Published:Updated:

`பசிக்குதுப்பா....!’ - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அவன் டீக்கடையில் இருக்கக்கூடிய அரைமணி நேரமும் நானும் அங்கு இருக்கத் தொடங்கினேன். அவனது வழக்கமான செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என்னுடைய மனதின் குறுகுறுப்பை அடக்கவே முடியவில்லை. நான் வழக்கமாகச் செல்லும் டீக்கடையில் கடந்த 10 நாள்களாக அந்த இளைஞனைப் பார்க்கிறேன். சரியாக மாலை 6 மணிக்கு கடைக்கு வந்துவிடுவான். நாகரிகமான உடை, சோகம் கவிழ்ந்த முகம்.

அமைதியாக வந்து டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொள்வான். யாரிடமும் எதுவும் பேச மாட்டான். ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்துவிட்டுக் கிளம்பும்போது ஒரு டீ குடிப்பான். அவ்வளவுதான்! எதற்காக தினமும் அவன் இங்கு வந்து அரைமணி நேரம் உட்காருகிறான் என்பது எனக்குக் குழப்பமாக இருந்தது!

வேலை இல்லாத ஆளா, காதல் தோல்வியா, குடும்பப் பிரச்னையா எது இவனின் சோகத்துக்குக் காரணமாக இருக்கும் என்று என் மனதின் குறுகுறுப்பு அதிகரிக்கத் தொடங்கியது!

புதியவர்களுடன் பேசிப்பழக எனக்கு அவ்வளவு சீக்கிரமாக வராது என்பதால் அவனிடம் சென்று பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. தொடர்ந்து அவனைக் கண்காணிக்கத் தொடங்கினேன். அவனது உடை மற்றும் வாகனம் ஆகியவற்றை வைத்து அவன் நல்ல வசதியான இளைஞன் என்பது புரிந்தது.

Representational Image
Representational Image

அவன் டீக்கடையில் இருக்கக்கூடிய அரைமணி நேரமும் நானும் அங்கு இருக்கத் தொடங்கினேன். அவனது வழக்கமான செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்ந்து சில நாள்கள் நான் அவனைக் கண்காணித்ததில், அவன் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும் அவனது முகபாவனைகள் மூலம் எனக்குப் புரிந்தது. அது யாராக இருக்கும் என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

மழை வரும்போல இருந்த ஒரு மாலை வேளையில் வழக்கம்போல அவன் டீக்கடையில் அமர்ந்திருந்தான். அப்போது அவனுக்கருகில் வாய் பேச முடியாத ஒரு பிச்சைக்காரன் வந்து கைகளை நீட்டினான்.

உடனே அவன் தன் பர்ஸிலிருந்த பணத்தைக் கத்தையாய் எடுத்து பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான்.

ஆச்சர்யத்துடன் அங்கேயே நின்று பணத்தை எண்ணிப் பார்த்தான் பிச்சைக்காரன். ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். நம்பமுடியாத பார்வையுடன் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டபடி பிச்சைக்காரன் அங்கிருந்து நகர்ந்தான்!

இதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. இன்று எப்படியாவது கேட்டு விடுவது என்று அவனருகில் சென்று அமர்ந்தேன்.

``தம்பி! கொஞ்ச நாளா உங்களை இங்க பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப சோகமாவே இருக்கீங்களே, என்ன விஷயம்?" என்றேன். அவன் என்னுடைய முகத்தை ஒரு பத்து விநாடிகள் குறுகுறுவென பார்த்தான். பிறகு உதடுகள் துடிக்க, ``நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் சார். அதை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு. போன மாசம் ஒருநாள் இந்த டீக்கடைக்கு வந்தேன். டீ குடிச்சுட்டு திரும்ப வண்டியை எடுக்கும்போது ஒரு வயசானவர் ரொம்பத் தயக்கத்தோட வந்து பசிக்குதுனு சொன்னார். ஆனா நண்பர்களோட சினிமா போற அவசரத்தில இருந்த நான் அவரைக் கண்டுக்காமப் போயிட்டேன்."

Representational Image
Representational Image

``ஆனா அன்னைக்கு நைட் என்னால தூங்கவே முடியல. எங்கிட்ட போதுமான வசதி இருந்தும் ஒரு மனுஷன் பசிக்குதுனு கேட்டு நான் எதையுமே கொடுக்காம இருந்தது என் மனச உறுத்த ஆரம்பிச்சுது.

மறுநாள் இங்க வந்து அந்தப் வயசானவரைத் தேடினேன். கண்டுபிடிக்க முடில. என்னோட மனசு என்னை அரிக்க ஆரம்பிச்சிருச்சு. அதான் தினமும் இங்க வந்து காத்திருக்கிறேன்."

``அவருக்கு எப்படியாவது ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்தா மட்டும்தான் எனக்கு இந்த உறுத்தல் தீரும்! யாராவது பசிக்குதுன்னு கேட்டா உடனே ஏதாவது வாங்கிக் கொடுத்துடணும் சார். அதைவிட ஒரு மனுஷனுக்கு வேற என்ன முக்கியமான வேலை? பசியோட இருக்கறவங்கள யாரு, என்ன, எப்படினு விசாரிச்சுட்டு இருக்கிறது எல்லாம் மனுஷத் தன்மையே கிடையாது" என்று விசும்பலுடன் கண்கலங்கியவனின் கைகளை ஆறுதலாய் பிடித்துக்கொண்டேன்! அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவாறு அவனைச் சமாதானம் செய்துவிட்டு வீடு திரும்பினேன்!

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனைச் சந்திப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டி அந்த டீக்கடைக்குப் போவதை நான் நிறுத்திவிட்டேன். அதனால் மறுபடி அவனைச் சந்திக்கும் வாய்ப்பு இன்று வரை எனக்குக் கிடைக்கவில்லை. அவன் இன்னும் டீக்கடைக்கு வருகிறானா என்று தெரியவில்லை.

ஆனால், அவன் உணவு வாங்கிக் கொடுக்க மறுத்த இரவே அந்த முதியவர் விபத்தில் இறந்துவிட்டதை அவனிடம் கூறாமல் வந்தது நான் அவனுக்குச் செய்த உதவியா இல்லையா என்ற கேள்வி மட்டும் இன்றுவரை என்னைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு