Published:Updated:

அழுக்கு ! - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

இப்படி பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் மாலை வீடு திரும்பும்போது அவர்கள் போட்டிருந்த வெள்ளைச் சட்டை சீருடைகள் சமையலறையில் உள்ள கரித்துணி போன்று அவ்வளவு அழுக்காக இருக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அதிகாலை மணி 4.30 அலாரம் ஒலித்தது. ராதிகா எழுந்தாள். அதாவது, அதிகாலை கூவும் சேவலின் சத்தம்தான் ராதிகாவிற்கு அலாரம்.

அதைக் கேட்டுதான் தினமும் எழுவாள். பட படவென்று வேலையைத் துவங்குவாள்.

ராதிகாவிற்கு இரண்டு மகன்கள். பெரியவன் அஸ்வின் 4-ம் வகுப்பு. சிறியவன் அஸ்வந்த் 2-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.

இருவருமே படு சுட்டிகள்.

Representational Image
Representational Image
Vikatan Team

இவர்கள் இருவரையும் பள்ளிக்கு தயார் செய்து அனுப்புவதற்குள் ராதிகா பம்பரத்தைவிட வேகமாகச் சுழல்வாள்.

தினமும் பிள்ளைகளிடம் கேட்டுதான் சமையல் செய்வாள். முதல் நாள் இரவு படுக்கையின்போதே, ``நாளைக்கு என்ன சாப்பாடு செய்யணும் தம்பிங்களா?’’ என்று உணவு பட்டியல் கேட்பாள்.

பிள்ளைகளும் தேவையானதை யோசித்து தேர்வு பண்ணி சொல்வார்கள்.

ஒருநாளும் பிள்ளைகளிடம் கேட்காமல் சமையல் செய்து அனுப்ப மாட்டாள்.

அப்படி எழுந்து எறும்பு போன்று சுறு, சுறுவென்று வேலை பார்த்து வீட்டில் இருந்து 8.25-க்கு எல்லாம் கிளப்பிவிடுவாள். பிள்ளைகள் 8.45-க்கு எல்லாம் பள்ளி உள்ளே இருக்க வேண்டும்.

இப்படி பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் மாலை வீடு திரும்பும்போது அவர்கள் போட்டிருந்த வெள்ளைச் சட்டை சீருடைகள் நமது வீட்டில் சமையலறையில் உள்ள கரித்துணி போன்று அவ்வளவு அழுக்காக இருக்கும்.

காலையில் பள்ளிக்குச் செல்லும்போது பளீச்சென பிரகாசிக்கும்.

ஆனால், இந்த அழுக்கை துவைப்பதென்பது ராதிகாவுக்கு கொள்ளை ஆசை. அலாதி பிரியம், சந்தோசம், மகிழ்ச்சி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவளின் எண்ண ஓட்டங்களை.

Representational Image
Representational Image
Vikatan Team

அப்படிதான் இப்போது ஊற வைத்திருந்த அந்த அழுக்கு வெள்ளைச் சட்டைகளை பக்கெட்டில் இருந்து எடுத்தாள். பார்த்து பரவசமடைந்தாள்.

பெரியவனின் வெள்ளைச் சட்டையை எடுத்து சிலாகிப்பில் விரித்து சோப்பு போட்டாள்.

அவள் பார்வையில் காட்சி மலர்ந்தது.

அஸ்வின் பள்ளியில் கால்பந்தை எட்டி எட்டி உதைத்து சந்தோசமாய் துள்ளலுடன் விளையாடிக்கொண்டிருந்தான். கால்பந்தை அழகாக கால்களில் உருட்டிக்கொண்டு ஓடினான். மண் புழுதி கிளம்பி மண்ணின் வாசம் நாசித் துவாரத்தில் ஏறியபடி, அந்தப் புழுதிக்குள்ளே நண்பர்களுடன் புத்துணர்வோடு அதீத ஆற்றலுடன் விளையாடிக்கொண்டிருந்தான். பந்தை எதிர்கொள்ளும்போது அவன் வெள்ளைச் சட்டையில் பந்து படும். அந்தப் பந்தின் மேல் உள்ள அழுக்கு வட்டவட்டமாய் அவன் சட்டையில் பிரதிபலிக்கும்.

அந்தப் பிரதிபலிப்பைப் பார்த்துதான் இப்போது ராதிகா சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தாள்... சோப்பு போட்டு துவைத்தபடி. அங்கு விளையாடியபடி பேசும் அஸ்வினின் குரல் சத்தம் இவளின் செவிகளில் மெலடி பாடல்களாய் ஒலித்துக்கொண்டிருக்கும்.

அடுத்து சிறியவனின் வெள்ளைச் சட்டையை எடுத்தாள்.

அவள் பார்வையில் அடுத்த காட்சி மலர்ந்தது.

"அஸ்வந்த்... அஸ்வந்த்" என்று உடன் படிக்கும் குட்டீஸ்கள், முதலில் ஓடிவரும் அஸ்வந்தை கைகளில் கிளாப்ஸ் பண்ணி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வளவு ஆக்ரோஷமாய் பல்லைக் கடித்துக்கொண்டு, தம் பிடித்து அந்தப் புழுதியில் ஓடி வந்துகொண்டிருந்தான். அவன் ஓடி வரும் அழகு அவ்வளவு கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. அஸ்வந்தின் கால்கள் இரண்டும் புலி பாய்ச்சலோடு ஓடி வந்துகொண்டிருந்தன.

இப்படியாகத் தன் மகன்களின் விளையாட்டு காட்சிகள் ராதிகாவின் கண் முன் விரிந்தன...

Representational Image
Representational Image
Vikatan Team

கரித்துணி போன்ற வெள்ளைச் சட்டையைப் பார்த்து ஒவ்வொரு நாளும் மனம் முழுவதும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வாள். சந்தோஷத்தின் விளிம்பில் இந்த அழுக்கு துணிகளை துவைத்து முடித்து தண்ணீரில் முக்கி எடுத்தாள். பளீரென வெண்மை கண்களை கூசியது.

"அச்சு அம்மா...அச்சு அம்மா..’’

என்று குரல் கொடுத்தபடி பக்கத்து வீட்டு பத்மா வந்தாள். பின்னால் தோட்டத்தில் துவைத்துக்கொண்டிருக்கும் ராதிகா ``வாங்க...’’ என்று குரல் கொடுத்தாள்.

பத்மாவின் இரண்டு மகன்களும் அஸ்வின், அஸ்வந்த் படிக்கும் பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

``என்ன அச்சு அம்மா இன்னும் வேலை முடியலீங்களா?’’ என்று கேட்டாள்.

ராதிகா புன்னகையைப் பதிலாக தந்தாள்.

"அச்சு அம்மா நான் தெரியாமதான் கேக்குறேன்? இப்படி அழகா வெள்ளையா துவைச்சி பசங்களுக்கு எப்படிப் போட்டு விடுறிங்க ஆனா, அவங்க தினமும் அழுக்காக்கிட்டு ஒரே கரெர்னு வராங்க!நீங்க கொஞ்சம்கூட கண்டிக்க மாட்டிங்களா? என் பசங்களாம் இப்படி இல்ல... காலையில எப்படி டிரஸ் பண்ணிட்டு போறாங்களோ மறுபடி சாயங்காலம் வீடு வர்ற வரைக்கும் அப்படியேதான் இருக்கும். ஒரு சின்ன அழுக்குகூட இருக்காது. எப்பிடிதான் துவைக்குறீங்களோ? நம்மலாளலாம் முடியாதுப்பா!உங்களுக்கு கஷ்டமா இல்லிங்களா அச்சு அம்மா?’’

என்று கேட்டாள்.

"கஷ்டமா? இதெல்லாம் துவைக்கிறதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும். துவைக்க துவைக்க மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம். இந்த சந்தோஷமெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல மறுபடி கிடைக்குமா?’’ என்றாள்.

Representational Image
Representational Image
Vikatan Team

பத்மா புரியாமல் பார்த்தாள்.

"பசங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல ஓடியாடி சந்தோசமா ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா விளையாண்டா இப்படிதான் அழுக்கோட வருவாங்க. அவுங்க விளையாடுற மகிழ்ச்சியோட வெளிப்பாடுதான் இந்த அழுக்கு. பிள்ளைங்க சந்தோசம் போய் யாருக்காவது கஷ்டமா இருக்குமா?’’ என்று கேட்டாள்.

பத்மா ஊமையாகி சொல்ல வார்த்தைகளற்று நின்றாள்.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு