Published:Updated:

ஆம்புலன்ஸ்!- சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

நல்ல கூட்டம் என்பதால் சாப்பிட்டு வர சிறிது நேரம் ஆகியிருந்தது. தனது கைபேசியில் ஏதோ செயலி மூலம் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தார்.

தாமதமாகிவிட்டது. வழக்கம்போல்தான், 7 மணிக்கு அடித்த அலாரத்தை மதிக்காததினால் வந்த வினை. வேக வேகமாக படிகளில் இறங்கி வந்தேன். காரின் மீது காலைக்கடனை முடித்த காகத்தை முறைத்தபடியே கதவைத் திறந்தேன். மெதுவாக பின்புறம் காரை நகர்த்தியபோது, ``சார்… சார்…” என்று அழைத்தவாரே வேகமாக என்னை நோக்கி வந்தவரை கவனித்து காரை நிறுத்தினேன்.

Representational Image
Representational Image

நான் வேலை பார்க்கும் அதே காம்ப்ளக்ஸில்தான் கீழ்மாடியில் வேலை பார்க்கிறார் அப்பார்ட்மென்டிலும் நான் இருக்கும் தளத்தில்தான் அவரும் வசிக்கிறார். ஆனால் என்ன, பேர் தான் நினைவில்லை. வேர்க்க விறுவிறுக்க வந்தவர், ``என் கார் காலையில் இருந்து மக்கர் பண்ணுது. பவுன் டேயின் பிளாசா தானே போறீங்க. அங்கே தான் நானும் வேலை பார்க்கிறேன். என்னைக் கொஞ்சம் ட்ரோப் பண்ணிடுங்கோளேன்” என்றார். ``இதிலென்ன சார் இருக்கு, பண்ணிட்டா போச்சு” என்றேன். ``ரொம்ப நல்லதா போச்சு, இருங்க நான் போய் என் பையனையும் கூட்டிட்டு வந்திடுறேன்” என்று வீட்டை நோக்கி ஓடினார். கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே தலையை சொறிந்தேன். சரியாக ஆறு நிமிடங்களுக்குப் பின் வந்தவர் ``போகிற வழியில்தான் இவன் ஸ்கூல், கொஞ்சம் இவனை இறக்கி விட்டுட்டு போய்டலாமே” என்றார் வேறென்ன செய்ய `சரி’ என தலையை ஆட்டியவாறே வேகத்தைக் கூட்டினேன். `சார் நான் எப்பொழுதும் ஆபீஸ் போகிற வழியில் நம்ம பாய் கடையில் தான் சாப்பிடுவேன். போய் சாப்பிட்டு போய்டலாம்” என்றேன்.

``பரவால்ல சார்” என்றவர், ``ஆனா பையனுக்குதான் ஸ்கூலுக்கு கொஞ்சம் லேட் ஆறது…” என்று இழுத்தார். ``சார் பையன் சரஸ்வதி வித்யாலயா தானே” ``ஆமா சார் '' என்றார். ``அந்த ஸ்கூல் தாண்டிதான் நம்ம பாய் கடை இருக்கு, அங்க தான் ரெகுலரா சாப்பிடுவேன்” என்றேன். ``அப்டிங்களா…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டார். பின் தன் மகனுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார். ``யார் கிட்டயும் ஏதும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. `பார்த்தா மாமா’ பையன் பக்கத்துலதான் உக்காரணும் என்ன” என்றார். ``ஸ்கூல் வந்தது. பையனை இறக்கிவிட்டுவிட்டு கிளம்பினோம். பாய் கடை வந்தது. ``சார் சாப்பிட்டு வரலாமா” என்றேன். ``அவர் தயக்கத்தோடு இல்லை சார். நீங்க போங்க” என்றார். ``பரவால்ல வாங்க” என்றேன். ``இல்லை சார் நான் இந்தக் கடைகளிலெல்லாம் சாப்பிடறதில்ல. அதுவும் இல்லாம வீட்டிலேயே சாப்பிட்டுதான் வந்தேன்” என்றார். வந்த கோபத்தை கண்களில் மட்டும் காட்டிவிட்டு சிரித்த முகத்தோடு ``சரி” என்று வேகமாகக் கிளம்பினேன்.

Representational Image
Representational Image

நல்ல கூட்டம் என்பதால் சாப்பிட்டு வர சிறிது நேரம் ஆகியிருந்தது. தனது கைப்பேசியில் ஏதோ செயலி மூலம் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தார். ``போலாமா சார்” என்றேன். ``ஆமா சார் லேட் ஆகிடுச்சு” என்றார். அதன்பின் அவரோட பேச தோணாமல் இளையராஜாவைப் பாட வைத்தேன். `அவர் போல இன்னொருவர் இனி வர முடியாதுதான்’ என்று நினைத்தவாறே மனதினுள் பாடிக்கொண்டு மெய்ம்மறந்திருந்தேன். திடீரென ``சார் லெஃப்ட் வாங்கோ லெஃப்ட் வாங்கோ” எனப் பதறினார். ``என்ன சார் என்ன ஆச்சு” என்றேன். ``ஆம்புலன்ஸ் வருது சார் வழி விடுங்க” என்றார். வேகமாக காரின் திசையை மாற்றி ஆம்புலன்ஸுக்கு வழி விட்டேன். ஓரிரு நிமிடத்தில் ஆம்புலன்ஸ் எங்களைக் கடந்து சென்றது. ஆபீஸை நெருங்கினோம். காரை பார்க்கிங்கில் நிறுத்தும்போது என்னையும் மீறி கேட்டுவிட்டேன். ``அடையாளம் தெரியாத அந்த ஆம்புலன்ஸில் இருக்கும் ஏதோ ஒரு மனிதனுக்கு காட்டும் அன்பு, அதே மனிதனின் அடையாளம் தெரிந்த பின் காணாமல் போனதென்ன சார்? அந்த அக்கறை எங்கே போய் விடுகிறது? ஏன் இவ்வளவு வெறுப்பு? பதில் ஏதும் இன்றி தயக்கத்தோடு புன்னகைத்தார். நானும் நகைத்தேன். ``சாரி சார் உங்க பெயர் ஞாபகம் இல்லை” என்றேன். தயக்கத்தோடு ``ராமானுஜம் சார்” என்றார். ``என் பேர் தானா உங்களுக்கும்” என்று கூறி விடை பெற்றேன்.

- மோகன் பிரசாத்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு