Published:Updated:

வாட்டர் பாட்டில் வாங்க நெனச்சது ஒரு குத்தமா? - லாக்டெளன் ஷாப்பிங் பரிதாபங்கள் #MyVikatan

Representational Image
Representational Image ( Adrien Delforge / Unsplash )

மீதமிருந்த கடைசி டீயை ஒரே மொடக்கில் குடித்துவிட்டு இடத்தைக் காலி செய்தேன். நான் வளரவே இல்லை என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டார்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்தக் கொரோனா லாக்டெளன் காலத்தில் சில தண்ணீர் பாட்டில்கள் உடைந்து போயின!

ஏன்? எப்படி? என்ற விவகாரங்கள் இப்போதைக்கு வேண்டாம்!

வீட்டுக்கு மளிகைப் பொருள்கள் வாங்க ஏவப்பட்டிருந்தேன்! ஒருவித பயங்கலந்த உணர்வுகளுடன்தான் கடைகளுக்குச் செல்வது வழக்கம்!

நிறைய கசப்பான அனுபவம் பெற்று இருப்பதால் முன் எச்சரிக்கையாக எழுதிக்கொள்வது மட்டுமல்லாமல் சத்தமாகப் படித்துக் காண்பித்துவிட்டுதான் வீட்டிலிருந்து வெளியேறுவேன்.

Representational Image
Representational Image
Pixabay

குறிப்பாக எது `கி’ எதுவெல்லாம் ``கி.கி” என தெளிவாகக்கேட்டு அளவை உறுதி செய்துகொள்வேன்.

எனக்கு பிரச்னையே மசாலா வகையறாக்கள் தான்! மாற்றி வாங்கிவிட்டால் காரசாரமான வார்த்தைகளும் ரசங்களும் விதவிதமாக மணக்கும்!

எனவே, குறிப்பாக சமையல் அயிட்டங்களில் சொன்னதைத் தத்ரூபமாக வாங்குவேன்! அதில் எவ்வித மாற்றமும் செய்ய தார்மீக உரிமையும் இல்லை என பழக்கப்பட்டு இருந்தேன்.

மற்ற கச்சாப் பொருள்கள் வாங்கக் கொஞ்ச முன்னும்பின்னும் சொந்த அறிவைப் பயன்படுத்துவேன்!

அதில் கூட அதிக தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வேன்!

கொஞ்சம் பிசகினாலும் அதற்கு முழுப்பொறுப்பு நான்தான்!

சென்ற முறை புதிய கம்பெனி ஷாம்பூ என பிரியப்பட்டு வாங்கிப் போய், அதை கடைசி வரை நான்தான் தலைக்குப் பூசிக் குளிக்கிறேன்.

என் தலைக்கு இன்னும் பத்து மாதங்கள் வரும்போல!

இந்தத் தலையின் மீது வழக்கமாகப் போகும் சலூன் கடைக்காரருக்கு பெருங்கருணை உண்டு!

என் தலை மீதான முடியைத்திருத்தம் செய்யும்போது `உங்க தலைக்கு ரொம்ப நேரமாகுது சார் என்பார்! ’

சுழலும் இருக்கையில் உட்கார்ந்தவுடன் கண்கள் சுழல ஆரம்பித்துவிடும்!

Representational Image
Representational Image
Pixabay

ஹேர் கட்டிங் என்பதை முடிதிருத்தம் எனச் சொன்னது வித்தியாசமாக இருக்கிறதா?

குடிகாரர்கள் மதுப்பிரியர்களாகியிருக்கும்போது ஏற்கெனவே இருப்பதை இருப்பது போலச் சொல்வது தவறில்லையே!

இந்த முறை வித்தியாசமான வண்ணங்களில் பளிச் எனத் தெரிந்த போன்சாய் செடியும், வாட்டர் பாட்டிலும் என் கண்களை உறுத்தின.

அருமையான கலர்! பார்த்தவுடன் தாகம் தீரும் உணர்வு!

சில பொருள்கள் பிடித்துவிட்டால் நம்மை அறியாமல் குழந்தைகளாக மாறி யோசிக்காமல் வாங்கி விடுவோம்!

அப்படிதான் அந்த வாட்டர் பாட்டிலை வாங்கிவிட்டேன்!

அது சூப்பர் கூல் பிராண்ட்! இரண்டு பாட்டில் 250 ரூபாய்!

பொருள்களை சுமந்துகொண்டு படிகளில் இறங்க மனமில்லாமல் எஸ்கலேட்டர் வழியாக இறங்கினேன்! அது வழக்கமாக அமைக்கப்பட வேண்டிய 30 டிகிரி கோணத்தைவிட அதிகமாக சாய்ந்து செங்குத்தாக இருப்பதுபோல இருந்தது. இதுபோல கோவை ரயில் நிலைய எஸ்கலேட்டரில் இறங்கும்போது உணர்ந்திருக்கிறேன். அன்று பயந்து போய்… அதில் அவசரமாக கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்! எஸ்கலேட்டரில் இறங்கி நடப்பதை நான் எதோ பெருந்தவறு செய்வதாக எல்லோரின் பார்வையும் இருந்தது.

இது அவசர உலகம்! எஸ்கலேட்டரில் வழியாக அவசரமாக எறுவதும் இறங்குவதும் ஆச்சர்யமானது அல்ல!

இப்போது எஸ்கலேட்டரிலிருந்து விடுபட்ட உடனே கண்ணில் பட்டது மாஸ்க் அணிவரிசை!

Representational Image
Representational Image
Pixabay

வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல மாஸ்க் வாங்கலாம் என நினைத்தேன்.

பல மாடல்கள் இருந்தன.

இப்படி நிறைய வகைகள் இருந்தாலே குழப்பம்தான்!

முதலில் தென்பட்டது செவிலியர்கள் கட்டுவது!

பச்சையும் இல்லாமல் நீலமும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம்!

வாங்கி முகத்தில் கட்டினால் செம பந்தாவாக இருக்கும்

ஆனால், திரும்பப் பயன்படுத்த முடியாது. அதனால் அது முதல் சுற்றிலேயே தள்ளி வைக்கப்பட்டது.

அடுத்ததாக கண்ணில் பட்டது கண்கவரும் வண்ணங்களில் பனியன் துணியில் செய்யப்பட்டவை! அவை சிங்கிள் லேயர், டபுள் லேயர், ட்ரிபிள் லேயர் எனப் பிரிக்கப்பட்டிருந்தன!

சிங்கிள் லேயர்!

இதில் சேப்டி இல்லையாம்!

கடைக்காரர் பயம் காட்டினார்!

வெளியே இருந்து வைரஸ் புக அதிக வாய்ப்பிருக்கு என்ற தகவலைப் பரப்பினார்.

அப்புறம் ஏன் விக்கிறீங்க? ன்னு கேட்கலாமென தோன்றியது.

விலையும் 7 ரூபாய்தான். கெளரவ பிரச்னையும் எட்டிப்பார்த்தது! அதனால் அதுவும் நிராகரிப்பட்டது.

அடுத்து இரண்டு லேயர் மாஸ்க்!

Representational Image
Representational Image
Vera Davidova / Unsplash

இதில் ராமராஜன் சட்டை வண்ணங்களில் பளிச் என இருந்தன. முகத்தில் கட்டினால் பச்சிளம் குழந்தைகளின் உள்ளாடையை முகத்தில் கட்டிய உணர்வு வந்தமாதிரி இருக்கும்! எனவே, அதுவும் வேண்டாம்!

அடுத்து மூன்று லேயர்!

கழற்றலாம்! துவைக்கலாம்! காய வைக்கலாம்! என பல வித இலவச விளம்பரங்கள் உபரியாகக் கடைக்காரரிடம் இருந்து வந்தன. அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டேன்!

மாதிரிக்கு எடுத்துப் போட்டு பாருங்க சார்! என சொன்னார்!

என்ன சொல்றீங்க?

அழுக்குப்படாம மாட்டிப்பாருங்க...

பிடிச்சிருந்தா வாங்குங்க... சார்!

கொஞ்சம் ஆடித்தான் போனேன்!

பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக்கட்டினேன்!

திரும்பும் வழியில் ஒரு சுவையான டீ! கொரோனா பயத்தில் வழக்கமாக ஆறஅமர உட்கார்ந்து குடிக்க முடியாது. பேப்பர் கப்பில் கொடுக்கப்படும் டீயை நின்றுக்கொண்டேதான் குடிக்க வேண்டும்!

டீ குடித்துக்கொண்டே பேச்சுக்கொடுத்தேன்!

``கொரோனாவில் கடையைத் திறக்காம… கஷ்டப்பட்டு இருப்பீங்க…’’

``ஆமாங்க சார் பயங்கர கஷ்டப்பட்டு போயிட்டோம்…’’

மனதுக்கு கஷ்டமாயிருந்தது. அமைதியாக இருந்தேன்!

அமைதியைக்கலைக்க மூன்றாவதாக ஒருவர் மூக்கை நுழைத்தார்!

``ஆமா… அதுக்குதான் கவர்மென்ட் வேலைக்கு போயிருக்கணும்!’’

Representational Image
Representational Image
Pixabay

அந்த நேரத்தில் எனது அரசாங்க வேலையின் பெருமையை வெளிக்காட்ட விரும்பவில்லை! வந்த புன்னகையை மறைக்க டீ கப்பை கொஞ்சம் அதிகமாக சாய்த்து டீயை உறிஞ்சினேன்!

டீ பாதியாக குறைந்ததும் நான் அழுத்திப் பிடித்திருந்ததால் கப் ஒடுங்கி அதன் வடிவம் படகு போல மாறியது. அதே சமயம் பேச்சின் திசையும் மாறிப்போனது!

``அப்படியெல்லாம் இல்லண்ணா! இந்தத் தொழில் எப்படியிருந்தாலும் எங்க குடும்பத்தைக் காப்பாத்தும்! நான் அன்னிக்கு சைக்கிளில டீ வியாபாரம் செஞ்சேன். இன்னிக்கு கடை வைச்சுருக்கிறேன்! நாளைக்கு ஹோட்டல் வைப்பேன்! எனக்கு தெரிஞ்ச நாளிலிருந்து இவரு இப்படியே தானே இருக்காரு’’

என என்னை நோக்கி கையை நீட்டினார்.

தேரை இழுத்து நடுதெருவுக்ற்கு விட்டார். அடுத்தவர் எதோ பேச ஆரம்பித்தார்.

மீதமிருந்த கடைசி டீயை ஒரே மொடக்கில் குடித்துவிட்டு இடத்தைக் காலி செய்தேன். நான் வளரவே இல்லை என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லிவிட்டார்.

வீடு போகும் வரை டீ கசந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் பொருள்களை ஒப்படைத்துவிட்டு ``ஆளுக்கொரு வாட்டர் பாட்டில்!” என மனைவியிடம் பாட்டில்களைக் கொடுத்து `ஐ லவ் யு’ சொன்னது போல சந்தோசப்பட்டேன்!

சந்தோசமாக வாங்கி உருட்டிப்பார்த்தார்!

கிப்ட் பாக்ஸில் கூட அப்படி யாரும் விலையைத்தேடி இருக்க மாட்டார்கள்!

தேடித்தேடி கிடைத்தால் அது MRP ஆக இருக்கும்! அல்லது சுரண்டி வைத்திருப்பார்கள்!

நாமும் அதைத்தான் செய்வோம்! அதை நான் இங்கு செய்திருக்கலாம்!

என்னது 250 ரூபாவா?

பிளிப் கார்ட்டில் ரேட் பார்த்திங்களா?

எனக்கு அப்போது அதெல்லாம் தோணல...

சரி இப்பவாவது பாருங்க...

Representational Image
Representational Image
Pixabay

உடனே தேடிப்பார்த்தேன்!

எப்போதும் சுற்ற வைக்கும் நெட்... இன்று சுறுசுறுப்பாகி எளிதாக பிளிப்கார்ட் வழிகளை திறந்துவிட்டது.

ஜியோ வாழ்க!

Super Cool 2

Rs189

உண்மையிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது!

`சூப்பர் கூல்’ இப்போது மிஸ்டர் கூல்….

நெடுநேரமாக நெட் கிடைக்காதது போல நின்று கொண்டிருக்கிறேன்.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு