Published:Updated:

`சித்திரைத் திருவிழாவும் ஜில்லென்ற நினைவுகளும்!' - சிறுகதை #MyVikatan

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

பேசிக்கொண்டே ஒரு பந்தலில் ஒரு புளியோதரையை தொன்னையில் வாங்கி இருவரும் சாப்பிட்டனர்.. சாப்பிட்டு முடித்ததும் தூரத்தில் பச்சை நிற அனுமன் கொடி தெரிந்தது....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``மகேஷு.. வினோத் வெளிய நிக்கிறான் உள்ள கூப்பிட்டா வர மாட்டிங்கிறான் எங்கயும் வெளிய போறீங்களா ?"

என்று கேட்டார் மகேஷின் அப்பா முத்தையா.

``ஆமாப்பா.. எதிர்சேவைக்குப் போறோம்" என்றான் மகேஷ்.

``ஏன் தேரு இழுக்க போறேன்னு போட்ட ஆட்டம்லாம் பத்தாதா.. எதிர் சேவைக்கு வேற போகணுமா..?" என முத்தையா சொல்ல.

``ஆமா நீ போட்ட ஆட்டத்தெல்லாம் லோக்கல் சேனல்ல போட்டு போட்டுக் காட்டிட்டான்" என மகேஷின் தங்கை சொல்ல..

``ஏன் டிவில மட்டும்தான் பாத்தியா.. ஃபேஸ்புக்ல குணா அண்ணன் தேரு கூட்டத்தில எடுத்த போட்டாவுல பறந்த மேனிக்கு இருப்பேன் அதப் பாக்கலியா?' என்றான் மகேஷ்..

``மகேஷு.. இன்னைக்கு மாசி வீதில சாமி வரும்.. கூட்டம் எல்லாம் எதிர் சேவைக்குப் போயிரும் ப்ரீயா பாக்கலாம். அப்டியே தேரு போன தடத்தைப் பாத்துட்டு வருவோம்.. வந்து தூங்கு.. எப்புடியும் நாளைக்கு காலைல வைகை ஆத்துக்கு அழகர பாக்க போவல்ல.. உன் மாமன் மாயழகர் வேற ஆத்துல மொட்டை போடுவான்.. அதுக்கும் போவணும்ல.." என முத்தையா சொல்ல..

``எப்பா.. தெனமும்தான் தூங்குறோம்.. அழகர் கோயில்ல இருந்து நம்மள தேடி வர்ற அழகரை எதிர்சேவைக்குப் போய் அழைச்சு வரவேற்கிறத விட்டுட்டு காலைல எந்திரிச்சு பவுமானமா போக சொல்ற.. அனத்தாம போப்பா அங்கிட்டு"

என்று வேகமாக தலையை கலைத்து கலைத்து சீவிக்கொண்டிருந்தான்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

வெளியில் பொறுமை தாங்காமல் வினோத் ஹார்ன் அடிக்க ஆரம்பித்தான்..

``இர்ரா இர்ரா வாறேன்.. இந்த அலாரம் பய வேற சொன்ன நேரத்துக்கு டான்னு வந்து உயிர வாங்குறான்" என்று முனகிக்கொண்டே செருப்பை போட்டான்..

வாசலுக்கு வந்த முத்தையா.. ``ஏதும் பஞ்சாயத்து இழுக்காம .. போனோமா வந்தோமானு இருக்கணும் மகேஷு.. அங்க போய் ஆட்டம் போடாம சாமியைப் பாத்துட்டு நைட்டு சீக்கிரம் வந்துரு.. வண்டியை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவுல போட்டுட்டு போ.." என கிசுகிசுத்தார்..

``எப்பா நீ உன் ரேடியாவ ஆப் பண்ணுப்பா எனக்குத் தெரியாதா.. உன் வயசுல நீ போடாத ஆட்டமா நான்லாம் போடப்போறேன்.. அனத்தாம போப்பா"

என்று கத்திக்கொண்டே வினோத்தின் வண்டியில் ஏறினான்.. ஜெயந்த்புரத்திலிருந்து தெக்குவாசல், கீழவாசல் தாண்டியவுடன் கண்ணுக்கெட்டும் தூரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திருவிழாவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்..

பலூன் பொம்மை விற்பவர்கள் சாமானை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.. நெல்பேட்டையிலிருந்து யானைக்கல் போகும் வழியில் AV மேம்பாலத்தில் பேரிகாட் போட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.. யானைக்கல் பாலம் வழியாக கோரிப்பாளையத்தை அடைந்தவுடன்..

``மாப்ள.. வண்டியை பள்ளிவாசல் தெருல விடு.. அங்க போட்டுப் போவோம் டா" என மகேஷ் வினோத் முதுகை தட்ட.. பள்ளிவாசல் தெருவில் பல இடங்களில் காலையில் மக்களுக்கு நீர் மோர் கொடுக்க பந்தல் அமைக்கப்பட்டு லைட் போடப்பட்டிருந்தது...

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

போகும் வழியில் அழகருக்கு மாலை போட்டு அழகர் வேடமிட்டு தீப்பந்தம் ஏந்தி வருபவர்கள் மக்களை ஆசிர்வதித்து தீப்பந்தத்தில் எரிந்த கரியை எடுத்துப் பொட்டு வைத்து கொண்டிருந்தனர். சில அழகர்சாமிகள் ஆட்டுத்தோலில் செய்த பையில் தண்ணீர் நிரப்பி மக்கள் மீது அடிப்பார்கள். இவர்கள்தான் மறுநாள் நடக்கும் தண்ணீர்பீச்சும் திருவிழாவில் ராமராயர் மண்டகப்படியில் அழகரை நிறுத்தி சுற்றி நின்று தண்ணீரை பீச்சி அடித்து கள்ளழகரை குளிர்விப்பார்கள். இந்த தண்ணீர் பீச்சும் சாமிகள் திருவிழாவுக்கு வரும் மக்கள் மீது தண்ணீர் பீச்சுவதை மக்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வார்கள்.. ஒரு சில சாமிகள் பறையடித்துக் கொண்டு கூட்டத்தோடு வருவார்கள்.. அப்படி வந்த ஒரு கூட்டத்தைப் பார்த்து மகேஷுக்கும் வினோத்துக்கும் குதூகலம் ஒட்டிக்கொண்டது..

ஆடிக்கொண்டே தல்லாகுளம் கருப்பசாமி கோயிலுக்கு ஒரு கும்பிடு போட்டு தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை சென்றார்கள்.

மக்கள் கூட்டம் தல்லாகுளத்தை நிரப்பி இருந்தது. காவல்துறை வியர்க்க வியர்க்க கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணி செய்து கொண்டிருந்தது.. சித்திரை திருவிழாவில் காவல்துறையின் பங்கு வணங்கத்தக்கது.

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

``மகேஷு.. பசிக்குது டா.. என்னமாவது வாங்கி குடுயா" என்றான் வினோத்..

``ஒனக்கு இப்போ புல் மீல்ஸ் வேணுமா இல்ல கொஞ்சோண்டு போதுமா" என்றான் மகேஷு.

``இப்போதைக்கு ஏதாவது லைட்டா சாப்பிட்டா போதும் மாப்ள" என்றான் வினோத்..

``இங்க உள்ள எல்லா மண்டகபடிலயும் பொங்கல் புளியோதரை தயிர் சாதம்லாம் குடுப்பாங்க.. அது போக நீர்மோர், பானகம், ரஸ்னா, ரோஸ்மில்க்னு எல்லாம் கிடைக்கும்.. அந்தா தெரியுது பாரு ஒரு மண்டபம் அதுல சாமி வந்துட்டு போனதும் முழுச்சாப்பாட்டோட சமபந்தி நடக்கும்" என்றான்..

பேசிக்கொண்டே ஒரு பந்தலில் ஒரு புளியோதரையை தொன்னையில் வாங்கி இருவரும் சாப்பிட்டனர்.. சாப்பிட்டு முடித்ததும் தூரத்தில் பச்சை நிற அனுமன் கொடி தெரிந்தது.. வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டு எங்கெங்கும் ஒலித்தது.. வான வெடிகள் விண்ணை முத்தமிட்டு வண்ணமாய் வழிந்தது..

``சாமி வந்துட்டாருயா" என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய் கூட்டத்துக்குள் நுழைந்து சாமியைப் பார்த்ததும் மக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க வரவேற்றனர்..

மறுபடியும் வந்த ஒரு டிரம் செட் குரூப்போடு ``ரண்டண்டன் டசுக்கு டசுக்கு" என்ற தாளத்துக்கு ஆட்டம் போட்டுவிட்டு மகேஷை வீட்டில் விட்டுச் சென்றான் வினோத்.. அதிகாலையில் மகேஷின் அலாரம் அடிப்பதற்கு முன்னால் வந்து ஹார்ன் அடித்தான் `அலாரம்' வினோத்.

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

அப்படியே எழுந்து வந்து ``டேய் அலாரம் என்னடா இம்புட்டு சீக்கிரம் வந்துட்ட.. " என கேட்க..

``சீக்கிரமா.. டேய் 6.40-க்கு அழகர் இறங்குறாருனு டிவில சொன்னாங்க.. 6 மணி ஆச்சு வேகமா வா" என்றான் வினோத்..

இருவரும் கிளம்பி நெல்பேட்டையில் வண்டியை நிறுத்தி கூட்டத்துக்குள் சென்றார்கள்.. வைகையின் தெற்குக் கரையில் நின்று பார்த்தபோது பார்க்கும் இடமெல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்தது.. தங்கக்குதிரையில் வரும் கள்ளழகர் கண்ணில் பட்டுவிட எங்கெங்கும் சக்கரை தீபத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்..

AV மேம்பாலத்தில் மக்களோடு மக்களாய் நாடெங்கும் ஒளிபரப்ப TV கேமரா குழு நின்றுகொண்டிருந்தது. அழகரை மிக அருகில் காட்ட ஜிம்மி ஜிப் கேமரா வடகரையில் அமைக்கப்பட்டிருந்தது.. கூட்டத்தில் ஒரு சிறுவன் தன் தந்தை தோள் மேல் ஏறிக்கொண்டு,

``அப்பா சாமி தெரியலப்பா... சாமி எப்ப வரும்"

என்று கேட்டு கொண்டிருந்தான்..

அதற்கு ``அனுமார் கொடி வருதானு பாரு கொடி வந்ததும் சாமி வந்துரும்" என்றார் அப்பா..

இதைப் பார்த்து மகேஷுக்கு சிறுவயது நினைவு வந்தது.. ``இங்கேரு வினோத்.. இப்டிதான் எங்க அப்பா தோள்ல உக்காந்துட்டு சாமி தெரியலனு சொல்லிட்டு இருப்பேன்.. அப்பறம் நாள்செண்டு தான் தெரிஞ்சது என்னைய தூக்கி நின்னதே சாமி தான்னு.. மனுசன் ஹார்ட் அட்டாக் வந்ததுல இருந்து கூட்டத்துக்குள்ள வர முடியல அவரால.. அவருக்கு சித்திரை திருவிழாக்கு வர ரொம்பப் பிடிக்கும்" என்று முகம் வாடியபோது..

``யப்பா நேத்து அவரை ரேடியாவ அமத்துனு அந்த கத்து கத்திட்டு இங்க வந்து தவமாய் தவமிருந்து படம் ஓட்டுறியா" என்றான் வினோத்..

``சர்ரா சர்ரா.. உன் அலாரத்த ஆப் பண்றா.. வா ஆத்துக்குள்ள இறங்குவோம்" என்று சிரித்துக்கொண்டே சொன்னான் மகேஷ்.

``இம்புட்டு தண்ணி போய்ட்டு இருக்கு.. ஆத்துக்குள்ள எங்கிட்டு இறங்க.. போயா" என்று வினோத் சொல்ல..

``அட வாப்பா இடுப்பளவு தண்ணிதான் இருக்கும்" என்று இழுத்து சென்றான்..

``டேய் பயமா இருக்குடா.. நான் பாலத்துக்கு கீழ படி வழியா வரேன்... போன் நனஞ்சா என்னத்துக்கு ஆகுறது.. " என்றான்..

``படி வழியா போறதுக்கு நம்ம என்ன சின்னபிள்ளையா.. போன் நனையாம இருக்க ஒரு ஐடியா வச்சுருக்கேன் மிஸ்டர் அலாரம்.." என்று பேன்ட் பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் கவரை எடுத்து போனை போட்டு சுருட்டி வைத்து அவனை இழுத்துக்கொண்டு கரை வழியாக ஆற்றில் இறங்கினான்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

``மண்ணு சரியும் பாத்து பைய்ய வாயா மாப்ள" என்று கரிசனம் காட்டிக்கொண்டு இறங்கினான்..

வைகைத் தண்ணீர் பட்டதும் காலோடு மனதும் குளிர்ந்தது. மெல்ல மெல்ல இறங்கி இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போய்க்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம். பக்கவாட்டில் சற்று தொலைவில் ஆற்றைக்கடந்து கொண்டிருந்த அந்த இளம்பெண் ஆற்றில் நிலை தடுமாறி ஆற்றின் வேகத்தில் அடித்து வந்து கொண்டிருந்தாள்.

நொடிப்பொழுதில் வினோத்தும் மகேஷும் ஆளுக்கு ஒரு கையாய் அவளை பிடித்து மேட்டுக்கு ஏற்றினார்கள்.

``ஏத்தா.. பாத்து வர மாட்டியாத்தா. கொஞ்சம் விட்டா வெங்காயத்தாமரையோட தாமரையா அடிச்சுட்டு போயிருப்ப.." என்றான் மகேஷ்.

``பெருசா காப்பாத்திட்டோம் னு நெனப்போ..? ஏதோ லேசா ஸ்லிப் ஆகிட்டேன். அதுக்கு இப்டி சவுண்டக் குடுக்குற.. எந்த பொண்ணுடா விழும்.. நம்ம காப்பாத்தலாம்னு திருவிழாக்கு வந்தியாக்கும்.." என்றாள்.

``ஏ இங்கேருமா எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு.. பொம்பள பிள்ளைங்க மேல மதிப்பு மரியாதை வச்சிருக்கேன் பேசாம போயிரு.. பாவம்னு தூக்கி விட்டா லந்த பாத்தியாடா மாப்ள.." என்றான் வினோத்தைப் பார்த்து.

தூரத்தில் இருந்து ஓர் அம்மா ஓடி வந்தது ``ஏ தாமர. படி வழியா போவோம்னு சொல்லிட்டு என் கைய உதறிட்டு இங்கிட்டு வந்துட்ட. வயசுப்பிள்ளை கூட்டத்தில என்னமும் ஆகிட்டா உங்க அப்பனுக்கு யாரு பதில் சொல்றது" என்று திட்டி அவளை இழுத்துச் சென்றார்..

``மாப்ள அந்தப் பிள்ள பேரு தாமரைனு உனக்கு எப்படி தெரியும்.. வெங்காயத்தாமரையோட தாமரை மாதிரி ஆத்தோட போயிருப்பனு சொன்னயே அதான் கேக்குறேன்" என்றான்.

வினோத்.. ``டேய் நீ வேற.. நான் ஏதோ எகன மொகனயா பேசணும்னு அடிச்சு விட்டேன்யா" என்று பேசிக்கொண்டே வைகை ஆற்றுக்குள் வடகரைக்கு அருகே அமைக்கப்பட்ட அறநிலையத்துறை அமைச்சர் மண்டபத்துக்கு அருகில் உள்ள ஆற்றுத் தண்ணீரில் நின்று அழகருக்காக காத்திருந்தனர்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

சற்றுநேரத்தில் பச்சை அனுமன்கொடி வந்தது.. வாராரு வாராரு பாட்டு ஒலித்தது.. ஜிம்மி ஜீப்கள் மேலே ஏறின.. அழகர் தங்கக்குதிரை பளபளக்க நாட்டின் விவசாயம் செழிக்க பச்சை பட்டுடுத்தி ஆற்றின் வடகரை வழியாக இறங்கினார்.. மக்கள் சொம்பில் நாட்டுச்சர்க்கரை நிரப்பி வாழை இலையால் மூடி அதன் மேல் சூடம் ஏற்றி உயர்த்திப் பிடித்து கோவிந்தா கோவிந்தா என்று முழங்கினர்.

தேவாவின் இசையில் தேவாவும் எஸ்.ஏ.ராஜ்குமாரும் பாடிய வைரமுத்துவின் வரிகளோடு அழகர் ஆற்றில் இறங்கும்போது மெய் சிலிர்க்கும். ஆற்றில் இறங்கி மண்டகப்படியைச் சுற்றி வரும்போது சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது என்ற வரியோடு வரும் பாடலின் பகுதிகள் திரும்பத் திரும்ப ஒலிக்கப்படும். அப்போது ஆற்றில் இருக்கும் அத்தனை பேரும் தண்ணீரை அடித்து மேல் எழுப்பி ஆடுவார்கள்..

``என்னயா அலாரம் ... எப்படி மாஸா இருக்கா? " என்று மகேஷ் கேட்க..

``மரணமாஸ்யா மகேஷு" என்று துள்ளிகுதித்தான் வினோத்.. ஒரு வழியாக கொண்டாட்டம் முடிந்து அழகர் கரையேறினார்..

``அவ்ளோ தானா நம்மளும் மேல போயிருவோம் அப்டியே" என்றான் வினோத்.

```இரு யா மாயழகு மாமா ஆத்துக்குள்ள மொட்டை போடும்.. பேர்லயே அழகரை வச்சுக்கிட்டு வருஷம் வருஷம் மொட்டைய போட்டிருவாரு" என்று சொல்லிக்கொண்டே ஆற்றின் மேட்டுப் பகுதிகளில் தேடினான்.. ஒரு சிறுவனுக்கு மொட்டை போட்டுவிட்டதால் அழுதுகொண்டிருந்தான்.. அவன் மொட்டையில் சந்தனம் தடவிகொண்டிருந்தது மட்டும் கண்ணில் பட்டது. மாயழகு மாமாவைக் காணவில்லை.

``மாமாவைக் காணோம் மாப்ள வா மேல போய் போன் போடுவோம்" என்று வடகரையில் ஏறினார்கள்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

மெதுவாக நகர்ந்து ஒரு நீர்மோர் பந்தலை அடைந்தார்கள் மகேஷும் வினோத்தும்..

``நசுக்கித் தள்ளிட்டாய்ங்க மாப்ள.. வா ஒரு மோர் குடிப்போம்.. மாங்கா கருவேப்பிலை இஞ்சிலாம் போட்டு வாசமா இருக்கும்" என்று வினோத்திடம் சொன்னான்..

பெரும்பாலும் மோர் பந்தலில் 3,4 டம்ளர்கள் மட்டுமே இருக்கும். வாய் வைக்காமல் அண்ணாந்து குடித்துவிட்டு மற்றவர்களிடம் கொடுப்பார்கள்.

வினோத் குடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் குரல்.. ``அண்ணே குடிச்சுட்டு குடுங்க" திரும்பி பார்த்த வினோத் ``ஏ மாப்ள இங்கேர்ரா இந்த பிள்ளடா" என்று மகேஷிடம் சொன்னான்..

``அட நம்ம தாமர.. " என்றான் மகேஷ்..

``என் பேரு தாமரைனு எப்படி தெரியும் .. என்ன என் பின்னாடி சுத்திட்டு இருக்கியா நீ" என்று கேட்டாள்..

``ஆமா இவ பெரிய அழகி.. இவ பின்னாடி சுத்துறாங்க.. உங்க அம்மா உன் பேரச் சொல்லி அடிச்சு இழுத்துட்டு போச்சுல அப்போ கேட்டேன்" என்று சொன்னான் மகேஷ்.

அவள் அவனை முறைத்து வினோத் கையில் இருந்து டம்ளரை பிடிங்கி மோர் வாங்கி குடித்தாள்.. ஒரு கணம் மகேஷுக்கு அவள் முறைத்தது அழகாய்த் தெரிய அவளைப் பார்த்தான்.. ஜிலு ஜிலுவென பட்டுப்பாவாடை சட்டை, பெரிய ஜடை, அவள் கண்ணை அழகாய் காட்டும் கண்மை, இருக்கா இல்லையான்னு தெறியாத சின்ன மூக்குத்தி, அவள் திரும்பும்போது ஆடிய அவள் ஜிமிக்கி என்று ரசிக்க ஆரம்பித்தான்.

மோர் குடித்துவிட்டு மகேஷிடம் பேச்சு கொடுத்தாள்.. "உன்னை எங்கேயோ பாத்துருக்கேனே" என்றாள்..

``இந்தா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி உன் உயிரை காப்பத்துனேன்ல அப்போ பாத்த" என்றான் மகேஷ்..

``என்ன லந்தா... இதுக்கு. முன்னாடி பாத்துருக்கேன் உன்னை.. ஆமா உனக்கு தங்கச்சி இருக்குனு சொன்னல.. எந்த காலேஜ் ல படிக்குது..?" என்று கேட்க,

``அது மீனாட்சி காலேஜ்ல படிக்குது" என்றான்..

``அட நானும் மீனாட்சி காலேஜ்தான்" என்றாள்.. அப்படியா அப்போ என் தங்கச்சியை காலேஜுக்கு வண்டில கொண்டாந்து விடும்போது பாத்துருப்ப" என்றான்..

"இல்லையே அப்டி ஏதும் தோணல.. சரி உன் தங்கச்சி பேரு என்ன.. எந்த டிபார்ட்மெண்ட்?" என்று கேட்டாள்..

``அவ பேரு பாண்டிச்செல்வி.. பி ஏ தமிழ் படிக்கிறா" என்றான்..

``அட .. பாரேன் என் பேரு தாமரைச்செல்வி.. உன் தங்கச்சி பேரு பாண்டிச்செல்வி உன் பேரு என்ன" என்று கேட்க..

``என் பேரு மகேஷு.. இவன் என் மாப்ள அலாரம்.. ச்சீ... வினோத்" என்றான்..

``ஹாய் அலாரம் அண்ணா.." என்று வினோத்திடம் பேசிவிட்டு மகேஷிடம் திரும்பி ``அதென்ன உனக்கு மட்டும் மாடர்னா மகேஷ்னு பேர் வச்சுட்டு உன் தங்கச்சிக்கு மட்டும் பாண்டிச்செல்வினு பேரு..?" என்றாள்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

``மகேஷ் உனக்கு மாடர்ன் பேரா சரிதான்.. எங்கய்யா ரெண்டாவது பொட்டப்புள்ளதான் வேணும்னு பாண்டி கோயில்ல நேத்துகிட்டு பிறந்த பிள்ளை.. அதான் பாண்டிச்செல்வி" என்றான்..

``ஓ.. ஓ சரி சரி.. எதுக்கு பி.ஏ தமிழ் .. சும்மா பேருக்கு ஒரு டிகிரி படிக்க வச்சுட்டு.. கட்டிகுடுக்கப் போறீங்களா" என கேட்டதும் கோவமானான் மகேஷ்..

``ஏன் தமிழ் இலக்கியம் படிச்சா என்ன கொரை.. என் தங்கச்சி எம்புட்டு பெரிய பேச்சாளர் தெரியுமா.. டிவிலலாம் பேசிருக்கு" என்றான்..

``சரி சரி அமத்துப்பா.. தெரியாம சொல்லிட்டேன்.. நீயே இம்புட்டு பேசுற உன் தங்கச்சி எம்புட்டு பேசுமோ.. எனக்குதான் பின்னாடி கஷ்டம்" என்றாள்..

``ம்ம்ம்.. என்னது" என்று அடங்கி மீண்டும் குரல் எழுப்பினான்.. "

பின்னாடி.. உனக்கு வர்ற பொண்டாட்டிக்கு கஷ்டம் .. வாய் ரொம்ப பேசி நாத்தனார் சண்டை போடுவால அதை சொன்னேன்ப்பா" என்றாள்.

லேசாக புரிந்து சிரித்துக்கொண்டே தலையை ஆட்டிக்கொண்டு ``சரி சரி... உன்னை இப்போ எப்டி உங்கம்மா தனியா விட்டுச்சு இப்போ" என்றான்..

``அது எங்கே விட்டுச்சு எங்க அப்பா அந்தா நிக்கிறாரு பாரு பெரிய மீசை வச்சுக்கிட்டு.. " என்றாள்..

``எங்க எங்க" என்று பதறியவனிடம்..

``மீசையைப் பாத்து பயப்படாத.. அந்தா வெள்ளைச் சட்டை போட்டு போன் பேசிட்டு இருக்குல.. அதான் என் அப்பா" என்றாள்..

``ஆமாமா பயப்படுறாங்க அவருக்கு.. எனக்கு ஒன்னும் பயமில்லை" என்றதும்..

``சரி நான் போறேன்" என்று பொய்க்கோபத்துடன் ஒரு அடி எடுத்து வைத்தாள். " அடுத்து எப்போ பாக்கலாம்" என்றான்.

``மூன்று மாவடி திருவிழாவுக்கு வருவியா?" என்று புன்சிரிப்புடன் கேட்டாள்.

``ஆமா வருவேன்" என்றதும்.. அங்க வந்து அந்தக் கூட்டத்துல என்ன மறுபடி மீட் பண்ணிட்டா நம்ம மேல பேசலாம்" என்றாள்.

``மேலயா... மேல என்ன பேசணும்.. சரி நான் வர்றேன் தேடி பார்ப்பேன்.. ஒரு வேளை நீ கண்ணுல தட்டுப்படலனா அங்க ஓர் இடத்தில நிப்பேன். நீ வந்து என்ன பாரு.." என்றதும்

``எந்த இடம்" என்று கேட்டாள்..

``ரேஸ் கோர்ஸ் பக்கத்துல தாமரைத்தொட்டி இருக்குல.. தாமரை தாமரைத்தொட்டி.. அங்க நிப்பேன்" என்று சொன்னதும் வெட்கச்சிரிப்பு சிரித்துவிட்டு சரி என்று சென்றாள்.

``என்னடா நடக்குது இங்க.. விட்டா இங்கேயே அவங்க அப்பன்கிட்ட போய் பொண்ணு கேப்ப போலயே.. இம்புட்டு பேசிட்டு அவ போன் நம்பர ஏண்டா வாங்கல" என்று கேட்டான் வினோத்..

``அப்டிலாம் பொம்பளப்பிள்ளைகிட்ட போன் நம்பர பொசுக்குன்னு கேக்கக் கூடாது மாப்ள .. என்ன என் தங்கச்சி காலேஜ் தான.. நம்மளே கண்டுபிடிப்போம்.." என்று சொல்லி விட்டு..

``போன் நம்பர்னு சொன்னதும் ஞாபகம் வருது, மாமாவுக்கு போன் போட்டு எங்க இருக்காரு னு கேக்கணும் என்று சொல்லிக்கொண்டே கவரிலிருந்து போனை எடுத்துப் பார்த்தான்.. 5 மிஸ்டு கால்.. மாமா பண்ணியிருக்கிறார்.

மாமாவுக்கு போனை போட்டு ``மாமா போன் உள்ள இருந்துச்சு ஆத்துக்குள்ள இருந்தேன் மாமா.. ஆத்துக்குள்ள உங்களை தேடினேன் காணோமே" என்றான்.

``மாப்ள உனக்கு எத்தனை போன் அடிக்கிறது.. நாங்க நேரமே மொட்டை போட்டு சாமியை பாத்துட்டு ராமராயர் மண்டபத்துக்கிட்ட வந்து உக்காந்தாச்சு. கூட்டம் சேர்ந்துரும் இடம் பிடிக்க முடியாதுனு நேரமே இங்க வந்துட்டோம் நீயும் இங்க வந்துரு.." என்றார் மாமா..

சரி மாமா என்று போனை வைத்து விட்டு ராமராயர் மண்டபத்துக்கு அருகில் சென்றார்கள்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

தாமரைச்செல்வி அங்கே ராமராயர் மண்டபத்துக்கு அருகில் உக்காந்துகொண்டு ``ஒரு வேளை அவன் திருவிழாக்கு வரலைனா என்ன செய்ய.. வருவான்.. ஒரு வேளை வரலைனா? வரலைனா அவன் தங்கச்சி நம்ம காலேஜ் தான அவளை தூக்கிருவோம்" என்று யோசித்துக்கொண்டிருந்தாள்..

மகேஷ் அங்கு வந்ததும் தாமரைக்கு அதிர்ச்சி.. ``டேய் இங்க ஏண்டா வர்ற.. குடும்பமே இருக்குடா.. ஐயோ பஞ்சாயத்து இழுத்துருவான் போலயே... நீ வேற நல்ல பையன்னு நெனச்சு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டியேடி தாமர.." என்று மனதுக்குள் பதறினாள்.

மகேஷ் அவளை லேசாகப் பார்த்து ``உன்னைப் பார்க்க வரல" என்று சைகை காட்டிவிட்டு மாமாவிடம் போய் பேசினான்.

``மாமா எப்டி இருக்க மாமா.. "

``நல்லா இருக்கோம் மாப்ள வா வா வாங்க தம்பி" என்று வினோத்தையும் வரவேற்றார்.

ஒருபுறம், `நல்லவன்தான்' என்று பெருமூச்சுவிட்டு அவன் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்..

மகேஷுக்கும் அவன் மாமாவுக்கும் நடந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த தாமரைக்கு ஒரே சந்தோஷம்.. ஏனென்றால் தாமரைக்கு மாயழகு மாமா சித்தப்பா முறை. மகேஷை சிறுவயதில் மாயழகு மாமா வீட்டில் பார்த்தது ஞாபகம் வந்தது.. எங்கேயோ பார்த்த ஞாபகம் என்ற சந்தேகம் தீர்ந்தது.. இது தெரியாமல் மகேஷ் மாமாவிடம் தாமரையின் அப்பாவை காட்டி,

``மாமா அந்த மீசக்காரரு யாரு மாமா" என்று கேட்டான்.. அவரு உங்க அத்தைக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சியை கட்டுனவரு மாப்ள.. எனக்கு பங்காளி முறை" என்றதும் மகேஷ் பறக்க ஆரம்பித்தான்..

``அப்போ எனக்கு அவரு மாமா முறையா" என்றான்..

ஆமா மாப்ள என்றதும் ``அழகரய்யா.. சேர்த்து வச்சுட்டயா" என்று மனதில் நினைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான்... அவளும் இவனைப் பார்த்து வெட்கப்புன்னகை செய்து கொண்டிருந்தாள்..

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

சில வருடங்களுக்கு பிறகு..

2020, மே மாதம், கொரொனா லாக்டௌனில் சித்திரைத் திருவிழா நடைபெறாது என்று அறிவிப்பு செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த மகேஷ்.. ``ஏ தாமர இங்க வாயேன்.. இந்தக் கொரொனா வந்து சித்திரைத் திருவிழாவையும் கெடுத்து விட்டிருச்சு..

``எப்பேர் பட்ட திருவிழா.. நம்ம முதல் முதல்ல அங்க தான பேசுனோம்.." என தாமரை சொல்ல இருவரும் பழைய திருவிழா நினைவுகளுக்குள் மூழ்கினர்.

-மாடசாமி மனோஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு