Published:Updated:

பிறந்தநாள் பரிசு! - லாக்டெளன் நெகிழ்ச்சி சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Aaron Santelices / Unsplash )

ஹலோ ஆப்பில் தேடி டவுண்லோடு செய்து "காசேதான் கடவுளடா" வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, மகளை அணைத்தவாறு தூங்கப்போனாள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சேதனா பிறந்தநாள் ஒவ்வோர்ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படும். முதல் பிறந்தநாளில் சுமார் 100பேர் வந்திருப்பார்கள். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்திருந்தார்கள். வீடு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. 10 கிலோ கேக் வாங்கி வெட்ட வைத்தார்கள். மாலை நேரம் என்பதால் வாணவேடிக்கையும் விமரிசையாக இருந்தது. வந்த அனைவருக்கும் உயர்தர விருந்து, குழந்தைகளுக்கு பரிசுப்பொருள்கள் கொடுத்து அனுப்பினார்கள். அதற்கடுத்த ஆண்டுகளில் அதிக விருந்தினர்கள் அழைக்கப்படாவிட்டாலும் காகிதத் தோரணங்கள், பலூன்களால் அலங்காரம், இரண்டு கிலோ கேக், கண்கவர் புத்தாடை என சிறப்பாகத்தான் இருந்தது.

Representational Image
Representational Image
Petter Lagson / Unsplash

ஏழாவது பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன் சேதனாவின் அப்பா சேகர் ஹைதராபாத் க்ளையன்ட் லொக்கேஷன் சென்றிருந்தார். போன வேலை முடிந்து திரும்பும் முன் கொரோனா பரவலால் நாடெங்கும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டது.

மகேஷ் தன் கணவனுக்கு போன் செய்தபோது, ஸ்விட்ச் ஆஃப் என பதில் வந்தது. வாட்ஸப் லாஸ்ட் ஸீன் நேற்றைய தேதியைக் காட்டியது. தொடர்ந்து பல அழைப்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 'காதலில் சொதப்புவது எப்படி' படத்திலிருந்து 'அழைப்பாயா அழைப்பாயா' பாடலை ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு வீட்டு வேலைகளை பார்க்கப் போனாள். சேதனாவும் மகேஷும் ஒரே வண்ணத்தில் சுடிதார் போட்டு டிக்டாக் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

"ஹலோ யாரு..."

"மகேசு நான் சேகர் பேசுறேன்."

"சேகர் எங்க இருக்கீங்க, ஒங்க போனுக்கு என்னாச்சு, இது யாரு நம்பரு,

சேதனா... அப்பா பேசுறாங்கடா."

"அட கொஞ்சம் இருமா.

என் போனுக்கு நேத்து நைட் பேட்டரி போச்சு. இங்க கடை எதும் இல்ல. ரிப்பேர் பண்ண முடியல. இது ஒரு ப்ரெண்டு நம்பரு. நான் நாளைக்கு வேற யார் நம்பர்ல இருந்தாவது கால் பண்றேன். "

"அப்டியாங்க, எப்ப வருவீங்க?"

"வெளியூர்காரன்னு குவாரன்டீன் பண்ணி வச்சுருக்காங்க. டெஸ்ட் டுக்கு சாம்பிள் எடுத்துட்டு போயிருக்காங்க. ரிசல்ட் நெகடிவ் வந்தா விடுவாங்க. நீ ஒன்னும் பயப்படாத. ஓகே..."

"ம்ம் பாப்பாட்ட பேசலயா..."

"குடு"

"டாடி சாப்டீங்களா என்ன பண்றீங்க?"

"சாப்டேன் குட்டிமா. நீ சாப்டியா?"

"சாப்டேன்‌ டாடி. என் ஹேப்பி பர்த்டேக்கு வருவீங்களா..."

"வந்துருவேன் குட்டிமா. அம்மாகிட்ட போன குடு."

"சொல்லுங்க."

"வீட்ல காசு எதும் இல்லேல..."

"இல்ல."

Representational Image
Representational Image

"நான் சீக்கிரம் வந்துருவேன். வர வரைக்கும் சமாளிச்சுருவதான."

"சாமான்‌ எல்லாம் ஒரு மாசத்துக்கு இருக்கு. காய்கறிக்குக்கூட இப்ப காசு குடுக்கவேண்டியதில்ல. பாப்பா பெறந்தநாளை எப்படி கொண்டாடுவோம். சரி விடுங்க நான் பாத்துக்கிறேன்."

"சரிம்மா. இன்னொருத்தர் போனு. குடுத்துடுறேன். லாக்டௌன் டைம்ல போன் இப்படி ஆகும்னு எதிர்பாக்கல. ஏதாவது வழி இருந்தா காசு அனுப்பி விட ட்ரை பண்றேன். நாளைக்கு யார்ட்டையாவது போன் வாங்கி கால் பண்றேன். வச்சுரட்டா"

"ம்"

"பாப்பா வ பாத்துக்கோ. நீயும் ஜாக்கிரதையா இரு."

"ம்"

"லவ்யூ ஆல்"

"லவ்யூ டூ"

கப்போர்டு, ஹேண்ட் பேக், மணிப்பர்ஸ், சேகர் பேண்ட் பை, என பணம் வைக்கப்படும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தாள். அங்கே இங்கே என்று தேடியதில் டீமானிடைசனில் செல்லாத ஒரு 500 ரூபாய், செல்லுமா செல்லாதா என்று தெரியாத 10 ரூபாய் காயின்கள் மூன்று, அவ்வப்போது கடைக்கு சென்று வரும்போது மிஞ்சும் சில்லறைகளில் காயின்களாக ஒரு 50 ரூபாய், மேலும் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு 100 ரூபாய் மட்டும் கிடைத்தது.

கேக்கும் புத்தாடையும் வாங்குவதற்குக்கூட குறைந்தது 1000 ரூபாய் தேவை. ஹலோ ஆப்பில் தேடி டவுண்லோடு செய்து "காசேதான் கடவுளடா" வாட்சப் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு மகளை அணைத்தவாறு தூங்கப்போனாள்.

Representational Image
Representational Image

"மம்மி நான் வளந்துட்டேனா மம்மி..."

"காலை நேரத்தில காம்ப்ளான் குடிக்கும்போதெல்லாம் இதையே கேளு. நீ நேத்தவிட 54 மைக்ரான் வளந்திருக்க. போதுமா..."

"மம்மி, நாளைக்கு இங்க, இங்க, இங்க எல்லாம் பலூனு கெட்டிருவமா..."

"பலூன் கட்னா அனிமல்ஸ் எல்லாம் சாப்பிடும்போது கஷ்டமா இருக்குமாம். அதனால இந்த வருஷம் மாவிலைத் தோரணம் கட்டுவோம்."

"மாவிலைத் தோரணம் னா?"

"பின்னாடி ஒரு மரம் இருக்குல, அதோட இலைகளை வச்சு டெகரேட். மனோஜ் அங்கிள் புதுவீட்ல கட்டிருந்தாங்கல அதுமாதிரி."

"ஐ... மாவிலைத் தோரணம்

என் ஃப்ரெண்ட்ஸு க்கு எல்லாம் சொல்றேன் மாவிலைத் தோராணம்..."

"ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வரமாட்டாங்க. நீ கேக் வெட்டுவியாம், மம்மி அத ஸ்டேட்ஸ் போடுவேனாம். உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவுங்க மம்மி டாடி போன்ல பாப்பாங்களாம்."

"வர மாட்டாங்களா..?''

''எனக்கு எனக்கு ரெட் வெட் கேக்கு வாங்குவமா"

"ரெட் வெல்வெட் வேணுமா டா.

பண்ணுவோம்டா. கடைல கேக்க ஃப்ரிட்ஜிகுள்ள வச்சிருப்பாங்க. அது அன்ஹைஜினிக். உனக்கு மம்மி வீட்லயே பியூட்டிஃபுல்லா, டேஸ்ட்டா கேக் பண்றேன். "

"நம்ம வீட்லயா... கேக்கா... அண்ட ரெட் வெட் கேக்கு மாதிரி தருவீங்களா..."

"அந்த கேக் மாதிரியே இருக்கும் டா. உன்னோட ஹேப்பி பர்த்டே டிரெஸ் பாக்குறியா...

'டண் ட டைன்'

எப்படி இருக்கு?"

"இது ஹேப்பி பர்த்டே டிரெஸ் இல்ல. மனோஜ் அங்கிள் புதுவீட்ல போட்டேன்."

Representational Image
Representational Image
Pixabay

"கொஞ்ச நேரம்தான போட்டிருந்த. இது ஹேப்பி பர்த்டே க்கு போடத்தான் அங்கிள் ஃபாரின்ல இருந்து வாங்கிட்டு வந்தாங்க. பியூட்டிஃபுல்லா இருக்கும். புடிச்சுருக்கா..."

"இல்ல இது ஹேப்பி பர்த்டே டிரெஸ் இல்ல. டாடி எனக்கு பட்டர்ஃபிளை மாதிரி டிரெஸ் எடுத்து தாரேன்னு சொன்னாங்க. அதான் வேணும்."

"டாடி சென்னைல இருக்காங்கடா... இந்த ஹேப்பி பர்த்டேக்கு இந்த டிரெஸ் போட்டுக்குவோம். ப்ளீஸ்டா. சமத்து குட்டில."

"இல்ல. எனக்கு பட்டர்ஃபிளை டிரெஸ்தான் வேணும். ஆகாஷ் கடைல இருக்கு."

"ஆகாஷ் கடைக்குப் போக என்ட்ட காசு இல்லடா."

"காசு''

''ம்...

பன்னிக்குட்டி பேங்க்ல காசு இருக்கு."

"பன்னிக்குட்டி பேங்க்கா...

ஓ...

உன்னோட உண்டியலா"

"சேச்சே அத ஒடைக்கக் கூடாது. உன்ன பாக்க வரப்ப, தாத்தா சித்தப்பா எல்லாம் குடுக்குற காச சேத்துவைக்க. அத நான் செலவு பண்ண மாட்டேன். உன் காசு உனக்கு."

"எனக்குதான் டிரெஸ் எடுப்போம்."

நீண்ட விவாதம்... ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு மண்பன்றி பொம்மையை உடைத்து பணம் எடுத்தார்கள். நூறும் ஐம்பதுமாக மொத்தம் 1000 ரூபாய் க்கு மேல் இருந்தது.

1000 ரூபாயை மணிபர்ஸில் வைத்து, மணிப்பர்ஸை ஹேண்ட் பேக்கில் வைத்தாள். மீதியை கப்போர்டில் வைத்தாள். வெயில் குறைந்த மாலை நேரத்தில் 'நீ வருவாயென' பாடல் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆடைக்கு மேட்சான நிறத்தில் மாஸ்க் போட்டு மகளோடு ஒரு செல்ஃபி எடுத்து டிபி வைத்துவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

ஸ்கூட்டியை மகேஷ் ஓட்ட, அவளுக்கு முன் நின்றவாறு சேதனா பயணித்தாள். 30 சதவிகிதம் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஆகாஷ் கடை திறந்திருக்க வேண்டும் என மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அதிகம் பயணித்தன. வெளிமாநிலங்களில் இருந்து கூலி வேலைக்கு வந்தவர்கள் சிலர் செருப்புகூட இல்லாமல் பெரும் சுமைகளுடன் நடந்துகொண்டிருந்தனர்.

"மம்மி, இவுங்க எல்லாம் யாரு?"

Representational Image
Representational Image
Tobias Tullius / Unsplash

"இவுங்களா...

அப்பாவோட ஆபீஸ், உங்க ஸ்கூல் எல்லாம் கட்டுறவங்க"

"இவுங்க எல்லாம் எங்க போறாங்க?"

"வீட்டுக்குப் போறாங்க."

"வீடு எங்க இருக்கு?"

"ரெம்ப தூரத்துல இருக்கு."

"தாத்தா வீடு தூரம் இருக்குமா."

"இல்ல, சித்தப்பா வீடு தூரம் இருக்கும்."

"சித்தப்பா எல்லாம் ஏரோ பிளேன் ல தான போவாங்க. இவுங்க ஏன் நடந்து போறாங்க?"

"இப்ப ஏரோ பிளேன் ஓடாது."

"ஏன் ஓடாது?"

"அம்மா தாயே உன் கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. டாடி ஈவ்னிங் போன் போடுவாரு அவர்ட்ட கேட்டுக்கோ."

ஆகாஷ் கடை பாதி கதவு திறந்திருந்தது. உள்ளே சிலர் மாஸ்க் போட்டுட்டு போய்வந்துகொண்டிருந்தனர். கடைக்கு நேராக வண்டி ஓட்டி வந்த மகேஷிடம் வேறு இடத்தில் நிறுத்துமாறு வாட்ச்மேன் சைகை காட்டினார். இரண்டு கடைகள் தள்ளி பூட்டி இருக்கும் ஒரு கடைக்கு முன் வண்டியை சைடு ஸ்டாண்டு போட்டாள். அந்தக் கடை வாசலில், ஒரு வெளி மாநிலத் தொழிலாளி அழுதுகொண்டு இருந்தார். அவர் மடியில் சுமார் 6 வயது சிறுவன் படுத்திருந்தான். வண்டியை விட்டு வேகமாக இறங்கிய சேதனா, அவர் அருகில் சென்று "அங்கிள் ஏன் அழுறீங்க?"

"ஏய் சேதனா, எங்க போற ஆகாஷ் கடை அங்க இருக்கு."

"மம்மி, இங்க பாருங்க இந்த அங்கிள் அழுதிட்டு இருக்காங்க."

"நீ வா கடைக்குப் போவோம், பூட்டிருவாங்க" கையைப் பிடித்து இழுத்தாள் மகேஷ்.

"அந்த அங்கிள் ஏன்மா அழுறாங்க?"

Representational Image
Representational Image
seabass creatives / Unsplash

"அவங்க சாப்பிட, ஊருக்குப் போக காசு இல்லாம அழுறாங்க."

அம்மா கையைப் பிடித்து வந்துகொண்டிருந்தவள், கையை இழுத்து நின்றாள்.

"என்னாச்சு..."

"உன் ஹேண்ட் பேகை குடு!"

"பிஸ்கட் குடுக்கப் போறயா... சரி நீயே எடுத்துக் குடு."

"பிஸ்கட் எல்லாம் பத்தாதுல" என்று சொல்லிக்கொண்டே உள்ளே இருந்த மணிபர்ஸில் ஆயிரம் ரூபாய் எடுத்து, "அங்கிள் அழுவாதீங்க" என்று சொல்லிக்கொண்டே ஓடிப் போய் கையில் குடுத்துவிட்டு வந்தாள்.

மின்னல் வேகத்தில் நடந்தவைகளால் மகேஷ் சற்று குழம்பியவள் பின் சுதாரித்து,

"இப்டி ஆயிரம் ரூபாய அவருகிட்ட குடுத்துட்டியே... பட்டர் ஃபிளை டிரெஸுக்கு என்ன பண்ண..."

"அதான் மனோஜ் அங்கிள் வீட்ல போட்ட டிரெஸ் இருக்குல."

"பெரிய கர்ணன் பரம்பரை. இருந்த ஒரே ஒரு ஆயிரம் ரூபாய தானம் பண்ணிட்டா" என்று புலம்பிக்கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். வீட்டருகே வந்தபோது கேட் திறந்திருந்தது. சேதனா என்று எழுதப்பட்ட கார் நின்றுகொண்டிருந்தது.

"ஐ அப்பா வந்துட்டாங்க."

"அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே குட்டிமா...

குட்டிமா ஹேப்பி பர்த்டேக்கு வந்துட்டேன் பாத்தியா.

இங்க பாரு, உனக்கு புடிச்ச பட்டர் ஃபிளே டிரெஸ் ரெட் வெல்வெட் கேக் டெக்கரேஷன் பலூன் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்."

"எப்படி வந்தீங்க" மகேஷ்?

"டெஸ்ட்-ல நெகட்டிவ் வரவும் போகச் சொல்லிட்டாங்க வந்துட்டேன். நீங்க எங்க போனீங்க?"

-அருகன் குளம் பா. ஹரிஹரசெல்வம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு