Published:Updated:

உதவி எப்படி இருக்கணும் தெரியுமா? - ஒரு குட்டிக் கதை #MyVikatan

Representational Image
Representational Image ( J W / Unsplash )

நம்முடைய உதவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் மகாபாரதக் கதை தெளிவாக விளக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பிறருக்கு உதவுவது மனித வாழ்வின் உன்னதங்களில் மிக முக்கியமான ஒன்று.

ஆனால் உதவுதல் என்பது ஒருவழிப்பாதை அல்ல! அது அளிப்பவர், பெறுபவர் ஆகிய இருவருக்குமே பயனளிக்கும் இருவழிப்பாதை! கொடுப்பதில் உண்மையில் மகிழ்ச்சி உள்ளது. ஆனால் அதை அனுபவிப்போர் சொற்பமே!

உதவி செய்வதற்குப் பணம் முக்கியமா? அல்லது மனம் முக்கியமாக? என்றால் மனம்தான் முக்கியம் என்பதே நமது பதிலாக இருக்கும்.

நாம் பிறருக்கு ஏதேனும் பொருள்களைக் கொடுக்கும்போது, பெறுபவருக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொடுக்க வேண்டுமா? அல்லது நம்மிடம் தேவைக்கு அதிகமாக, அபரிமிதமாக உள்ளவற்றைக் கொடுக்க வேண்டுமா? என்பது சிக்கலான ஒரு கேள்விதான்.

Representational Image
Representational Image
Annie Spratt / Unsplash

நம்முடைய உதவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் மகாபாரதக் கதை தெளிவாக விளக்கும்.

ஒருநாள் அர்ஜுனனுக்கு மிகப் பெரிய சந்தேகம் ஒன்று ஏற்பட்டது. 'நம்முடைய சகோதரன் தர்மன் அனைவருக்குமே கொடை வழங்குகிறான். அதற்கு ஏற்றது போல சகோதரனுடைய பெயரே தர்மன் என இருக்கிறது. கர்ணனும் கொடை வழங்குகிறான். அவ்வாறு இருக்கும்போது கர்ணனை மட்டும் கொடைவள்ளல் என உலகம் கொண்டாடுகிறதே. இது எவ்வாறு?' என்ற தனது சந்தேகத்தை கிருஷ்ணரிடம் சென்று அர்ஜுனன் வினவினான்.

கிருஷ்ணர் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, "சரி அர்ஜுனா. உன் சந்தேகம் நியாயமானதே. யார் உண்மையான கொடைவள்ளல் என்பதை நாம் ஒரு சோதனை மூலம் கண்டறியலாம்" என்றார்.

சோதனை தொடங்கியது. கிருஷ்ணர் தன்னுடைய சக்தியால் தொடர்ச்சியான மழையைப் பொழியச் செய்தார். தொடர் மழை ஆரம்பித்த சில நாள்களுக்குப் பிறகு கிருஷ்ணரும், அர்ஜுனனும் வறியவர்கள் போல வேடமிட்டு தர்மனுடைய அரண்மனைக்குச் சென்றனர்.

அரசவையில் தர்மனைப் பலவாறு புகழ்ந்து கூறுகிறார் கிருஷ்ணர். அதைக்கேட்டு மகிழ்ந்த தர்மன், "உங்கள் இருவருக்கும் என்ன பரிசில் வேண்டும்?" எனக் கேட்டான்.

அதற்கு கிருஷ்ணர், "எங்கள் வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருள்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் அவற்றைச் சமைப்பதற்குத் தேவையான விறகுகள்தான் எங்களிடம் இல்லை. தொடர் மழையால் விறகுகள் அனைத்தும் நனைந்துவிட்டன. எனவே நீங்கள் எங்களுக்கு விறகுகள் தந்து உதவினால் உபயோகமாக இருக்கும்" என்றார்.

Representational Image
Representational Image
Matt Collamer / Unsplash

அதைக் கேட்ட தர்மன் சோகத்துடன், "பொன்,பொருள் என எது கேட்டாலும் என்னால் உடனே தந்து விட முடியும்.

ஆனால் நீங்கள் நான் தர இயலாததைக் கேட்கிறீர்கள். இந்த அரண்மனையில் உள்ளோருக்குச் சமைக்க தேவையான விறகுகள் மட்டுமே இங்கு இருந்தன.

அவையும் தற்போது தீர்ந்துபோய் விட்டன. நான் எனது படையை விறகு சேகரிக்க அனுப்பியுள்ளேன். எனவே நீங்கள் மழை ஓயும் வரை உங்கள் குடும்பத்துடன் அரண்மனைக்கு வந்து தினமும் மூன்று வேளையும் விருந்துண்டு செல்லலாம்" என்றான்.

பிறகு வருவதாகக் கூறிவிட்டு அர்ஜுனனும், கிருஷ்ணனும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அர்ஜுனன் கிருஷ்ணனிடம், "என்னுடைய சகோதரர் கூறியது சரிதான். இந்த மழையில் எவராலும் விறகுகளை தானமாக அளிக்க முடியாது.

ஆனால் பொன், பொருள் என நாம் எதைக்கேட்டாலும் அதனைத்தர தர்மர் தயாராக இருக்கிறார். அது மட்டுமன்றி இந்த மழைக் காலத்திலும் அவர் ஒரு குடும்பத்திற்கு முழுக்க உணவளிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். எனவே அவர் சிறந்த கொடை வள்ளல் தானே?" என்றான்.

அதற்கு கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, "பொறு அர்ஜுனா! கர்ணனையும் சோதித்துப் பார்த்தவிட்டு பிறகு இறுதி முடிவிற்கு நாம் வரலாம். நாம் கர்ணனிடமும் விறகுகளைக் கொடையாகக் கேட்கலாம். அவன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம்" என்றார்.

Representational Image
Representational Image
Elaine Casap / Unsplash

அடுத்ததாக கிருஷ்ணனும், அர்ஜுனனும் மாறுவேடத்தில் கர்ணனிடம் சென்றனர்.

கிருஷ்ணர் கர்ணனைப் புகழ்ந்து கூறுகிறார். மகிழ்ந்த கர்ணன் கிருஷ்ணரிடம், "உங்களுக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணர், "என்னுடைய வீட்டில் உணவு சமைப்பதற்குத் தேவையான பொருள்கள் எல்லாமே இருக்கின்றன.

ஆனால் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் விறகுகள் அனைத்தும் நனைந்து விட்டன. சமைப்பதற்கு விறகுகள்தான் இல்லை. எனவே எங்களுக்கு விறகுகள்தான் தற்போது அவசியம் தேவை" என்றார்.

உடனே கர்ணன் சற்றும் யோசிக்காமல் தன்னுடைய வில்லை எடுத்து அம்பை நானிலேற்றி அந்த அரண்மனையில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் நோக்கிச் செலுத்தினான். அவை அனைத்தும் உடைந்து கீழே விழுந்தன.

அவற்றைக் கையில் ஏந்தி வந்து கிருஷ்ணரிடம் கொடுத்த கர்ணன் "இதைப் பயன்படுத்தி உணவு சமையுங்கள்" என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்!

விறகுகளைப் பெற்ற கிருஷ்ணர் புன்னகையுடன் அர்ஜுனனைப் பார்த்தார்.

அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். உண்மையிலேயே கர்ணன்தான் கொடைவள்ளல் என்பதை அர்ஜுனன் ஒப்புக்கொண்டான் என இக்கதை முடியும்.

நம்மிடம் பணமே இல்லை, பிறர் கேட்கக்கூடிய பொருள்களும் இல்லை. நாம் எவ்வாறு கொடுப்பது என்றால், மனம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்கிறது இக்கதை.மேலும் நம்மிடம் இருப்பதை அளிப்பதை விட, ஒருவருக்குத் தேவையானதை அளிப்பதே சிறந்த தானம் என்ற நீதியையும் இக்கதை தெளிவாக விளக்குகிறது.

Representational Image
Representational Image
Sarah Cervantes / Unsplash

ஆனால் பணம் என்பது மனிதர்கள் அனைவருக்குமான பொதுவான தேவையாகவே காலகாலமாக நீட்டித்து வருவதை நாம் மறுத்துவிட முடியாது!

நம்மிடம் அதிகமாக உள்ளது என்பதற்காக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இனிப்பு கொடுக்க முடியாது. அவர்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் கொடுக்க வேண்டும். தேவையானதைக் கொடுக்கும் போதுதான் அந்த உதவி பயனுள்ளதாய் அமையும். இல்லாவிடில் நாம் செய்யும் உதவிகள் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராக எந்தப் பயனுமின்றி வீணாகிப் போகும்.

பசியால் தவிப்பவனுக்கு மருந்துகளைப் பெட்டி பெட்டியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை.

எந்த ஒன்றையும் தனக்கு என இறுக்கி வைத்துக் கொண்டிருப்பது பயனற்றது.

தேவைக்கு அதிகமாய் நம்மிடம் உள்ளவை இந்த உலகில் வேறு யாருக்கேனும் அவசியம் தேவைப்படும். அவற்றை அவர்களுக்கு அளிப்பதும், நம்மிடம் உள்ள பொருள்கள் தேவைப்படாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருட்களாய் அவற்றை மாற்றிக் கொடுப்பதும் மனித வாழ்வின் அடிப்படை அறமாகும்.

பிறருக்கு உணவு அளிக்கிறோம் என்றால் கூட நாம் எத்தகைய தரமுள்ள, ருசியான உணவை விரும்பி உண்போமோ அத்தகைய உணவையே அளிக்க வேண்டும். பயன்படாத அல்லது கெட்டுப்போன உணவைப் பிறருக்கு அளிப்பது நியாயமாக இராது. அது உண்மையான அன்னதானமும் ஆகாது.

ஒருவருக்கு உதவி செய்கிறோம் என்றால் அவருக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்வதே உதவுதலின் முதல் படியாகும்.

ஒருவன் தன்னிடம் மிகுதியாக உள்ள பொருள்களை பிறருக்கு அளிப்பதைவிட, பிறரின் தேவையறிந்து தன்னலமின்றிச் செய்யக்கூடிய உதவியே உயர்ந்தது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு