Published:Updated:

`Money’தாபிமானம்! - லாக் டெளன் மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

2 இட்லி 50 ரூபாய் என விற்கும் திறன்கொண்ட உணவகத்தில் என் மனைவி காசாளராகப் பணிபுரிகிறார்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இரவு 9 மணி.

ஆள் அரவமில்லாமல் நள்ளிரவு ஒரு மணியைப் போல் காட்சியளித்தது வேளச்சேரி சாலை. அமாவாசை போல ஒரே கும்மிருட்டு. மாநகராட்சி மின்தொகை செலுத்தவில்லை போல. சாலையின் இருமருங்கிலும் ஒரு விளக்குகூட எரியவில்லை. ரயிலே இயங்காத நிலையத்தில் வேளச்சேரி எனும் பெயர்ப்பலகை நியான் வெளிச்சத்தை வீணாகக் கக்கிக்கொண்டு இருந்தது. எனது இருசக்கர வாகனம் 60 கி.மீ வேகம் எனக் காட்டியது.

இந்த லாக் டெளன்களினால் எல்லாம் தலைகீழாக ஆகிவிட்டது. வேளச்சேரி மேம்பாலத்தில் சில இந்திக்கார்கள் உட்கார்ந்து இருந்தனர். எதுக்கென்று கேட்காதீர்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

2 இட்லி 50 ரூபாய் என விற்கும் திறன்கொண்ட உணவகத்தில் என் மனைவி காசாளராகப் பணிபுரிகிறார்.

பார்சல் மட்டுமே என்ற அரசாங்க உத்தரவினால் வேலை நேர நீட்டிப்பு, ஆட்குறைப்பு காரணமாக 12 மணி நேர பணி காலை 9 மணி முதல் இரவு 9 மணி. (இச்சம்பவம் நடக்கும் தினம் - தொழிலாளர் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற உலகில் முடிவெடுக்கப்பட்ட தினமான மே 1-ம் தேதி). அதனால் எனக்கு ட்ராப் அண்ட் பிக்கப் பணி இருந்தது.

மேம்பாலத்திலிருந்து இறங்கும்போது எதிர் பஸ் நிலையம் அருகே நின்ற பெண்ணை நான் பார்த்த வேகம் என் வாகனத்தைவிட வேகமாக இருந்தது.

அழகாக இருந்தாள். நான் பார்த்தது என்னவளுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்துப் பார்வையை சாலையின் மீது செலுத்தி உணவகத்தின் வாசலின் முன்னால் போய் போன் செய்தேன்.

'இன்னும் அரைமணிநேரம் ஆகும். காத்திருக்கவும்' என்றாள்.

ஆளே இல்லாத கடையில யாருக்கு பில் போடுறாங்க என நொந்து கொண்டு காத்திருந்தேன். வந்தவுடன் காதலின் சலிக்காத அந்த மூன்று வார்த்தையைக் கூறிவிட்டு "போகலாமா" என்றேன். பதில் "ம்" மட்டுமே வந்தது.

"முதல்ல எனக்கு வேற வேலை பாரு.

9 மணிக்கு கணக்கை முடித்து விட்டு போங்கனு சொல்லுறாங்க. அதுக்கே 20 நிமிஷம் ஆகுது."

செவனேனு "சரி" என்றேன். மீண்டும் மேம்பாலம் ஏறும்போது அந்தப் பெண்ணை மிக அருகில் காண நேரிட்டது.

வண்டியை நிறுத்தினேன்.

"இந்த நேரத்தில் இங்க என்னம்மா பண்ணுறீங்க?" என்றேன்.

Representational Image
Representational Image
Vikatan Team

"இப்ப தான் அண்ணா வேலை முடிந்தது. வீட்டுக்காருக்கு போன் பண்ணினேன்.

போன் எடுக்கலை. அதான் என்ன பண்ணுறதுனு தெரியலை" என்றாள்.

இப்படி டக்குனு 'அண்ணா' எனக் கூறிவிட்டாளே என நினைத்துக்கொண்டு

"எங்கம்மா போகணும்" என்றேன். நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னால் வரும் நகரின் பெயரைக் கூறினாள்.

"நான் விட்டுவிடுகிறேன் ஏறும்மா" என்றேன்.

"நான் வேணா ஓட்டவா?" என்றாள். எனக்கு ஒரு நொடி யோசனை ஒரு வேளை வண்டி திருடுற குரூப்பா இருக்குமோ என்று.

"உன்னால மூணு பேரை வச்சி பேலன்ஸ் பண்ண முடியாது. நானே ஒட்டுறேன்" என்றேன்.

தயங்கியே நின்றாள். "இல்ல முன்னப் பின்ன தெரியாதவங்க கூட எப்படி வர்றதுனு யோசிக்கிறேன்" என்றாள். ஒருவேளை அவள் எங்களை பெண் திருடும் கும்பலாக நினைத்திருக்க கூடும்.

என் மனைவி, "அட என்னம்மா நீ முன்ன பின்ன தெரியாதவனை தானே கட்டிக்கிட்டு வாழுறோம். போற வழியில் உன்னைய இறக்கி விடப் போறோம். அதுக்கப்புறம் நீ யாரோ, நாங்க யாரோ. வாம்மா வந்து உக்காரு" என்றாள்.

"மூணு பேர் போனா போலீஸ் புடிப்பாங்க. பாத்து போங்க" என்றாள் புதியவள்.

அவள் சொன்ன மாதிரியே வளைவில் திரும்பும்போது டிராஃபிக் காவலர் எங்கிருந்து பாய்ந்து வந்தார் என்று தெரியவில்லை. வண்டியை நிறுத்த சொல்லி சாவியை எடுக்க முயன்றார்.

"சார். சாவியை நான் யார்க்கிட்டயும் கொடுக்கறது இல்ல சார்.

அதுல என் மனைவியின் பெயரை பொறித்து வைத்துள்ளேன்" என்றேன்.

"சாவியிலா?" என்றார்.

"ஆமாம்" என்று தலையை ஆட்டினேன்.

என்னைய ஏற இறங்க பார்த்தார்.

"கொரானா காலத்தில இரண்டு பேர் வர்றதே தப்பு இதுல நீங்க மூணு பேரா?" என்றார்.

Representational Image
Representational Image
Vikatan Team

அவர்கள் இருவரையும் நாங்கள் பேசும் பேச்சு கேட்காதத் தூரத்தில் நிற்க சொன்னேன்.

விபரத்தை சற்றே சுருக்கமாக சொல்லிட்டு "மனிதாபிமான அடிப்படையில்தான் சார்" என்றேன்.

"அதுக்குனு சட்டத்தை மீறுவிங்களா?"

"சட்டமே மக்களுக்குத் தானே சார்."

"சட்டத்துக்கு மனிதாபிமானம் எல்லாம் கிடையாது, (அப்படியே இருந்திட்டாலும்) தேவையும் இல்லை. சட்டத்துக்கு ஆதாரம்தான் தேவை. நீங்க மூணு பேர் வந்தீங்க, நான் புடிச்சேன். அதான் ஆதாரம்.

பைனை தேயு, இல்ல ரசீது வாங்கிட்டுப் போய் எங்க வேணாலும் கட்டிக்கோ" என லைசென்ஸை கேட்டார். "மணியாவது சீக்கிரம்" என்றார்.

"நீங்க என்னைய தேய்ச்சுகிட்டாதான் உண்டு. தேய்க்குற அளவுக்கு வசதியில்லை" என்றேன். அவர் எதையும் காதில் வாங்குவதாக தெரியவில்லை.

"சார் 1 நிமிடம்"

"சொல்லு."

"சார். பார்க்கப்போனால் நீங்கதான் எனக்கு பணம் கொடுக்கணும்."

"இதென்ன தம்பி புதுசா இருக்கு?"

"வயசு பொண்ணு, தெரு விளக்குக்கூட எரியாத இந்த ராத்திரியில ரோட்டுல, அதுவும் பாலத்துக்கு கீழே, அதுவும் தனியாக நிக்கிறாங்க. என்னை மாதிரியோ இல்ல, உங்களை மாதிரியோ நல்லவனா இல்லாமல் எவனோ அவங்க கிட்ட தவறா நடந்துக்க முயற்சி பண்ணியோ இல்ல கடத்தியோ, காணாம போயி, அதுக்கப்புறம் அவங்க வீட்டு ஆளுங்க கேசு கொடுத்து நீங்க அந்தப் பெண்ணைத் தேடி, அதுகப்புறம் அவனுங்களைத் தேடி அரசாங்கத்துக்கு எவ்வளவு செலவு, உங்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் யோசிச்சு பாருங்க" என்றேன்...

"தம்பி உங்களுக்கு வீடு எங்க?"

சொன்னேன்.

"நீங்க இறக்கி விடுறிங்களா? இல்ல நான் இறக்கிவிடவா?" என்றார்.

"பரவாயில்ல சார். நானே இறக்கி விட்டுட்டுறேன் சார்."

காவல் துறை உங்கள் நண்பன்.

- சுகேஷ் சங்கரலிங்கம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு