Published:Updated:

டீடோட்டலரும் திக் திக் கனவும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை தாண்டி இது மூன்றாம் தலைமுறை....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அவர்கள் இருவரும் மிகுந்த பரபரப்பில் இருந்தனர். அவர்கள் செய்யவுள்ள காரியம் அத்தகையது. அதைச் செய்வதற்கு அவர்கள் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், சற்று பதற்றத்துடனும் காணப்பட்டனர். ஆம்!அவர்களே இப்போது மதுபானம் தயாரித்து குடிக்கப் போகின்றனர்!

இது கி.பி 2100-ம் ஆண்டு. இந்தியாவில் முழுக்க முழுக்க மதுபானம் தடை செய்யப்பட்டிருந்தது. மதுவைத் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் குடிப்பதும் கொலைக்கு நிகரான குற்றங்கள் என இந்திய அரசாங்கம் சட்டம் இயற்றி இருந்தது!

Representational Image
Representational Image

கடந்த எண்பது வருடங்களுக்கு முன்பு மதுப்பழக்கத்தால் நாட்டினுடைய பொருளாதார நிலையும், மக்களின் உடல் மற்றும் மனநிலையும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பின்பு, அரசாங்கம் ஒரு தெளிவான முடிவை எடுத்தது. இந்தியா முழுக்க பூரண மதுவிலக்கு என்னும் அந்த முடிவு, மனித வளத்தையும், பணி ஆற்றலையும் பெருக்கி, இன்று இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் பெரும் வல்லரசாக மாற்றி இருந்தது. இன்று உலகின் ஒரே பெரும் வல்லரசு இந்தியாதான்.

மதுபானம் மட்டுமல்ல. அனைத்து விதமான போதைப்பொருள்களும் இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தன.

மக்கள் அனைவருமே விரும்பியோ விரும்பாமலோ எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத டீடோட்டலர் ஆகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்!

மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை தாண்டி இது மூன்றாம் தலைமுறை.

அவர்கள் இருவரும் இப்போது செய்யக்கூடிய வேலை அரசாங்கத்திற்கு எதிரானது. கொலைக் குற்றத்துக்கு நிகரானது. ரகசியமாக அவர்கள் மதுபானம் தயாரித்து குடிக்கப் போவது அவர்களுடைய பெரும் பரபரப்புக்கு காரணமாய் இருந்தது.

Representational Image
Representational Image

இருவருமே இந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு ஐடி கம்பெனியின் ஊழியர்கள். இன்று பழைய டாக்குமென்ட்களை பரிசோதனை செய்துகொண்டிருக்கும்போது ``மதுபானம் தயாரிப்பது எப்படி?" எனும் ஒரு சி.டி அவர்களுக்கு கிடைத்தது. சி.டி-கள் எல்லாம் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது.

அந்த சி.டி-யில் உள்ளதை அவர்கள் தங்களது மூளையில் 'ஃபாஸ்ட் ஸ்கேன்' செய்துகொண்டு வந்திருந்தனர். அது இப்போது பிளே ஆகப்போகிறது.

ஆர்வத்துடன் சீலிங்கையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

வீடியோ பிளே ஆக ஆரம்பித்தது. அது கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முந்தைய ஒரு கிராமம். கிராமத்தில் பச்சை பசேலென்ற ஒரு தோட்டம். ஒரு வயதான தாத்தா வீடியோவில் தோன்றினார். மிகப் பெரிய மீசை. தளர்ந்த உடல். கனத்த குரல். அவர் பேச ஆரம்பித்தார்.

``சாராயம் காய்ச்சுவது எங்களுடைய குலத்தொழில். பரம்பரை பரம்பரையாக இதைச் செய்துகொண்டிருக்கிறோம்.

என்னோட பேரன் இப்ப இந்தத் தொழிலைச் செய்ய மறுத்துட்டான். ஆனா எங்க தொழில் அழிவதை நான் விரும்பவில்லை. எனவேதான் இதை வீடியோ மூலமாக உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்."

``நான் சொல்லக்கூடிய எல்லாப் பொருள்களையும் முதலில் நீங்கள் தயார் பண்ணி வச்சிக்கோங்க" என்றபடி மதுபானம் காய்ச்சத் தேவையான பொருள்களை தாத்தா பட்டியலிட ஆரம்பித்தார்.

Representational Image
Representational Image

நண்பர்கள் இருவரும் பரபரப்புடன் அந்தப் பட்டியலில் உள்ள பொருள்களை ஸ்கேன் செய்துகொள்ள ஆரம்பித்தனர். அவற்றில் உள்ள பொருள்களை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு `டாப்லைனில்' ஆர்டர் செய்தனர்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக 'ஆன்லைன்' எல்லாம் வழக்கொழிந்து போயிருந்தது. டாப்லைன் எனும் விரும்பிய பொருள்களை 2 நிமிடங்களில் பெறும் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது. அதற்கு செல்போன் போன்ற எந்த உபகரணமும் தேவைப்படவில்லை. மனித மூளையின் எண்ணங்களைக் கொண்டே பொருள்களை ஆர்டர் செய்ய முடிந்தது. தேவையானபோது எண்ணங்களை எவ்வித ஊடகங்களோ அல்லது பேச்சோ இன்றி வெளிப்படுத்த முடிந்தது. அதுமட்டுமன்றி எண்ணங்களை freeze செய்யும் வசதியும் மக்களுக்கு கைவரப் பெற்றிருந்தது.

மக்கள் அரசாங்கத்திடம் நெடுங்காலம் போராடி இந்த எண்ணங்களை freeze செய்துகொள்ளும் வசதியை தற்போதுதான் பெற்றிருந்தனர்.

அடுத்த 2 நிமிடங்களில் அவர்களின் வீட்டு வாசலில் அந்தப் பொருள்கள் அனைத்தும் ``10-ம் தலைமுறை அசிமோ NI ரோபோட்" மூலமாக டோர் டெலிவரி செய்யப்பட்டது.

இருவரும் பொருள்களை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு வீடியோவைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தனர். தாத்தா மிக விளக்கமாக மதுபானம் தயார் செய்வது பற்றி குறிப்புகள் அளித்திருந்தார். அவ்வப்போது ரசனையான சில மொழிகளையும் கூறியிருந்தார். அதைக் கேட்க கேட்க அவர்களுக்கு நாவில் எச்சில் ஊறியது.

வீடியோ முழுவதும் முடிந்ததும், தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக வந்தனர்.

Representational Image
Representational Image

ஹைட்ரஜன் அடுப்பை பற்றவைத்தனர்.

தாத்தா கூறியபடி பொருள்களைத் தயார் செய்து படிப்படியாக முன்னேறினர். அடுத்த அரைமணி நேரத்தில் சூடான, சுவையான மதுபானம் தயாராகிவிட்டது.

இது சட்டத்துக்கு விரோதமான செயல், கொலைக் குற்றத்துக்கு ஈடான செயல் என்பதைத் தாண்டி மது எனும் சொல் அவர்களை எப்படியோ ஈர்த்திருந்தது. மிகுந்த உற்சாகத்துடன் தயாரான மதுவை எடுத்துக்கொண்டு வீட்டினுள் வந்தனர். அதுவரை இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை.

நாற்காலியில் அமர்ந்த பின்பு அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான். ``டேய் இதைக் குடித்தால் நம் உடம்புக்கு ஒத்துக்காது என்று அரசாங்கம் சொல்கிறது. மது குடிச்ச உடனே நம் உடம்பில் விபரீதமான விளைவுகள் ஏற்பட்டு, கொப்புளங்கள் தோன்றும் என்றும், அவை பெரியதாகி வெடித்து நாம் இறந்துபோவோம் என்றும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்களே. இப்ப நாம் இதை குடிக்கலாமா? வேண்டாமா?" என்றான்.

Representational Image
Representational Image

அதைக்கேட்டவன் கடகடவென சிரித்தான். ``டேய் நாம் மதுபானம் குடிக்கக் கூடாது என்பதற்காக அரசாங்கம் சொன்ன பல பொய்களில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் நாம் நம்ப வேண்டாம்.

அந்த தாத்தா சொன்னதக் கேட்ட இல்ல. அவரு சொல்லச் சொல்லவே எனக்கு நாக்கில் எச்சில் ஊறிவிட்டது. இத கண்டிப்பா நாம் குடிக்கிறோம்.

இன்னைக்கு முழுக்க போதையில் இருக்கிறோம்" என்றான்.

பதற்றத்துடனும் சற்று பயத்துடனும் அதேநேரத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் மதுவை அவர்கள் குடிக்க ஆரம்பித்தனர்.

அது போன்ற ஒரு சுவையை அவர்கள் இதுவரை ருசித்ததே இல்லை. ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு மிகவும் ஆனந்தமாக மதுவைக் தொடர்ந்து குடித்தனர்.

ஒரு மணி நேரம் ஆனது. இருவருக்கும் ஒன்றுமே ஆகவில்லை.

``பாத்தியா, அரசாங்கம் சொன்னதெல்லாம் பொய். மதுபானம் குடித்தால் நாம் இறந்துவிடுவோம் என்று அரசாங்கம் இத்தனை நாளா நம்மை ஏமாத்திகிட்டு இருந்திருக்கு. நமக்கு கிடைச்ச இந்த சி.டி ஒரு பெரிய பொக்கிஷம் தெரியுமா? இதை வச்சு நாம் பெரிய பணக்காரனாகப் போறோம். நாம் மதுவைத் தயார் பண்ணி அரசாங்கத்துக்குத் தெரியாமல் விற்றால் எவ்வளவு விர்ச்சுவல் பணம் நமக்குக் கிடைக்கும். நினைச்சுப் பார்த்தாலே ஆச்சர்யமா இருக்கு" என்றான் ஒருவன்.

Representational Image
Representational Image

அவர்கள் போதையில் மிதக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்தது. அப்போது அவர்களில் ஒருவனின் உள்ளங்கையில் சின்னதாக ஒரு கொப்பளம் வர ஆரம்பித்தது. ``என்னடா இது திடீர்னு கொப்பளம் வந்து இருக்கு" என்றான் அவன் பதற்றத்துடன்.

``எங்க காட்டு பார்க்கலாம்" என்றபடி அந்தக் கொப்புளத்தை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இருவரது உடலிலும் ஆங்காங்கு கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்தன. தோன்றிய கொப்புளங்கள் பலூன்கள் போல டக்கென்று பெரியதாக துவங்கின.

இருவரும் பயத்தில் அலறினர். அழுதவாறு அங்கும் இங்கும் ஓடினர். NI மருத்துவரை எண்ணங்களால் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், அவர்களால் சிந்திக்கவே முடியவில்லை. ஒரு பத்து நிமிடம் தான். அவர்கள் இருவருமே அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தனர். மயக்கத்திலேயே அவர்களுடைய உயிர் பிரிந்தது.

திடீரென ஒருவனுக்கு விழிப்புவந்தது. உடனே பரபரப்புடன் செல்போனை எடுத்து இன்றைய நாளைப் பார்த்தான். அது 2020 ஆம் ஆண்டைக் காட்டியது. அருகில் படுத்திருந்த அவனுடைய நண்பனை பதற்றத்துடன் தட்டி எழுப்பினான்.

நண்பனும் பயத்துடன் எழுந்தான்.

Representational Image
Representational Image

``எனக்கு ஒரு கனவு. 2100 வது வருஷம் நாம ரெண்டுபேரும் மதுபானம் தயாரிச்சு குடிப்பதுபோல" என்றவனை ஆச்சர்யத்துடன் பார்த்தான் மற்றவன்.

``எனக்கும் அதே கனவுதான். எப்படி ரெண்டு பேருக்கு ஒரே கனவு வரும்? கடைசியில் உன் கனவுல என்ன ஆச்சு? என்றான் பயத்துடன்.

``நாம ரெண்டு பேரும் அந்த மதுபானம் உடம்புக்கு ஒத்துக்காம இறந்துடுவோம்" என்றான் மற்றவன். இருவருக்கும் பதற்றம் பற்றிக்கொண்டது.

அவர்கள் இருவருமே தமிழ்நாட்டின் மிகப்பெரிய குடிமகன்கள். தினமும் மது குடிக்காமல் அவர்களால் உறங்கவே முடியாது எனும் குடிநோயாளிகள்.

``இது ஏதோ சதி வேலை மாதிரி தெரியுது இல்லையாடா?" என்றான் ஒருவன்.

``இருவருக்கும் ஒரே கனவு, அதுவும் கனவுபோல இல்லாமல் நிஜம்போலவே தத்ரூபமாக இருந்தது! இது எப்படி என்று எனக்கும் புரியலை" என்றபடி இருவரும் இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்திருந்தனர். பயம் அவர்களை உறங்கவிடவில்லை.

மறுநாள் இருவரும் அதிகாலையிலேயே குளித்து முடித்து கோயிலுக்குச் செல்வதற்காக வெளியே வந்தனர்.

அவர்களுடைய அறையிலிருந்த இன்னொரு நண்பன் எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத டீடோட்டலர். அவன் அவர்கள் இருவரும் அதிகாலையில் கிளம்பியதை ஆச்சர்யத்துடன் நோக்கியபடி ``மாப்ள எங்க கம்பெனியில் காம்ளிமென்டா எனக்கு ஒரு பாரின் சரக்குப் பாட்டில் கொடுத்திருக்காங்க. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. நீங்க என்ஜாய் பண்ணுங்க" என்றபடி பாட்டிலை நீட்டினான்.

Representational Image
Representational Image

இருவரும் கோரசாக ``ஆளை விடுடா சாமி! இனி இந்த சனியனை நாங்க தொடவே மாட்டோம்" என்று கையெடுத்து கும்பிட்டபடி அவசரமாக கோயிலுக்குக் கிளம்பினர்.

அவன் புன்சிரிப்புடன் செல்போனை எடுத்து தனது அலுவலக அதிகாரியைத் தொடர்புகொண்டான். ``சார் நம்முடைய

`கனவுகள் விற்பனைக்கு' புராஜெக்ட் சக்ஸஸ்! என்னுடைய ரெண்டு நண்பர்களிடம் குடிக்காதீர்கள் என்று நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஆனால், அவர்கள் திருந்துற மாதிரி இல்ல. அதுக்காக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கலாம்னு அவர்கள் குடிபோதையில் இருக்கும்போது, நாம் புதிதாய் கண்டறிந்துள்ள `இல்யூஷன் கிரியேட்டர்' (illusion creator) மூலமா அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான Advanced Virtual Reality (AVR) காட்சிகளை உருவாக்கிக் காட்டினேன். குடிபோதையில் இருந்ததால் அது பயங்கரமான கனவு என்று அவர்கள் நம்பிவிட்டனர்.

இருவருக்கும் ஒரே மாதிரியான கனவு வந்ததும் அவர்களின் பயத்தை அதிகரித்துள்ளது."

``இப்போது பயந்து நடுங்கியபடி கோயிலுக்கு சென்றுள்ளனர். இனி இவர்கள் குடிக்கவே மாட்டார்கள்" என்றான்.

``வெரிகுட். இந்த புராஜெக்ட்டுக்கு நீங்கதான் டீம் லீடர் எனும்போதே புராஜெக்ட் வெற்றியடையும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. நீங்கள் சாதித்துவிட்டீர்கள்.

சரி, இனி வருங்காலங்களில் அவர்களின் குடிப்பழக்கம் தொடர வாய்ப்புண்டா?" என்றார் அதிகாரி.

Representational Image
Representational Image

``இல்ல சார். ரெண்டு பேரும் அந்த AVR காட்சிகளால் ரொம்ப பயந்து போய் விட்டனர். மனிதன் வாழ்வதற்கான ஆதார சக்தியே உயிர் மீதான ஆசைதான். அந்த ஆசைக்கு தற்போதைய அவர்களின் ஆல்கஹால் மீதான பயம் எதிரியாய் அமைந்துவிட்டது. இந்த பயம் இனி அவர்களைக் குடிக்கவிடாது."

``இனி குடிப்பழக்கம் உள்ள மனிதர்களின் புரிதல் மற்றும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறான இல்யூஷன் காட்சிகளை உருவாக்கி நம் `கனவுகள் விற்பனைக்கு' புராஜெக்ட்டை நாடு முழுக்க ரகசியமாக பரவலாக்கலாம். இதனால் குடிநோயாளிகள் திருந்துவது உறுதி. அது மட்டுமல்லாது இது நாம் சமூகத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரும் சேவையும் ஆகும்."

``எல்லோரும் தம் பணத்தைக் கொடுத்துத்தான் சமூகசேவை செய்வார்கள். ஆனால் வசதியுள்ள குடிநோயாளிகளின் குடும்பங்களிடம் இந்த சமூக சேவைக்கென நாம் பணம் பெறலாம். அதேசமயம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவே சேவை செய்யலாம்" என்றபடி புன்னகைத்தான் அந்த டீடோட்டலர்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு