Published:Updated:

நட்சத்திரங்களைக் காண இருள் தேவையல்லவா? - நீதிக்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

இன்று உலகமே ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்முடைய கடந்த காலத்தைப் பற்றி ஒவ்வொருவரும் இன்று சிந்தித்துப்பார்த்தால், தற்போதைய வாழ்க்கையைவிட அதுவே சிறந்ததாகத் தோன்றுவதில் ஆச்சர்யமில்லை. கடந்த காலங்களில் எத்தனையோ கஷ்டங்கள், சிரமங்கள், சிக்கல்கள் நமக்கு இருந்த போதிலும்கூட, நமது கடந்தகாலம் சிறப்பாகத் தோன்றுவதற்குக் காரணம், கடுமையான நிகழ்காலமே. நேற்று, இன்று, நாளை என்றொரு கதை இதைத் தெளிவாக விளங்கவைக்கும்.

Representational Image
Representational Image
Credits : Pixabay

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவன் தன் குடிமக்களிடம் எப்போதும் ஒரு மூட்டை நெல் கொடுத்து திரும்ப ஒரு மூட்டை அரிசி கேட்டு கட்டாயப்படுத்துவான். நெல்லைப் பிரித்து எடுக்கும் போது பாதி மூட்டை உமியாகப் போய்விடுவதால், மக்கள் வேறு வழியின்றி கைக்காசு போட்டு பாதி மூட்டை அரிசி வாங்கி, ஒரு மூட்டை அரிசியாக அரசனிடம் கொடுப்பார்கள்.

மேலும், அரசவையில் பலருக்கும் பரிசுகள் கொடுப்பது போலக் கொடுத்து, பின்னர் தன் வீரர்களை மாறுவேடத்தில் அனுப்பி அவற்றைக் கவர்ந்துகொள்வான்.

அரசு கஜானா செல்வத்தை மக்கள் நலத்திட்டங்கள் எனும் பெயரில் தன் வாரிசுகளின் பெயர்களுக்கு மாற்றிவிடுவான்.

வெளிநாடுகளில் இருந்து பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தம் குடிமக்களிடம் அதிக விலைக்கு விற்பான்.

இத்தகைய செயல்பாடுகளால் அவனை கொடுமைக்கார அரசன் என்றும், இதுவரை ஆண்டவர்களிலேயே மிக மோசமான அரசன் என்றும் மக்கள் தூற்றினார்கள்!

ஒரு நாள் மரணப்படுக்கைக்குச் சென்ற அந்த அரசன், அடுத்து அரசனாக இருக்கும் தன் மகனிடம், "எனக்கு மக்களிடம் எப்படியாவது நல்ல பெயர் கிடைக்கச் செய்ய வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் இறந்துவிட்டான்.

அடுத்து அரசனான மகன், மக்களிடம் ஒரு மூட்டை உமி மட்டும் கொடுத்து, ஒரு மூட்டை அரிசி கேட்டானாம். மக்கள், முழு மூட்டை அரிசியும் கைக்காசு போட்டு வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

இந்த அரசனது வீரர்கள், மக்கள் பணத்தை வரி எனும் பெயரில் நேரடியாகவே கொள்ளை அடித்தார்களாம்.

அரசு கஜானாவில் இருந்த செல்வத்தை எடுத்து நாட்டின் பெரிய பணக்கார்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தானாம்.

உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மிக மிக அதிக விலைக்கு விற்கப்பட்டனவாம்.

இவற்றையெல்லாம் பார்த்த மக்கள், "இவனைவிட பழைய அரசன் சிறந்தவன் என்றும், மகனைவிட தந்தை நல்லவன்" என்றும் கூற ஆரம்பித்தார்களாம்.

இவ்வாறு தந்தையின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றினானாம்.

ஆம் நண்பர்களே! நேற்றைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதை இன்றுதான் தீர்மானிக்கிறது என்கிறது இக்கதை.

Representational Image
Representational Image

கடந்த காலங்களில் நமக்கு பெரும் சிரமங்களும், கஷ்டங்களும் ஏற்பட்டபோது, இதுபோன்ற மோசமான நாள் நம் வாழ்க்கையிலேயே இதுவரை வந்ததில்லை, இனிமேலும் வராது என்ற விரக்தி மனநிலையில் நாம் இருந்திருப்போம். ஆனால், தற்போதைய கடினச் சூழலால் அத்தகைய நாள்கள் திரும்ப வராதா என நம்மில் பலர் ஏங்குகிறோம்.

நேற்றைய துன்பங்களைவிட இன்றைய துன்பங்கள் அதிகமாகும்போது, குறைவான துன்பங்களே பரவாயில்லை எனும் மனநிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.

ஆனால், இதுவும் நிரந்தரம் அல்ல. நாளை நன்மையாய் மாறக்கூடியதே. பேரழிவுகள் மனிதர்களுக்குத்தான் புதிது. பூமிக்குப் புதிதல்ல. நமது பூமி இதுவரை ஐந்து உயிரினப் பேரழிவுகளை எதிர் கொண்டு, வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது.

தற்போதும் பூமி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலிருந்து பூமி உயிர்ப்புடன் மீண்டு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நேற்று என்பது உடைந்துபோன பானை. நாளை என்பது மதில்மேல் பூனை. இன்று என்பதே நம் கைகளில் உள்ள வீணை என்பார்கள். நேற்றும் நாளையும் நம் கைகளில் இல்லை.

எனவே, நேற்றைப் பற்றியோ நாளையைப் பற்றியோ கவலை கொள்ளாமல் இன்றைய தினத்தில் குடும்பத்தினருடன் அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்.

நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இணையவழியே அன்பை அதிகரித்துக்கொள்வோம். நாளைக்கு எனக்குத் தேவை என வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பதுக்காமல், இன்று கையறு நிலையில் கையேந்தி நிற்போருக்கு பகிர்ந்து அளிப்போம்.

கிள்ளித் தராமல் அள்ளித்தர ஆரம்பிப்போம். பிறருக்கு உதவியாய் வாழ்வோருக்கு உடல் நோயற்றும், மனம் கவலையற்றும் போகுமாம்.

ஆயினும் பேரிடர் காலங்களில் உதவுவோரால், தாம் உதவுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அவை சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

உதவுதலில் முக்கியமான ஓர் அம்சம், உதவுபவர் அதனை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதே. இவற்றைப் பார்த்து பிறர் இது போன்ற உதவிகள் செய்வர் என்பது வாதத்திற்கு சரியாக இருக்கலாம். ஆனால், பெறுபவரின் மனநிலையில் இது சற்று அவமானத்திற்குரிய செயலே!

Representational Image
Representational Image

"Good deeds should be done with Intention not for attention"

என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவர். "சிறந்த நோக்கத்திற்காக நல்ல செயல்கள் செய்யப்பட வேண்டுமே தவிர, பிறரது கவனத்தைக் கவர்வதற்காக அல்ல" என்பது இதன் பொருள். "வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது" என்று இதை மிகச் சுருக்கமாகத் தமிழில் கூறிவிடலாம்.

எனவே, இந்த இக்கட்டான பேரிடர் சூழலில் நாம் அவசியம் உதவி செய்ய வேண்டும்.

அதே சமயம், பெறுபவரின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி உணர்வு என்பது பெறுபவரின் கடமையாக இருக்கலாம். ஆனால், அளிப்பவரின் உரிமையாக அது ஒருபோதும் மாறிவிடக்கூடாது.

எனவே, நேற்று நட்சத்திரமாக மின்னிய எனது வாழ்க்கை இன்று இருளடைந்துவிட்டது எனும் புலம்பலைத் தவிர்த்து, ஏதேனும் ஒருவகையில் பிறருக்கு உதவியாய் வாழத் தொடங்குவோம்.

ஏனெனில், எப்போதுமே நட்சத்திரங்கள் வானில் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் காணத்தான் நமக்கு இருள் தேவைப்படுகிறது.

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு