Published:Updated:

இனிமே இப்படித்தான்..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Joy Deb from Pexels )

மலை போலக் குவிந்திருந்த அழுக்குப் பாத்திரங்களை கழுவத் துவங்கினார். காப்பி கொதிக்கும் பொழுது தன்னுள் ஏதோ ஒரு உணர்வு பொங்கக் கண்டார்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“அப்புறம் என்ன ரெண்டு வீட்டுக்கும் சம்மதம்னா தட்ட மாத்திக்க வேண்டியது தான” என்று அக்ஷராவின் தாய் மாமன் கூறினார்.

இரு மணமக்களின் பெற்றோர் எழுந்து நின்று தட்டை மாற்ற முற்படும் பொழுது,

“ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் பேசனும்.” என்றாள் அக்ஷரா.

ஒரு கணம் இரு குடும்பத்தாரும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையென கதிர்களை அக்ஷராவின் பக்கம் வீசினர்.

“ஹீம்ம்... எல்லாரும் இப்புடி முறைக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கல, எனக்கு மனசுல இருக்குறத சொல்லனும் அவ்வளவுதான். “ என்று தொடர்ந்தாள்,

“ எனக்கு சமைக்க தெரியுமா, ஆடுவியா, பாடுவியான்னெல்லாம் பல கேள்வி கேட்டீங்களே, அதெல்லாம் உங்களுக்கும் தெரியுமான்னு எனக்குத் தெரியனும்.” என்றாள் மணமகன் வீட்டாரைப் பார்த்து .

“அடி வெளுத்து புடுவேன் அக்ஷரா. இப்படி எல்லாம் பேச உனக்கு எவ்வளவு தைரியம் “ என்று பாய்ந்தார் அக்ஷராவின் தந்தை.

“ இப்படி பேசவா உன்ன வக்கீலுக்குப் படிக்க வச்சோம்” என்று மூக்கை சிந்தினார் அக்ஷராவின் தாய்.

“அப்பா... நான் நல்லா இருக்கிற வரையும் எல்லா வேலையும் செய்வேன், எனக்கு உடம்பு முடியலைன்னா என்னய என் கணவர் தான பாத்துக்கணும். அதான் கேட்டேன்.” என்றாள்.

“என்ன தான்மா சொல்ல வர” என்றார் மணமகனின் தாய்.

“இங்க பாருங்க.... நானும் வேலைக்குப் போறேன். சோ ரெண்டு பேரும் சமமா எல்லா வேளையும் பிருச்சுக்கணும்.. ஐ வான்ட் ஈகுவாலிட்டி!” என்று உறக்கக் கத்தினாள், தன் முன் இருந்த மேஜையை தட்டியபடி.

தட்டிய சத்தத்தில் உறக்கத்திலிருந்து திடுக்கென முழித்தார் அமுதா.

Representational image
Representational image
Pixabay

“கனவா!!!: என்று வேர்த்திருந்த முகத்தைத் துடைத்தபடி, ஏதோ ஞானம் பெற்ற புத்தரைப் போல எழுந்து சமையலைறையை நோக்கிச் சென்றார் .

மலை போலக் குவிந்திருந்த அழுக்குப் பாத்திரங்களை கழுவத் துவங்கினார். காப்பி கொதிக்கும் பொழுது தன்னுள் ஏதோ ஒரு உணர்வு பொங்கக் கண்டார் .

அமைதியாக காப்பியை எடுத்துக் கொண்டு வெளியே வராண்டாவில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த தன் மாமனார் மாணிக்கத்திடம் சென்று, காப்பியைக் கொடுத்தார்.

வாசல் தெளித்து, கோலம் போட்டு,தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சி, வீட்டைக் கூட்டித் துடைத்து, குடி தண்ணீர் பிடித்து நிரப்பி விட்டு, காலை டிபனை செய்யத் துவங்கினார்.

மணி எட்டு ஆனது... மெதுவாக அமுதாவின் மாமியார் பார்வதி வெளியே வந்தார் தன் அறையிலிருந்து.

“ஏய் என்ன இப்புடி தண்ணி தொட்டி நெறஞ்சு கீழ போறது தெரியாம என்ன செஞ்சுட்டு இருக்க?" என்று கேட்டார்.

பதில் எதுவும் பேசாமல் மோட்டரை ஆப் செய்தார் அமுதா.

“டிபன் ரெடியா?” என்று மாமியார் கேட்க,

“ம்” ஐ இறக்கி வைத்தார்.

“அம்மாாாாா... என் ஷூ எங்க?” என்று கத்திக்கொண்டே வந்தான் அமுதாவின் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் இளைய மகன் விக்னேஷ்.

கையில் போனோடு கேம் விளையாடிக் கொண்டே அமார்திருந்த அவனின் தலையை தடவிக் கொடுத்து, காலை டிபனை ஊட்டினார் பார்வதி.

அவன் பள்ளிக்குக் கிளம்பியதும், கல்லூரியில் நான்காம் வருடம் இன்ஜினியரிங் படிக்கும் அமுதாவின் மகள் ரீனா வந்தாள்.போன் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள். என்ன சாப்பிடுகிறாள் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே சாப்பிட்டாள். பேச்சு சுவாரஸ்யத்தில் யாரிடமும் எதுவும் கூறாமல் பேக்கை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குக் கிளம்பினாள்.

அடுத்து ஐ.டி. கம்பனியில் வேலை செய்யும் மூத்த மகன் சூர்யா வந்தான். இவன் கையில் லேப்டாப். பெற்ற குழந்தையைப் போல எந்நேரமும் அதைத் தாங்கிக் கொண்டே அலைவான் வீட்டில்.

“அம்மா... டிபன் ரெடியா?” என்றான் .

“குளிச்சியா டா?” என்று அமுதா கேட்டார்.

மண்டையில் பல்ப் எரிய, தடதடவென ஓடி, குளித்துத் தயாராகி திரும்பி வந்தான்.

“ ஈ. ஈ. ஈ….”என்று பல்லைக் காட்டினான் .

“ஐயோ” என்று தலையில் அடித்துக் கொண்டு உணவைப் பரிமாறினார் அமுதா.

சூர்யா கிளம்பியதும் பாத்திரங்களைக் கழுவ சமையலறைக்குச் சென்றார்.

சாருவின் கார்..! - குறுங்கதை #MyVikatan

அதற்குள் அமுதாவின் கணவர் முத்துவேல் டைனிங் டேபிளில் அமர்ந்து குரல் கொடுத்தார், “ சாப்பாடு கிடைக்குமா” என்று.

அமுதா உணவைப் பரிமாற வரும் முன், “சர்ர்ர்ர்….” என்று மின்னல் பாய்ச்சலில் வந்து நின்றார் பார்வதி டைனிங் டேபிள் அருகில்.

“என்னப்பா இப்புடி எளச்சுட்டே போர. நல்லா சாப்பிடு” என்று தன் மகனுக்கு உணவை பறிமாறினார்.

“புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” என்று ரயில் வண்டி போல புகை வந்தது அமுதாவிற்கு, காதிலும் மூக்கிலும்.

“ தொப்ப டேபிள இடுச்சுக்கிட்டு இருக்கு, துரும்பா எளச்சுட்டானாமா மவன்” என்று முனுமுனுத்துக் கொண்டே தன் கோபத்தை பாத்திரங்களின் மேல் கொட்டினார்.

முத்துவேல் உணவருந்திவிட்டு, பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார். பின்னாலேயே சென்றார் பார்வதி. கேட்டிலிருந்து முத்துவேல் திரும்பிப் பார்க்க, சமையலறையில் இருந்து அமுதா எட்டிப் பார்க்க, பார்வதி அதை முறைத்துப் பார்க்க, இப்படி பார்வையிலேயே விடையைப் பரிமாறிக் கொண்டு கிளம்பினார் முத்துவேல்.

மகனை வழியனுப்பி விட்டு, வராண்டாவைக் கடக்கையில்,

“என்னங்க வாங்க சாப்பிடலாம்” என்று தன் கணவரை அழைக்க, படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை வைத்து விட்டு ஓடி வந்தார்.

“ஏய்.., போயி கேட்ட சாத்திட்டு, நியூஸ்பேப்பர் எல்லாம் கரக்ட்டா வச்சிட்டு, சாப்பிட வா” என்றார் பார்வதி.

பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன வேலையை செய்து விட்டு திரும்பி வரும் பொழுது, எல்லோரும் உண்ட பிறகு கடைசியாக மீதி இருந்த உணவை சாப்பிட அமர்ந்தார் அமுதா. இந்த வீட்டின் மருமகள் போல அல்ல ‘நாய்’ போல உணர்வு தோன்றிற்று. வாயில் போட்ட உணவை விழுங்க முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, காம்பவுண்ட் சுவரைத் தாண்டி கொட்டிவிட்டு, அடுத்த கட்ட வேலையைத் துவங்கினார்.

நாள் முடியும் பொழுது, கை கால்கள் 'விடுதலை, விடுதலை’ என்று கொடி பிடிக்க, மெத்தையில் தலை சாய்த்தார். அருகில் படுத்திருந்த முத்துவேல்,

“ அமுதா அந்தத் தண்ணியக் கொஞ்சம் எடுத்துக்குடு” என்று கூற

“ ஆ ஆ..”என்று கத்தி எட்டி உதைப்பது போல மனதில் காட்சி மட்டும் எழ, தண்ணீரைக் கொடுத்துவிட்டு அமைதியாக கண் மூடினார்.

உறங்கினார்.

விடிந்தது...

“ஐ வான்ட் ஈகுவாளிட்டி” சத்தம் கேட்க திடுக்கென முழித்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை…

Representational image
Representational image
senjakelabu29 from Pixabay

தனக்கு மட்டும் காபி போட்டுக் குடித்துவிட்டு, ஒரு பெரிய வெள்ளை போர்டில் ஏதோ எழுதிவிட்டு, தன் மகளின் வாக்கிங் ஷூவைப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

எட்டு மணிக்கு வீடு திரும்பினார்..

அலங்கோலமாக இருந்த தன் வீட்டு வாசலைக் கடக்கும் பொழுது பார்வதியின் சத்தம் தன்னைத் தாண்டி தெருமுனை வரை போவது கண்டார்.

வராண்டாவில் பயத்தோடு மாமனார் செய்தித்தாளில் முகத்தைப் பொதித்திருந்தார். தலைகீழாகப் பிடித்திருந்த செய்தித்தாளை நேராகத் திருப்பிக் கொடுத்தார் அமுதா.

ஷூ வைக் கழட்டி விட்டு உள்ளே செல்லும் பொழுது,

“எங்க டீ போன?” என்று பார்வதி கத்த,

பார்வதிக்கு மேல் சத்தத்தை உயர்த்தி,

“வாக்கிங் போனேன் “டீடீ” ன்னு சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. எனக்கு அமுதா ன்னு ஒரு பேரு இருக்கு . அத சொல்லிக் கூப்பிடுங்க இனிமே” என்று நிதானமாக பதில் அளித்தார் அமுதா.

வாய் பிளந்து நின்ற பார்வதியைக் கடந்து சென்று கால் கை அலம்பி விட்டு வந்தார் அமுதா. பார்வதி சமைத்திருந்த உணவை உண்ண ஆரம்பித்தார்.

இவர்கள் சத்தம் கேட்டு முத்துவேல் - ரீனா- சூர்யா மூவரும் கீழே வந்தனர். அமுதா சாப்பிட்டுவிட்டு தான் எழுதிய வெள்ளை போர்டை எடுத்து வந்தார்.

அனைவரையும் ஹாலில் அமரச் செய்தார்..

“இது டெய்லி ஷெட்யூல், இதுல யார்யார் என்னென்ன வேலை என்னென்னைக்கு செய்யனும்னு எழுதியிருக்கேன் . வாசல் கூட்டுறதுல இருந்து கக்கூஸ் கழுவுர வரை எல்லாரும் எல்லா வேலையும் இனிமே செய்யனும். எனக்கும் வயசாகுது. என்னால இனிமே கஷ்டபட முடியாது.” என்றார்.

“நீ ஏன் கஷ்ட படுற? சூர்யாவுக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சா உன் மருமக, வந்து எல்லாத்தயும் பாத்துக்கப்போறா” என்றார் பார்வதி.

“மருமகளுக்களுக்கு வேற வேலையே இல்லயா? . மருமகளுங்க என்ன செக்கு மாடா? நான் படுற கஷ்டம் பத்தாது. என் மருமக வேற வந்து கஷ்ட படனுமா ? என்னோட ஒழியட்டும் உங்க விதி . என் வீட்டுல இனிமே எல்லோரும் சமம். சகல வீட்டு வேலையும் செய்யத் தெரிஞ்சா மட்டும் தான் என் பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். ஐ வாண்ட் ஈகுவாளிட்டி” என்று முடித்தார்.


மீட்டிங்கின் நடுவில் போனில் கேம் விளையாடிக் கொண்டே வந்தான் விக்னேஷ். வந்தவன் அமுதாவின் முன் நின்றான். நிமிர்ந்து பார்த்தான். “பளார்” என்று ஓங்கி அவன் கன்னத்தில் தன் ஐவிரலயும் பதித்தார். அடி விழுந்த வேகத்தில் போன் பறந்து கீழே விழுந்து நொறுங்கியது.

Representational Image
Representational Image
Pixabay

“இனிமே போனத் தொட்ட கைய நசுக்கிருவேன். அந்த போர்டுல நீ செய்ய வேண்டிய வேலை இருக்கு. எப்போ என்ன பண்ணனும்னு பாத்து செய்" என்று கூறிவிட்டுத் திரும்பும் பொழுது, மீதி அனைவரும் அவரவர் கன்னங்களில் கை வைத்து நின்று கொண்டிருந்தனர், அடி அவர்களுக்கு விழுந்தது போல.

மீட்டிங் முடிந்ததும் மாணிக்கம் அமுதாவிடம் சென்று,

“ ஏன்மா இந்த திடீர் புரட்சி?” என்று கேட்டார்.

“என்னைக்காவது நிலைமை மாறாதா, யாராவது மாத்த மாட்டாங்களான்னு காத்திருந்தா ஒன்னும் நடக்காது மாமா. மாற்றத்த நாம தான் உண்டாக்கனும். கெட்டது செய்யத்தான் பயப்படனும். நல்லது செய்ய இல்ல.” என்றார்.

அன்றிலிருந்து எல்லாரும் வேலையை சமமாக செய்தனர். அவரவர் வேலைகளை அவர்களே செய்தும் கொண்டனர்.

இரண்டு மாதங்களில் அவர்களுக்கு எல்லா வேலையும் பழகிவிட்டது.

விக்னேஷிற்கு ஊட்டி விட வந்த பார்வதியிடமிருந்து உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு,

“பாட்டி... நானே சாப்பிட்டுக்குறேன்.” என்றான்.

தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு, செய்தித்தாளை வாசித்து விட்டு அதை மடித்து ஒழுங்காக வைத்தார் மாணிக்கம்.

காலை உணவை உண்டு விட்டு, உண்ட தட்டைக் கழுவி வைத்துவிட்டு, அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினாள் ரீனா.

வீட்டிற்குத் தண்ணீர் பிடித்துவிட்டு, தொட்டி நிறைந்தவுடன் மோட்டரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தார் பார்வதி.

காலை நேரம் விழுந்த பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு, மனைவியிடம் நின்று 'நான் கிளம்புறேன்' என்று கூறிவிட்டு விடைபெற்றார் முத்துவேல்.

மதிய உணவை செய்ய சூர்யா உதவி செய்து கொண்டிருந்தான்.

“இன்னைக்கு ஆபீஸ் போகலயாடா ?” என்று அமுதா கேட்டார். “இல்லம்மா.. லீவ் போட்டிருக்கேன். உங்களுக்கு ஹெல்ப் பண்ண” என்றான்.

“யாரு நீயா? காரணம் இல்லாம இருக்காதே. யாருடா அந்தப் பொண்ணு?” என்று கேட்டார்.

“ ஈ. ஈ. ஈ..” என்று பல்லைக் காட்டி “அம்மா.. ரெண்டு பேரும் ஸ்கூல்ல ஒன்னா படுச்சோம். ஷி இஸ் அ லாயர் நவ்" என்றான்.

“ம். குட், பொண்ணு பேரு என்ன?” என்று கேட்டார்.

“அக்ஷரா” என்றான்.

ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் பார்தார் அமுதா.

“அம்மா. அவ உங்கள மாதிரியே. ஐ வாண்ட் ஈகுவாளிட்டினு தான் எப்பயும் பேசுவா” என்றான்.

ஆனந்தக் கண்ணீருடன் , “ அவ என்ன மாதிரி இல்லப்பா. நான் தான் அவள மாதிரி” என்றார் அமுதா.

புரியாமல் முழித்தான் சூர்யா.

திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

-மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு