Published:Updated:

தவிப்பு..! – சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Liza Summer from Pexels )

அமர்ந்திருந்த இருவரும் நீண்ட நேரமாக எதுவும் பேசிக்கொள்ள வில்லை. அந்த மாணவி அவர்களைக் கடக்கும் போது மட்டும் அந்த பெண்மணி மாணவியை நோக்கித் திரும்ப, அவளோ நிற்காமல் முறைத்துக்கொண்டே நடக்கிறாள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்பாவிடம் பேச வேண்டும் போல இருந்தது. அதற்குக் காரணம் நேற்று நடந்த சம்பவம் தான்.

பெயரில் என்ன இருக்கிறது? திரும்பத் திரும்ப அவளின் முகம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எதாவது ஆறுதல் சொல்லிட்டு வந்திருக்கலாம்! கண்டுக்காமல் வந்தது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த பொண்ணு மனசு எப்படிப் பாடுபட்டு இருக்கும்? ஆனாலும், உறுதியா இருக்காளே!

நேற்று, நான் படித்த பள்ளிக்கு பி.ஏ (தமிழ்) டிகிரி ஜெராக்ஸில் அட்டெஸ்டேஷன் வாங்க போயிருந்தேன்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பதால் பள்ளியின் தலைமையாசிரியர் அறை மட்டுமே திறந்திருந்தது. உள்ளே சில ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது குறித்து நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

நானும் எட்டிப்பார்ப்பதும் நடப்பதுமாக இருந்தேன். வெளியே என்னைப்போலவே ஒரு மாணவி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

சுடிதாரில் தைக்கப்பட்ட கண்ணாடிகளை அவ்வப்போது திருகினாள். விரல் இடுக்குகளில் துப்பட்டாவைக் கோர்த்து கைகளைப் பிசைந்தாள். யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் எரிச்சலோடு தரையில் வலது காலை உதைக்கவும் செய்தாள்.

Representational Image
Representational Image
Meruyert Gonullu from Pexels

சற்று தள்ளிப்போட்டிருந்த பெஞ்சில் நடுத்தர வயதில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு இடையில் ஒரு ஹேண்ட் பேக் மூடியும் மூடாமலும் அரைகுறையாக ஜிப் இழுக்கப்பட்டு, ஒரு தண்ணீர் பாட்டில் வெளியே தலையை நீட்டிக்கொண்டிருந்தது.

அவர்கள் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்பதால் மூவரும் தனித்தனியாக வந்திருக்கிறார்களா? இல்லையா? எனச் சிறிது நேரம் குழம்ப வேண்டியிருந்தது. தனித்தனியாக வந்திருந்தால் தலைமையாசிரியரைச் சந்தித்து கையெழுத்து வாங்க இன்னும் கூடுதல் நேரமாகுமே.. என் கவலை எனக்கு!

அமர்ந்திருந்த இருவரும் நீண்ட நேரமாக எதுவும் பேசிக்கொள்ள வில்லை. அந்த மாணவி அவர்களைக் கடக்கும் போது மட்டும் அந்த பெண்மணி மாணவியை நோக்கித் திரும்ப, அவளோ நிற்காமல் முறைத்துக்கொண்டே நடக்கிறாள். அவர்களின் திசையில் காதுகள் இல்லையென்றாலும் அந்த ஆணின் அசைவுகள் இவர்களைக் கவனிப்பதாகவே தெரிந்தது. ஆணின் பார்வை மைதானத்தை நோக்கி இருந்தது. மைதானத்தில், அவ்வப்போது பேய்க்காற்று சுழன்று தூசிகள் வட்டமிட்டு மண்ணை எல்லா பக்கமும் தூற்றிக்கொண்டு ஆடியது. என்ன கோவமோ?

இந்த முறை என்னைக்கடக்கும் போது அவளைப் பார்த்தேன்.

அவளும் என்னைப் பார்த்தாள்! இருக்கட்டுமென, நான் லேசாகப் புன்னகைத்து வைத்தேன். அவள் அதை உள்வாங்கியதாகத் தெரியவில்லை. சில சமயம் இப்படித்தான் ஆகும், வலியப் போய் பேசி… தன் மானத்தை இழப்போம்!

அதை மறைக்கவும், மறக்கவும் நான் வாட்ஸப் குரூப்புகளில் மேய ஆரம்பித்தேன்.

ச்சே! என்ற ஒற்றை வார்த்தை காதில் விழுந்தது.

என்னைச் சொன்னாளா? இல்லை, தனக்குள்ளே பேசிக்கொண்டாளா?

என்னதான் நாகரீகம் வளர்ந்து விட்டது என்றாலும் அடுத்தவர் பிரச்சனையைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை! துருதுரு என அலைமோதும் அவளின் கண்களால், என்னையறியாமல் அவர்களை நோக்கி என் கவனம் போனது!

என்ன பிரச்சனையாக இருக்கும்? என்னவாக இருந்தாலும், எனக்கு அவளின் செயல் எரிச்சலைக் கொடுத்தது.

”இப்படியா வளர்ப்பார்கள்?” பிறர்முன் பெற்ற தாயை முறைப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பிள்ளைகளை வளர்க்கும் லட்சணமா இது?

ஒரேயொரு முறை மட்டும் அந்த மாணவி அந்தப் பெண்மணி அருகில் உட்கார்ந்து அந்த பேக்கில் கை விட்டு எதையோ எடுத்தாள். அப்போது மாணவியின் தலையில் உள்ள மல்லிகைப்பூவை சரி செய்தாள் அம்மாக்காரி. அவ்வளவு கோபத்திலும் பூவை பிய்த்தெறியாமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான். பூவையர் என்பதாலோ?

தொனியிலும், உடல்மொழியிலும் அம்மா, மகள் என அனுமானிக்க முடிந்த என்னால் அந்த ஆண் யாரென்று ஊகிக்க முடியவில்லை. பெரும்பாலான தருணங்களில் நாம் நினைக்கும் உறவு முறைகள் இல்லாமல் இருந்துவிடுகின்றன.

சட்டெனத் திரும்பியவன் ஆணின் கை, பாட்டிலை எடுக்க முயன்றது. பாட்டில் இலகுவாக கைக்குப் போய்ச் சேர்ந்தது.

பாட்டிலை மேலும் கீழும் ஒருமுறை பார்த்து விட்டு கவனமாக நீரைப் பருகினாலும், சில துளிகள் சிந்திச் சட்டையை நனைத்தன.

மீண்டும் அந்த தண்ணீர் பாட்டிலின் அளவைப்பார்த்தான்.

பெண்மணி பாட்டிலை நோக்கி கையை நீட்டினாள்.

”இரு என்ன அவசரம்?” என்பது போல இருந்தது வாயைத்துடைத்துக்கொண்டே பார்த்த பார்வை. வார்த்தைகள் எதுவுமே இதுவரை வரவில்லை.

இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கு முன்னே சென்று கையெழுத்து வாங்கும் முனைப்பிலிருந்தேன். நமக்கு தான் வரிசையில் போய் பழக்கமில்லையே!

அண்ணா… நான் அவசரமா கையெழுத்து வாங்கணும்! போன உடனே வந்துடுவேன்!

என் குரலில் லேசானதற்கும் குறைவான கெஞ்சல் இருந்தது. அதனால்தான் என்னவோ, அவர் மரியாதைக்குக் கூட திரும்ப வில்லை!

அந்த மாணவி அருகிலிருந்த செடியின் இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்தெறிந்துகொண்டிருந்தாள். சட்டென கைகளை பின்னுக்கு இழுத்து நேராக நின்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு ஆசிரியை வெளியே வந்து கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

உங்களுக்கு என்ன வேணும்?

அட்டேஸ்டேஷன் வாங்கணும் டீச்சர்…

அதற்குள்ளாக அந்த பெண்மணி அவள் வைத்திருந்த பேப்பரை அவர் முன் நீட்டினாள். அவள் நீட்டிய தூரத்தில் அந்த மாணவியின் பெயர் காவ்யா , 12 ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு என்பதை என்னால் படிக்க முடிந்தது. முத்து முத்தான கையெழுத்து.

”வெயிட் பண்ணுங்கம்மா… நான் கேட்டுட்டு வரேன்”

என்னையும் காத்திருக்க சொல்லி விட்டு, அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு ஆசிரியை உள்ளே சென்றார்.

இப்போதும் காவ்யா அமைதியாக நின்றிருந்தாள். ஆனால் துப்பட்டா விடுதலையாகி காற்றில் பறந்தது. எதுவுமே நடக்காதது போல, அந்த ஆணின் முகம் மைதானத்தை நோக்கியே இருந்தது. வெறிச்சோடி கிடந்த மைதானத்தில் குப்பைகளைத் தவிர எதுமில்லையே!

கையெழுத்துக்கும் காவ்யாவின் நடத்தைக்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல் இருந்தது. நான் படிக்கும் போது கையெழுத்து அழகாக இருப்பவர்கள் தப்பு செய்ய மாட்டார்கள் என நம்பிக்கை இருந்தது.

சமீபத்தில் படித்த, ”கையெழுத்து கிறுக்கலாக உள்ள பிள்ளைகளைத் திட்டாதீர்கள்! அவர்கள் டாக்டராகக் கூட வரலாம்” என்ற வரிகள் ஞாபகம் வந்தன..

எனக்குள்ளே சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பினூடே…,மீண்டும் காவ்யாவைப் பார்த்தேன். காவ்யா ஒரு கையில் துப்பட்டாவை முறுக்கிக்கொண்டே, இன்னொரு கையில் இலைகளைப் பிய்த்துக்கொண்டிருந்தாள். எந்த தவறும் செய்யாத இலைகள் உயிர் விட்டுக்கொண்டிருந்தன.

அவளின் பெயரும் கையெழுத்தும் அருமை எனச்சொல்ல ஆசை! ஆனால், முகத்தில் அடித்தாற்போல பேசிவிட்டால் என்ன செய்ய?

எத்தனை நேரம் தான் சும்மாவே காத்திருக்கிறது?

அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டார்கள்!

அவர்கள் என்றால் ஆணும், பெண்ணும் மட்டுமே! காவ்யா வெளியே கொஞ்சம் தள்ளி முகத்தில் சின்ன ஆரவாரம் கூட இல்லாமல் நின்றுகொண்டிருந்தாள். முகம் வாடியிருந்தது!

அவள் விடிய விடியப் படித்திருக்கலாம்! மொபைலில் கேம் விளையாண்டு இருக்கலாம். இந்த மொபைல் காலத்தில், எதை எப்படி சொல்ல முடியும்? யார் கண்டது?

அறைக்குள் நடக்கும் பேச்சு வார்த்தைகள் ஜன்னல்வழியாக விட்டுவிட்டுக் கேட்டது!

இப்போதைக்கு எதிலும் அவள் கவனமில்லை என்பது தெரிந்தது. இனி என்ன நடக்குமோ என்ற பதட்டம் அவளின் அசைவுகள் காட்டிக்கொடுத்தது.அவளின் பயத்திற்குக் காரணம் யாரைச் சார்ந்திருப்பது என்பது கூட இருக்கலாம்.

காவ்யா உள்ளே வாம்மா…

தயங்கி தயங்கி உள்ளே போனாள். அது தடுமாற்றமா, பயமா, தவிப்பா எனக் கண்டறிய முடியவில்லை.

உள்ளே போனவர்கள் நீண்ட நேரம் வெளியே வரவில்லை!

பொறுமையிழந்து என்னதான் பிரச்சனை எனக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தேன்.

உற்றுக்கேட்டதில் இனிஷியல் பிரச்சனை என அரைகுறையாக புரிந்தது.

”ஐயா…இனிஷுயல் மாற்றித் தர முடியாது!” இது பலமாகக் கேட்டது.

ஆண்களுக்கு இனிஷியல் பிரச்சனை எப்போதும் வருவதில்லை. ஆனால் பெண்களுக்கு மணமான பின் சில நேரங்களில் இனிஷியல் பிரச்சனை தலைதூக்குகிறது. கணவனின் இனிஷியல் வேண்டுமெனக் கேட்கிறார்கள் அல்லது கேட்க வைக்கப்படுகிறார்கள்.

எப்படியாகினும், ஆண்களின் பெயரை இனிஷியலாக சிம்மாசனம் போட்டு அமர வைப்பது எது? பல நாட்களாக, இந்த கேள்வி என்னுள் குடைந்துகொண்டே இருக்கிறது.

Representational Image
Representational Image

பெற்றோர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் இந்த தலைமையாசிரியருக்கு என்ன சங்கடமோ? எனக்குப்பிடிபடவில்லை! சாதாரண பிரச்சனையை அரைமணி நேரமாக அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக்கொண்டு இருக்கிறார்களே என நொந்துகொண்டேன்.

”நீங்க நெனெச்ச மாதிரி எல்லாம் மாத்த முடியாது. அதுக்குன்னு ரூல்ஸ் இருக்கு!” என கலகத்தினுள் ஒரு குரல் ஒலித்தது. அது உள்ளே இருந்த ஆசிரியரின் குரலாக இருக்கும்.

“ஆமாம்… இனிஷியல் மாற்றுவது பெண்களின் சுய உரிமை! அதனால், காவ்யா தான் சொல்லணும்!” என இனியொரு குரல் தெளிவாகக் கேட்டது.

அநேகமாக உள்ளே வாக்கு வாதம் நடந்திருக்க வேண்டும்.

அம்மா அப்பா சண்டையென்றால் சும்மாவா?

பிள்ளைகளின் மனம் என்னவாக பாடுபடும்? நான் நன்கறிவேன்.

குடும்பம் என்பதே கணவன்,மனைவி மற்றும் பிள்ளை என்ற முக்கோண அமைப்பு என்பதே சில பெற்றோர்களுக்குப் புரிவதே இல்லை.

அம்மா,அப்பா இரண்டு பேரும் விடிய விடிய சண்டைப்போடுவதைக் கண்டிருக்கிறேன்! ஆனால்,குடிகார தந்தை என்றோ, அம்மா அடங்காப் பிடாரி என்றோ ஒரு நாளும் எண்ணம் வந்ததில்லை!

இலக்கியங்கள் கூட ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களாகப் புணர்தல்,இருத்தல்,ஊடல்,இரங்கல்,பிரிவு என்பதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு நாளும் வெறுப்பு அரசியலைப் பேசியதே இல்லை!

”இனி உங்க சக்காத்தே வேண்டாம்!” என அம்மா சொன்னாலும் வீட்டை வீட்டு வெளியே போனதில்லை!

நான் சுயநினைவுக்கு வரும் போது காவ்யா வெளியே வந்து கதவோரம் நின்றிருந்திருந்தாள்.

மாணவியின் முகத்தில் எந்த நேரத்திலும் அழுகை வெடிக்கலாம் என்பது போன்று முகபாவனை மாறியிருந்தது. ஏன் இந்த வானிலை மாற்றம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை!

அவளை நோக்கி நகர்ந்தேன். என்னை நோக்கித் திரும்பினாள். நீல மாஸ்க்கில் மேகம் போல ஈரம் படர்ந்து இருந்தது

ஏம்மா?

ஒண்ணுமில்லை!

உள்ளே ஹெச்.எம் பிரச்சனை செய்றாங்களா?

இல்லை…

ஒரு வார்த்தைக் கேள்விக்கு ஒரு வார்த்தைப் பதில். நீண்ட கேள்விக்கும் ஒரு வார்த்தை தான் பதில்.

ஒரு வார்த்தை பதில்கள் தான் மண்டைக் குடைச்சல் தருவன.

பிறரின் பிரச்சனையை இதற்கு மேல் கேட்பது அநாகரீகம் எனப் பேசாமல் உட்கார்ந்துவிட்டேன்.

நிழல்களின் எண்ணிக்கை அதிகமாகவும்,அவற்றின் நீளம் குறையவும் தொடங்கின.

இப்போது காவ்யா அறையின் கதவுக்கருகில் நின்றிருந்தாள்.

”சும்மா… பேசிட்டே இருக்காதீங்க… இனிஷியல் மாத்த முடியாது” என்பது கூடுதல் ஓசையோடு காதில் விழுந்தது.

இந்த வார்த்தைகளைக் கேட்ட மாணவி தனது கைகளால் சுவரைக் குத்தினாள்!

வெளியே போய் உட்காருங்க… டிசி ரெடியானதும் கூப்பிடறோம்.

மாணவி விழும் கண்ணீர்த்துளிகளைச் சுண்டு விரலில் சுண்டி விட்டாள். அது விழுந்தவுடன் ஆவியானது, மற்றவர்களின் பிரச்சனைகள் போல.

Representational Image
Representational Image
Meruyert Gonullu from Pexels

இருவரும் வெளியே வந்தனர்.

அடுத்து எனக்கு அழைப்பு வந்தது.

பெஞ்சில் இருந்து அவசரமாக எழும் போது எனது கையிலிருந்த சான்றிதழ்கள் நழுவின.

காகிதங்கள் சரசரவென…பறந்து ஓடுவதை துரத்திப்பிடித்து காவ்யா எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கி சொருகிக்கொண்டே உள்ளே புகுந்தேன்.

உள்ளே போகும் அவசரத்தில் அவள் எதாவது பேசினாளா? எனக்கூடக் கவனிக்கத் தவறினேன். அறைக்குள் தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று பேர் இருந்தார்கள்.

குட் மார்னிங் மேடம்…

சொல்லுங்கம்மா…

மேடம்… அட்டேஸ்டெஷன் வேணும்…

எவ்வளவு கையெழுத்து வேணும்…

கொஞ்சதான் மேடம்…

சரி கொடுங்க…

”இந்த சீல் வைச்சு கொடுப்பா…” அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்தார். சான்றிதழ்களுக்கு முத்திரை குத்த ஆரம்பித்தார். நான் தலைமையாசிரியையும் முத்திரை குத்துவதையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

எதாவது விடுபட்டுப் போனால் திரும்ப வரவேண்டுமே!

இடைப்பட்ட நேரத்தில் அந்த ஆசிரியர்களிடம் தலைமையாசிரியர் பேச ஆரம்பித்தார்.

ஏங்க டீச்சர் நம்ம என்ன செய்ய முடியும்?

ஆமாங்க மேடம்… இது அவங்க பேமிலி மேட்டர்…

டீச்சர்…அந்த ஆளுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது… நமக்கு அப்பா இனிஷியலை மாத்த அதிகாரம் கிடையாது…

அந்த டீச்சரும் சிரித்துக்கொண்டே அமைதியானார்.

பேசிக்கொண்டே எனது சான்றிதழ்களுக்கு கையெழுத்து போட்டார்.

ஆமாங்க… மேடம் செகண்ட் மேரேஜ் பண்ணிட்டு இங்க வந்து பொண்ணோட இனிஷியல் மாத்த சொன்னா… நம்ம என்ன பண்ண முடியும்? அந்தம்மாவுக்கு அறிவு வேண்டாம்?

இது இன்னொரு டீச்சரின் அங்கலாய்ப்பு.

பாவம், அந்தப் பொண்ணு அப்பா இனிஷியலை மாத்தக்கூடாதுன்னு அழறா… நாங்க என்னம்மா பண்ண முடியும்?

இது என்னை நோக்கி வந்த கேள்வி. என் கவனமெல்லாம் எனது சான்றிதழ்களின் மீது இருந்தது.

நாம என்ன செய்ய முடியும் மேடம்?

யாரும் எதுவும் பேசவில்லை.

யார் என்ன செய்ய முடியும்?” என்று மீண்டும் ஒரு ரெடிமேடான கேள்வியைக் கேட்டு வெளியேறினேன்.

அதே பெஞ்சில் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கிடையே இப்போது ஹேண்ட் பேக் இல்லை! அது இடதுபக்க ஓரமாகப் போய்க் கிடந்தது.

பள்ளியின் வாசலருகே வந்து திரும்ப காவ்யாவைத் தேடினேன்!

அவள் சற்று தள்ளியிருந்த பூஞ்செடியின் மீது பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தாள்.

யார் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் செடியானது தனக்குத் தேவையான அளவை விட ஒரு துளியைக் கூட உறிஞ்சாது தானே?


-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு