Published:Updated:

அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை #MyVikatan

இன்றுவரை அவனுக்குப் பரீட்சை என்றாலே பயம். ஏனெனில் நன்றாகப் படித்ததெல்லாம் பரீட்சை ஹாலுக்குப் போனதும் அவனுக்கு மறந்துவிடும்!பயமா? வேறேதும் காரணமா?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் தற்போது சொல்லப்போகும் நாட்டுப்புற கதையை சிறிய வயதில் அதிகம் கேட்டிருப்போம்.. அதனை சற்று மாற்றியமைத்து சொல்கிறேன்..

அந்தக் கிராமத்தில் வசதியான சில குடும்பங்களில் ராமசாமி குடும்பமும் ஒன்று. அடுத்தடுத்த வீடுகளில் ஆறேழு குழந்தைகள் இருந்தாலும், ராமசாமி மட்டும் ஒரே பையன்!

அக்கு தொக்கில்லாத குடும்பம். ஒன்றரை வேலி நிலத்தின் ஒரே வாரிசு. மரைக்காக்கோரை ஆற்றுப்பாசனத்தில் இரு போக நிலம். வசதி, வாய்ப்புக்கு எந்தக் குறையுமில்லை. ஒரே பையன் என்பதால் பிடிவாத குணம் அதிகம். கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்பதைப்போல, 'ஒரே பிள்ளை' என்ற செல்லத்தால் பிடிவாத குணமா? அல்லது ‘தான்’என்ற கர்வத்தால் வளர்ந்த பிடிவாத குணமா? என்றே கண்டுபிடிக்க முடியாதது அது. பிடிவாத குணத்தைத் தவிர, ஞாபக மறதியும் அவனுக்கு அதிகமுண்டு.

Village man
Village man
Vikatan Team

வேறு எதனையும் கெட்ட பழக்கமாகக் கூறமுடியாத அளவுக்கு நல்லவனாகவே அவன் வளர்ந்தான். அந்தக் காலத்தில் 'ஹை - ஸ்கூல்'வரை படிப்பதே அபூர்வம். இருந்தாலும் அவன் கஷ்டப்பட்டு படித்துமுடித்தான்.

ஆனாலும் இன்றுவரை அவனுக்குப் பரீட்சை என்றாலே பயம். ஏனெனில் நன்றாகப் படித்ததெல்லாம் பரீட்சை ஹாலுக்குப் போனதும் அவனுக்கு மறந்துவிடும்! பயமா... வேறேதும் காரணமா.. என்பது இறுதிவரை அவனுக்கு விளங்காமலே போயிற்று!

எம்.ஏ. படித்த அவன் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம், எம்.ஏ.-யை முடிக்க எத்தனை பரீட்சைகள் எழுதவேண்டுமென்று கேட்பான். நண்பனோ, "இன்னும் ஒனக்கு அந்தப் பரீட்சை பயம் போகலயா?’' என்று கேட்டுச் சிரிப்பான். நிலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் பக்குவத்தை அவன் தன் தந்தையிடமிருந்து நன்றாகவே கற்றுக்கொண்டு விட்டான். ஆற்றில் தண்ணீர் வந்து, நாற்று நடவு என்று ஆரம்பித்துவிட்டால், பம்பரமாகச் செயல்படுவான். அலுக்காமல், சலிக்காமல் அத்தனை வயல்களையும் சுற்றிவருவான்.

அவனின் நடவடிக்கைகளைக் கவனித்த பக்கத்து ஊர்க்காரர், தனக்குத் தெரிந்த தூரத்துச் சொந்தக்காரரின் பெண்ணை அவனுக்குப் பேச ஏற்பாடு செய்தார்.

பெண்ணின் ஊரும் தூரத்தில்தான் இருந்தது. இரு வீட்டாரும் பேசி முடித்து, ஒரு சுபயோக சுபதினத்தில் சொந்தங்களும் சுற்றங்களும் சூழ, தட புடல் விருந்துகளுடன் கல்யாணம் நடந்தேறியது.

மண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் கழிந்தது. சில மாதங்களிலேயே அவனின் பிடிவாத குணத்தையும்,ஞாபக மறதியையும் நன்றாகவே உணர்ந்துகொண்ட அவன் மனைவி ராதாவும் அவனுக்குத் தகுந்தாற்போலவே தன்னை மாற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்தாள்.

Village man
Village man
Vikatan Team

அந்த ஆண்டு கோயில் திருவிழாவிற்கு இருவரையும் அழைத்து மாமனார் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ராதா முழுகாமல் இருப்பதால் இப்போது பயணம் வேண்டாமென்று ராமசாமியின் தாய் கூறிவிட்டதால், ராமசாமி மட்டும் திருவிழா சமயத்தில் மாமனார் வீடு சென்றான். மாப்பிள்ளையின் வருகையால் மகிழ்ந்துபோன ராதா குடும்பத்தினர், ஒவ்வொரு வேளை உணவையுமே விருந்தாகப் படைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமசாமியைத் திக்குமுக்காட வைத்தனர். அதிலும் அன்று மாலை டிபனுக்காகச் செய்த ‘ கொழுக்கட்டை’ அவனுக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று.

சூடான வெண்மாவு மேல்புறத்தில் உள்ளே வேகவைத்து மசித்த கடலைப்பருப்புடன் தேங்காய்ப் பூவும் வெல்லப்பாகும் சேர்ந்து தரும் அலாதிச் சுவை! நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிமை. அதன் பெயரென்ன என்பதை தனது மாமியாரிடமே கேட்டு வைத்துக்கொண்டான். இருந்தாலும் 'கொழுக்கட்டை' என்ற பெயர் அவனுக்கு அடிக்கடி மறந்துபோயிற்று.

கொழுக்கட்டை
கொழுக்கட்டை
Vikatan Team

சின்ன வயதில் பொட்டுக்கடலையும் வெல்லக்கட்டியும் விரும்பிச் சாப்பிடுவான் ராமசாமி. ஒருமுறை ஆற்றில் குளிக்கப்போனபோது, டிராயர் பாக்கெட்டில் வெல்லக்கட்டியை வைத்திருந்தான். டிராயரை கரையில் வைத்துச்சென்றதால், அங்குவந்த நாயொன்று வெல்லத்தை மோப்பம் பிடித்து டிராயரை இழுத்துச்சென்றது. கரையேறிவந்த ராமசாமி டிராயரைக் காணாமல் தவித்தான். நண்பர்களின் உதவியால் பல அடி தூரத்துக்கு அப்பால் டிராயரைக் கண்டுபிடித்து, ராமசாமி மானம் காப்பாற்றப்பட்ட கதையெல்லாம் உண்டு.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஊருக்குப் புறப்பட்ட போது மீண்டும் அந்த இனிப்பின் பெயரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டான்!

வரும் வழியில் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்ல எண்ணிய அவன், வரப்புகளில் இறங்கி நடந்தான்! அப்போது வரை மனதிற்குள், "கொழுக்கட்டை,கொழுக்கட்டை" என்று சொல்லிக்கொண்டு வந்தான்! வரப்பில் ஓரிடத்தில் பெரிதாக உடைந்து உடைப்பெடுத்திருக்க, அதனைத் தாண்டுவதற்காக மூச்சுப் படித்த அவன், ’அத்ரி பாட்சா’ என்று சொல்லியபடியே தாண்டினான்.

அவ்வளவுதான். உடைப்பின் அந்தப் பக்கத்தோட கொழுக்கட்டை போக, இந்தப் பக்கம் வந்த அவன் மனதில் ‘அத்ரி பாட்சா’ ஒட்டிக்கொண்டது. மனதிற்குள் அத்ரிப் பாட்சாவே சாசுவதமானது.

வீட்டிற்கு வந்தவனை அனைவரும் குசலம் விசாரித்தனர். மனைவி ராதாவும், தங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தாள். விருந்தைப் பற்றியும், ராதா வீட்டாரின் விருந்தோம்பலைப் பற்றியும் ஏகமாக சிலாகித்த அவன், மனைவியிடம் "ஒங்கம்மா செய்ற மாதிரியே எனக்கு அத்ரி பாட்சா செய்து தா!" என்றான்! "என்ன அத்ரி பாட்சாவா?" என்றவள், கணவன் தன்னிடம் ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி இருந்துவிட்டாள்.

Village man
Village man
Vikatan Team

இரண்டு நாட்கள் நகர்ந்தன. வயலிலிருந்து களைத்துப்போய் மாலை திரும்பிய அவன், அன்றாவது மனைவி கை மூலம் "அத்ரி பாட்சா" கிடைக்குமென்று ஆசையாக வந்தான். அன்றைக்கும் ‘இல்லை’ என்றதும் அவனுக்குப் பயங்கர கோபம் வந்து விட்டது! ’எங்கே அத்ரிபாட்சா?’ என்று மனைவியை உலுக்க ,அவள் என்னவென்றே புரியாமல் திகைக்க, "ஒங்கம்மா செய்யிற அத்ரி பாட்சா உனக்கு மட்டும் தெரியாதா? என் வார்த்தைக்கு அவ்வளவுதான் மதிப்பா?" என்றபடியே அவள் கன்னத்தில் கோபமாக அறைந்தான். அவள் செய்வதறியாமல் திகைத்து," என்னதான் ஆயிற்று? இந்த மனுஷனுக்கு?’ என்று புலம்பியபடி, மறுநாள் யாரையாவது ஊருக்கு அனுப்பி அம்மாவிடமாவது அந்த இனிப்பின் பெயரை அறிந்துவரச் செய்யவேண்டுமென்று முடிவுசெய்தாள்.

மாலை, எப்போதாவது வந்து ராதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுப் பாட்டி வர, ராதாவின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து, "பேராண்டியா அடிச்சான்? இப்படிக் கொழுக்கட்டை மாதிரி வீங்கிக் கிடக்கே? அப்படி நீ என்ன செஞ்சே?" என்று கேட்டுக் கொண்டிருக்கையில், அதனைக்கேட்ட ராமசாமி, "மன்னிச்சுடு! ராதா! கொழுக்கட்டையைத் தான் அத்ரி பாட்சா என்று என் ஞாபக மறதியால் கூறி உன்னைச் சங்கடப்படுத்தி விட்டேன்! என்னை மன்னிச்சுடு!"

என்று உருக, ராதாவோ,’சரிங்க விடுங்க! நான் ஒங்க பொண்டாட்டி! அடிக்கிறதுக்கும், அணைக்கிறதுக்கும் ஒங்களுக்கில்லாத உரிமையா!இருங்க. இன்னைக்கே அத்ரி பாட்சா செஞ்சு ஒங்களை அசத்திடறேன்." என்றாள். அடித்ததும், அடிபட்டதும் தன் பேச்சைக் கேட்டு சுமுகமாகி விட்டதைக் கண்ட பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷம்.

Village
Village
Vikatan Team

தன்னால் சிறுசுகள் ரெண்டு மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு அந்தப் பெரிசு திருப்தி அடைந்தது.

‘பாட்டி. உள்ள வாங்க. கொழுக்கட்டை செஞ்ச படியே நாம பேசலாம். ஒங்க பேராண்டி செஞ்சதையும் விபரமாச் சொல்றேன்!’ என்ற ராதாவைத் தொடர்ந்து பாட்டி உள்ளே செல்ல, ராமசாமி தன் ஞாபக மறதியை எண்ணி வெட்கப்பட்டான்.

-ரெ.ஆத்மநாதன்,

அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு