Published:Updated:

`ஏனோ அன்றும் மழை பெய்தது!' - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ரெங்குவுக்கு தன் மகனை படிக்க வைத்து எப்படியாவது பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என்று ஆசை. அவனும் நன்றாகவே படித்துக் கொண்டிருந்தான்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று காலையிலேயே வானம் சற்று இருண்டிருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் நன்றாகவே தென்பட்டன.

யாரோ,`டீச்சர்... டீச்சர்... சேதி தெரியுமா... ரெங்கம்மா செத்துப் போய்ட்டாளாம்..." என அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் வருத்தத்துடன், "அச்சோ பாவம் நல்ல மனுஷி... எப்படி ஆச்சு..." என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நாளாகவே ரெங்குவை வெளியில் பார்க்க முடிவதில்லை. உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள்.

ரெங்கம்மா நான்கடிக்கும் குறைவான உயரம். கட்டையான கறுத்த தேகம். ரெங்கம்மாவின் உருவ அமைப்பு காரணமாகத் தங்கை திருமணத்துடன் இலவச இணைப்பாகத் தங்கை கணவருக்கு வாழ்க்கைப்பட்டவர். சம்பளமில்லாத வேலைக்காரியாக அந்த வீட்டில் சமையல் தவிர அனைத்து விதமான வேலைகளும் செய்துகொண்டு மூன்று வேளை சாப்பாடு மட்டுமே ஊதியமாக வாழ்ந்தவர்.

Representational Image
Representational Image
Pixabay

அவருடைய ஒரே ஆறுதல், ரெங்கம்மாவுக்கு இருந்த ஒரே மகன். அழகாக இருப்பான். மகன் தன்னைப்போல் இல்லாமல் எல்லோரையும் போன்ற உருவ அமைப்புடன் இருப்பதை நினைத்து ரெங்கம்மாவுக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கும் எனக்கும் இரண்டு அல்லது மூன்று வயது வித்தியாசம் இருக்கும். ரெங்குவுக்கு தன் மகனை படிக்க வைத்து எப்படியாவது பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என்று ஆசை. அவனும் நன்றாகவே படித்துக்கொண்டிருந்தான்.

அடிக்கடி பள்ளிக்குச் சென்று தன் மகனின் படிப்பு பற்றி பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்.

``ரெங்கம்மா உன் மவன் நல்ல படிக்கிறான்..." என்று சொல்லிவிட்டால் போதும் பூரித்த முகத்துடன் அனைத்து பற்களும் தெரிய ஒரு குழந்தைபோலச் சிரிப்பார்.

``டீ ரெங்கு... செத்த ரெண்டு தவலை தண்ணி கொண்டுவந்து தர்றியா..." என்றோ, ``அதிரசத்துக்கு மாவு இடிக்கணும் கொஞ்சம் வர்றியா..." என்றோ யார் கேட்டாலும் சிரித்த முகத்துடன், ``இருக்கா... இந்தா வாரேன்..." என்று பிறர் கேட்கும்போது முகச் சலிப்பின்றி உதவி செய்ய ரெங்கம்மாவால் மட்டுமே முடியும்.

இப்படித்தான் தனக்குப் பிடித்தவர்கள் அல்லது தன்னை மதித்துக் கேட்பவர்கள் யாராயினும் தட்டாமல் உதவும் மனது ரெங்குவுக்கு. ஆள்தான் குள்ளமே தவிர நல்ல பலசாலி. இரண்டரை குடம் பிடிக்கும் ஒரு காசி தவலையைத் தலையிலும், ஒரு பித்தளை குடத்தை இடுப்பிலும் அநாயசமாக சுமக்கும் வலிமை (காசி தவலையும் பித்தளை குடமும் தண்ணீர் இல்லாமலேயே சற்று கூடுதல் கனமாகத்தான் இருக்கும்). இவ்வாறாகச் செய்யும் வேலைகளுக்கு என எதுவும் பிரதிபலனாக எதிர்பார்க்காத சுபாவம்.

ஆனால் யாரும் அதிகாரமாகக் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் முடியாது என்று பொட்டிலடித்தாற்போல சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்.

Representational Image
Representational Image
Pixabay

அதேபோல் வீட்டுக்கு வந்து உரிமையுடன், ``யக்கா பசிக்குது கொஞ்சம் சோறு போடு..." என்று உரிமையாகக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். ஏதேனும் தின்பண்டம் கொடுத்தால் தான் உண்ணாமல் தன் மகனுக்காய் எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் கொடுப்பார். எப்போதாவது ஏதேனும் காசு கேட்பார். அதுவும் தன் மகனுக்காய் எதாவது வாங்க வேண்டுமென்றால் மட்டுமே.

ரெங்கம்மா இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ரெங்குவின் கனவை பொய்யாக்கி அவரின் மகனை அவன் அப்பா ஒரு ஹோட்டலில் எச்சில் இலை எடுத்து பெஞ்சு துடைக்கும் வேலைக்குச் சேர்த்துவிட்டு முன் பணமாக ரூ.500 வாங்கிக் கொண்டார்.

ஏனோ அன்றும் மழை பெய்தது.

- ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு