Published:Updated:

சபிக்கப்பட்ட கேள்விகள்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒற்றையாய் நான் நிற்பது மெல்ல அவர்கள் உணர்வில் உறைத்திருக்க வேண்டும். மனைவியிடம் ஏதோ சொல்லி நிற்கவைத்துவிட்டு என்னை நோக்கி வந்தார் மகேஷின் தந்தை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

மின் மயானத்தில் மொத்தம் ஐந்து பேர் - வெட்டியான்கள் இரண்டு பேரையும் சேர்த்து. இது போல் எத்தனை சாவுகளைப் பார்த்திருக்கிறார்களோ அவர்கள்? ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர்கள் காரியத்தில் அவர்கள் கருத்தாயிருந்தார்கள்.

புகை போக்கியின் வழியே ஊர்ந்தேறும் புகையை வெறித்துப் பார்த்தபடி நின்றிந்தனர் ஒரு தம்பதி. அவர்கள்தாம் மகேஷின் பெற்றோராயிருக்க வேண்டும். ஒரு வித இறுக்கம் இருவர் முகங்களிலும்.

ஒற்றையாய் நான் நிற்பது மெல்ல அவர்கள் உணர்வில் உறைத்திருக்க வேண்டும். மனைவியிடம் ஏதோ சொல்லி நிற்க வைத்துவிட்டு என்னை நோக்கி வந்தார் மகேஷின் தந்தை.

“நீ?” கேள்வி தொக்கி நின்றது.

“கல்லூரியில் மகேஷ் எனக்கு சீனியர்.” பதிலளித்தேன்.

“ஓ!”

ஏதோ கேட்க நினைத்து பின் வேண்டாம் என்பதுபோல் நின்றார்.

“பரவாயில்லை. கேளுங்கள்” என்றேன்.

“மகேஷின் மற்ற நண்பர்கள் வரவில்லையா?” என்றார்.

“இல்லை” என்றேன். அவரை இதற்கு மேலும் காயப்படுத்தாமலிருக்க அந்த ஒற்றைப் பதில்தான் தேவையாயிருந்தது.

Representational Image
Representational Image
Pixabay

“ஒன்று கேட்கலாமா?” என்றார்.

“கேளுங்கள்.”

“நீதான் மகேஷ் காதலித்த பெண்ணா?” என்றார்.

“இல்லை. அது நான் இல்லை” என்றேன்.

“மன்னித்துவிடம்மா. தனியாளாய் சுடுகாடு வரை வந்திருப்பதால் கேட்டேன். அதுவும் பெண்கள் வழக்கமாக வராத இடத்திற்கு. மன்னித்துவிடு” என்றார் பதற்றத்துடன்.

மின் மயானங்கள் வந்த பின் பெண்கள் மயானம் செல்வது கிட்டத்தட்ட வழக்கமாகிவிட்டது என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

“பரவாயில்லை. உங்கள் தவறில்லை” என்றேன்.

சற்றே மௌனமானார்.

“நீ மட்டும் எப்படியம்மா?” அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“மகேஷை எனக்குத் தெரியும். வர வேண்டும் எனத் தோன்றியது” என்றேன்.

நான் ஆணாய் இருந்திருந்தால் என் கைகளைப் பிடித்திருப்பார் எனத் தோன்றியது. லேசாய் ஒரு துளி நீர் அவர் கண்களில் துளிர்த்தது. அவசரமாய் துடைத்துக்கொண்டார்.

“எப்படி வந்தாய்?” என்று கேட்டார்.

“ஆட்டோவில்” என்றேன்.

“போகும்போது நான் உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்” என்றார்.

“நான் ஹாஸ்டலில் இருக்கிறேன்” என்றேன்.

ஒரு கணம் என் கண்களை ஊன்றிப் பார்த்தார்.

“ஹாஸ்டலில் விடுகிறேன், வா” என்று அழைத்துக்கொண்டு நடந்தார்.

“இது…” மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தும்போதுதான் என் பெயர் அவருக்குத் தெரியாது என்பதை உணர்ந்தார்.

“பாரம்மா... உன் பெயரைக் கூடக் கேட்கவில்லை” என்றார்.

“ஹரிணி” என்றேன்.

மனைவியிடம் திரும்பி, “இது ஹரிணி. மகேஷுக்கு கல்லூரியில் ஜுனியர்” என்று அறிமுகப் படுத்தினார்.

Representational Image
Representational Image
Pixabay

மகேஷின் தாயார் எதுவும் சொல்லத் தோன்றாமல் தலையை மட்டும் ஆட்டினார்.

காரில் பயணம் மௌனமாகவே இருந்தது. கல்லூரி விடுதி அவர் அறிந்திருப்பார் போலும். நான் வழி சொல்லாமலேயே கார் பயணித்து விடுதி சென்றது.

கதவைத் திறந்து இறங்கும்போது பின்னாடித் திரும்பிப் பார்த்தார்.

“நாளை என் வீட்டிற்கு வருகிறாயா?” என்று கேட்டார்.

எத்தனை எத்தனை எண்ணச் சுழல்கள் அவர் மனதில் சுழன்று கொண்டிருந்தனவோ! எத்தனை எத்தனை கேள்விகள் அவர் மனதில் விடைதேடி முட்டிக்கொண்டிருந்தனவோ! என்னிடம் விடைகள் கிடைக்கும் என்று நினைக்கிறாரோ?

“வருகிறேன்” என்றேன்.

“என் வீடு தெரியுமா?”

தெரியாது என்று தலையாட்டினேன். டாஷ்போர்டு திறந்து துண்டு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுதிக்கொடுத்தார்.

“நாளை மாலை உன்னை எதிர்பார்ப்பேன்” என்றார்.

சரியென்று தலையாட்டிவிட்டுக் கதவை மூடிவிட்டு விடுதிக்குள் நுழைந்தேன்.

குளித்துவிட்டு வெளியே வரும்போது என் அறைத்தோழி, “உன்னைப் பார்க்க ரேணுகா வந்திருக்கிறாள்” என்று முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

தலையை துவட்டியபடி அறைக்குள் நுழைந்தேன். தரையை வெறித்தபடி ரேணுகா என் கட்டிலில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே நுழைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தாள். என் கண்களைப் பார்க்கும் தைரியம் இன்றி மறுபடி கீழே குனிந்துகொண்டாள்.

ஈரத்தலையை லேசாய் சீவிக்கொண்டு அட்டையிலிருந்து ஒட்டுப்பொட்டை எடுத்து வைத்துக்கொண்டு பர்ஸை எடுத்துக்கொண்டு அவளைப் பார்த்தேன்.

“சூடாய் காபி குடிக்க வேண்டும் எனக்கு. கல்லூரி கேன்டீன் செல்லலாம். ஹாஸ்டலில் டீதான் கிடைக்கும்” என்றேன்.

“உன்னோடு பேச வேண்டும்” என்றாள் உதடுகள் துடிக்க.

“தெரியும். கேன்டீன் செல்லலாம்” என்றேன்.

கேன்டீனில் ரேணுகா தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஜன்னலை ஒட்டிய ஒரு ஒதுக்குப்புறமான மேஜையில் அமர்ந்தோம். நான் காபி குடித்து முடிக்கும் வரை அவள் எதுவும் பேசவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

ரேணுகா எனக்குப் பழக்கமோ தோழியோ என் வகுப்போ கூடக் கிடையாது. மகேஷுடன் பார்த்ததாலேயே அவளை எனக்குத் தெரியும். இன்றுதான் என்னை அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

“மகேஷ் சாவிற்கு நான்தான் காரணம் என்று நீயும் நினைக்கிறாயா?” என்றாள், ஜன்னலின் வெளியே வெறித்தபடி.

“அப்படியென்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டேன்.

மெதுவாய் திரும்பி என்னைப் பார்த்தாள்.

இதுவரை பார்த்துப் பேசி பழகியில்லாத ஒருவரிடம் ஆழ்மனம் திறப்பது என்பது எவ்வளவு வலி மிகுந்த செயல்? ஒரு வேளை இப்படிப்பட்ட ஒருவரிடம்தான் அதை செய்ய முடியுமோ?

“தெரியவில்லை ஹரிணி. இப்படி ஒரு நாள் வரும் என்று நான் எதிர்பார்த்ததுதான். ஆனால், இத்தனை சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை” என்றாள்.

“என்னைத் தவிர எல்லோரும் வந்திருந்தார்களோ?” என்றாள் தலையைக் கவிழ்த்தபடி.

“வெட்டியான்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்” என்றேன்.

சட்டென்று அதிர்ந்து நிமிர்ந்தவள், “ஓ காட்!” என்று குலுங்கி அழத்தொடங்கினாள்.

அழுது முடிக்கும்வரை காத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் சுதாரித்து நிமிர்ந்தாள்.

“ஏன் யாரும் போகவில்லை?” என்றாள்.

“ரேணுகா, மகேஷ் டைட் ஆஃப் ட்ரக் ஓவர்டோஸ். யாரும் போகாததற்கு அது காரணமாயிருக்கலாம்” என்றேன்.

“ஓ! போயிருந்தால் அவர்களையும் ட்ரக் அடிக்ட்ஸ் என்று நினைத்துவிடுவார்கள் என்ற பயமா?” என்றாள்.

“இருக்கலாம். அவரவர் காரணங்கள் அவரவருக்கு” என்றேன். அவன் உறவினர்களும்கூட யாரும் வரவில்லை என்று அவள் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றியது. எடுத்துச் சொல்ல எனக்கு மனமில்லை.

“உனக்கு அந்த பயம் இல்லையா?” என்றாள்.

அமைதியாயிருந்தேன். அவள் பேச வந்தது என்னைப் பற்றியோ, மற்றவர்களைப் பற்றியோ, ஏன் மகேஷைப் பற்றியோகூட இல்லையென்று தெரியும். அவள் பேச வந்தது அவளைப் பற்றி. அவளாய் பேசட்டும்.

“மகேஷின் பெற்றோர் உன்னிடம் பேசினார்களா?”

“அவன் தந்தை பேசினார்.”

“என்ன பேசினார்?”

“மகேஷ் காதலித்த பெண் நான்தானா என்று கேட்டார்.”

Representational Image
Representational Image
Pixabay

“ஓ காட்!” மறுபடியும் தலை குனிந்து அழுதாள்.

“அவரும்கூட நான் அவனை மீட்டிருக்கலாம் என்று நினைத்திருப்பாரோ?” என்றாள் அழுகையினூடே.

“தெரியவில்லை” என்றேன்.

“எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் ஹரிணி. ஏன், நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், நிஜம் வேறாயிருந்தது. தன் நிலையில் மகேஷ் இருந்த கணங்கள் மிகச் சொற்பமானவை. அந்தச் சொற்பமான கணங்களில் அவனைப் பார்த்துதான் அவனை நேசிக்கத் தொடங்கினேன். எத்தனையோ பேர் என்னை எச்சரித்தார்கள் - நான் செல்லத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தான பாதை என்று. ஆனால், என் காதலின் மேல் எனக்கிருந்த கர்வத்தில் அதை எதுவும் நான் சட்டை செய்யவில்லை. மறுவாழ்வு மையத்தில் மகேஷ் சேர்ந்ததை என் அன்பிற்குக் கிடைத்த வெற்றி என்று மேலும் கர்வப்பட்டுக்கொண்டேன். ஆனால், மகேஷ் மீளமுடியாத தூரத்திற்குச் சென்றுவிட்டான் என்று பின்னர்தான் உணர ஆரம்பித்தேன்.

என் கையிலும் தலையிலும் அடித்துச் செய்த சத்தியங்களையும் என் காதலையும்விட அவன் க்ரேவிங் அதிக சக்தி வாய்ந்ததாய் இருந்தது. இந்தப் போராட்டங்கள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனமடையச் செய்தன. ஒரு கட்டத்தில் என் வாழ்க்கை முழுதும் மகேஷும் அவன் போராட்டங்களும் மட்டுமே இருந்தன. என்னை புதைகுழி இழுப்பதாய் ஏதோ ஒரு கணத்தில் திக்கென்று உணர்ந்தேன். என்னைக் காத்துக்கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவனை விட்டு விலகுவதாக அவனிடம் சொன்னபோது கடைசியாய் ஒரு சந்தர்ப்பம் கொடு என்று மன்றாடினான். அந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தால் ஒரு வேளை இன்று அவன் உயிருடன் இருந்திருப்பானோ?”

கேட்டுவிட்டு மறுபடி ஜன்னலின் வழியே வெளியே பார்த்தாள்.

Representational Image
Representational Image
Ben White on Unsplash

பதில் எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்வியல்ல அது. விடை காண முடியா காலத்தில் அந்தக் கேள்வி ஜனித்து மரித்து விட்டதென்பதை அவளும் உணர்ந்துதான் இருந்தாள். அவளது தேவை விடையல்ல, தன் நிலையை யாருக்கேனும் உணர்த்துவது. மயானத்திற்குச் சென்று வந்ததால் நான் அதற்குத் தகுதியானவள் என்று நினைத்திருப்பாள் போலும்.

“தாங்க்ஸ் ஹரிணி. ஐ நீடட் திஸ்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

மறுநாள் மகேஷின் தந்தை இவளைப் பற்றிக் கேட்பாரோ என்ற சிறிய சந்தேகத்துடன் அவர் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். மகேஷின் தாயார் கதவைத் திறந்தார்.

“வாம்மா. உள்ளே வா” என்று என் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

“உட்கார் ஹரிணி. நேற்று உன்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை” என்றார் லேசான குற்ற உணர்வுடன்.

“பரவாயில்லை” என்றேன்.

மகேஷின் தந்தை உள்ளிருந்து வந்தார். “மிகவும் நன்றி ஹரிணி, நீ வந்ததற்கு” என்றார் என் எதிரில் அமர்ந்தபடி.

“ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார் தாயார்.

வேண்டாமென்று சொன்னால் சூழ்நிலை மேலும் இறுகும் என்று தோன்றியதால், “காபி மட்டும்” என்றேன்.

எடுத்து வர உள்ளே சென்றார்.

“மகேஷை உனக்கு எப்படியம்மா தெரியும்?’ என்று கேட்டார் அவன் தந்தை.

“ஒரு மனிதனாய்” என்றேன்.

நெற்றியை சுருக்கி என்னை ஆழமாய்ப் பார்த்தார். மேலும் விளக்கம் கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

“கல்லூரியில் மகேஷ் எனக்கு ஒரு வருடம் சீனியர். எனக்கு மகேஷை தெரியும். மகேஷுக்கு என்னைத் தெரியாது. அவன் உலகமே வேறாயிருந்தது” என்றேன்.

“மகேஷின் சாவிற்கு நாங்கள்தான் காரணம் என்று எல்லோரும் நினைக்கிறார்களா?” என்று கேட்டார்.

அவனுக்கு உறவென்றிருந்த ஒவ்வொருவரும் இப்படித்தான் நினைப்பார்களோ? மௌனமாய் இருந்தால் அது கேள்விக்கு ஆமென்று பதிலளித்தது போல் ஆகிவிடும் என்பதால், “தெரியவில்லை” என்றேன்.

மகேஷின் தாயார் சூடான மூன்று காபி கோப்பைகளுடன் வந்தார். தன் கணவருக்கும் எனக்கும் ஒன்று கொடுத்துவிட்டு தானும் ஒன்று எடுத்துக்கொண்டார். காபி அமிர்தமாய் இருந்தது.

“தொழிலதிபர் தந்தை, சமூக சேவகி தாய், ஒற்றை மகன் - டிபிக்கல் கேஸ் ஹிஸ்டரி என்று தானே எல்லோரும் நினைத்திருப்பார்கள்?” என்றார் மகேஷின் தந்தை.

மறுபடியும், “தெரியவில்லை” என்றேன்.

“நீ அப்படி நினைத்தாயா?” என்று கேட்டார்.

Representational Image
Representational Image
Pixabay

“மயானத்தில் உங்களைப் பார்க்கும் வரை நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. மகேஷையும் ஒரு சக மனிதனாக மட்டுமே தெரியும். அவன் காரணங்களோ, சூழல்களோ நான் ஆராய்ந்ததில்லை. அவன் மரணம் வாழ்வின் ‘விடையில்லாமல் போகக்கடவது!’ என்று சபிக்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. மயானத்திற்கு நான் வந்தது ஒரு மனிதனின் வாழ்விற்கு இன்னொரு மனிதன் கொடுக்க வேண்டிய மரியாதையின் ஒரு சிறிய அடையாளம்” என்றேன்.

இருவரும் ஒன்றும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘மிகவும் அன்பான குடும்பம் ஹரிணி, இது. தொழிலே கதி என்று ஒருபோதும் நான் இருந்ததில்லை. சமூக சேவகி என்று என் மனைவிக்குக் கிடைத்திருக்கும் முத்திரைகூட என்னுடைய ஸ்தானத்தால்தான். குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு என்றுமே நாங்கள் எதுவும் செய்ததில்லை. ஒற்றை மகனென்பதால் கண்டிப்பின்றி வளர்க்கப்படவில்லை மகேஷ். அன்பும் அரவணைப்பும் இருந்த அதே அளவு ஒழுக்கமும் கண்டிப்பும் இருந்தது. எங்கே தவறினோமென்று தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாயிருந்தேன்.

“உன்னிடம் எங்கள் கேள்விகளுக்கு விடை தேடுவதாய் நீ நினைக்காதே ஹரிணி” என்றார்.

மௌனமாயிருந்தேன்.

சட்டென்று ஒரு தளர்ச்சி தெரிந்தது அவரிடம். என் வருகையை நான் முடித்துக்கொள்ள வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

“நான் வருகிறேன்” என்று கூறி எழுந்தேன்.

“நான் கொண்டு விடட்டுமா?” என்று கேட்டார்.

“நன்றி. நான் போய்க்கொள்கிறேன்” என்றேன். அவர் மறுக்கவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

“எப்போதேனும் இங்கே வந்து போ, ஹரிணி” என்றார் மகேஷின் தாயார்.

தலையாட்டினேன்.

வாசல் வரை இருவரும் வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

மகேஷின் மரணம் மட்டுமல்ல அவன் பெற்றோர்களின் வாழ்வும் சபிக்கப்பட்ட கேள்வியாகிவிட்டதோவென்று தோன்ற, விடுதிக்குச் செல்ல ஆட்டோவைத் தேடி நடந்தேன்.

- கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு