மலைப்பாதைக் குரங்குகள் சொல்லும் பாடம்...! - குழந்தை வளர்ப்பு அட்வைஸ் #MyVikatan

குரங்குகளின் அடுத்த தலைமுறையும் அங்கே உருவானது. அவை மலைப்பாதையில் கிடைக்கும் உணவை உண்டு ஓடி ஆடி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
அந்த மலைப்பாதையின் ஓரிடத்தில் குரங்குகள் எப்போதும் கூட்டமாக இருக்கும். அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் குரங்குகளுக்கு பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களை அளிப்பர்.
முதலில் அவற்றை உண்பதற்காக காட்டுக்குள் இருந்து வந்த குரங்குகளுக்கு அங்கு தொடர்ந்து உணவு கிடைத்ததால் நாளடைவில் அங்கேயே தங்க ஆரம்பித்தன.
இவ்வாறு சில வருடங்கள் கடந்தன. மக்கள் பிறர் செய்வதைப் பார்த்தோ அல்லது பிறருக்குக் காட்டவேண்டியோ தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்தி குரங்குகளுக்கு உணவு அளித்தனர்.
எனவே, அங்கு எந்தவிதமான சிரமும் இன்றி தொடர்ந்து குரங்குகளுக்கு உணவு கிடைத்துக்கொண்டே இருந்தது.
அதனால் குரங்குகள் அந்த மலைப் பாதையை விட்டு காட்டுக்குள் செல்லவே இல்லை. சில வருடங்கள் கடந்தன. பல குரங்குகளுக்கு குட்டிகள் பிறந்தன.
குரங்குகளின் அடுத்த தலைமுறையும் அங்கே உருவானது. அவை மலைப்பாதையில் கிடைக்கும் உணவை உண்டு ஓடி ஆடி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன.

குரங்குகளின் உணவிற்கு எந்த விதமான கவலைகளோ, சிரமங்களோ அங்கு இல்லை. அப்படி இருக்கையில் ஒருநாள் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு கூட்டமாக வந்தனர்.
அந்த இடத்தில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், குரங்குகளின் எண்ணிக்கையும் அங்கு அளவுக்கதிகமாகப் பெருகிவிட்டதாகவும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். மேலும் பல குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போவதால் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கலாம் என இறுதியாக முடிவு செய்தனர்.
உடனே இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது என்னும் அறிவிப்புப் பலகை அங்கு தொங்க விடப்பட்டது. அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருப்பதைக் கண்காணிக்க காவலர் கூடாரம் அமைக்கப்பட்டது. எனவே அங்கு மக்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.
நாளடைவில் அங்கு குரங்குகளுக்கு எந்த விதமான உணவும் கிடைக்கவில்லை.
குட்டியாக அங்கேயே பிறந்து வளர்ந்த குரங்குகளுக்கு தாம் காட்டுக்குள் சென்று உணவு தேட முடியும் என்பதே தெரியாமல் இருந்தது. அவை உணவுக்கு வழி தெரியாமல் தவித்துப் போயின. சில குரங்குகள் சற்று காட்டுக்குள் செல்ல முயன்றன. சிறிது தூரம் போன பிறகு என்ன செய்வது என அவைகளுக்குத் தெரியவில்லை.

தாம் பிறந்ததிலிருந்து மலைப் பாதை ஓரமாகவே வாழ்ந்து விட்டதால் தன்னுடைய உலகம் காடு என்பதையும், தனக்கான உணவும், வாழ்க்கையும் அங்குதான் கிடைக்கும் என்பதையும் அறியாத குரங்குகள் உணவுக்காக அங்குமிங்கும் அலைந்து தவிக்க ஆரம்பித்தன. வாகனங்களில் செல்வோரிடம் உணவுப் பொருள்களைப் பிடுங்கத் துவங்கின. அதனால் மக்கள் குரங்குகளை அடித்து விரட்டினர்.
மரங்களிலும், செடிகொடிகளிலும் உணவு சேகரிக்கும் ஆதார குணமே அக்குரங்குகளிடம் இல்லாமல் போய்விட்டது. வேறு எங்கேனும் இவ்வாறு மனிதர்கள் உணவு தருவார்களா என்று அந்தப் பாதை ஓரமாகச் சென்று தேடுவதே அவற்றின் வாழ்க்கை ஆயிற்று!
ஆம் நண்பர்களே! நாமும் நம்முடைய குழந்தைகளை இந்த மலைப்பாதை குரங்குகள் போலதான் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கஷ்டங்கள் எதுவும் இன்றி அவர்களுக்கு அனைத்தும் உடனுக்குடன் சுலபமாகக் கிடைத்து விடுகின்றன. நம்முடைய சிறுவயதில் நாம் அனுபவித்த கஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் ஒருபோதும் நம்முடைய குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனமாக இருக்கிறோம். அதனால் நாம் குழந்தைகள் கேட்பதை எல்லாம் உடனுக்குடன் வாங்கிக் கொடுத்து விடுகிறோம்.

நம்முடைய குழந்தைகள் கஷ்டங்களோ, ஏமாற்றங்களோ, தோல்விகளோ இல்லாமலேயே தொடர்ந்து வாழ்ந்து வரும்போது, இதுமட்டும் தான் வாழ்க்கை என அவர்கள் நம்பி விடுகின்றனர்.
அதனால் இயல்பிலேயே பெரும்பாலான குழந்தைகள் தைரியமற்ற பூஞ்சையான மன நிலையிலேயே இருக்கின்றனர். நம் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என நினைக்கும் நாம், கஷ்டங்கள் என்றால் என்னவென்று கூட தெரியாமல் அவர்கள் வளர்வதை செளகர்யமாக மறந்து விடுகிறோம்.
நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக குழந்தைகள் விரும்புவதை, விரும்பிய நேரம் நாம் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். அதனால் நாம் என்ன கேட்டாலும் உடனே கிடைத்துவிடும் என குழந்தைகள் நம்ப ஆரம்பிக்கின்றனர்.
இதனால் பொருள்களின், உறவுகளின், உணர்வுகளின் மற்றும் பணத்தின் மதிப்பை அறியாமலேயே குழந்தைகள் வளர ஆரம்பிக்கின்றனர்.
இதனால் ஒருகட்டத்தில் ஏதேனும் ஒரு சிறு ஏமாற்றமோ, தோல்வியோ தென்பட்டால் கூட அவர்கள் உடைந்து போகின்றனர்.
பெரும் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர் என்பதே இன்றைய நிதர்சனமான உண்மை.
குழந்தை வளர்ப்புக் கலையில் மிக முக்கியமான ஒன்று வெற்றிகளை மட்டுமே குழந்தைகளுக்குக் காட்டிக் கொண்டிருக்காமல், சிறுசிறு கஷ்டங்களுடனும், ஒருசில ஏமாற்றங்களுடனும், அவ்வப்போது தோல்விகளுடனும் குழந்தைகளுக்கு அறிமுகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும்போது கண்டுகொள்ளாமல் விடுவதும், தவறுகள் செய்யும்போது கண்டிப்பதும் அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும்.
குழந்தைகளின் தேவையற்ற விருப்பங்களை நிறைவேற்றாமல் இருப்பதும், தேவையான காலம் வரை தள்ளிப்போடுவதும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.
அவர்களின் தவறான கருத்துகளை ஏற்க மறுப்பதும், அவசர முடிவுகளை மறுதலிப்பதும் அவர்களுக்கு தோல்வி உணர்வை உண்டாக்கும்.
குழந்தைகள் விரும்பும் உணவை அளிப்பது, விரும்பும் படிப்பை படிக்க வைப்பது, விரும்பும் செயல்களைச் செய்ய விடுவது என முழுமையாக சுதந்திரம் கொடுத்து நம் குழந்தைகள் வளர்க்கிறோம். அப்படி இருக்கையில் அவர்கள் ஏதேனும் ஒரு முரணான செயலைச் செய்கையில், நாம் அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும்போது பெரும்பாலும் இன்று குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்வது கிடையாது.
அவர்கள் செய்வதே சரி என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறோம்.

ஒரு சில பாடங்களை செயல்வழியாக மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறே ஏமாற்றங்களையும், தோல்விகளையும் வெற்று வார்த்தைகளாகவும், கதைகளாகவும் நம்மால் விளக்கிவிட முடியாது. அவற்றை அனுபவங்களாக உணர்ந்தால் மட்டுமே அவை குழந்தைகளை பக்குவப்படுத்தும் என்பது உண்மை.
அன்பு, கருணை, இரக்கம், நேர்மை, காதல் உள்ளிட்ட உயரிய குணங்களை சிறப்பாக அறிமுகம் செய்து வைப்பவையும், அவற்றின் அருமையை உணரச் செய்யும் மிகச்சிறந்த ஆசானும் ஏமாற்றங்களும், தோல்விகளுமே. தோல்விகள் என்பவை தடைகற்கள் அல்ல. அவை சிறப்பான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான வேகத்தடைகள். அவை நமக்குக் கற்றுத் தரக்கூடிய பாடங்களை உலகில் வேறு யாரும் கற்றுத் தந்துவிட முடியாது. ஆனால், அந்தப் பாடத்தைக் கற்று கொள்ளாமலே நம்முடைய குழந்தைகள் இன்று வளர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது வேதனையான ஒன்று.

என் குழந்தையை கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறேன் என்பது ஒரு பெற்றோருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனான பிறகு சின்னச் சின்ன தோல்விகளுக்கும், சிறுசிறு ஏமாற்றங்களுக்கும் துவண்டு போய்விடக்கூடிய மிகப் பெரிய உளவியல் சிக்கலை இது உண்டு பண்ணும்.
முதல் முயற்சியிலேயே பெரும் வெற்றி கண்ட வெற்றியாளர் எவரும் இல்லை.
அவமானங்களும், ஏமாற்றங்களும் வலிமையான வெற்றியின் வாயில்கள்.
நம்முடைய குழந்தைகள் வெற்றியாளர்களாக மாற வேண்டுமெனில் அவர்களை செதுக்கக்கூடிய ஏமாற்றங்களும், தோல்விகளும் அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஏமாற்றங்களும் தோல்விகளும் ஒரு மனிதனை சுயமாகச் சிந்திக்க வைக்கும்.
எந்நேரமும் நிழலில் இருந்து கொண்டிருப்பதைவிட, வெயிலில் சென்று வந்த பிறகு மரத்தடி நிழலில் ஒதுங்கும் சுகம் அபரிமிதமானது.
நிழலில் மட்டுமே பாதுகாப்பாக வளரக்கூடிய தாவரம் ஒருபோதும் பலமானதாக மாறப்போவதில்லை. தாவரம் வலிமையாக வளர அவ்வப்போது பலத்த காற்றும், வெப்பமும் அதற்குத் தேவை.

குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவர்களுடைய மனநிலை பூஞ்சையாகத்தான் மாறும். எதையும் எதிர்கொள்ளக் கூடிய தைரியமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் குழந்தைகளுக்கு வேண்டுமெனில் அவர்களுக்கு அவ்வப்போது ஏமாற்றங்களும், தோல்விகளும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமை.
ஒரு தாவரத்தை வளமாக்கும் உரம் போன்றவையே ஏமாற்றங்களும், தோல்விகளும். கஷ்டம் என்பது என்னவென்று தெரியாத ஒரு மனிதன் பிறரது கஷ்டத்தை எப்படி உணர்வுபூர்வமாக அறிந்துகொள்ள முடியும்?
கவலை என்னவென்று தெரியாத சித்தார்த்தனாகவே நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருந்தால், அவர்கள் எப்போது புத்தனாக மாறுவது?
தோட்டம் தூய்மையாகவே இருந்தால் உதிர்ந்த சருகுகளால் உண்டாகும் பொன்னிறக் காற்று ஒருபோதும் உருவாகாது என்கிறது ஜென் தத்துவம்.
குழந்தைகளுக்கு ஏமாற்றங்களே இல்லாவிடில் ஜென் கூறும் அந்த பொன்னிறக் காற்றை அவர்கள் உணர்வது எப்படி?

எனவே நண்பர்களே! குழந்தைகளை ஒருபோதும் மலைப்பாதைக் குரங்குகளாக மாற விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு அவ்வப்போது ஏமாற்றங்களைப் பரிசளியுங்கள். கஷ்டங்களைக் கவனமாக அறிமுகம் செய்யுங்கள். தோல்விகளின்போது துவண்டு விடாமல் இருக்கக் கற்றுக் கொடுங்கள். இவற்றால் தன்னம்பிக்கை மிகுந்த மனிதனாக, மிகப்பெரிய வெற்றியாளனாக நம் குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நமது குழந்தைகளின் மேம்பட்ட எதிர்கால வாழ்விற்காக அளிக்கும் மிகச்சிறந்த பரிசு இதுவாகத்தான் இருக்கும்!
-அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.