Published:Updated:

`தாயம் விழுந்திருச்சு..!' - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மனசுக்குள் புலம்பிக்கொண்டே வரும்போது, மிரட்டும் தொனியில் ஒரு குரல்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கட்டட வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள் ராஜலட்சுமி.

"காலைல கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டு வந்தேன். அந்த மனுஷன் திருந்தியிருப்பாரான்னு தெரியலையே, இன்னைக்கு என்னென்ன செஞ்சு வச்சுருக்காரோ, எத்தனைபேர்ட்ட சண்டை இழுத்துருக்காரோ.

போன வருஷம் தண்ணி அடிச்சுட்டு, வீட்லயும் பக்கத்து வீட்லயும் சண்டை போட்டுட்டு போனவர், 40 நாளைக்கு முன்னாடிதான் வந்தாரு. 40 நாள் நிம்மதியா இருந்தேன். கடவுளே அந்த நிம்மதி தெனமும் நெலைக்கணும்."

மனசுக்குள் புலம்பிக்கொண்டே வரும்போது, மிரட்டும் தொனியில் ஒரு குரல்.

Representational Image
Representational Image

"ஏய் ராசலட்சுமி !"

அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்த்தாள். அங்கு பக்கத்து வீட்டு கணேசன், தான்-பாதி, தண்ணி-பாதியாக தள்ளாடிக்கொண்டி ருந்தான்.

"ஓம் புருசனுக்கு என் கையாளதான் சாவு... சொல்லி வை... என்ன என்னன்னு நெனச்சுக்கிட்டு இருக்கான்..." இவள் என்ன செய்வதென்று புரியாமல் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, அங்கிருந்த பாட்டி, "நீ வீட்டுக்குப் போமா, இந்த குடிகாரப் பயலுகள கெட்டி அழுவணும்னு தலை எழுத்து, நீ போ ராசாத்தி" என்று இவளை அனுப்பிவிட்டு, கணேசனை "பேசாம கிடடா கிறுக்குப் பயலே" என்று அதட்டினாள்.

"போச்சு, இன்னைக்கும் தண்ணிய போட்டாரு போல. கணேசன் கிட்ட என்ன பிரச்னை பண்ணாரோ. கணேசன் பொண்டாட்டிக்கு பயந்து இங்க அம்மா வீட்லயே ஆடுறார், என் புருஷன் தண்ணிய போட்டா யாருக்கும் பயப்பட மாட்டாரே. புள்ள வேற எங்க இருக்காளோ " புலம்பியவாரே காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

பதினெட்டு லிட்டர் குடங்கள் இரண்டை நீர் தளும்பத் தளும்ப இரண்டு கைகளில் தூக்கிக்கொண்டு வந்தான் தங்கராசு.

பதறி எடுத்து வாசல் வரை ஓடிப்போய், "உங்கள யாரு தண்ணி எல்லாம் எடுக்கச் சொன்னது? ஒலையில அரசிய போடமுன்ன தண்ணி எடுத்துட்டு வந்துட்டாரு, சும்மா இரும். தண்ணி எல்லாம் நான்தான் எடுப்பேன்."

"நீ வேலைக்கு வேற போவணும். நான் சும்மா தான இருக்கேன் ரெண்டு கொடம் தண்ணி எடுத்தா கொறஞ்சா போவப் போறேன்."

"நீரு என்ன போவ மாட்டேன்னா இருக்கீரு,

கவருமென்டு சொல்லுச்சுனு மெல்ல பூட்டிட்டாங்க.

இப்ப என்ன... நீரு போனா என்ன, நான் போனா என்ன.

வவுத்துக்கு கஞ்சி குடிக்க சம்பாத்தியம் இருக்குல்ல. போதும். வீட்டு வேலையும் நானே பாத்துருவேன்.

வேலைக்கும் போய்க்கிடுவேன்.

புள்ள வெளில எங்கயும் போவாம வீட்லயே வெளயாட வச்சு பாத்துக்கோரும், அது மட்டும் போதும் எனக்கு."

"அது மட்டும் போதுமா."

"இல்ல, அதவிட முக்கியமா ஒண்ணு இருக்கு."

Representational Image
Representational Image

"இன்னைக்கு கடை தொறக்காங்க-னு மறுபடியும் பாட்டல வாயில வச்சுராத 40 நாள் இருந்த மாதிரியே தெனமும் இருந்துட்டா புண்ணயமா போவும்."

"ம்ம்ம்... "

"என்னமோ எனக்கு இன்னும் உம்ம மேல நம்பிக்கை வரல. தயவு செஞ்சு குடிகாதரும். போன வருஷம் நடந்தது நெனச்சா எனக்கு கொலையே நடுங்குது. அந்த கணேசன் உங்கள சும்மா இருக்க விடமாட்டான். அவன் வந்து வா வா னு கூப்பிடுவான் போவாதரும்."

"சரி"

நினைவுகளில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தவள்,

"கணேசன் கூப்டா போவதரும்னு சொன்னேன், போய்ட்டாரு போல, போயி போதைல ரெண்டும் என்ன சண்டை போட்டாங்களோ, நம்ம பொழப்பு இப்பிடித்தான் போல" என்று எண்ணிக்கொண்டே வீட்டுக்கு வந்துவிட்டாள்.

வீடு வழக்கம் போல திறந்திருந்தது. அப்பா மகள் இருவரையும் காணோம்.

"ஏங்க , ஏங்க "

என்று சத்தமிட்டவாறே வீடு முழுதும் சுத்திப் பார்த்தாள்.

"அம்மா நாங்க மாடில இருக்கோம்" மகளின் குரல் கேட்டது. குடுகுடுவென படிகளில் ஏறி மாடியை அடைந்தாள்.

அப்பாவும் மகளும் தாயம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். இவள் ஏதும் கேட்கும் முன்,

"எம்மா இன்னைக்கு கணேச மாமா வந்து அப்பாவ எங்கயோ கூப்ட்டாரா, அப்பா வரமாட்டேன்னுசொன்னாரா, பெறவு இன்னோராட்டி கூப்ட்டாரா... அதுக்கு, அப்பா வஞ்சு வெரட்டி விட்டாரு. மாமா பெறவு வந்து அடிப்பாராமா."

தாயம் உருட்டிக்கொண்டே "அவன் வந்துட்டு போனதுல இருந்து கேட்டுகிட்டே இருக்கா. குடிகாரப்பய நம்ம வீட்டு பக்கத்துல வரமுடியாதுனு சொல்லு. ஐ... தாயம் விழுந்துருச்சே! "

"சரிப்பா இன்னைக்கு நீ ஜெயிச்சுட்ட."

ராஜலட்சுமிக்கு கண்களில் நீர் வந்துகொண்டிருந்தது. `என்னையவும் ஆட்டத்துக்கு சேத்துக்கோங்க' என்று தாயக்கட்டையைப் பிடுங்கினாள்.

-பா. ஹரிஹரசெல்வம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு