Election bannerElection banner
Published:Updated:

``நீ முன்ன மாதிரி இல்லையேடா..!’’ - அம்மாவின் வார்த்தையால் அதிர்ந்த மகள் #MyVikatan

Representational Image
Representational Image

நான் என் மகளின் நினைவுகளில் மூழ்கினேன். ஒரே மகள். செல்லமாய் வளர்த்தோம். எல்லாமே அவள் விருப்பம்தான். படிப்பு, பாட்டு, சமையல், வீணை, கை வேலைகள் என்று எல்லாவற்றிலும் சுட்டி.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காண்பதெல்லாம் காதலாடி?!

____________________________

அன்பே!

என் நினைவுகளில் நீ

என் கனவுகளிலும் நீ

நான் சமைக்கும் சமையலில் நீ

நான் பேசும் பேச்சிலும் நீ

என் நடையில் நீ

என் உடையிலும் நீ

நான் முகம் பார்க்கும் கண்ணாடியும்,

என்னை விட்டு உன்னைத்தான் காட்டுகிறது.

♡♡♡♡♡ ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவர்த்தன் ♡♡♡♡♡


என்ற என் மகள் எழுதிய காதல் கவிதை முதன்முறையாக விகடன் தளத்தில் பிரசுரமாகியிருந்தது. அவளுக்கு கவிதை/கட்டுரை எல்லாம் எழுத வரும் என்பதே, அவள் தன் காதல் கணவனை கைப்பிடித்த பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.

வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி, இப்போதுதான் அலை பேசினாள். மாப்பிள்ளை வேலை விஷயமாக வெளியூர் போவதால், வார இறுதியில் இங்கு வருகிறாளாம். எனக்கு சட்டென்று வாழ்க்கை சுறுசுறுப்பானதைப்போல இருந்தது.

என் கணவர் எங்கள் இருவரது அலைபேசியிலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மகள் எழுதிய கவிதை லிங்க்கை ஷேர் செய்துவிட்டு, ``அவளுக்குத் திரட்டுப் பால் ரொம்ப பிடிக்குமே, அதைச் செஞ்சிடு. அப்படியே அந்த ரிப்பன் பக்கோடாவும் செஞ்சிடு. இந்த முறையாவது `யாரி'க்கு அவளை அழைச்சிட்டுப் போகணும். அவ கணவருக்கு நார்த்-இந்தியன் உணவு பிடிக்காதுன்னு, போன முறை வந்தப்போ வேணாம்னுட்டா. சுகன்யாகிட்ட சொல்லிடு. பள்ளித் தோழிகள்… என்னவோ சொல்லுவாங்களே… ஆங்... பெஸ்டீஸ்... பெஸ்டீஸ் ரெண்டு பேரும் எங்கேயாவது வெளிய போணும்னா போயிட்டு வரட்டும்" என்று அடுக்கிக்கொண்டே இருந்தார்.

கணவர் தம்பியின் ஃபோன் வரவே, `ஆமாடா, கவிதை படிச்சியா? எப்பிடி இருந்தது? அவ ஒரு பிளாக் ஆரம்பிச்சாளே, அது தெரியுமில்ல? இன்னும் நிறைய எழுதுறா அதுல…' என்று பேசிக்கொண்டே மாடிக்குச் சென்றுவிட்டார்.

Mom and Daughter
Mom and Daughter

நான் என் மகளின் நினைவுகளில் மூழ்கினேன். ஒரே மகள். செல்லமாய் வளர்த்தோம். எல்லாமே அவள் விருப்பம்தான். படிப்பு, பாட்டு, சமையல், வீணை, கை வேலைகள் என்று அனைத்திலும் சுட்டி. படிப்பு முடிந்து சென்னையில் வேலைகிடைக்க, `கோவையில வாழ்ந்தவங்களுக்கு வேறு எங்கும், முக்கியமா சென்னை, செட் ஆகாது' என்று, எங்கள் ஊரில் அனைவரும் வழக்கமாகச் சொல்வதை அவளிடம் சொல்லிப் பார்த்தோம். ஆனால், அவள் அடம்பிடித்து, பெண்கள் விடுதியில் தங்கி, இரண்டு வருடங்கள் சென்னையில் வேலைபார்த்தாள்.

ஊர் புதியது. வேலை புதியது. மக்கள் புதியவர்கள். இந்த தலைமுறை குழந்தைகள் சாமர்த்தியமானவர்கள். அதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். என் மகளும் எல்லாவற்றையும் பழக்கிக் கொண்டாள், கற்றுக் கொண்டாள். எங்களுக்கும் பெருமையாக இருந்தது.

தன்னுடன் வேலைபார்த்த விஷ்ணுவர்த்தனை, இரு வீட்டு சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தாள். விஷ்ணு நல்ல பிள்ளை. என் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்.

திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பு, விஷ்ணுவுக்கு பெங்களூருவில் வேறு வேலை கிடைத்துவிட்டதில், என் மகள் தன் கரியரை நினைத்து முதலில் சிறிது ஏமாற்றமடைந்தாள். `திருமணத்துக்குப் பிறகு பெங்களூரிலேயே வேறு வேலை பார்த்துக்கலாம்' என்று விஷ்ணு சொன்னதும் சமாதான மடைந்தாள். சொன்னது போலவே, பெங்களூருவில் ஒரு வேலையும் கிடைத்தது. ஆனால், `சனிக்கிழமை எனக்கு வேலை உண்டு, அவருக்கு விடுமுறை. வெளியே எங்கேயாவது போணும்னா முடியலைம்மா. அதனால வேலைய விட்டுட்டேன்' என்றாள் தொலைபேசியில்.

Representational Image
Representational Image

பொழுதுபோவதற்காக ஒரு பிளாக் ஆரம்பித்து, கட்டுரை, கவிதை என்று எழுத ஆரம்பித்தாள். வித விதமாக சமையல் செய்வாள். வார இறுதி என்றால் போதும்... ரிசார்ட், சினிமா அல்லது வேறு எங்காவது போய்விடுவார்கள் மாப்பிள்ளையும் பெண்ணும். எல்லா போட்டாக்களையும் அனுப்புவாள். காதல் மணம், அன்பான கணவர், தனிக்குடித்தனம், வாரா வாரம் எங்காவது ஒரு ட்ரிப் என்று கனவு வாழ்க்கையைத்தான் வாழ்கிறாள் மகள் என்று, அவ்வப்போது இவர் சொல்லி மகிழ்வார்.

வார இறுதியும் வந்தது. மகளும் வந்தாள். திருமணத்துக்குப் பிறகு, முதன்முறையாகத் தனியாக வந்திருக்கிறாள். ``அம்மா, இந்த முறை நான்தான் எல்லாம் சமைக்கப் போறேன். உனக்கு ரெஸ்ட். அப்பா பேங்க், போஸ்ட் ஆபீஸ் வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க, நாளைக்கு போவோம்" என்றாள். திருமணத்துக்கு பிறகு பொறுப்பு இன்னும் கூடி இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு சாப்பிட்ட பிறகு, அவர் சற்று வெளியே செல்கிறேன் என்று கிளம்பிவிட, நான் மறுநாளுக்காக கீரை ஆய உட்கார்ந்தேன். மகள் தன் கணவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டு வந்தவள், ``இதெல்லாம் நாளைக்கு செஞ்சிக்கலாம் விடு. கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கறேன்" என்று படுத்தாள்.

Representational Image
Representational Image

நான் மெதுவாக, ``எல்லாருக்கும் ரொமான்டிக்கா தெரியுற கவிதை, எனக்கு மட்டும் வேற மாதிரி தெரியுதே டா!" என்றேன்.

``என்னம்மா சொல்ற?" - லேசாக அதிர்ந்து என்னை பார்த்தாள்.

``ஆமாடி... எனக்கு என்னமோ எல்லா விஷயத்திலும் டாமினேட் செய்யும் கணவரை பத்திதான் அந்தக் கவிதையோன்னு தோணுச்சு.”

அவள் அமைதியாய் இருக்கவே, நான் தொடர்ந்தேன்.

``தினமும் எங்ககிட்ட பேசுறியே தவிர, அதுல முன்ன மாதிரி ஒரு லைவ்லினெஸ் இல்ல. நீ டிரஸ் செய்யும் விஷயத்தில் நிறைய மாற்றங்கள். இந்தியன் தவிர வேற எந்த க்யுசினும் உனக்குப் பிடிக்காது. ஆனா வாரா வாரம் நீங்க வெளிய போகும்போது, மாப்பிள்ளைக்கு பிடிச்சதுதான் சாப்பிடுவீங்கபோல. போட்டோல பாக்கும்போது தெரிஞ்சிக்கிட்டேன். ஏதோ ஒரு காரணம் சொல்லி வேலைக்குப் போக மாட்டேங்குற, இல்ல வேலை தேட மாட்டேங்குற. மாப்பிள்ளைகூட இருக்கும்போது, உன் இயல்புலயே நீ இருக்க மாட்டேங்குற. சுகன்யாவும் சொன்னா... முன்ன மாதிரி நீ வாட்ஸ்அப் குரூப்ல சாட் செய்யுறதில்லைன்னு. என்னடா ஆச்சு உனக்கு?"

சில நொடிகள் அதிர்ச்சியான மௌனத்துக்கு பின், ``அம்மா...” என்று கேவி என் மடியில் அழத் தொடங்கினாள்.


- வி.சுதா சத்யநாராயணா

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

``நீ முன்ன மாதிரி இல்லையேடா..!’’ - அம்மாவின் வார்த்தையால் அதிர்ந்த மகள் #MyVikatan

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு