Published:Updated:

`சரத்குமார் ரசிகன்..!' - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

முதலாமாண்டு விடுதி மாணவர்கள் தொலைக்காட்சி இருக்கும் அறைக்குச் செல்லக் கூடாது என்பது அங்கு எழுதப்படாத விதியாக இருந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் எனது கல்லூரியின் வகுப்புத் தோழனான ராஜூ. அதுநாள் வரையிலும் அவனை எப்போதும் அழைத்துப் பேசியிராத மற்றுமொரு வகுப்புத் தோழனான கார்த்திகேயன் அவனது அலைபேசிக்குத் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறான். வேலைப் பளுவினால் அதைத் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருந்தான் ராஜூ, கார்த்திகேயனின் அவசரத்தையும் அவஸ்தைகளையும் அறியாதவனாக.

Representational Image
Representational Image

கார்த்தி - எங்கள் வகுப்புத்தோழன், எங்களுடன் கல்லூரி விடுதியின் வேறொரு அறையில் இருந்தவனும் கூட. சென்னையின் புறநகர் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கடலூரின் அருகிலுள்ள ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன்.

நண்பர்களுடன் மிகப்பரவலான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னரே அவனது அறைத் தோழர்களால், `மொக்கை' கார்த்தி என அழைக்கப்பட்டவன். அதற்கான மிக எளிய காரணங்களில் ஒன்று - அவன் சரத்குமார் ரசிகன் என்பதும்கூட.

முதலாமாண்டு விடுதி மாணவர்கள் தொலைக்காட்சி இருக்கும் அறைக்கு செல்லக் கூடாது என்பது அங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. மிக அரிதாக சிலரிடம் மட்டுமே அப்போது செல்போன்கள் இருந்தன, எனினும் அவை நோக்கியா - 1100 காலத்தவை. அதனால் ஓரிரு மாதங்களுக்குள் சிலர் FM radio வாங்கி வைத்துக்கொண்டனர்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்துக்கு முன்பாகத்தான், `ஐயா' திரைப்படம் வந்திருந்தது. அதனால் அடிக்கடி `ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்கிற பாடல் ஒலிபரப்பப்படுவதுண்டு. அப்போதெல்லாம், `மொக்கை' கார்த்தி மிகுந்த பரவசத்துடன், `டேய், அந்த பாட்டை வைடா' என சொல்லிவிட்டு அதனுடன் ஒத்திசைத்து பாடுவான். FM -ல் நயன்தாரா பாட, சரத்குமார் பாடும் வரிகளை பெரும் பாவனைகளுடன் பாடிக் கொண்டிருப்பான், மிக குறிப்பாக இவ்வரிகளை- `நேத்துவரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு. அது இன்றுமுதல் ஆனது எலவம் பஞ்சு' என அவன் பாடும்போது, `சின்ராசா கைலயே புடிக்க முடியாது' என்கிற வசனம்தான் நினைவுக்கு வரும்.

Representational Image
Representational Image
Pixabay

ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அவனது இம்சையை தாங்க முடியாமல் நண்பர்கள் அவனை வெகுவாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்தோம். FM -ல் சரத்குமார் பாடல் வரும்போதெல்லாம் அவன் காதில் விழாதவாறு மிக வேகமாக வேறொரு FM Station -க்கு மாற்றிக் கொண்டிருந்தோம். அதை கண்டுகொண்டவன், ``அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை..." என தன் கண்களை சுருக்கிக்கொண்டு பாடுவான்.

சில மாதங்கள் கழித்து பத்திரிகைகளில் அந்த அறிவிப்பு வந்தது - சரத்குமார் நடிக்கும் `பச்சைக்கிளி முத்துச்சரம்' இயக்கம் கௌதம் மேனன் (அப்போது கௌதம் மேனன்தான், GVM அல்ல). நாங்கள் மிக அதிர்ச்சியானோம் கௌதம் மேனன்-சரத்குமாரா என, ஆனால் அந்த அறிவிப்பை பார்த்தவுடன், `மொக்கை' கார்த்தி எங்களைப் பார்த்து சிரித்த அந்த சிரிப்பின் சாயலை `சூப்பர் deluxe' படத்தில் வரும் சிறுவன் அந்த DVD-யை கேட்டவுடன் அந்த அக்கா சிரிக்கும் நக்கலான சிரிப்புடன் தாராளமாக ஒப்பிடலாம்.

Representational Image
Representational Image
Ashwini Chaudhary / Unsplash

அதன்பின்பு `பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல்கள் வெளியாகின. எல்லா FM -களிலும் நேயர் விருப்பமானது. அப்பாடல்கள் ஒளிபரப்பாகாத எந்த நிகழ்ச்சியும் அப்போது இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த `மொக்கை' கார்த்தி, `பாருங்கடா, கௌதம் மேனனுக்கே எங்க தலைவர் தேவைப்படுது' என எங்களை அற்பமாக பார்த்துச் சிரித்தபோது கௌதமின் தீவிர ரசிகனாக இருந்த அருண், `பாரு, உங்க தலைவன் கௌதம் மேனனுக்கே flop தர போறாப்ல' என்றபோது கார்த்தி மட்டுமல்ல நாங்களுமே சற்று அதிர்ச்சியடைந்தோம்.

அவனை எல்லோரும் `மொக்கை' எனக் கூப்பிட்டாலும் எனக்கு அவன் ஒரு விசித்திர நாயகன்தான். விடுதியில் தங்கியிருந்ததனால் எங்களுக்கு study leave என்பதும் semester holidays தான். அதனால் எல்லோரும் அவரவர் ஊர்களுக்கு செல்வதில் குறியாக இருக்க, அவன் அப்போதும் தனது வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கிவிடுவான். அவனது அலைவரிசைக்கு ஏற்ப இருக்கும் சிலரும் விடுதியிலேயே இருப்பதுமுண்டு. விடுதி என்பது அப்போது கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டவர்களின் சரணாலயம் அல்லது அரசாங்கம்.

அந்த விடுமுறைகளில் நன்கு உண்டு, உறங்கி, தொலைக்காட்சியில் படம் பார்த்து தவறிக்கூட புத்தகங்களை தொடாமல் அவனது கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பான்.

தேர்வுக்கு முந்தைய பகல்களில் உறங்கி, பாடல்களில் திளைத்து, கவிதைகளில் மூழ்கி தனது சொர்க்கபுரியிலிருந்து நள்ளிரவில் மிக மெதுவாக நிகழ்காலத்துக்கு வந்திறங்குவான். தனது நண்பர்களிடம் மறுநாளைய தேர்வுக்கு உண்டான முக்கிய கேள்விகளைக் கேட்டறிந்து அதை ஓரளவு படித்துக்கொள்வான். அடுத்த நாள் தேர்வு முடிந்த பிறகு எங்களிடம் வந்து, `இதற்கு இதுதானே பதில்' எனக் கேட்டறிந்து திருப்திக் கொண்டு மீண்டும் அவனது உலகத்தில் உள்புகுந்து தன்னை அரசானாக்கிக் கொள்வான்.

Representational Image
Representational Image

அதிகம் வாசிப்பு பழக்கமற்ற அவனது எழுத்துகள் அத்தனை ஆழமானவை. மேலோட்டமாக படித்தால் புரிந்து கொள்ளமுடியாத அவனது எழுத்துகளை அவன் தரும் தெளிவுரை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தும்.

வருடங்கள் உருண்டோட பணி நிமித்தமாக நான் பெங்களூரு வந்துவிட இத்தனை ஆண்டுகளில் அவனிடம் நான் இன்னும் பேசவில்லை. ஆனால், அன்று ராஜூவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, `` மச்சி! அன்னிக்கு மொக்கை-ட்ட இருந்து contiuous - ஆ call வந்துட்டே இருந்தது. ஆனா, எனக்கு work load அதிகமா இருந்ததுனால என்னால அவன்கிட்ட பேசமுடியல. அப்பறம் அதை அப்படியே மறந்துட்டு ரூம்-க்கு வந்துட்டேன். உள்ள நுழையும்போதே அருண், ``என்னடா, மொக்கை call பண்ணானா-னு கேட்டான். நானும் ஆமா மச்சி. ஆனா, நான் busy -யா இருந்ததுனால பேச முடியல. ஏன் என்னாச்சுன்னு கேட்டேன்".

அருண், அவனுக்கு வீட்ல பொண்ணு பாத்துருக்காங்க போல. நிச்சயதார்த்தம் அடுத்த வாரமாம். இவன் அந்தப் பொண்ணோட நம்பரை எப்படியோ வாங்கி call பண்ணிருக்கான். unknown number -ங்கிறதுனால அந்தப் பொண்ணு யாருடானு truecaller பாத்தா `மொக்கை' கார்த்தினு போட்ருந்துச்சாம். அதுனாலதான் பயபுள்ள, `யாருடா என்னை மொக்கை கார்த்தின்னு save பண்ணிருக்கீங்க'னு வெறிபுடிச்சு தேடிகிட்டு இருக்கான்" என ராஜூ என்னிடம் சொல்லிச் சிரிக்க என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை.

-நாகா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு