்’ என்று கத்துகிறார் மனுஷன். நானே பரவாயில்லை போலும்!

அப்பொழுதுதான் மீட்டிங் முடித்து வெளியே வந்தேன். ஒரே எரிச்சலாக இருந்தது. ஏ.சி., வேறு இரண்டு நாட்களாகச் சதி செய்கிறது. அது ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உடம்பு மட்டும் கூலாக வில்லை. வெளிக் காற்றை வாங்க வெளியில் வரலாமென்றால், அந்த நேரம் பார்த்து கைபேசி சிணுங்கியது.

கூப்பிட்டது... நண்பனின் அப்பா. நீண்ட நாட்களாகப் பேசவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவித்து விட்டு, குசலம் விசாரித்தார். ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி நலம் விசாரித்து விட்டு,சும்மாதான் கூப்பிட்டேன்... என்று முடித்துக் கொண்டார்.

Representational Image
Representational Image

முன்பெல்லாம் அடிக்கடி பேசுவார். ஏதாவது சின்னச் சின்ன உதவிகள் கேட்பார்.

நானும் செய்து கொடுப்பேன். கொரோனா வந்த பிறகு, நீண்ட நாட்களாகப் பேசவில்லை.

எதற்காகக் கூப்பிட்டிருப்பார்? என்று எண்ணியபடி நான் வெளியில் வர, அப்பா அப்போதுதான் உள்ளே நுழைந்தார். அப்பாவிடம் அங்கிள் அழைத்ததைச் சொன்னேன்!

“அப்படியா... இன்னும் ரெண்டு மூணு நாள்ல மறுபடியும் உன்கிட்ட ஏதாவது உதவி கேட்டு அழைப்பாருப்பா!” என்றார் அப்பா.

“அப்படியா? எப்படிப்பா அவ்வளவு கரக்டா சொல்றீங்க!” என்று நான் கேட்க,

“சில பேரோட டெக்னிக் அப்படிப்பா! உதவி வேணும்னா மட்டும் பேசறதா நெனக்கக் கூடாதுங்கிறதுக்காக இப்படி ஒரு பிட்டைப் போட்டு வைப்பாங்க! அதாவது ‘துண்டு’ போட்டு எடம் பிடிக்கிறதுன்னு சொல்வாங்களே..அது மாதிரி! மூணு நாள் கழிச்சி அவர் உதவி கேட்கறப்போ.. .உன்னால மறுக்க முடியாது... ஏன்னா... நீ என்ன நெனப்பே…அங்கிள் நம்மளை ஞாபகம் வச்சு அன்னிக்கிக்கூடப் பேசினாரே… அப்படீன்னு…”

“ இப்படியும் ஒரு டெக்னிக் இருக்காப்பா!” என்று வியந்தபடி நான் வெளிக் காற்றைச் சுவாசிக்கச் சென்றேன்.

மூன்றாம் நாள் காலையிலேயே கைபேசி அழைக்க,எடுத்தேன்.

எதிர் முனையில் ‘அங்கிள்!’

அப்பாவின் அனுபவம் சாதாரணமானதல்ல!

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு