Published:Updated:

`ஒரு நடிகையின் நாடகம்..!' - மைக்ரோ கதை #MyVikatan

பள்ளிக் கட்டணத்தை உடனே செலுத்துமாறு பள்ளியிலிருந்து தொடர்ந்து குறுந்தகவல் வந்துகொண்டே இருக்கிறது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று அவனுக்குப் பெரும் குழப்பமாக இருந்தது. இதைச் செய்வதற்கு மிகவும் தயக்கமாகவும் பயமாகவும்கூட இருந்தது.

ஆனாலும் வேறு வழி தெரியவில்லை. ஆமாம். அவன் இப்போது பிக்பாக்கெட் அடிக்கப் போகிறான்!

பிக்பாக்கெட் அடிப்பது சினிமாக்களில் பார்க்கும்போது மிகவும் சுலபமான ஒன்றாகத் தெரிந்தது. ஆனால் நடைமுறையில் அதனைச் செயல்படுத்த முயற்சிக்கும்போதுதான் அதில் உள்ள சிக்கல்களும் சவால்களும் அவனுக்குப் புரிந்தன.

அவன் தன் மகளை அந்த ஊரில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டான். யார் யாரையோ ரெக்மண்ட் பிடித்து அந்தப் பள்ளியில் தன் மகளைச் சேர்த்தான். பள்ளிக் கட்டணம் மிக மிக அதிகம். ஆயினும் தன்னுடைய குழந்தையின் கல்விக்கு அந்தப் பள்ளிதான் சிறந்ததாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் தனது மகளை அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வருகிறான்.

Representational Image
Representational Image
Pixabay

கடந்த ஒரு வருடங்களான அவனுடைய பொருளாதாரநிலை சரியில்லை. தற்போது லாக்டௌன் காரணமாக மூன்று மாதங்களாக சுத்தமாக வேலையும் இல்லை சம்பளமும் இல்லை. எப்படியோ ஒருவாறு சமாளித்து குடும்பத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

ஆனால், பள்ளிக் கட்டணத்தை உடனே செலுத்துமாறு பள்ளியில் இருந்து தொடர்ந்து குறுந்தகவல் வந்து கொண்டே இருக்கிறது. பள்ளிக் கட்டணம் செலுத்த பெற்றோருக்குப் போதுமான கால அவகாசம் அளிக்குமாறு அரசாங்கம் என்னதான் அறிவுறுத்தினாலும், ஒரு சில பள்ளிகள் இதுபோன்று பெற்றோரை கட்டாயப்படுத்தத்தான் செய்கின்றன.

கடந்த ஆண்டின் மூன்றாம் பருவக் கட்டணம் மற்றும் இந்த ஆண்டின் முதல் பருவக் கட்டணம் ஆகிய இரண்டையும் உடனே செலுத்துமாறு பள்ளி அவனைக் தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறது.

' பத்து நாள்களுக்குள் கட்டணம் செலுத்தத் தவறினால் குழந்தையைப் பள்ளியைவிட்டு நீக்கிவிடுவோம்' என்று பயமுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் தற்போது வர ஆரம்பித்து இருந்தன.

தான் அறிந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைவரிடமும் அவன் பணம் கேட்டுப் பார்த்துவிட்டான். அவன் கேட்பது மிகப்பெரிய தொகை என்பதால் இன்றைய சூழலில் அவ்வளவு பணத்தைக் கொடுக்க யாருமே தயாராக இல்லை. மேலும் பெரும்பான்மையோரிடம் பணமும் இல்லை.

Representational Image
Representational Image
Pixabay

இன்றைய சூழலில் தனியார் பள்ளிகளைவிட பல அரசுப்பள்ளிகள் சிறப்பான கல்வியைத் தருகின்றன என்னும் நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்க அவன் தயாராக இல்லை. அந்தப் பிரபலமான பள்ளியை விட்டு விட்டு வேறு பள்ளியில் தனது மகள் படிப்பது என்பது அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது.

எனவே பல வழிகளிலும் யோசித்து வேறுவழியின்றி அவன் திருடுவது என முடிவு செய்துள்ளான். ஒரு வாரமாக பலவாறு கண்காணித்து, அந்தக் கடைவீதியில் நல்ல வசதியுள்ள ஐந்து பேரைத் தேர்வு செய்திருந்தான்.

இன்று எப்படியாவது அவர்களில் ஒருவரிடம் பிக்பாக்கெட் அடித்துவிடுவது என்ற உறுதியுடன் அவன் டீக்கடையில் நின்றிருந்தான். சிறிது நேரத்தில் அவன் எதிர்பார்த்த நபர்களுள் ஒருவர் அவனுக்கு முன்பு போன் பேசியவாறே நடந்து செல்லத் தொடங்கினார். அவன் மெல்ல அவரின் பின்னாலேயே சென்றான். சரியான சந்தர்ப்பம் வாய்த்ததும் லாகவமாக அவரது பர்ஸை எடுத்துவிட்டான்.

ஆனால் அவன் எதிர்பாராதவிதமாக அவர் திடீரென அவனது மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டார். "போலீஸ்காரனிடமே பிக்பாக்கெட் அடிக்கிறியா?" என்றபடி அவனது கைகளை போலீஸ்காரர் முறுக்கத் தொடங்க அவன் பயத்தில் உறைந்துபோனான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தக் கடைவீதியில் இருந்த பலரும் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டனர்.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதுபோன்ற ஒரு அவமானம் தனக்கு நேரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

ஆளாளுக்கு அவனைத் திட்ட ஆரம்பித்தனர். அடுத்ததாக அடி விழும் என்னும் சூழல். தன்னுடைய வாழ்வு இதோடு முடிந்தது என அவன் எண்ணிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு பெண் வேகமாக கேமராவுடன் சிரித்தபடி ஓடிவந்தார்.

``ப்ளீஸ்.. யாரும் அவரை அடிச்சுடாதீங்க. இது ஒரு டி.வி நிகழ்ச்சிக்கான ஃபிராங்க். பப்ளிக்ல ஒருத்தர்கிட்ட பர்ஸ திருடிட்டு கையோட திருடன் மாட்டிக்கிட்டா மக்கள் ரியாக்ஸன் எப்படி இருக்கும் என்று ஷூட்டிங் பண்ணிட்டு இருக்கோம். இவர் எங்க நடிகர்தான்" என்றபடி அவள் மக்களுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.

அந்த நடிகையைச் சில தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்து இருந்ததால், இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என மக்கள் சுலபமாக நம்பிவிட்டனர். இந்த நிகழ்ச்சி, "எந்த டி.வி-யில் எப்போது ஒளிபரப்பாகும்?" என்று அவளிடம் வினவத் தொடங்கினர்.

அவர்களுக்கு உரியவாறு பதில் கூறியவாறே அந்த நடிகை இவனை நோக்கினாள்.

Representational Image
Representational Image
Pixabay

இவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபடி தனியாக நின்று கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் மக்களைச் சமாளித்து அனுப்பியவள் இவனிடம் வந்தாள், "பார்த்து பத்திரமா வீட்டுக்குப் போங்க" என்று கூறியபடி கேமிராவை உறையினுள் போட ஆரம்பித்தாள்.

தயக்கத்துடன் சில அடிகள் நடந்தவன்,

அவளிடம் திரும்பி, "ரொம்ப தேங்க்ஸ்" என்றான். சில நொடிகள் அவனையே பார்த்த நடிகை "எதாவது உதவி தேவை என்றால் போன் பண்ணுங்க" என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

தூரத்தில் நின்று அங்கு நிகழ்ந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நடிகையின் தோழி அவளுடன் இணையாக நடந்தவாறே, "ஒரு பிக்பாக்கெட்டுக்குப் போயி உதவி பண்ணி இருக்க. இப்படிப்பட்ட ஆட்களை அடிச்சு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போயிருக்கணும்" என்று கோபத்துடன் கூறினாள்.

அதற்கு நடிகை, "நான் முன்னாடி குடியிருந்த வீதியிலதான் அவர் இருந்தார். நிறைய படிப்பார். ரொம்ப நல்லவர். ஏதோ சந்தர்ப்பச் சூழ்நிலை இப்படிப் பண்ணிட்டார்.

ஒருத்தர் தப்பு செஞ்ச உடனே தண்டனை கொடுப்பதை விட, அவங்க திருந்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

சில தப்புகளுக்கு இதுதான் சிறந்த தண்டனையா இருக்கும். அதுவும் இல்லாம அவர் தொடர்ச்சியா திருடவும் வாய்ப்பில்லை. ஏதோ அவசர பணத் தேவை போல"

"இப்ப அவர் போலீஸில் மாட்டிக்கிட்டா அவரோட வாழ்க்கை முடிஞ்சுடும்.

அதனாலதான் ஒரு சின்ன டிராமா போட்டு அவரைக் காப்பாத்தினேன். நல்லவேளை இன்னைக்கு நீ குறும்படம் எடுக்க வந்ததால் உன்கிட்ட கேமரா இருந்துச்சு" என்று சிரித்தபடி தோழியிடம் கேமராவைக் கொடுத்தாள்!

Representational Image
Representational Image
Pixabay

தோழி புன்னகையுடன், " எப்படி இருந்தாலும் நீ செய்தது சட்டப்படி தப்புதான்" என்றாள். "சட்டப்படி தப்புதான். ஆனா தர்மப்படி சரி" என்று பதில் புன்னகை சிந்தியபடி தோழியிடமிருந்து விடைபெற்றாள் நடிகை.

தான் காப்பாற்றிவிட்டது தன்னுடைய முன்னாள் காதலன் என்பதைத் தோழியிடம் கூற அவள் ஏனோ விரும்பவில்லை. தான் நடிக்க வந்தது பிடிக்காமல் தன்னைவிட்டு விலகியவனை, தன்னுடைய நடிப்பின் மூலமே காப்பாற்றியது அவளுக்கு ஒருவித திருப்தி அளிப்பதாய் இருந்தது.

கனத்த சோகத்துடன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள். அந்தப் புன்னகையில் துளியும் நடிப்பில்லை!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு