Published:Updated:

வேதாள ரோபோவும் குதிரை கணக்கும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இந்தக் குதிரை கணக்கும், தற்போது தமிழகத்தில் பரபரப்பாக உள்ள ஒரு முக்கியமான சமூக பிரச்னையும் ஒரே மாதிரியானவை. அது என்ன பிரச்னை? இந்தக் கதையுடன் அந்தப் பிரச்னை எவ்வாறு பொருந்துகிறது?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரம், செல்போன் டவரில் ஏறி அதில் நீண்ட நாளாகக் குடியிருக்கும் `வேதாளம்' என்ற பெயருடைய தன்னுடைய ரோபோவைத் தூக்கி கீழே போட்டான். பின்னர் அவன் கீழே இறங்கிவந்து ரோபோவைத் தூக்கி தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அதை அழிப்பதற்காக தன் ஆய்வகம் நோக்கி வேகமாகச் செல்லும்போது ரோபோ அவனுடன் பேச ஆரம்பித்தது!

``நான் ரோபோக்களின் அடிப்படை அசிமோ (Asimov Rules) விதிகளை மீறியதால் நீ என்னை அழிக்கத் (Dismantle) துடிக்கிறாய்.

உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது விக்ரம். நாம் இருவரும் ஓர் ஒப்பந்தத்துக்கு வருவோம்.

Representational Image
Representational Image

என்னை Dismantle செய்து முடிக்கும் வரை நீ என்னுடன் ஒருவார்த்தை கூடப் பேசக் கூடாது. மெளனமாகவே இருக்க வேண்டும். மேலும், என்னுடைய இறுதிப் பேச்சை நீ அவசியம் கேட்க வேண்டும்.

ஒருவேளை நீ என்னுடன் பேசிவிட்டால்,

நான் உனக்கு ஒத்துழைக்க மாட்டேன்.

மீண்டும் செல்போன் டவரில் ஏறி உட்கார்ந்து விடுவேன்."

``நீ என்னை உருவாக்கியவன் என்பதால் இந்த வாய்ப்பை நான் உனக்கு அளிக்கிறேன். இந்த நிபந்தனைக்கு நீ உடன்படுகிறாயா?" என்றது ரோபோ!

அமைதியாய் தலையாட்டினான் விக்ரம்.

வேதாள ரோபோ தன் செயற்கை முடியைக் கோதியவாறு அவனுடன் பேச ஆரம்பித்தது.

``விக்ரம், நான் இப்போது உனக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். கவனமாகக் கேள். ஒரு கிராமத்துப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் கணிதப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது சில மாணவர்களுக்கு சாதாரணமான கணக்குகளில் கூட தடுமாற்றம் ஏற்பட்டது.

மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் பலமுறை சொல்லிக் கொடுத்த ஆசிரியர், அவர்கள் புரிந்துகொள்ள தடுமாறுவதைக் கண்டு சற்று எரிச்சல் அடைந்தார். `உங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கிற நேரம் நாலு கழுதைகளுக்கு சொல்லிக் கொடுத்துடலாம்' என்று இயலாமையில் சற்று சலிப்புடன் கூறினார்.

அப்போது ஒரு குறும்புக்கார மாணவன் எழுந்து, சார்! கழுதைகளுக்கு எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டாம்.

அதற்குப் பதில் நீங்கள் வைத்துள்ள குதிரைக்கு உங்களால் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியுமா? என்று வேடிக்கையாகக் கேட்டான்.

சற்று யோசித்த ஆசிரியர்,

'அவ்வளவுதானே! இன்னும் ஒரு வாரத்தில் என் குதிரை உங்களை விட அருமையாகக் கணக்கு போடும்' என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Representational Image
Representational Image

ஆசிரியர் குதிரையை எப்படி கணக்குப் போட வைக்கப்போகிறார் என மாணவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

ஆசிரியர் குதிரைக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. தற்போது மனிதர்கள் பலரே கணக்குகள் போடத் தடுமாறும்போது குதிரை ஒருவாரத்தில் கணக்குப் போடும் என்பது மாணவர்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவே இருந்தது.

சரியாக ஒருவாரம் கழித்து ஆசிரியர் தனது குதிரையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். பள்ளி மைதானத்தில் உள்ள மரத்தில் குதிரையைக் கட்டினார்.

தன்னுடைய வகுப்பு மாணவர்கள் அனைவரையும் அழைத்து குதிரையைச் சுற்றி வட்டமாக நிற்க செய்த ஆசிரியர்,

அவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

``அன்பு மாணவர்களே! என்னுடைய இந்தக் குதிரை இப்போது கணக்குப் போடப் போகிறது. ஆனால், நீங்கள் போடுவதுபோல குறிப்பேடுகளில் அல்லது கரும்பலகையில் குதிரையால் எழுத முடியாது. மேலும், இது விலங்கு என்பதால் இதனால் பேசவும் முடியாது. ஆனால், ஒரு சில சைகைகள் மூலமாக அது கணக்குகளுக்கு விடை அளிக்கப் போகிறது. நன்றாக உற்றுக் கவனியுங்கள்" என்றார். மாணவர்கள் வியப்பின் உச்சத்துக்கே சென்றனர். கண்கொட்டாது குதிரையையே பார்த்தனர்.

ஆசிரியர் தொடர்ந்தார். ``மாணவர்களே இப்போது நான் குதிரையிடம் சில கணக்குகளை கேட்கப் போகிறேன். அதற்கு விடையாக இந்தக் குதிரை தன்னுடைய முன்னங்கால்களைத் தரையில் தட்டும்.

உதாரணத்துக்கு இரண்டும் இரண்டும் கூட்டினால் எவ்வளவு என்றால், நான்கு முறை முன்னங்கால்களைத் தரையில் தட்டும்.

Representational Image
Representational Image
Photo by Daiga Ellaby on Unsplash

இவ்வாறு மனிதர்கள் போடக்கூடிய அனைத்து வித மனக்கணக்குகளை இந்த ஒரு வாரத்தில் என்னுடைய குதிரைக்கு நான் கற்றுக் கொடுத்து விட்டேன்.

இப்போது நாம் குதிரையைச் சோதித்துப் பார்க்கப் போகிறோம்" என்றார்.

அடுத்து ஆசிரியர் குதிரையிடம் கணக்குகளைக் கேட்கத் தொடங்கினார்.

கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலில் அவர் தொடர்ந்து மனக்கணக்குகளைக் கேட்கக் கேட்க, குதிரை தனது முன்னங்கால்களை சரியான விடை வருமாறு தட்டியது.

மாணவர்கள் ஒவ்வொருவராகக் குதிரையைச் சோதித்துப் பார்த்தனர். மிக வேகமாகவும், மிகச் சரியாகவும் கணக்குகளுக்கு விடையளித்தது குதிரை.

மாணவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றனர். இவர்கள் மைதானத்தில் குதிரையை வைத்து கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பரவியது. பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவருமே வந்து குதிரையைச் சுற்றி நின்றனர்.

ஒவ்வொருவராகக் குதிரையிடம் கணக்குக் கேட்டனர். யார் கேட்டாலும் தனது முன்னங்கால்களைச் சரியாகத் தட்டியது குதிரை.

இந்த ஆச்சர்யமான தகவல் அந்த ஊர் முழுக்க பரவ ஆரம்பித்தது. ஊர்மக்கள் அனைவரும் வந்து குதிரை கணக்குப் போடுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர். குதிரை கணக்கு போடும் தகவல் நாடு முழுவதும் தீயாகப் பரவியது.

பெரிய பெரிய கணித வல்லுநர்களும் அறிஞர்களும் வந்து குதிரையைச் சோதித்துப் பார்த்தனர். அது ஒரு சாதாரணக் குதிரைதான். அதற்கு எந்தத் தனிப்பட்ட திறனும் இருப்பதாக அறிஞர்களுக்குத் தெரியவில்லை.

குதிரையின் மூளையை ஸ்கேன் செய்துகூட பார்த்தார்கள். சாதாரண குதிரையின் மூளை போன்றுதான் இந்தக் குதிரையின் மூளையும் இருந்தது.

குதிரை எப்படி மனிதர்கள் கேட்கும் கணக்குகளின் விடைகளுக்கு ஏற்ப முன்னங்கால்களைச் சரியாகக் கீழே தட்டுகிறது என்பது ஒருவருக்கும் புரியவில்லை. மக்கள் அந்தக் குதிரை ஓர் அற்புதமான படைப்பு என்ற முடிவுக்கு வந்தனர்.

Representational Image
Representational Image

ஆனால், குதிரைக்கு கணக்கு போட கற்பிக்கச் சொன்ன குறும்புக்கார மாணவனுக்கு மட்டும் குதிரை கணக்குப் போடுவதை ஜீரணிக்கவே முடியவில்லை.

எப்படியாவது நாம் அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். அதற்குப் பின்பு தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அந்தக் குதிரையின் அருகிலேயே அவன் செலவழிக்க ஆரம்பித்தான். மாணவன் இவ்வாறு குதிரையுடனே இருப்பதை அவ்வப்போது பார்த்த அவனது ஆசிரியரது முகத்தில் புன்சிரிப்பு தோன்றி மறையும்.

சில நாள்கள் முயற்சிக்குப் பின்னர் குதிரை எவ்வாறு கணக்குப் போடுகிறது என்ற தந்திரத்தை அவன் கண்டுபிடித்துவிட்டான்!"

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாள ரோபோ விக்ரமின் தலையில் தனது இரண்டு மெட்டல் கைகளையும் வைத்தபடி, ``விக்ரம் இப்போது உனக்கு மூன்று கேள்விகள் உள்ளன."

``முதலாவதாக அந்தச் சிறுவன் குதிரை கணக்குப் போடும் தந்திரத்தைக் கண்டறிந்தானே, அது என்ன?

இரண்டாவது இந்தக் குதிரை கணக்கும், தற்போது தமிழகத்தில் பரபரப்பாக உள்ள ஒரு முக்கியமான சமூக பிரச்னையும் ஒரே மாதிரியானவை. அது என்ன பிரச்னை? இந்தக் கதையுடன் அந்தப் பிரச்னை எவ்வாறு பொருந்துகிறது?

மூன்றாவது அந்தப் பிரச்னைக்கும், நம் இருவரின் பிரச்னைக்கும் உள்ள தொடர்பு என்ன?

Representational Image
Representational Image
Photo by Austin Distel on Unsplash

இந்த மூன்று கேள்விகளுக்கும் உனக்கு விடை தெரிந்திருந்தும் நீ மெளனமாக இருந்தால் உனது தலையைக் ஹெல்மெட்டுடன் சேர்த்து நொறுக்கிவிடுவேன்" என்றது.

சற்று சிந்தித்த விக்ரம் விடைகளைக் கூறத் தொடங்கினான்.

``அந்த ஆசிரியர் குதிரைக்கு கணக்கு எல்லாம் கற்றுக் கொடுக்கவில்லை.

விலங்குகளுக்கு அவ்வாறு கற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை.

குதிரைக்கு மிகச் சுலபமான ஒரு பயிற்சியை மட்டுமே அவர் அளித்திருந்தார். அது என்னவெனில் 'குதிரையின் முன்பாக ஆசிரியர் சற்று குனிந்து நின்று அதன் கால்களைப் பார்க்கும்போது குதிரை முன்னங்கால்களைக் கீழே தட்ட வேண்டும்' அவ்வளவுதான்!

ஐந்து கூட்டல் மூன்று என ஒருவர் கேட்டால் உடனே ஆசிரியர் கீழே குனிந்து குதிரையின் கால்களைப் பார்ப்பார்.

குதிரை கால்களைக் கீழே தட்டத் தொடங்கும். குதிரை எட்டு முறை கால்களைத் தட்டியதும் ஆசிரியர் நிமிர்ந்து விடுவார். உடனே குதிரை கால்களைத் தட்டுவதை நிறுத்திவிடும். இதுதான் ஆசிரியர் கையாண்ட மற்றும் சிறுவன் கண்டறிந்த குதிரை கணக்குப் போட்ட தந்திரம்.

இந்தக் குதிரை கணக்கும், தற்போது தமிழகத்தில் பரபரப்பாக உள்ள ஒரு முக்கியமான சமூக பிரச்னையும் ஒரே மாதிரியானவை. அது என்ன பிரச்னை? இந்தக் கதையுடன் அந்தப் பிரச்னை எவ்வாறு பொருந்துகிறது? என்பது உனது இரண்டாவது கேள்வி.

தமிழகத்தில் தற்போது முக்கியமாக உள்ள ஒரு சமூகப் பிரச்னை குடிப்பழக்கம்.

குதிரை எப்படி மனிதர்கள் குனிந்து நின்றால் கால்களைக் கீழே தட்டப் பழகிக் கொண்டதோ, அதுபோலவே குடிமகன்களும் நிறைய மதுக்கடைகள் திறந்ததால், மது சுலபமாகக் கிடைத்ததால் மது குடிக்கப் பழகிவிட்டனர்.

Representational Image
Representational Image

குதிரை குனிந்து நின்றால் கால்களைக் கீழே தட்டி ஆட்டம் போடுவதும், நிமிர்ந்து நின்றால் கால்களைத் தட்டுவதை நிறுத்திவிட்டு அமைதியாக இருப்பதும் போலவே, தமிழகத்தில் உள்ள குடிமகன்கள் மதுக்கடைகள் இருந்தால் மது அருந்தி ஆட்டம் போட்டுக் குடும்பத்தைத் துன்புறுத்துகின்றனர். மதுக்கடைகள் இல்லாவிட்டால், எந்த வழியிலும் மது கிடைக்காவிட்டால் அவர்கள் குடிக்காமல் இருக்கின்றனர். மேலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக தம் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்! இதற்கு லாக்டௌன் நாள்களே சாட்சி!

குடிமகன்களிடம் ஆரம்பத்தில் பழக்கமாக (Habit) இருந்த ஒன்று நாளடைவில் வழக்கமாக ( Custom) மாறி அதற்கு அடிமையாகிக் கிடைக்கின்றனர்.

குதிரையைப் பழக்கியது போன்றே, சமுதாயம் மக்களைக் குடிக்க ஏதோ ஒரு விதத்தில் பழக்கிவிட்டது!

கதையில் தலை குனிந்து நின்ற மனிதன் நிமிர்ந்து நின்றால் குதிரையின் ஆட்டம் நின்றுவிடுகிறது. அவ்வாறே அரசும் வருமான வாய்ப்பு என்று மதுவுக்காக வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்றால் குடிப்பழக்கம் காணமல் போய்விடும்!

மூன்றாவது கேள்வியான அந்தப் பிரச்னைக்கும் நம் இருவரின் பிரச்னைக்கும் என்ன தொடர்பு?" என்றால், உன்னை உருவாக்கிய நான், நீ செய்யும் அநியாயங்களைத் தாங்க முடியாமல் உன்னை அழிக்க நினைக்கிறேன். ஆனால், உனது எதிர்மறையான அதீத வளர்ச்சி காரணமாய் உன்னை அழிப்பது எனக்கு மிகக் கடினமாக உள்ளது. அதுபோலவே மனிதன் உருவாக்கிய மதுவின் கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மதுவை சமுதாயத்தை விட்டு முற்றிலுமாக அழித்துவிட மனிதன் முயல்கிறான். ஆனால், மதுவின் எதிர்மறையான அதீத வளர்ச்சி காரணமாய் மதுவை சமுதாயத்தை விட்டு நீக்குவது மனிதனுக்கு அது மிகக் கடினமான ஒன்றாகவே உள்ளது!

Representational Image
Representational Image

விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் போல, சமுதாயத்தின் முதுகில் மது ஏறி உட்கார்ந்து கொண்டுள்ளது.

அதை அப்படியே விட்டுவிடவும் மனிதனால் முடியவில்லை.

முற்றிலும் அழித்துவிடவும் இயலவில்லை.

காலகாலமாக இவ்வாறே தொடர்கிறது.

இதுவே உனது மூன்றாவது கேள்விக்கான விடை!" என்றான் விக்ரம்!

விக்ரமின் சரியான பதில்களால் அவன் மௌனம் கலையவே வேதாள ரோபோ மகிழ்வுடன், ``வாவ் விக்ரம்! நீ புத்திசாலி என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டாய்.

நம் இருவரிடையே இருந்த ஒப்பந்தப்படி நீ பேசவே கூடாது. ஆனால், நீ கேள்விகளுக்குப் பதில் கூறியதன் மூலம் நமது ஒப்பந்தத்தை மீறிவிட்டாய்! எனவே, நான் இப்போது உன்னுடன் வரமாட்டேன்.

அடுத்த முறையாவது என்னை அழிக்க புதுமையான EMP ஜாமர்

(Electromagnetic pulse Jammer) தயார் செய்துகொண்டு வா! இப்போது நான் புறப்படுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

பை! பை! " என்றபடியே பறந்த வேதாள ரோபோ மீண்டும் செல்போன் டவரில் ஏறி அமர்ந்து கொண்டது!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு