
வாசலில் கலைக்கப்பட்ட காலணிகள் எதுவுமில்லை என்பதிலிருந்தே வீட்டில் கூட்டமில்லை என யூகிக்க முடிந்தது...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
``கோர்ட் வாசலில் வைச்சுக்கேட்டேன்! அப்பக் கூட பதில் இல்லை, சார்லஸ்!”
எனக்கும் தான் கண்ணா, நிறைய நோஸ்கட் கொடுத்துட்டான் கண்ணா!
``இவனை எதாவது செஞ்சாகணும்!” என்ற உரையாடலில் எழுந்த தீராத மன உளைச்சல் கண்ணனையும் சார்லஸையும் இஸ்லாமியர் பெரும்பாலோர் வாழும் பகுதிக்குக் கொண்டு வந்து நிற்க வைத்தது. எப்படியோ வீட்டைத் தேடிக்கண்டுப்பிடித்து வந்து விட்டார்கள் கண்ணனும், சார்லஸும்!
மாருதி காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு மேலே பார்த்தார்கள்.
முதல் மாடியில் ரஹ்மான் பி.ஏ பிஎல், வழக்கறிஞர் எனப் பெயர்ப் பலகை தொங்கியது.
காரை விட்டு இறங்கி அந்த பார்சலை எடுத்துக்கொண்டார்கள். கிப்ட் பேப்பரில் சுத்திய பார்சல் மதிய வெயிலில் பளபளத்தது.
சத்தமில்லாமல் மாடிப்படிகளில் ஏறினார்கள்.

வீட்டுக்கதவு சாத்தப்பட்டிருந்தது.
வாசலில் கலைக்கப்பட்ட காலணிகள் எதுவுமில்லை என்பதிலிருந்தே வீட்டில் கூட்டமில்லை என யூகிக்க முடிந்தது.
ஒருவகையில் சந்தோசம்! இன்னொரு வகையில் வருத்தம்!
மணி பகல் 12 ஆகியிருந்தது.
சரியான நேரத்திற்குள் வந்து விட்டதாக இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
கொஞ்சத் தாமதித்தாலும் ரஹ்மான் வெளியேறி இருப்பான்.
வந்த காரியம் சொதப்பல் ஆயிருக்கும்!
கண்ணன் தன்னிடம் இருந்த பார்சலை அருகில் இருந்த ஸ்டாண்ட் மீது வைத்துட்டு ஷு வைக் கழற்றினான்.
என்னடா பார்க்கிற?
தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாயிருக்கே கண்ணா!
அதனாலென்ன சார்லஸ்?
வெளியே தெரிஞ்சா சிக்கலாயிடுமே மத்தவங்களுக்கு என்ன பதில் சொல்றது?
அதை நான் பார்த்துக்கிறேன்.
இல்லைடா…கண்ணா! எனக்கு மனசுக்கு கஷ்டமாயிருக்கு!
ஒரு காரியத்தில இறங்கினா… அதை மட்டும் தான் செய்யணும்
போடா…
ரஹ்மானுக்கு இது அதிர்ச்சியா இருக்கணும்! நாம முந்திக்கணும்! இனிமேலாவது நம்மளை புரிஞ்சு நடந்துக்கணும்!
*
அம்மா எங்கே இருக்கிறார்? என ரஹ்மான் எட்டிப்பார்த்தான்.

இன்றும் மட்டும் வித்தியாசமானவள் அம்மா! தூங்கிக்கொண்டிருந்தாள்!
அவசர அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தான்.
டப்பா மூடியை திறந்தவுடன் மூக்கை பிய்ச்சுட்டு போகணும்! கண்ணனும், சார்லஸும் வாயைத்திறக்கவே கூடாது. ஆடாமல் அசையாமல் கவனமாக பேக்கில் வைத்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த பிசிறு ஒயர்களை உள்ளே தள்ளி விட்டான். இந்த தடவை நேரம் தவறக்கூடாது.
கண்ணன் வீட்டில் மூன்று பேர், சார்லஸ் வீட்டில் ஐந்து பேர்! எப்படியோ காலியாகி விடும்!
காலிங் பெல் சத்தம் கேட்டது!
ரஹ்மானுக்கு வியர்த்தது!
அவசரம அவசரமாக டிப்பாக்களை மறைத்து வைத்து விட்டு கதவைத் திறந்தான்.
*
கதவு திறக்கப்பட்டது.
ரஹ்மான் இருவரையும் பார்த்தவுடன் அதிர்ச்சி! ஆனால், வருத்தப்பட வில்லை.
அலைச்சல் இல்லாமல் வேலை முடிந்து விடும்! அதுவும் இருவரும் சேர்ந்து இருப்பது கூடுதல் சாதகம் என ரஹ்மானுக்கு மனதில் தோன்றியது
ஹாலில் உட்கார்ந்தவுடன் தூக்கம் கலைந்த ரஹ்மான் அம்மா தண்ணீர் கொண்டு வந்தார்.
இருவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்று வணங்கினார்கள்.
``உட்காருங்க! ஏன் ஃபேன் போடாமல் உட்கார்ந்திருக்கீங்க?” எனச்சொல்லி விட்டு சுவிட்ச் போட்டார். அறையில் நிரம்பியிருந்த சூடான காற்றை வெளியேற்றி இதமான காற்று வரச்செய்தது ஃபேன்.
``எங்க அம்மா ஃபேன் மாதிரி எப்போதுமே, தேவையில்லாததை விலக்கி வைப்பார்கள்! விளக்கவும் வைப்பவர்கள்!” என ஜோக்கடித்தான் ரஹ்மான்!
அம்மா பலமாகச் சிரிக்கவில்லை! ஆனால், சின்னதான புன்னகை வந்தது.
மேல் மாடியில் தனியறை இருந்தது.
ஹாலில்…டிவியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. பிரியாணி வாசத்திற்கு உள்ளே புகுந்த பூனை பிரியாணியின் வருகைக்காக டிவியின் மீது படுத்துக்கொண்டு மியாவ் சவுண்டு விட்டுக்கிடந்தது.
அது கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதற்குத் தடையாக இருப்பதனால் கண்ணன் மூன்று முறையும், சார்லஸ் நான்கு முறையும் துரத்தினார்கள். பழக்கப்பட்ட பூனை என்பதால் நகராது படுத்துக்கொண்டது.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ரஹ்மான் கீழே பிரியாணி எடுக்க இறங்கிப்போனான்.
ரஹ்மான் இறங்கிப்போவதை உறுதி செய்தபின் சார்லஸ்,” எவ்வளவு எதார்த்தமா இருக்கான், நாம இப்படிச் செய்யலாமா?”
மீண்டும் காலடிச் சத்தம் கேட்டவுடன் பேச்சு மாறியது!
பிரியாணியில எத்தனை ரகம் பார்த்தியா சார்லஸ்!

ஆமாம்டா… ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தலப்பாக்கட்டு பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி…
``இன்னிக்கு ரஹ்மான் பிரியாணி” எனச் சொல்லிக்கொண்டே ஒயர்பேக்குடன் ரஹ்மான் உள்ளே புகுந்தான்.
டேய்…ரஹ்மான் என்னடா இது உங்க வீட்டு பூனை டிவி மேல படுத்திருக்கு?
ஆமாடா…உன் மாதிரி ஆளுக மிதிக்க மாட்டாங்க, அப்புறம் இளஞ்சூடா வெதுவெதுப்பா இருக்கும், அப்புறம் கருமத்த நீ பார்க்கிற சீரியலெல்லாம் கண்ணுக்குத் தெரியாது கண்ணா!
வாய் விட்டு சிரித்தான் ஜேம்ஸ்…
சாப்பிட உட்கார்ந்தார்கள்.
என்ன எல்லாம் டப்பாவில் இருக்கு?
உங்களுக்குக் கொண்டுவரத்தான் டப்பாவில் போட்டு பூனைக்கு பயந்து ஓயர்பேக்கில் வைச்சிருந்தேன்.
பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது.
திறக்கும் முன்னே எச்சில் ஊறியது….
ரஹ்மான் நீயும் சாப்பிடு…
இல்லை…கெஸ்ட் தான் முக்கியம்! நீங்க சாப்பிடுங்க!
இருவரும் வற்புறுத்தியும் ரஹ்மான் பிரியாணி சாப்பிடவே இல்லை!
இருவரின் உள்ளுணர்வும் எதோ பேசிக்கொண்டன!
சாப்பிட்ட… சிறிது நேரத்தில் இருவரின் கண்களும் சொருகின.
மர்மப் புன்னகையுடன் கீழே இறங்கினான் ரஹ்மான்.
*
ரஹ்மான், கண்ணன் மற்றும் சார்லஸ் உள்ளிட்ட 15 பேர் சத்தியசீலன் என்ற சீனியர் வழக்கறிஞருக்கு கீழ் பணிபுரியும் வழக்கறிஞர்கள்.
இருவருக்கும் ரஹ்மான் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது.
ரஹ்மான் கிரிமினல் வழக்குகளில் ஸ்பெஷலிஸ்ட்! நுட்பமான ஐடியாக்களில் எதிரிகளை கலக்கடிக்கும் வல்லமைப் பெற்றவன்! முருகன் சிவில், ஜேம்ஸ் குடும்ப வழக்குகள் என பிரித்து பணிபுரிந்து வந்தனர். கிரிமினல் லாயர் என்பதால் ரஹ்மானுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. சீனியரின் குட் புக்கில் எப்போதும் இடம் உண்டு.
வாய் கிழிய மத நல்லிணக்கம் பற்றிப் பேசுவான். நாட்டு நடப்புப்பற்றி ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்புவான். கூடவே சுற்றும் இவர்களை ரம்ஜானுக்கு வீட்டிற்கு கூப்பிடவில்லை.
நேற்றே ரஹ்மான் தனது மனைவியும் குழந்தையும் ஊருக்கு அனுப்பி விடுவதாக பேச்சுவாக்கில் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
தனது நண்பர்களின் வீடுகளுக்கு பனிரெண்டு மணிக்கு மேல் பிரியாணி கொண்டு போய் கொடுப்பது ரஹ்மானின் வழக்கம். அதற்குள் ரஹ்மான் வீட்டிற்கு சென்று காரியத்தை முடிக்க வேண்டும்.
திட்டமிட்டபடி எல்லாமே நடந்துக்கொண்டிருக்கிறது.

*
தூங்கி மீண்டும் எழும்போது மாலை மணி நான்கு!
ஆனால், ரம்ஜான் விருந்திற்கு வீட்டிற்கு அழைக்காதது மட்டும் உள்ளுணர்வில் இருந்து மனதில் பொருமிக்கொண்டே இருந்தது!
புறப்படத் தயாரானார்கள்!
அம்மா…
ரூம் உள்ளே இருக்கிறார்.
அம்மா… கிளம்பிறாங்களாம்..
சீக்கிரம் டைம் ஆச்சு சார்லஸ்!
பேட்டரி போட்டியா? எனச் சார்லஸ் காதருகில் முணுமுணுத்தான்.
ஐயையோ! பேட்டரி போட மறந்துட்டனே!
சார்லஸ் தலையில் அடித்துக்கொண்டான்.
ரஹ்மானுக்கு புரிந்து விட்டது.
உடனே வெளியே ஓடினான்.
ரஹ்மானின் அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை!
கண்ணனுக்கு வெளியே ஸ்டேண்டில் வைத்தது ஞாபகம் வந்து எட்டிப்பார்த்தான். ரஹ்மான் பார்சலை எடுத்துக்கொண்டு வந்துக்கொண்டிருந்தான்.

அந்த சுவர் கடிகாரம் அடங்கிய பார்சலை வாங்கி சார்லஸ் ரஹ்மானின் அம்மா கையில் கொடுத்தான்.
அம்மா பிரியாணி சூப்பர்…
உப்பு, காரம் எல்லாம் சரியா இருந்ததா?
நீங்க சாப்பிட்டு பார்க்கலையா?
இல்லை கண்ணா! நான் இன்னிக்கு சாப்பிட மாட்டேன்!
ஏன்… இன்னிக்கு சாப்பிட மாட்டீங்களா?
ஆமாம்…
விரதங்களா?
இல்லை….
வேறென்னங்க…?
--------
அ……ம்….மா?
``ரம்ஜான் அன்னிக்கு தான் ரஹ்மான் அப்பா இறந்தார்”.
*
-சி.ஆர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.