Published:Updated:

விளங்காதவன்! - சிறுகதை

Representational Image
Representational Image

கந்தப்பிள்ளை வெளியில் பலரிடம் கோபப்பட்டிருந்தாலும், முருகேசனிடம் எப்போதும் கோபப்பட்டதே இல்லை, சிறுவயதில் இருந்து இதுவரையிலும் தான்பார்க்காத கந்தப்பிள்ளையை பார்த்த முருகேசன் நடுங்கினான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நகரத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்திருந்தது சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கிய 'முடிவை' கிராமம். விரைவில் வரவிருக்கும் தேர்தலுக்காக புதிதாக போடப்பட்ட கிராமத்தின் 10 அடி அகலமுள்ள பிரதான தார் சாலையில் கைகளை வீசியபடி மகிழ்ச்சியோடு நடந்து கொண்டிருந்தான் விளங்காதவன், மன்னிக்கவும் முருகேசன். விளங்காதவன் என்பது ஊரார் அவனுக்கு இட்ட பட்ட பெயர்.

"ஏல வெளங்காதவனே... விடிஞ்சும் விடியாததுமா இம்புட்டு வேகமா எங்கல போற?" கமலம்மாளின் டீக்கடை பெஞ்சில் அமர்ந்த படி கேட்ட தன் சொந்த பெரியப்பா செல்லத்துரையிடம், "கந்தப்பிள்ளை ஐயா வீட்டுக்கு" என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றான்.


"இந்த நேரத்துல அவரு வீட்டுல இவனுக்கு என்ன வேல?" என்று கேட்ட எதிர் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணிக்கத்திடம் "ம்ம்... கக்கூஸ் கழுவறதுக்கா இருக்கும்" என்று கூறி ஏளனமாய் சிரித்தான் செல்லத்துரை.

Representational Image
Representational Image

அந்த ஊரில் முருகேசனை மதிக்கும் ஒரே ஆள் கந்தப்பிள்ளை மட்டுமே, ஊரின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். "ஏலே முருகேசாசின்னப்புள்ள மாதிரி அழுவாதல.. இன்னிக்கு இல்லனாலும் என்னைக்காச்சும் நீ ஜெயிச்சு வருவல, அப்ப பாரு உன்ன கிண்டல் பண்ற இந்த ஊருசனம்லாம் வாய பொளந்துகிட்டு நிப்பானுங்க" இவை அவமானத்தால் கண்கலங்கி வரும் முருகேசனிடம் கந்தப்பிள்ளை அடிக்கடி கூறும் ஆறுதல் வார்த்தைகள்.

முருகேசனுக்கு 6 வயதாகும் போது தீபாவளி நாள் அன்று அவன் கொளுத்திய ராக்கெட் வெடி அவனது கூரை வீட்டிலேயே விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் பெற்றோர் இருவரையும் பறிகொடுத்தவன். அப்போது ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து வழங்கிய பட்டம்தான் விளங்காதவன் என்ற பெயர். அந்த ஊரில் அவனை முருகேசன் என்று பெயர் சொல்லி அழைப்பது கந்தப்பிள்ளை மட்டுமே. தாய், தந்தையரை இழந்த பிறகு செல்லத்துரைதான் ஊரார் பேச்சுக்கு ஆளாகக்கூடாது என்று எண்ணி அவனுக்கு இருவேளை உணவு கொடுத்து வந்தார்.

மூன்றே மாதத்தில் அழிந்த 50 கோடி தேனீக்கள், அபாயத்தின் அறிகுறி! - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்

தன்னுடைய எட்டாவது வயதிலேயே கந்தப்பிள்ளையின் தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்த முருகேசனை அரவணைத்தவர் கந்தப்பிள்ளை. மேலும் அவனது வேலைகளைக் குறைத்து பள்ளியில் சேர்த்து பத்தாம் வகுப்பு வரை படிக்கவும் வைத்தார். அன்று முதலே முருகேசன் தன் பெரியப்பா வீட்டிற்கு செல்லாமல் கந்தப்பிள்ளை தோட்டத்தையே தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்டான்.

கந்தப்பிள்ளை தோட்டத்தில் வேலை பார்த்தாலும் இதுநாள்வரை அவன் ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. கந்தப்பிள்ளை எவ்வளவோ வற்புறுத்தியும் "எனக்கெதுக்குயா இந்த காசு பணம்லாம், மூணு வேளையும் சோத்த போடுறீக, உடம்புக்கு சரயில்லன்னா நீங்களே ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறீக.. எனக்கு இதுவே போதும்யா.. கூலினெல்லாம் எதுவும் வேண்டாம்யா" என்று மறுத்து விடுவான்.

முருகேசனின் தாத்தாவிற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் ஒன்று ஊருக்கு அருகாமையில் அமைந்திருந்தது. ஆனால் தாத்தாவின் உடன்பிறந்தவர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக யாருக்கும் சொந்தமில்லாமல் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நிலத்தை மீட்க முருகேசனின் தந்தை நீதிமன்றம் மூலமாக பல முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். பின்னர் செல்லத்துரை அந்த வழக்கை கந்தப்பிள்ளை உதவியோடு நடத்தி வந்தான்.

Representational Image
Representational Image

ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த சொத்து முழுவதும் முருகேசனின் தாத்தாவிற்கே சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெருமகிழ்வோடு ஊரில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து நன்றிக்கடன் செலுத்திக்கொண்டிருந்த செல்லத்துரை அந்த வழியாக மாட்டு வண்டியில் கந்தப்பிள்ளை செல்வதை பார்த்து ஓடோடி வந்து,


"ரொம்ப நன்றிங்கய்யா.. நீங்க மட்டும் இல்லன்னா இந்த கேஸ்ல நான் ஜெயிச்சுருக்க முடியாது, நேத்து வரைக்கும் சொந்தமா கைப்படி மண்ணு கூட இல்லாத என்கிட்ட இன்னைக்கு முழுசா 6 ஏக்கர் நிலம் இருக்குதுன்னா எல்லாம் உங்களால்தான்யா" என்று கைகூப்பி வணங்கினான்.

"உன் பக்கம் நியாயம் இருந்ததால நான் உனக்கு உதவி பண்ணுனேன்.. சரி நல்லபடியா இடத்த பாத்துக்கோ" என்று சொல்லி நகர்ந்த கந்தப்பிள்ளைக்கு சில மீட்டர் தூரம் சென்ற பிறகு மனதில் ஏதோ நெருடியது. வண்டியை நிறுத்திவிட்டு செல்லத்துரையை அழைத்தார்.


"ஏல செல்லத்துரை அந்த 6 ஏக்கர்ல சரிபாதி முருகேசனுக்கும் சொந்தம்தான?" என்றார்.

"அந்த வெளங்காதவனுக்கா?" அதிர்ச்சியடைந்தான் செல்லத்துரை.

உண்மையில் அந்த நிலத்தில் முருகேசனுக்கு பங்குக் கொடுப்பதை பற்றியெல்லாம் செல்லத்துரை நினைத்துப் பார்க்கவே இல்லை. ஏனெனில் முருகேசன் சொத்துல எனக்கும் பங்கு வேணும் என்று தன்னிடம் கேட்டு வரமாட்டான் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் கந்தப்பிள்ளையிடம் இருந்து அவன் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை,


"அந்த வெளங்காதவனுக்கு என்னய்யா தெரியும் இந்த நிலத்த அவன்ட குடுக்குறதும் ஒன்னுதான் அப்படியே தரிசாவே விடுறதும் ஒன்னுதான்".

அதிர்ச்சியடைந்த கந்தப்பிள்ளை, "அந்த நிலத்துக்காக உனக்கு முன்னாடி பல வருஷமா போராடுனது உன்னோட தம்பிதான், அவன் மட்டும் அவ்ளோ உசுர குடுத்து போராடலன்னா உனக்கு ஒரு அடி இடம் கூட கிடைச்சுருக்காது தெரியுமால, இத்தனைக்கும் அவன் இந்த கேஸ ஆரம்பிச்சு நடத்துறப்ப நீ நல்ல வசதியாதான் இருந்த அப்படி இருந்தும் இந்த கேஸ நடத்துறதுக்கு கூட உன் தம்பிக்கு அஞ்சு பைசா குடுத்து உதவல அந்த மானஸ்தனும் உன்னோட உதவிய எதிர்பாக்காம தன் பொண்டாட்டியோட நகை பணத்த வித்து கேஸ ஜெயிக்குற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டு பரலோகம் போயிட்டான், நியாயமா பாத்தா இந்த இடத்துக்காக நீ ஒன்னுமே பண்ணல" என்ற கந்தப்பிள்ளையிடம் பதில் பேச முடியாமல் நின்றான் செல்லத்துரை.

மீன் கடைன்னா ஈ மொய்க்கனுமா என்ன? - டிஜிட்டல் மீனவரின் வெற்றிக் கதை

"அந்த இடத்துல உனக்குள்ள உரிமைய விட முருகேசனுக்கு அதிகமாவே இருக்கு, அவன் வந்து கேக்க மாட்டாங்குறதுக்காக அப்படியே அமுக்கிடலாம்னு பாத்தியா? இந்த பாரு செல்லத்துரை, அந்த இடத்த முருகேசன் விட்டாலும் நான் விட மாட்டேன், உன்னோட சித்தப்பன்மார்ங்கல்லாம் சேர்ந்து உன் அப்பன ஏமாத்துன மாதிரி நீ உன் தம்பி பையன ஏமாத்த நினைக்குறியே! கொஞ்சமாது மனசாட்சியோட நடந்துக்கடா, இதோ பாரு உன்ட தெளிவா சொல்றேன் நல்லா கேட்டுக்க, நீயே முருகேசனுக்கு நிலத்த பிரிச்சு குடுத்துட்டன்னா மரியாதையா இருக்கும் இல்லன்னா அந்த நிலத்த முருகேசன் கையில எப்படி கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்கு தெரியும்" சொல்லி விட்டு செல்லத்துரையின் பதிலை எதிர்பார்க்காமல் மாட்டுவண்டியில் நகர்ந்தார் கந்தப்பிள்ளை.

Representational Image
Representational Image

செல்லத்துரைக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஆறு ஏக்கர் நிலத்தையும் சுகபோகமாக அனுபவிக்கலாம் என்று நினைத்திருந்தவனுக்கு பாதி இடத்தை விட்டுக்கொடுக்க மனமில்லை, இருந்தாலும் கந்தப்பிள்ளையை எதிர்க்க அவனுக்கு துணிவு இல்லை. வேறு வழியில்லாமல் மூன்று ஏக்கர் நிலத்தை முருகேசனுக்கே வழங்கும் முடிவிற்கு வந்தான்.


அன்று பத்திரப்பதிவு நாள், கடைசிநேரத்தில் செல்லத்துரை ஏதாவது வில்லங்கம் செய்வான் என்ற எண்ணத்தோடு முருகேசனோடு கந்தப்பிள்ளையும் வந்திருந்தார். பத்திரப்பதிவு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்தது. ஆனால் ஊர் மக்கள் அனைவரும் "இவனக்கு வந்த வாழ்வ பாரு! அந்த மூணு ஏக்கரும் செல்லத்துரகிட்ட இருந்தாலாவது ஏதாவது வெளைச்சல பண்ணி முன்னேறுவான், இந்த வெளங்காதவனுக்கு மூணு ஏக்கர் நிலம்னா எவ்வளவுன்னே தெரியாது, இன்னும் கொஞ்ச நாள்ல அந்த இடத்த எவன்கிட்டயாவது ஏமாந்துகிட்டு வந்து நிக்க போறான் பாரு" என்று அவன் காதுபடவே பேசினர்.

உண்மையில் முருகேசனுக்கும் அந்த இடத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை பிறந்ததிலிருந்தே வேலைக்காரனாகவே இருந்து பழகி விட்ட தன்னால் ஒரு முதலாளியாக மாறமுடியாது என்றே அவனும் நம்பினான். இன்று காலையில் அந்த நிலத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டே அய்யங்குளத்தில் குளித்துக்கொண்டிருந்த முருகேசன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இப்போது கந்தப்பிள்ளை வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.

"ஏங்க உங்கள தேடிக்கிட்டு வெளங்காதவன் வந்துருக்கான்" வாசலில் இருந்து கத்திய வள்ளியம்மாளின் குரல் கேட்டு வாசித்துகொண்டிருந்த நாளிதழை மடித்து கையில் வைத்தபடி மனைவியை முறைத்துக்கொண்டே வெளியே வந்தார். அவரது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட வள்ளியம்மாள், "ஆமா.. நான் மட்டும்தான் அப்படி சொல்றேனாக்கும், ஊரே அவன அப்படித்தான் கூப்பிடுது" முனங்கிக்கொண்டே மாட்டுத்தொழுவத்தை நோக்கி நடந்தாள்.

Representational Image
Representational Image

"எத்தனை முறை சொன்னாலும் இவள மாத்த முடியாது" என்று மனதில் நினைத்துக்கொண்டே வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த முருகேசனிடம், "என்னலே என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு காலங்காத்தாலயே வந்துருக்க? இனிமே நம்ம தோட்டத்து வேலைக்கு வரமாட்டேன், எனக்கும் தோட்டம் இருக்கு இனிமே நானும் முதலாளிதான்னு சொல்லிட்டுப்போவ வந்தியா?" சிரித்துக்கொண்டே கேட்டார் கந்தப்பிள்ளை.


"என்னங்கய்யா நீங்க இப்படில்லாம் சொல்றீங்க, என்னைக்குமே நான் உங்க வேலைக்காரன்தான்யா" பதறினான் முருகேசன்.


"சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேம்ல பதறாத, சரி அந்த நிலம் உன் கைக்கு வந்து ஒரு மாசம் ஆய்டுச்சே... என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்துருக்க?"


"அத பத்தின ஒரு முடிவோடதான்யா உங்கள பாக்க வந்திருக்கேன், என்னால அந்த நெலத்த வச்சுகிட்டு என்ன பண்றதுன்னு சத்தியமா ஒன்னுமே வெளங்கலய்யா, அந்த நெலம் என்கிட்ட கிடந்து பாழா போறதுக்கு பதிலா, நான் தெய்வமா மதிக்குற உங்ககிட்ட இருந்தாலாச்சும் ஏதாவது பயன்படும்னு நெனைக்குறேன், அதுனால அந்த இடம் உங்ககிட்டயே இருக்கட்டும்யா" என்றபடியே பத்திரத்தை நீட்டினான் முருகேசன்.


நீட்டிய பத்திரத்தை பிடுங்கி வெளியே கோபத்துடன் வீசியபடியே "எவன் அப்பன் இடத்தையும் ஏமாத்தி புடுங்கி கஞ்சி குடிக்கவேண்டிய நிலமைல நான் இல்ல, ஒழுங்கா மரியாதையா பத்திரத்த எடுத்துகிட்டு எடத்த காலி பண்ணு, இன்னொரு தடவை பத்திரத்த தூக்கிட்டு எம்முன்னாடி வந்து நின்னியோ உன்ன தொலச்சுபுடுவேன் பாத்துக்கோ" சீறினார் கந்தப்பிள்ளை.

கந்தப்பிள்ளை வெளியில் பலரிடம் கோபப்பட்டிருந்தாலும், முருகேசனிடம் எப்போதும் கோபப்பட்டதே இல்லை, சிறுவயதில் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற அவன்மீது எப்போதும் அன்பாகவே நடந்துகொள்வார். சிறுவயதில் இருந்து இதுவரையிலும் தான்பார்க்காத கந்தப்பிள்ளையை பார்த்த முருகேசன் நடுங்கினான்.

"ஆயுசு முழுக்க நீ வேலைக்காரனாவே இருக்குறதுக்கால உங்க அப்பன் இம்புட்டு போராடுனான்? உங்க அப்பன் ஆசப்பட்ட மாதிரி பெரிய ஆளா வந்து காட்டுல, உன்ன அவமானப்படுத்துற இந்த சனங்களுக்கெல்லாம் நீ யாருன்னு புரிய வையில, அதுமட்டுமில்லாம மூணு ஏக்கர் நிலத்த சமாளிக்க முடியாத பயலயா நான் இத்தன வருஷமா கூடவே வச்சு சுத்திகிட்டு திரிஞ்சேன்? இனிமேலாவாது உனக்கு ஒரு விடிவுகாலம் பொறக்கும்னு நெனச்சா, நீ என்னடான்னா பத்திரத்த தூக்கிட்டு வந்து நிக்குற...? ஊரார்லாம் சொல்ற மாதிரி ஒன்னத்துக்கும் வெளங்காதவனால நீ..?


"அப்படி இல்லங்கய்யா....."

"இனிமே அந்த பத்திரத்த தூக்கிட்டு என் முன்னாடி வந்து நிக்காத.. உனக்கு அந்த இடம் வேணாம்னா உன் பெரியப்பன்கிட்ட போய் குடு இல்ல என்னமும் பண்ணு" பொரிந்து தள்ளினார் கந்தப்பிள்ளை.

வாசலில் விழுந்து கிடந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு, கண்களை துடைத்தபடியே நடந்தான் முருகேசன்.

Representational Image
Representational Image

அவன் சென்றபின்னர் தாய் தகப்பன் இல்லாத பையனிடம் தான் கடிந்து கொண்டதை எண்ணி வருந்தினார் கந்தப்பிள்ளை. காலையில் தோட்டத்திற்கு சென்று வேலையில் மும்முரமாக இருந்த முருகேசனை அழைத்தார். கைகட்டியபடி வந்து நின்ற முருகேசனிடம்,

"அந்த மூணு ஏக்கர்ல நீ ஏம்ல வெங்காயம் பயிரிடக்கூடாது"

"எனக்கு அது சரிப்பட்டுவரும்னு தோணலிங்கய்யா"

"ஏம்ல சரிப்பட்டு வராது, உனக்குத்தான் வெவசாயத்துல எல்லாமே அத்துப்படியாச்சே, உன்னோட இடம் பூரா நல்ல வளமான செம்மண்ணு, வரப்போற ஆடிப்பட்டத்துல நடவ ஆரம்பிச்சன்னா நல்ல வெளச்சல் பாக்கலாம்ல"

"அது நல்ல மண்ணுதான்யா ஆனா 20 வருஷமா சும்மால்ல கெடந்துருக்கு

உனக்கு அந்த இடம் 20 வருஷமா தரிசா கிடந்ததுதான் தெரியும், ஆனா எனக்கு 20 வருஷத்துக்கு முன்னாடி அந்த இடம் எவ்ளோ செழிப்பா இருந்துச்சுன்னும் தெரியும்

இல்லீங்கய்யா, அந்த இடத்த சரி பண்றதுக்கே நிறைய செலவு ஆகுங்களே… 2 கிணறு இருந்தாலும் நல்லா தண்ணி கிடக்குற கிணறு பெரியப்பாவுக்கு போயிடுச்சி, தூந்து போய் கிடக்குற கிணறுதான நம்மகிட்ட இருக்கு, தண்ணியே இல்லங்குற போது நாம எப்படிய்யா வெள்ளாமை பாக்குறது?”

ஏலஎல்லாத்துக்கும் நொட்ட சொல்லிக்கிட்டே இருப்பியாலநீ இத்தன வருஷமா என் நிலத்துல வேலை பாத்ததுக்கு கூலினு எதாவது வாங்கிருக்கியால, உன்னோட இடத்த சரி பண்ணி தர வேண்டியது என் பொறுப்பு போதுமால…”


சரிங்கய்யா, நீங்க என் பக்கத்துல இருக்கும் போது எனக்கென்ன பயம்? இன்னும் ஒரு மாசத்துல அந்த நிலத்த எப்படி மாத்துறேன்னு பாருங்க


அப்படி சொல்லுலநீ நிலத்துக்கு போ, கிணத்த தூர் வார நான் ஆளுங்கள ஏற்பாடு பண்றேன், அப்புறம் நம்ம தோட்டத்துக்கு போய் உழவுக்கு ரெண்டு மாடுகள கூட்டிட்டு போ, அது நான் உனக்கு கொடுக்குற பரிசு

நீங்கதான்யா எனக்கு கடவுள், நம்ம தோட்டத்து வெளச்சல்ல மொத மூடை வெங்காயம் உங்களுக்குதான்யா, ரெண்டாவது மூடைதான் சாமிக்குதளுதளுத்தான் கதிர்வேலன்.

சரி சரி போய் ஆக வேண்டிய வேலைய பாருல

ஆறு மாதங்கள் கழிந்தன, கதிர்வேலன் சிந்திய வியர்வை வீண் போகவில்லை, அவனது நிலத்தில் வெங்காயச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு பக்க பலமாக நின்ற கந்தப்பிள்ளை மாரடைப்பால் காலமானார். அவர் இறந்த வீட்டில் வள்ளியம்மாள்அழுததை விட இவன் விட்ட கண்ணீரே அதிகம்.

Representational Image
Representational Image

கந்தப்பிள்ளை மறைந்த பத்தாம் நாள் , அவரது மகன்கள் இருவரும் முருகேசனின் தோட்டத்திற்கு வந்தனர், அவர்களைக் கண்டதும் ஓடி வந்து வரவேற்ற முருகேசன் அவர்கள் அமர நாற்காலிகளை விரித்தான்.

கலர் வாங்கிட்டு வரட்டுமாய்யா

ஆமா.. உங்கூட உக்காந்து வியாக்கியானம் பேசிக்கிட்டு கலர் குடிச்சுட்டு போறதுக்கால வந்துருக்கோம்என்றார் இளைய மகன்.

ஏலே வெளங்காதவனேஎன் அப்பன் உனக்கு எம்புட்டு காசு செலவு பண்ணிருக்காருன்னு எல்லாம் எனக்கு தெரியும், என் அப்பன மாதிரி நாங்களும் இளிச்சவாயங்களா இருப்போம்னு நெனச்சுராதஇது மூத்த மகன்.

இல்ல சின்னய்யா, நான் ஐயாகிட்ட வேணாம்னுதான் சொன்னேன், ஐயாதான் கட்டாயப்படுத்தி என் காட்டுக்குச் செலவு பண்ணாரு

எனக்கு எந்த கதையும் வேணாம், ஊருல எவன் எவனோ சம்பாதிக்குறதுக்கெல்லாம் எங்கப்பன் சொத்து சேத்து வைக்கல, அந்த மனுசன்ட எதுவும் பேச முடியாம இவ்ளோ நாள் இருந்தோம், இனிமே அப்படி இல்ல, அறுவடை முடிஞ்சதும் ஏக்கருக்கு முப்பதாயிரம்னு கணக்கு போட்டு ஒழுங்கா என்ட கொண்டு வந்து சேத்துரனும் புரியுதா?”

சரிங்கய்யா கண்டிப்பா கொண்டு வந்து கொடுத்துடுறேன்

10 நாட்கள் நகர்ந்தன

ஏம்ல பொன்னுச்சாமிஅந்த வெளங்காதவன் நாளைக்கு அறுப்ப ஆரம்பிக்கிறானாமே கேள்விப்பட்டியா?” அரியநாச்சி குளத்தில் குளித்துக்கொண்டே வினவினார் குத்தாலிங்கம்.

ஆமாண்ணேஎப்படியும் மொத்தமா 15 டன்னுக்கு மேல கிடைக்கும்னு ஊருக்குள்ள ஒரே பேச்சால்ல கிடக்கு, அதுவும் இம்புட்டு நாளா சும்மா கெடந்த எடத்த ரெடி பண்ணி இம்புட்டு தூரம் கொண்டு வந்துருக்காம்னா அவன் பெரிய ஆளுதாம்ணே…”

அட ஆமாலபக்கத்து எடத்துல அவன் பெரியப்பன் செல்லத்துரை வயல்ல கூட 10 டன்னுக்கு மேல தாண்டாது போல, நோய் வந்து பாதி பயிர அடிச்சுட்டாமே

பின்ன என்னணேவெவசாயம் பாத்தா கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா, வெங்காயத்த நடவு பண்ணுனா எவ்ளோ கண்ணும் கருத்துமா பாத்துக்கணும், அத விட்டுபோட்டுட்டு சாராயத்த குடிச்சுக்கிட்டு கெடந்தான்ல அதான் எலப்புள்ளி நோய் வந்து அடிச்சுட்டு

அதெல்லாம் சரிதான் பொன்னுச்சாமி, இந்த வெளங்காதவனுக்கு சந்தைய பத்தி என்ன தெரியும்? அவன் கந்தப்பிள்ளை ஐயா தோட்டத்துல வேலை பாத்ததால வெவசாய வேலையெல்லாம் தெரிஞ்சுருக்கும், ஆனா வெளைஞ்ச வெங்காயத்த காசா மாத்துற வித்தை தெரியாதே..!”

சரிதாம்ணேவெளைய வைக்கிறத விட விக்குறதுதான் கஷ்டம்னு அந்த பயலுக்கு எப்படி தெரியும்? அந்த வித்தை தெரியாமத்தானணே நம்ம ஊருல கால்வாசி பேரு வெவசாயமே வேண்டாம்னுட்டு டவுணுக்கு வேலைக்கு போறானுவ

செல்லத்துரைய பாத்தியா வெங்காயத்த புடுங்குறதுக்கு முன்னாடியே மூங்கில் தட்டியும், சோளத்தட்டையும் போட்டு பட்டறை ரெடி பண்ணிட்டான், மாசக்கணக்கா சேத்து வச்சு வெலை ஏறும் போது விப்பான், பொழைக்க தெரிஞ்சவன்ல

ஆமாண்ணே.. கந்தப்பிள்ளை ஐயா இருந்தாலாவது அந்த வெளங்காதவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லுவாரு, சொல்லப்போனா அவரே பட்டறைய போட்டு கொடுத்துருவாரு, இந்த பயலுக்கு புத்தி சொல்லவும் ஆள் கிடையாது, கை நீட்டி காசு குடுக்கவும் ஆள் கிடையாது, இவன் பாடு திண்டாட்டம்தான்

அறுவடை முடிந்த ஆறாம் நாள் அடுத்த நடவுக்கு தேவையான விதை வெங்காயத்திற்காக 3 டன் ஒதுக்கியது போக மீதமிருந்த வெங்காயத்தை மூட்டை கட்டி சந்தைக்கு எடுத்துச் சென்றான் முருகேசன்.

Representational Image
Representational Image

அண்ணே… 230 மூடைண்ணேஒவ்வொண்ணும் 50கிலோ எல்லாம் திரட்சியா இருக்கும்ணேகழிவே போகாதுமொத்த வியாபாரியிடம் பேரம் பேசினான் முருகேசன்.

அதெல்லாம் சரிப்பாசந்தைக்கு வர்ற அம்புட்டு வண்டியவும் பாரு பூரா வெங்காயம்தான், மூடைக்கு 700 ரூபா தாரேன் சரிதானா?

அண்ணே மூடைல இருக்குறது பல்லாரி இல்லண்ணே பொடி உள்ளி (சின்ன வெங்காயம்)”

ஏலே என்ன நக்கலா..? சின்ன வெங்காயத்துக்குத்தான் இந்த வெலை, பெரிய வெங்காயமா இருந்தா உன் சரக்கே வேண்டாம், கிளம்புன்னு சொல்லி இருப்பேன்

மனம் கேக்காத முருகேசன் சந்தையின் அனைத்து வியாபாரிகளிடமும் கேட்டான். அனைவரும் சொல்லிவைத்தது போல் ஒரே விலையை சொல்ல சோர்ந்து போனான்.

சரிங்கண்ணே கொண்டு வந்த சரக்க திரும்ப கொண்டு போய் என்ன செய்ய? மூடைய இறக்குறேன் சரியா 230 இருக்காண்ணு எண்ணிக்கோங்க

தனது கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போதே வெங்காயம் விற்ற பணத்தில் தனக்கான லாபத்தை மனக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தான் முருகேசன்.

வெங்காயம் விற்ற பணத்தில் பாதிக்கும் மேல் கந்தப்பிள்ளையின் மகனிடமே கொடுக்கவேண்டியதாய் இருக்கும், மேலும் அவனது தோட்டத்தில் வேலை பார்த்த பலரிடமும், வெங்காயத்தை விற்ற பின்னரே கூலி தருவதாய் சொல்லியிருந்தான்.

எல்லாருக்கும் கொடுத்தது போக அவன் கையில் மீதமிருக்கும் பணம் அடுத்த நடவுக்கு கூட போதுமானதாக இருக்காது என தெரியவந்தபோது அவனை அறியாமல் அவன் கண்களில் நீர் வழிந்தது.

அவன் எதிரே மிதிவண்டியில் வந்த வயதான வியாபாரி,

தம்பி, சின்னவெங்காயம் வேணுமா? அத்தனையும் தெளிவு, மலிவு விலைதான் ஒரு கிலோ வாங்கிட்டு போப்பா

கிலோ எம்புட்டு தாத்தா?”

கிலோ 55, ரெண்டு கிலோவா வாங்குனா 100 ரூபாதான், ரெண்டு கிலோ போட்டுறவா?”

முருகேசனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது,

தம்பி உன்னத்தான் ரெண்டு கிலோ போட்டுரவானு கேட்டேன்?”

உங்ககிட்ட எத்தன கிலோ இருக்கு தாத்தா?”

எதுக்கு தம்பி? வித்தது போக எப்படியும் 10 கிலோ இருக்கும்

மொத்தத்தையும் வாங்கிக்குறேன்என்ற படி பணத்தை நீட்டினான்.

மொத்தமா பத்து கிலோவா?” அந்த பெரியவரின் முகத்தில் மகிழ்ச்சி.

பத்து கிலோ வாங்கிக்கொண்டு நகர்ந்த முருகேசனிடம், “ஏன் தம்பி வீட்டுல ஏதும் விஷேசமா? பத்து கிலோ வாங்குறியே! அதான் கேக்குறேன்

இல்ல தாத்தா விளை வைக்குறவன் மொகத்துல சந்தோஷத்த குடுக்காத இந்த வெங்காயம் விக்குறவன் மொகத்துலயாவது சந்தோஷத்த குடுக்கட்டும்னுதான் வாங்குனேன்

புரியல தம்பி, சரி என்னமோ சொல்றஉன் பேரு என்னப்பா?

வெங்காயத்தை பார்த்துக்கொண்டே முருகேசன் சொன்னான், விளங்காதவன்.

-சுந்தரபாண்டியன்,

தூத்துக்குடி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு