Published:Updated:

`அடுத்த ஸ்டாப் செவ்வாய் கிரகம்!' -ஒரு கற்பனைப் பயணம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

லக்ஸ் உனக்கு தெரியுமா.. இந்த மாம்பலம் ராக்கெட் ஸ்டேஷன் நூறு வருஷத்துக்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷனா இருந்துச்சாம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

கி.பி 2170. கூட்டம் நிரம்பி வழிந்தது, மாம்பலம் ராக்கெட் நிலையத்தில். இடிபாடுகளைத் தாண்டி விரைந்து வந்தனர் சீனு அங்கிளும் லக்ஸ் என்று அழைக்கப்படும் லக்ஷ்மி ஆன்டியும். நிலையத்தின் முகப்பில் இருந்த நுழைவாயிலை அவர்கள் கடந்தபோது அவர்களின் உடல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு உடல்நிலை பயணத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டது. அது சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தனர்.

"சீனு லக்கேஜ்ல இருக்குற ஃபுட் ஐட்டம் எல்லாம் எடுத்துட்டு போக அலோ பண்ணுவாங்களான்னு தெரியல" என்றாள் லக்ஸ்.

Representational Image
Representational Image
Pixabay

"நீ இன்னும் நூற்றிஐம்பது வருஷம் பின் தங்கியே இருக்க லக்ஸ். எங்க போனாலும் ஒரு சாப்பாட்டு மூட்டைய தூக்கிட்டு சுத்துற" என்று சடைந்துகொண்டார் சீனு அங்கிள்.

"உனக்கு என்ன தெரியும்? கீதுக்கு நான் பண்ற 'இட்லி நக்கெட்ஸ்' ரொம்ப பிடிக்கும். ஃப்ரோஸன் பண்ணி வச்சுருக்கேன். நாளைக்கு மார்ஸ் போய் நாம இறங்கியதும் முதல்ல அவளுக்கு அதை ஃப்ரை பண்ணித் தரனும்."

"முட்டாள்தனமா இருக்கு லக்ஸ். நாம நாளைக்கு போய் இறங்கியதும் மூனு நாள் குவாரண்டைன் பண்ணிருவாங்க. அப்புறம் எப்படி அதெல்லாம் பண்ண முடியும்?"

"நான் அதை ஃப்ரோஸ் பண்ணித்தான் வச்சுருக்கேன். எப்ப வேணும்னாலும் சமைக்கலாம்"

இவர்கள் வாக்குவாதம் செய்து முடிப்பதற்குள், அடுத்த நிலையை அடைந்தார்கள். அங்கே பேக்கேஜ் எல்லாம் சீல் செய்யப்பட்டு தனியாக எடுத்துச் செல்லப்பட்டது. அவர்கள் வலது கை பெருவிரலில் பதிக்கப்பட்ட ஒரு மைக்ரோ சிப் ஸ்கேன் செய்யப்பட்டு அதில் அவர்கள் பயண விபரக்குறிப்பு முற்றிலும் உறுதி செய்யப்பட்டு. ராக்கெட் ஏறும் நுழைவாயிலை வந்தடைந்தார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

மாம்பலத்தில் இருந்து புறப்படும் ராக்கெட் விண்ணில் உள்ள ஸ்பேஸ் ஸ்டேஷனை சென்றடையும். அங்கிருந்து கிளம்பும் ஸ்பேஸ் ஷிப் ஒருநாள் இடைவெளியில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அந்த அளவுக்கு அதிவேகமான போக்குவரத்து சாதனங்கள் அப்போது செய்யப்பட்டு இருந்தன.

"லக்ஸ் உனக்கு தெரியுமா? இந்த மாம்பலம் ராக்கெட் ஸ்டேஷன் நூறு வருஷத்துக்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷனா இருந்துச்சாம். என் தாத்தா சின்னக் குழந்தையா இருக்கும்போது ரயில்ல எல்லாம் போயிருக்கார்."

" அப்பப்பா போதும் உங்க புராணக்கதை. இதோ இந்த சீட் நம்பர்தான் உக்காருங்க." என்றாள்.

அவர்கள் அருகில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். எல்லோரும் சீட் பெல்ட் அணிந்து ஆயத்தமாக மென்மையான ஒரு குரலில் ஒலித்தது அந்த முன்பதிவு செய்யப்பட்ட வாசகம்

"அடுத்த நிறுத்தம் செவ்வாய்க் கிரகம். செவ்வாய்க் கிரகம் செல்லும் உங்கள் பயணம் இனிதாகுக."

Representational Image
Representational Image
Pixabay

அடுத்த கணமே சீறிப்பாய்ந்தது ராக்கெட். சரியாக ஒரு மணிநேரத்தில் விண்ணில் உள்ள ஸ்பேஸ் ஸ்டேஷனை அடைந்தது. ராக்கெட்டில் இருந்த அனைவரும் ஸ்பேஸ் ஷிப்பிற்கு மாற்றப்பட்டார்கள். ராக்கெட்டில் இருந்த அதே இளைஞன் இப்போதும் அவர்கள் அருகில் அமர்ந்தான். சீனு அங்கிளை பார்த்து லேசாக புன்னகைத்தான்.

சீனு அங்கிளும், " என்ன மார்ஸ்க்கு வேலை விஷயமா போறீங்களா?" என்றார்.

உடனே அந்த இளைஞன், "ஆமாம் சார். ஆன்சைட் சான்ஸ் இப்போதான் கிடைச்சது. ரெண்டு வருஷம் அதான் கிளம்பிட்டேன்" என்றான்.

"ஓ.. தட்ஸ் குட். நாங்க ரெண்டு பேரும் மூன்று மாசம் ட்ரிப். எங்க பொன்னுக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்க போகுது" என்றார் சீனு அங்கிள்.

"ஓ.. தட்ஸ் கிரேட் சார். நைஸ் மீட்டிங்" என்று கூறி முகத்தை திருப்ப முயன்றான். ஆனால் சீனு அங்கிள் விடுவதாக இல்லை. மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

Representational Image
Representational Image
Pixabay

" யு ஸீ. இப்ப எல்லாரும் வேலைக்காக மார்ஸ் போற மாதிரி நூறு நூத்தம்பது வருஷத்துக்கு முன்னாடி எல்லோரும் அமெரிக்காவுக்குத்தான் போவாங்களாம். 'அமெரிக்க வாஸ் எ லேன்ட் ஆஃப் ஆப்பர்சூனிட்டின்னு' அப்ப எல்லாரும் சொல்வாங்களாம்."

அந்த இளைஞனுக்கு சற்றே போர் அடிக்க ஆரம்பித்தது. அது என்னவோ தெரியல.. இப்போதும் சரி எப்போதும் சரி பயணத்தின்போது இந்த அங்கிள்ஸ்கிட்ட மட்டும் உக்காரவே கூடாது. ஹிஸ்டரி க்ளாஸ் எடுத்தே நம்மள போர் அடிச்சுருவாங்க. அந்த இளைஞன் சற்றே பேச்சை மாற்ற லக்ஸ் ஆன்டியிடம் திரும்பினான். லக்ஸ் ஆன்டி சிறிய புன்னகையுடன் பார்த்தாள்.

மதிய உணவு மாத்திரைகளாகவே வழங்கப்பட்டது. விண்வெளி பயணத்தில் அஜீரணக் கோளாறுகளை தடுக்கவே இந்த ஏற்பாடு. தண்ணீர்கூட மாத்திரை வடிவில்தான் இருந்தது. ஒரு சிறிய கோலி குண்டு அளவில் கண்ணாடி போன்ற ஒரு தோற்றத்தில் இருந்தது. ஆனால் வாயில் போட்டதும் கரைந்து நாக்கிலும் தொண்டையில் இதமான ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

Representational Image
Representational Image
Pixabay

உண்பதும் அருந்துவதும் விழுங்குவதாக மாறி இருந்தன. உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த மாத்திரை உணவையே உணவுக்கு பதிலாக மாற்றிவிடலாம் என்றுகூட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இருந்தாலும் நம் மக்களின் நாக்கு ருசி நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாது.

ஒரு வழியாக செவ்வாய்க் கிரகம் சென்று இறங்கிவிட்டனர். மீண்டும் பரிசோதனைகள் எல்லாம் முடிந்து மூன்று நாட்கள் தனித்திருக்கும் குவாரண்டீன் முகாம்களுக்கு செல்லும்முன் விடைபெற்று கொள்ள அருகில் வந்தான் அந்த இளைஞன். லக்ஸ் ஆன்டியின் லக்கேஜ்களை பார்த்து அதிர்ந்துபோய் நின்றான்.

"என்ன ஆன்டி.. கிரகம் விட்டு கிரகம் வரும்போதுகூட இவ்வளவு லக்கேஜா கொண்டு வருவீங்க?" என்றான்.

Representational Image
Representational Image
Pixabay

லக்ஸ் ஆன்டி சிரித்துக்கொண்டே "நாங்க எங்க பொண்ணு வீட்டுக்குப் போறோம் பா. அவளுக்கு பிடித்தமானதை கொண்டு வந்தோம்" என்று சிரித்துக் கொண்டே விடை பெற்றாள்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலும் கிரகம் விட்டு கிரகம் தாண்டினாலும் தன் பெண்ணைப் பார்க்க வரும் பெற்றோர்கள் கொண்டு வரும் பொருட்கள் மட்டும் குறையாது. அது வெறும் லக்கேஜ் அல்ல.. அளவில்லா அவர்களின் பாசம்.

-விஜி குமரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு