Published:Updated:

`சிதறிய நாவல் பழங்களில் துளிர்த்த சிநேகம்!' - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

சாலையின் ஓரத்தில், சிறிய துண்டு ஒன்றை விரித்து, அதன்மீது நாவல்பழங்களை வைத்து, போவோர் வருவோர்களை வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உச்சி வெயில் மெல்ல மெல்ல தரை இறங்கிக்கொண்டிருந்தது. சென்னையின் முக்கிய சாலையான அதில், இருசக்கர வாகனங்களும் கனரக வாகனங்களும் மாறிமாறி சென்றுகொண்டிருந்தன.

சாலையின் ஓரத்தில் இளநீர் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க, ஆங்காங்கே குச்சி ஐஸ்களுடனும் தர்பூசணிப் பழத்துண்டுகளுடனும் மனிதர்கள் தென்பட்டனர்.

சாலையின் ஓரத்தில், சிறிய துண்டு ஒன்றை விரித்து, அதன்மீது நாவல்பழங்களை வைத்து, போவோர் வருவோர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் அவன்.

அழுக்கேறிய ஆடை. சிவப்பேறிய தலைமுடி. பார்ப்பதற்கு பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவன்போல இருந்தான்.

Representational Image
Representational Image

திடீரென இருசக்கர வாகனம் ஒன்று, எதிரில் வந்த காரின் மீது மோத, தரையில் வழுக்கியபடியே அடுக்கிவைக்கப்பட்டிருந்த நாவல்பழங்களின்மீது விழுந்தது அந்த இருசக்கர வாகனம்.

யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞனுக்கு மட்டும் லேசான சிராய்ப்புக் காயங்கள் இருந்தன.

காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கி வந்த அந்த நபர், காரின் முன்பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார். காரின் ஹெட்லைட் உடைந்திருந்தது. பிறகு, காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

'என்ன ஆச்சுப்பா?' என்று கேட்டவாறே கண்களில் ஒருவித பயத்துடன் காரின் பின்புறத்தில் இருந்து இறங்கி வந்தாள், அந்த ஐந்து வயது சிறுமி.

'ஏன்டா மூதேவி, கண்ண எங்க வச்சுட்டு வண்டிய ஓட்டுற?' - இது சிறுமியின் தந்தை.

'நான் ஒழுங்கா தான்டா வந்தேன். நீ தான் இன்டிகேட்டர் போடாம கார வளைச்ச' - இது, இருசக்கர வாகன ஓட்டி.

வாகனம் ஏறி நசுங்கிப்போன நாவற்பழங்களை அப்புறப்படுத்திவிட்டு, கலங்கிய கண்களுடன் சாலையில் மிச்சமிருந்த நல்ல பழங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தான் அவன்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

கையை உயர்த்தி சத்தம் போட்டுக்கொண்டிருந்த தந்தையின் பேன்ட்டை இறுகப் பற்றிக்கொண்டாள் அந்தச் சிறுமி.

பச்சை சிக்னல் விழும் வரை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், பின்பு அவர்களைக் கடந்து சென்றனர். சமாதானப்படுத்த ஒருசிலர் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

Representational Image
Representational Image

'அப்பா, சண்டை போடாதிங்கப்பா. வாங்கப்பா வீட்டுக்குப் போலாம்' என்றபடி அழுதுகொண்டிருந்தாள்.

அதை சிறிதளவும் பொருட்படுத்தாமல், 'மரியாதையா உடைஞ்ச லைட்டுக்கு காசு எடுத்து வை. இல்லனா போலீஸுக்கு போன் பண்ணுவேன்' என்றார் சிறுமியின் தந்தை.

'போலீஸுக்கு போனா நீதான்டா மாட்டுவ. உன்னால முடிஞ்சத பாரு' என்றான் இருசக்கர வாகன ஓட்டி.

சண்டை முடிவதாகத் தெரியவில்லை.

சுற்றிமுற்றிப் பார்த்த சிறுமியின் பார்வை, இப்போது நாவற்பழங்கள் விற்கும் அவனிடம் சென்றது. கலங்கியபடி அமர்ந்திருந்த அவனைப் பார்த்ததும் சிறுமி தன் அழுகையை நிப்பாட்டினாள்.

அவனருகில் சென்ற அவள், 'நீ எதுக்கு அழற? என்று தன் பிஞ்சு மொழியால் வாயசைத்தாள்.

அவன் கண்களைக் கசக்கியபடியே... நசுங்கிப்போன நாவற்பழங்களைத் தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினான்.

'அச்சச்சோ. என் அப்பாவாலதான இப்படி ஆகிடுச்சு. ஸாரி....' எனச் சொல்லிவிட்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் அந்தச் சிறுமி.

பரவாயில்லை எனச் சொல்வதைப் போல தலையாட்டிய அவன், மீதமிருந்த நல்ல பழங்கள் சிலவற்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

Representational Image
Representational Image

தாங்க்யூ எனச் சொல்லியவாறே தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஒரு சாக்லேட்டை அவனிடம் கொடுத்தாள்.

பற்கள் தெரியும்படி சிரித்துக்கொண்டே அதை வாங்கினான் அவன்.

இன்னும் முடியாமல் தொடரும் சண்டையைப் பார்த்தபடி இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர்.

- சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு