Published:Updated:

ஒரு பொய் சொல்லணும்..! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image

அன்று, மாதத்தின், கடைசி வேலை நாள். சம்பள தினமும் கூட. வங்கிகள் மூலம் சம்பளம் பெறும் திட்டமெல்லாம் அப்போது அமலாகவில்லை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

(நான்கைந்து சகோதரர்களைக் கொண்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இது சமர்ப்பணம்)

“முத்துக்கு முத்தாக

சொத்துக்குச் சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்குக் கண்ணாக…

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக…”

என்ற கண்டசாலாவின் குரலே நம்மை நெகிழச் செய்யுமென்றால், ரங்கராவின் நடிப்பும் சேரும்போது நாம் உருகிப் போவோம் என்பதே உண்மை.

மற்றவருக்கு எப்படியோ. மூன்று அண்ணன்களையும், இரண்டு அக்காக்களையும் கொண்ட என்னைப் போன்றோருக்கு அந்தப்பாடல் முழுவதுமே முத்துதான்.

Representational Image
Representational Image

அதிலும்,

“ராஜாக்கள் மாளிகையும்

காணாத இன்பமடா.

நாலுகால் மண்டபம் போல்

நாங்கள் கொண்ட சொந்தமடா.''

என்ற வரிகளின் முழுப்பொருளை என்னைப் போன்ற கடைக்குட்டிகளால்தான் தெளிவாக உணர முடியும்.

அந்த அன்பும், பாசமும் தற்போதுள்ள இரண்டே குழந்தைகள் குடும்பங்களில் மிஸ்ஸிங்.

ஜனத் தொகை பூச்சாண்டியெல்லாம் அந்தக் காலத்தில் இல்லை. ஜனங்களே சொத்தாக மதிக்கப்பட்ட காலமது. என்ன ஒரு குறையென்றால், உணவு உற்பத்தி இப்போதுள்ள அளவுக்கு முன்னேற்றம் பெற்றிருக்கவில்லை. எனவேதான் பஞ்சமும், பட்டினியும் தலை விரித்தாடின. ஏழ்மையிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. காரணம்…பாசமும், அன்பும்.

‘அன்புச் சகோதரர்கள்’, சினிமாவில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அலுவலகத்தில் அப்படி ஓர் அன்புச் சகோதரரைச் சந்தித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே.

அன்று, மாதத்தின், கடைசி வேலை நாள். சம்பள தினமும் கூட. வங்கிகள் மூலம் சம்பளம் பெறும் திட்டமெல்லாம் அப்போது அமலாகவில்லை. சம்பளத்தொகையை ஒரு கவரில் வைத்து, மேலே பெயர், பதவியின் பெயர் இவற்றைச் சுருக்கமாக எழுதி, உள்ளே உள்ள டினாமினேஷனெல்லாம் எழுதிக் கொடுப்பார்கள். பணியாளர்கள் அக்கவுண்ட் செக்‌ஷனுக்குப் போய் வாங்கிக் கொள்ள வேண்டும். கெஜடேட் நிலை அலுவலர்களுக்கு, அவர்கள் சீட்டிற்கே வந்து விடும். பதிவேட்டில் ஒட்டப்படும் ரெவின்யூ ஸ்டாம்பின் மேல் கையெழுத்திட்ட பின் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நண்பர் அவசரமாக என் அறைக்கு வந்து,தனக்கு ஒரு சிறிய உதவியைச் செய்துதர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

Representational Image
Representational Image

“சிறிய உதவிதானே. செய்தால் போயிற்று.முதலில் உட்காருங்கள். என்ன செய்ய வேண்டும்... சொல்லுங்கள்.” என்றேன்.

“உட்காரவெல்லாம் இப்போது நேரமில்லை. இன்னிக்கி சம்பள நாள் வேற. பஸ்ல ‘பீக் அவர்’கூட்டம் வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடணும் அதனால… ”

இவர் எப்போதுமே இப்படித்தான். கொஞ்சம் இமோஷனல் டைப். எப்பொழுதும்… எல்லாவற்றிலும் ஓர் அவசரந்தான். ஊரில் இப்படி ஓரிடத்தில் தங்காமல் அலைபவர்களை, ’அவன் காலில் பம்பரம் கட்டியவன்.’ என்பார்கள். அதைப்போல பம்பரம் கட்டியவரோ இவர் என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

``ஆமாம். சீக்கிரமாகச் சென்றுவிடுவதே நல்லது. சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?”

“பெரிதாக ஒன்றுமில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஒரு சிறிய திருட்டுத்தனத்திற்கு உங்கள் உதவி தேவை.”

“திருட்டா?” என்று நான் சற்றே அதிர,

“ஒரு விதத்தில் பார்த்தால்... பொய் சொல்றதும் ஒரு மாதிரியான திருட்டுத் தனந்தானே. அதனாலதான் அப்படிச் சொன்னேன். ஏமாற்றுறது எனக்கும் பிடிக்கலைதான். ஆனா...எனக்கு வேற வழி தெரியல.”

“என்ன நீங்க. திருட்டுங்கறீங்க. பொய்ங்கிறீங்க. ஏமாற்றுங்கிறீங்க. உள்ளற தள்ளிட மாட்டீங்களே?” என்று சிரித்தபடி நான் கேட்க,

“ஒங்களுக்குத்தான் எங்க குடும்ப பேக் ரவுண்ட் தெரியுமே. படிக்க வெச்ச அண்ணன் கொஞ்சம் சிரமப்படறாரு. நானும் ஒய்பும் சம்பாதிக்கிறதனால முடிஞ்ச அளவுக்கு உதவலாம்னா அவ ஒத்துக்கிடல. அதுக்காக, கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வெச்ச அவரை அப்படியே விட்டுற முடியாதில்ல. அதுக்காகத் தான் இந்த உபாயம்.” என்று கூறிக்கொண்டே, கையிலிருந்த கவரை என்னிடம் கொடுத்து, இதில இருக்கற டினாமினேஷன்ல 500 ரூபாயில ரெண்டைக் கொறைச்சி மாத்தி எழுதிக் கொடுங்க.

அப்படியே மறக்காம டோட்டலையும் மாத்திடுங்க.”என்றார்.

“இவ்வளவுதானா. இதுக்கா இவ்வளவு பீடிகை போட்டீங்க. இதோ... நிமிடத்தில மாற்றி எழுதிடறேன். அப்போ... இனி மாதம் ஆயிரம் ரூபாய் அண்ணனுக்கு.” என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோதே, என் மனதில் தொட முடியாத உயரத்திற்கு அவர் உயர்ந்து விட்டார்.

’தம்பியுடையான் படைக்கு மட்டுமல்ல. பசி, பட்டினிக்கும் அஞ்ச மாட்டான்.’ என்று மாற்றியெழுத வேண்டும் என்ற எண்ணத்துடன், விரைவாக அவர் கொடுத்த கவரில், அவர் சொன்ன மாற்றத்தைச் செய்ய ஆரம்பித்தேன்.

“பார்த்துங்க. என்னைச் சிக்கல்ல மாட்ட வெச்சிடாதீங்க. டோட்டலெல்லாம் சரியாப் போட்டுடுங்க.” என்ற அவரிடம்,

“ கவலையே வேண்டாம். இது நீங்க சொன்ன மாதிரி திருட்டோ, பொய்யோ, ஏமாற்றோ இல்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு புண்ணியம். புண்ணியம் செய்ய நாம தான் இடந்தேடி ஓடணும். ஆனா... நீங்க என்னடான்னா... என்னைத் தேடி வந்து ஒரு கவரைக் கொடுத்து, புண்ணியத்தைச் செய்ய வெச்சிட்டீங்க. உண்மையாப் பார்த்தா நாந்தான் ஒங்களுக்கு நன்றி சொல்லணும்.” என்று நெகிழ்ந்தபடியே மாற்றம் செய்த கவரை அவரிடம் கொடுத்து, விரைந்து புறப்படச் சொன்னேன்.

Money (Representational Image)
Money (Representational Image)
Photo by Karolina Grabowska from Pexels

அவர் கண்களால் ‘நன்றி’ சொன்னபடி அகன்றார். கால்களில் பம்பரம் கட்டியவர் ஆயிற்றே.

அப்புறமென்ன. மாதா மாதம் ரகசியமாக அந்தப் புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் தன் மனைவியிடம் இது குறித்து சிக்கவில்லை.

அவர் பணி ஓய்வு பெற்றுப் போன பின்னாலும், சம்பள தினங்களில் அவரை நினைத்துக் கொள்வேன். அவர் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைத்ததாக எண்ணி மகிழ்வேன்.

இப்பொழுதும், மாதத்தின் கடைசி நாட்களில் அவர் நினைவுகள் மனதை நிறைக்கின்றன.

எல்லா பாசமுள்ள தம்பிகளுக்கும் அவர் செய்கை நல்ல பாடமாக அமைய வேண்டுமென்பதே எந்தன் ஆசை.

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு